பதிப்பாளர் எழுத்தாளர்களுக்கு எப்படி அமைய வேண்டும் -?
சாகித்திய அகாதெமி விருது பெற்ற என்னுடைய “சூல்”நாவல் முதல் பதிப்பு வெளி வந்த ஆண்டு 2016. மூன்று பதிப்புகள் வெளி வந்த பின்னர் 2019ம் ஆண்டுதான் சாகித்திய அகாதெமி விருது பெற்றது.
சாகித்திய அகாதெமி விருது அறிவிப்பு தொலைக்காட்சிகளில் தலைப்பு செய்தியாக வெளிவரத் தொடங்கியவுடன் என்னுடைய வங்கிக் கணக்கில் ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் ஏற்றி விட்டார் என்னுடைய பதிப்பாளர் அடையாளம் சாதிக் அவர்கள்.
நான் தொலை பேசியில் தொடர்பு கொண்ட போது சொன்னார்.
“தர்மன் இதை அட்வான்சாக வைத்துக் கொள்ளுங்கள். இந்தாண்டு நான் இன்னும் உங்களுக்கு மூன்று லட்சங்கள் தரவேண்டியதிருக்கும். என்னிடம் சொன்ன இதே வார்த்தையை “தமிழ் இந்து”நேர்காணலிலும் குறிப்பிட்டார். இப்போது சொல்லுங்கள் இது மாதிரியான பதிப்பாளர் எழுத்தாளர்களுக்கு அமைய வேண்டும் தானே.
சூல் நாவல் வெளிவந்து ஏழு ஆண்டுகள் முடிந்து விட்டன. இந்தாண்டு அதாவது 2022 ஏப்ரல் முதல் 2023 மார்ச் முடிய விற்ற பிரதிகளின் எண்ணிக்கை 1577.
இதுவரை மொத்தம் விற்பனையான பிரதிகள் 26000க்கும் மேல். சாகித்திய அகாதெமி விருது பெற்ற நாவல்களில் நல்ல விற்பனையான நாவல் என்று சொல்கிறார் என்னுடைய பதிப்பாளர் அடையாளம் சாதிக் அவர்கள்.
இதுவரையில் என்னுடைய எந்த நூலுக்கும் வெளியீட்டு விழா வைத்ததில்லை. இந்த வருகிற புத்தக கண்காட்சிக்கு வெளி வரவிருக்கும் இரண்டு நூல்களுக்கும் ஒரு வெளியீட்டு விழா வைக்க வேண்டும் என்று சொன்னேன். சாதிக் சொல்கிறார். “உங்கள் நூல்கள் ஆப்பிரிக்காவில் வெளியிட்டாலும் விற்றுப் போகும். பின் எதற்காக வெளியீட்டு விழா வைத்து பணத்தை செலவழிக்க போகிறீர்கள். அது பற்றி நான் தானே கவலைப்பட வேண்டும்”
ஆகவேதான் மீண்டும் சொல்கிறேன். படைப்பாளிகள் அவசரப்படாமல் அடையாளம் சாதிக் போன்ற பதிப்பாளர்களை தேர்ந்தெடுத்து உங்கள் படைப்புக்களை புத்தகமாக்குங்கள்.
-சோ.தர்மன்