“ஆடிப்பெருக்கு எனும் மரபு விழா”

 “ஆடிப்பெருக்கு எனும் மரபு விழா”

ஆடிப்பெருக்கு என்பது நீரோடும் நிலத்தோடும் காலத்தோடும் தொடர்புடைய அறிவியல்பூர்வமான மரபு விழா.

தமிழ்நாட்டில் பல நூற்றாண்டுகளாக ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, காவிரி பாயும் பகுதிகளில் இவ்விழா கோலாகலமாகவும் குதூகலத்துடனும் நடைபெறுவது வழக்கம். ஆடிப்பெருக்கு என்பது ஆன்மிகம் சார்ந்தது மட்டுமல்ல. நீர் இன்றி அமையாது உலகு என்பதை உணர்ந்த நம் முன்னோர்கள், அதைப் போற்றுவதற்காகவும், நன்றிக் கடன் செலுத்துவதற்காகவுமே காலம் காலமாக இவ்விழாவைக் கொண்டாடி வந்திருக்கிறார்கள். இதுதான் இவ்விழாவுக்கான முதன்மை நோக்கமாகவும் இருந்திருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். குறிப்பாக இவ்விழா, நீரோடும் நிலத்தோடும் காலத்தோடும் தொடர்புடைய விழா. நம்முடைய விவசாயிகள், பொங்கல் விழாவுக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ, அதற்கு நிகராக ஆடிப்பெருக்குக்கும் முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடி வருகிறார்கள். இதனால் ஊரே களைகட்டியிருக்கும். மிகவும் பழைமையான சங்க இலக்கிய நூலான சிலப்பதிகாரத்தில் உழவன் கோதை, பெருங்கோதை என்ற பாடலில் புதுப்புனல் (பொங்கி வரும் புது நீர்) என்ற பெயரில் ஆடிப்பெருக்கு விழாவைப் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

சோழப்பேரரசை ஆட்சி செய்த மாமன்னன் ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தில் ஆடிப்பெருக்குக் கொண்டாட்டம் எப்படியெல்லாம் இருந்திருக்கும்? பொன்னியின் செல்வன் நாவலில் ஆடிப்பெருக்கு குறித்த கல்கியின் விவரிப்புகள் நம்மை ஆச்சர்யப்பட வைக்கின்றன. ராஜராஜ சோழனின் நண்பர் வந்தியத்தேவனின் வருகையோடு வீராணம் ஏரிக்கரையில் ஆடிப்பெருக்குக் கொண்டாட்ட காட்சிகள் விரிகின்றன.

ஆடிப் பதினெட்டாம் பெருக்கன்று சோழநாட்டு நதிகளிலெல்லாம், வெள்ளம் இருகரையையும் தொட்டுக்கொண்டு ஓடுவது வழக்கம். அந்த நதிகளிலிருந்து தண்ணீர் பெறும் ஏரிகளும் பூரணமாக நிரம்பிக் கரையின் உச்சியைத் தொட்டுக்கொண்டு அலைமோதிக் கொண்டிருப்பது வழக்கம். அன்று பதினெட்டாம் பெருக்குத் திருநாள் அல்லவா? பக்கத்துக் கிராமங்களிலிருந்து, தந்த நிறத் தென்னங்குருத்துகளால் சப்பரங்கள் கட்டி இழுத்துக்கொண்டு கும்பல் கும்பலாக மக்கள் அங்கே வந்துகொண்டிருந்தார்கள்.

ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் சில வயோதிகர்களும்கூடப் புதிய ஆடைகள் அணிந்து விதவிதமான அலங்காரங்கள் செய்துகொண்டு வந்திருந்தார்கள். பெண்களின் கூந்தல்களைத் தாழம்பூ, செவந்திப்பூ, மல்லிகை, முல்லை, இருவாட்சி, செண்பகம் முதலிய மலர்கள் கொத்துக் கொத்தாய் அலங்கரித்தன. கூட்டாஞ்சோறும், சித்திரான்னமும் எடுத்துக்கொண்டு பலர் குடும்பம் குடும்பமாக வந்திருந்தார்கள். ஆடவர்களில் சில வம்புக்காரர்கள், தங்கள் காதலிகளின் கூந்தல்களில் சூடியிருந்த மலர்களை அவர்கள் அறியாமல் எடுத்துக் கண்வாய் ஓரத்தில் விட்டு ஏரிக்கரைக்கு மறு பக்கத்தில் அவை ஓடி வருவதைக் கண்டு மகிழ்ந்தார்கள். இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு சிறிது நேரம் வல்லவரையன் வந்தியத்தேவன் அங்கேயே நின்றுகொண்டிருந்தான். அங்கு நின்ற பெண்களில் இனிய குரலையுடைய சிலர் பாடுவதையும் காது கொடுத்துக் கேட்டான். அவர்கள் ஓடப்பாட்டும், வெள்ளப் பாட்டும், கும்மியும், சிந்தும் பாடினார்கள் என ஆடிப்பெருக்குக் கொண்டாட்டத்தை விவரிக்கிறார் கல்கி.

“ஆடிப்பட்டம் தேடி விதை” என்பது பழமொழி. விதைப்புக்கான நீர் ஆதாரம் ஆடி மாதத்தில் இருந்துதான் கிடைக்கத் தொடங்குகிறது. அதற்கு முன்னதாக, சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் நீர்நிலைகள் வறண்டு கிடக்கும். மராமத்து என்ற பெயரில் ஏரி, குளம், வாய்க்கால் உள்ளிட்டவை சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவு பெற்றிருக்கும். தென்மேற்குப் பருவமழையால், ஆடி மாதம் தமிழ்நாட்டில் பெரும்பாலான நீர்நிலைகளில் தண்ணீர் நிறைந்திருக்கும். மராமத்து செய்யப்பட்ட ஏரி. குளங்களில் ஆடி 18 அன்று, நீர் தூம்புகள் திறக்கப்பட்டு அன்று வாய்க்கால்களில் வெள்ளோட்டமாகத் தண்ணீர் திறக்கப்பட்டு, பூஜைகள் செய்து மரியாதை செலுத்துவது வழக்கம். நீர்நிலைகளில் வெள்ளோட்டம் பார்க்கும் நாளாகவும் ஆடிப்பெருக்கு அமைந்துள்ளது. ஆடிப் பெருக்கில் இருந்துதான் விவசாயம் தொடங்குகிறது. நீரைப் போற்றுதலும் நீரை வணங்குதலும் நம்முடைய உழவர் பெருமக்களின் நீண்ட நெடுங்கால வழக்கமாக இருந்து வருகிறது. `தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே’ என்ற சொல்லாடல் கிராமப்புறங்களில் சொல்லப்படுவதுண்டு. `தாயைப் பழிப்பதே தவறு… அதிலும் தண்ணீரைப் பழிப்பதென்பது மிகவும் தவறான செயல்’ என இதன் முக்கியத்துவத்தைக் குறிப்பதற்காக இப்படிச் சொல்லப்படுகிறது. தண்ணீரைப் போற்றி வணங்குவதற்காகவே பிரத்யேகமாக, இவ்விழா கொண்டாடப்படுகிறது.

