அரிசி ஏற்றுமதிக்கு தடை அமெரிக்காவில் அலைமோதிய கூட்டம்

 அரிசி ஏற்றுமதிக்கு தடை  அமெரிக்காவில் அலைமோதிய கூட்டம்

அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்த இந்தியா: அமெரிக்காவில் அலைமோதிய கூட்டம்

மொத்த கடை விற்பனை நிலையம்,  நீண்ட வரிசை, கைகளில் டிராலி, வெயி லையும் பொருட்படுத்தாமல் காத்திருக்கும் கூட்டம், இந்தியாவில் இந்த காட்சிகள்  வாடிக்கையான ஒன்று தான், ஆனால் காட்சிகள் அமெரிக்காவில்  என்றால்  உங்களால் நம்ப முடிகிறதா? ஆம். பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு இந்திய அரசு தடை விதித்ததைத்தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அரிசி வாங்க கூட்டம் அலைமோதுகிறது. அது குறித்து வரிவாக பார்க்கலாம்.

நாட்டின் அரிசி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஓராண்டில் சில்லறை விற்பனையில் அரிசி விலை 11.5 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் அரிசி விலை 3 சதவீதம் உயர்ந்துள்ளது. பண்டிகை காலம் வருவதால் உள்நாட்டில் அரிசிக்கான தேவையும் அதிகரிக்கும். இதனால் அரிசியின் விலை மேலும் அதிகரிக்கலாம்.

இந்தநிலை தொடர்ந்தால் உள்நாட்டில் அரிசியின் விலையை கட்டுக்குள் வைக்க முடியாது. இதனை கருத்தில் கொண்டு பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இது குறித்து வர்த்தக துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பாசுமதி அல்லாத எந்த வகை அரிசியையும் ஏற்றுமதி செய்யக்கூடாது. ஏற்கெனவே, ஏற்றுமதிக்காக கப்பல்களில் ஏற்றப்பட்டுள்ள அரிசிக்கு இந்தத் தடை பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடும், மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்த தடை  விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளராக உள்ளது. இது உலகளாவிய ஏற்றுமதியில் 40% க்கும் அதிகமாக உள்ளது.

இந்திய அரிசியின் சர்வதேச விற்பனை, ஜூன் வரையிலான ஆண்டில் 35% உயர்ந்துள்ளது, இது கடந்த மாதத்தில் மட்டும் உள்நாட்டு விலையில் 3% உயர்வுக்கு வழி வகுத்தது. நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின்படி, இந்தியாவில் மக்கள் அரிசிக்கு ஒரு வருடத்திற்கு முன்பிருந்ததை விட 11.5% அதிகம் பணம் செலுத்துகின்றனர்.

வியாழன் மாலை முதல் அமலுக்குவந்த அரிசி ஏற்றுமதி தடையானது, “இந்திய சந்தையில் பாசுமதி அல்லாத வெள்ளை அரிசி போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்யும்” மற்றும் உள்நாட்டு நுகர்வோருக்கு விலை குறைவதற்கு வழிவகுக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. உணவுப் பணவீக்கம் அதிகரித்து வருவதால், அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் மற்றும் வரும் மாதங்களில் மாநில அளவிலான தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், பாஜக அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ளது.

இந்தியாவின் இந்த நடவடிக்கை பல ஆசிய நாடுகளின் அரிசியின் விலையை உலகச் சந்தைகளில் உயர்த்தியுள்ளது. உலகின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பெரிய அரிசி ஏற்றுமதியாளர்களான தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் 5% அரிசியின் விலைகளில் உயர்வை சந்தித்துள்ளன. உக்ரைன் ரஷ்யா போரால் உலகளாவிய உணவுப் பொருட்கள் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. இது உலகம் முழுவதும் பொருட்கள் மற்றும் தானியங்களின் விலைகளை உயர்த்தியுள்ளது.

இதனிடையே அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளதால் அமெரிக்காவில் அரிசி வாங்க இந்தியர்களின் கூட்டம் அலைமோதுகிறது. மொத்த விற்பனை கடைகளில் இந்தியர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து அரிசியை வாங்கி செல்கின்றனர்.

மேலும் இந்தியாவின் தடையால் ஆப்பிரிக்கா, துருக்கி, சிரியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கும் இந்த நாடுகளில் ஏற்கனவே உணவு பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு அதிக விலைக்கு விற்பனை ஆவது குறிப்பிடத்தக்கது.

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...