ஜெயிலர் படத்தின் மாஸ் ட்ரெயிலர் வெளியீடு..!
நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தை தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்சுடன் இணைந்துள்ள படம் ஜெயிலர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் படம் இன்னும் 8 தினங்களில் சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அண்ணாத்த படம் கலவையான விமர்சனங்களை ரஜினிக்கு பெற்றுத் தந்த நிலையில் ஜெயிலர் படம் கண்டிப்பாக அவருக்கு சிறப்பான சக்சஸை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.நடிகர் ரஜினிகாந்த, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இந்தப் படத்தை இயக்கியிருந்தார். அண்ணன் -தங்கை பாசத்தை மையமாக கொண்டு வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சூப்பர் ஹிட்டடித்தது. படத்தின் பாடல்கள், திரைக்கதை என அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்நிலையில் மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடனேயே களமிறங்கியுள்ளார் ரஜினிகாந்த். இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். விஜய்யுடன் நெல்சன் இணைந்திருந்த பீஸ்ட் படம் அவருக்கும் சிறப்பாக கைக்கொடுக்கவில்லை. இதையடுத்து அவர் ஜெயிலர் படத்தை இயக்க மாட்டார் என்றே தகவல்கள் வெளியாகின.
ஆனாலும் பீஸ்ட் படம் கமர்ஷியலாக வெற்றி பெற்ற நிலையில், ஜெயிலர் படத்தை அவர் இயக்க கமிட்டானார். ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சுனில், ஜாக்கி ஷெராப், மோகன்லால், சிவராஜ்குமார், வசந்த் ரவி என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் இணைந்துள்ளது. இன்னும் சில தினங்களில் இந்தப் படம் ரிலீசாகவுள்ள நிலையில், கடந்த சில வாரங்களாகவே படத்தின் பிரமோஷன்கள் சிறப்பான நடந்து வருகின்றன. படத்தின் அடுத்தடுத்த மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. அனிருத் ரஜினி படங்களுக்கு மிகச்சிறப்பான இசையை கொடுப்பார் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அதற்கேற்ப காவாலா, ஹுகும், ஜுஜுபி என அடுத்தடுத்த பாடல்களை வெளியிட்ட படக்குழு கடந்த 28ம் தேதி படத்தின் இசை வெளியீட்டையும் பிரம்மாண்டமான அளவில் நடத்தி முடித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் ரஜினி, ரம்யா கிருஷ்ணன், தமன்னா, மோகன்லால், நெல்சன் திலீப்குமார் என படத்தின் முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் கலந்துக் கொண்டனர். தயாரிப்பாளர் கலாநிதி மாறனும் கலந்துக் கொண்டு, ரஜினி குறித்து பாராட்டு தெரிவித்திருந்தார்.
ரஜினியும் குட்டிக் கதை சொல்லி நிகழ்ச்சியை கலகலப்பாக்கினார். தொடர்ந்து விமர்சனங்கள் அதிகமாக ஏற்படவும் காரணமானார். இந்நிலையில் படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், இன்றைய தினம் படத்தின் ட்ரெயிலர் ரிலீசாகியுள்ளது. முன்னதாக ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ரஜினியின் போஸ்டருடன் சன் பிக்சர்ஸ் தொடர்ந்து அடுத்தடுத்த அலர்ட்களை செய்து வந்தது. அதில் அதிகமான கத்திகளின் நடுவில் ரஜினியின் முகம் இருக்கும்படியான போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த ட்ரெயிலரில் மிகவும் சாந்தமாக வீட்டு வேலைகளை செய்கிறார் ரஜினிகாந்த். தன்னுடைய மகன், பேரனுக்கு ஷுவை கூட துடைத்து விடுகிறார். இந்த நிலையில், அவர் மாற்றத்தையும் இந்த ட்ரெயிலர் சிறப்பாக காட்டுகிறது. அவர் புலியாக மாறும் தருணத்தையும் காட்டுகிறது. இனிமே பேச்சு இல்லை வீச்சுதான் என்று மாஸ் காட்டுகிறார் சூப்பர்ஸ்டார். ட்ரெயிலரிலேயே அதிரடி மாஸ் காட்டியுள்ளார் நெல்சன் திலீப்குமார். இந்த ட்ரெயிலர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது.
இந்த பரபரப்பு அடங்கும் முன்னர் தற்போது வெளியான ஜெயிலர் ட்ரெய்லர் இன்னொரு புயலை கிளப்பியுள்ளது. ஆக்ஷன் காட்சியுடன் தொடங்கும் ஜெயிலர் ட்ரெய்லரில், முதல் வசனமே “We are from CBI” என ஒரு காட்சி வருகிறது. அதற்கு பதில் கொடுக்கும் விதமாக “டொனேஷன் எதாவது வேணுமா” என வில்லன் நடிகர் சுனில் ஒரு வசனம் பேசுகிறார். அதன்பிறகே டைட்டிலில் “கலாநிதி மாறன் வழங்கும்” என ட்ரெய்லர் வேகம் எடுக்கிறது.
சிபிஐ, அமலாக்கத்துறைக்கு எதிரான வலுவான இந்த வசனம் ஜெயிலர் படத்தில் இடம்பெற்றுள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ரஜினி, சன் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவான ஜெயிலர் படத்தில் இப்படியொரு வசனமா என, அரசியல் ரீதியாகவும் கவனம் ஈர்த்துள்ளது. அதாவது கடந்த சில மாதங்களாகவே திமுகவைச் சேர்ந்த முக்கியமான பிரபலங்களை குறிவைத்து அமலாக்கத்துறை சோதனை நடத்தப்படுகிறது.
இதன் பின்னணி குறித்து பலவிதமான பேச்சுகள் அடிபட்டாலும், இதெல்லாம் மறைமுகமாக பணம் கேட்பதற்கான எச்சரிக்கை எனவும் அரசியல் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. அப்படி இருக்கையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ஜெயிலரில் அமலாக்கத்துறைக்கு எதிராக வசனம் இடம்பெற்றுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. சிபிஐ-க்கு டொனேஷன் வேண்டுமா என கேட்பதெல்லாம் பக்கா சினிமாட்டிக் பஞ்ச் என நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். சிபிஐ, அமலாக்கத்துறை போன்றவை மத்திய அரசின் கீழ் இயங்குவதும் குறிப்பிடத்தக்கது.