“நீரின்றி அமையாது உலகு” என்றார் வள்ளுவர். “வரப்பு உயர, நீர் உயரும்… நீர் உயர, நெல் உயரும்… நெல் உயர, குடி உயரும்… குடி உயர, கோண் உயரும்” என்கிறது அவ்வை பாடல். தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர்கள் நம் முன்னோர்கள். கோடைக்காலத்தில் வறட்சியால் மிகவும் பாதிக்கப்பட்ட நம் விவசாயிகள், ஆடி மாத மழைப்பொழிவால் மகிழ்ச்சி அடைந்து இவ்விழாவைக் கொண்டாடுவது வழக்கமாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் ஆடி மாதம் காவிரி, வைகை, தென்பெண்ணை உள்ளிட்ட பெரும்பாலான ஆறுகளில் தண்ணீர் வரத் தொடங்கியிருக்கும். அந்தக் காலத்தில் விதை ஆய்வு, விதைச் சான்று துறைகள் எல்லாம் கிடையாது. விவசாயிகள் தாங்கள் வெள்ளாமை செய்யப்போகும் பயிர்களின் விதைகளின் முளைப்புத்திறனை சோதித்துப் பார்க்கக்கூடிய நாளாகவும் ஆடிப்பெருக்கு இருந்திருக்கிறது. சிறிதளவு விதைகளை முளைக்க வைத்து, ஆடிப்பெருக்கு அன்று நீர்நிலைகளில் முளைப்பாரி விடுவது வழக்கம். அதன் மூலம் முளைப்புத்திறனை அறிந்துகொள்ள முடிந்திருக்கிறது. பல்லாயிரக்கணக்கான விவசாயிகளால் தண்ணீரில் விடப்படும், முளைப்புக்கட்டிய விதைநெல் மற்றும் நவதானியங்கள் தண்ணீரில் கலந்து உரமாகி நிலத்தை வளப்படுத்தியிருக்கிறது. தமிழ்நாட்டில் முன்பெல்லாம் பெரும்பாலும் நீண்டகால நெற்பயிர்களைத்தான் சாகுபடி செய்திருக்கிறார்கள். ஆடி மாதம் விதைப்பு செய்து அடுத்த 6 மாதங்கள் கழித்து தை மாதம் அறுவடை செய்திருக்கிறார்கள்’’

“ஆடிப்பெருக்கு என்பது ஒரு சமயம் சார்ந்த விழா அல்ல. மனிதகுலத்துக்கு வாழ்வளிக்கும் தண்ணீருக்கு நன்றி தெரிவிக்கும் விழா. இது மிகவும் பழைமையான தனிச்சிறப்பு கொண்ட விழாவாகும். கர்நாடகாவிலும் தமிழ்நாட்டிலும் அணைகள் கட்டப்படாத காலம் அது. கேரளா மற்றும் கர்நாடகாவில் தென்மேற்குப் பருவ மழை பொழிந்து, தமிழ்நாட்டில் குறிப்பாக, காவிரி பாசன மாவட்டங்களில் ஆடி 18 அன்று ஆறுகளில் காவிரிநீர் பெருக்கெடுத்து ஓடி வரும். இது காவிரிப் பெருக்கு என அழைக்கப்படுகிறது. ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழன் ஆட்சிக்காலத்தில் இங்கு ஏராளமான ஆறு, ஏரி, குளம், வாய்க்கால்கள் வெட்டப்பட்டன. தண்ணீருக்கு மிகப்பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. உய்யக்கொண்டான் ஆற்றை உருவாக்கிய ராஜராஜ சோழன், இதைப் பராமரிக்க, உய்யக்கொண்டான் வாரியம் என்ற பெயரில் ஒரு நிர்வாக அமைப்பை உருவாக்கினார். தஞ்சை வல்லம் தொடங்கி உய்யக்கொண்டான் வரை ஏராளமான ஏரிகளை உருவாக்கியதோடு, ஏற்கெனவே உள்ள ஏரிகள், வாய்க்கால் மூலம் சங்கிலித் தொடராக இணைக்கப்பட்டன, இப்பகுதிகள் ஏரியூர் நாடு என்றே அழைக்கப்பட்டது. முசிறியில் உள்ள காவிரி கிளைவாய்க்காலில் 1220-ம் ஆண்டு மூன்றாம் ராஜராஜன் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட, கருங்கல்லால் ஆன மதகு இன்றளவும் பயன்பாட்டில் உள்ளது. இது பாலமாகவும் விளங்குகிறது. இந்த மதகில், கரிகால் சோழப் பேராறூ என கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. நம்முடைய உழவர்கள் மட்டுமல்ல, மன்னர்களும் தண்ணீரைப் போற்றியிருக்கிறார்கள். இதற்குச் சான்றுகளாக, ஏராளமான கல்வெட்டு குறிப்புகளும் பழங்கால ஓவியங்களும் உள்ளன. ஆடிப்பெருக்கு அன்று, வெல்லம் கலந்த பச்சரிசி, மஞ்சள் கயிறு, காதோலை கருகமணி, பூ, பழங்கள் ஆகியவற்றோடு காவிரியை மங்களகரமாக வரவேற்று மரியாதை செய்கிறோம்’’

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...