சொல்லத் தான் நினைக்கிறேன் – திரையுலக ஜாம்பவான் கே. பாலசந்தர்
சொல்லத் தான் நினைக்கிறேன் – திரையுலக ஜாம்பவான் கே. பாலசந்தர்…!!! திரையுலக ஜாம்பவான் புதுமை இயக்குனர் கே. பாலசந்தரின் பிறந்த நாள் இன்று. இன்று வரை தமிழ் சினிமா உலகின் துரோணாச்சார்யார் இவரே. ரஜினி கமல் என்ற இரு திரையுலக ஆதிக்க நாயகர்களின் ஆதர்ச குருநாதர். இவருடைய படங்களில் ஒரே ஒரு சீனிலாவது தலையை காட்டி விட மாட்டோமா என ஏங்காத நடிக நடிகைகள் இல்லை
. கேபி சத்தமேயில்லாமல் தனது படங்களில் பெண்ணியகருத்துக்களை புகுத்தியவர். இவரை போல பெண்களின் அடி மனதினை துழாவி மெல்லிய உணர்வுகளை கூட நுட்பமாக துல்லியமாக காட்டிய இயக்குனர் வேறு எவருமில்லை. அதற்கு இவரது “ஒரு வீடு இரு வாசல் “ “ நிழல் நிஜமாகிறது” போன்ற படங்களை விட சிறந்த சான்றுகள் வேறில்லை
. எழுபது எண்பதுகளின் காலகட்டத்தில் ஒரு பெண் வேலைக்கு போவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அப்படி போகும் பெண்களின் மீது விமர்சனங்களை அள்ளி தெளிக்கும் சமுதாயத்தை “ அவள் ஒரு தொடர்கதை” யில் புரட்டி போட்டுருப்பார். “கவிதா ஒரு ராட்சசி “ என்று படத்தின் தொடக்கத்தில் குழந்தைகள் தமக்குள் கூறிக்கொள்ளும் காட்சியே அதற்கு சான்று. குடும்பத்திற்காக தங்களுக்குள்ளேயே வேலி போட்டு கொண்டு ரோஜாக்களை தங்களுக்குள் புதைத்துக் கொண்டு முட்களை மட்டும் வெளியே காட்டிக் கொண்டிருக்கும் பெண்களின் மறுப்பக்கத்தை இவரை தவிர வேறு யாரால் திரையில் காட்டி விட முடியும்
. சினிமா உலகில் இவர் தொடாத ஜானர்கள் இல்லை.. தண்ணீர் தண்ணீர் , அச்சமில்லை அச்சமில்லை என அரசியல் படங்களை அசால்டாக தருவார் சட்டென “தில்லுமுல்லு “ செய்து நகைச்சுவையை நம் மீது அள்ளி தெறிக்க விட்டுருப்பார். திடீரென மன்மத லீலையாய் கமலை வைத்து கலக்கியிருப்பார். இன்று வரை இதே போன்ற ப்ளேபாய்களின் மனோநிலையை துல்லியமாய் காட்டி விட முடியுமா
இன்னொருவரால். கேபியால் மனிதர்களை மட்டுமல்ல நாயை கூட திரையில் நடிக்க வைத்துவிட முடியும்.. “ புதுப்புது அர்த்தங்கள் “ படத்தில் ரகுமானின் கார் சத்தம் கேட்டதும் சட்டென ஓடி போய் தனக்கென வைத்துள்ள “மேட்” மீது துல்லியமாய் வந்தமரும் நாயை இவர் எப்படி நடிக்க வைத்திருப்பார். திரைக்கதையில் காட்சியமைப்பில் அத்தனை துல்லியம் கேபி யிடம். “கொசுவே உனக்கு கோடி நமஸ்காரம் “ என பாடுவார் சரிதா அக்னி சாட்சி படத்தில்.. மாமியார் மருமகள் கொசு என என்ன ஒரு காட்சி துல்லியம் அதில் எத்தனை நுணுக்கங்கள் , எத்தனை குறியீடுகள். வாழ்க்கை முழுவதும் நேர்மையாய் இருப்பவனை , அதனால் வரும் சங்கடங்களை ஏற்று கொள்பவனை சாவின் விளிம்பில் அவனை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தும் அந்த கடைசி கையெழுத்தினை போடும் ஜெமினியின் முகத்தில் மரண வேதனையை காட்டிலும் கொடிய வேதனையை காட்டுவதிலாகட்டும், அதனை ஒரு நொடியில் கிழிந்தெறியும் ஜெயந்தியின் முகபாவங்களில் உண்மையின் ஒளியை காட்டுவதாகட்டும் .. அங்கே ஜெமினியின் முகத்தை போலவே நம் முகத்திலும் வரும் மென் “புன்னகை”.
நிழல் நிஐமாகிறது படத்தின் க்ளைமாக்ஸில் சரத்பாபு போன்ற சந்தர்ப்பவாதிகளின் மூக்கை மட்டுமா உடைக்கிறார் ஷோபா. கெடுத்தவனுக்கே வாழ்க்கை படவேண்டும் என்கிற இந்த சமூகம் சார்ந்த பிற்போக்குதனங்களையும் சேர்த்தல்லவா தனது கதாநாயகி மூலம் உடைத்து போடுகிறார் கேபி. இவர் காட்சியமைப்பின் துல்லியங்களை நினைவு கூற வேண்டுமானால் , மனதில் உறுதி வேண்டும் படத்தை பற்றி சொல்லியே தீரவேண்டும். காதலிக்கும் பெண்ணின் மிட்டாய் வாட்ச் மீது எறும்பு மொய்ப்பது, மகள் வீட்டை விட்டு ஒடி விடும் காட்சியில் ஒருவர் வாசலில் தண்ணீர் தெளித்து விடுவார். ரமேஷ் அரவிந்த் மரணக்காட்சியில் பச்சை தென்னங்கிளை ஓன்று கீழே விழும். இவ்வளவு நுணுக்கமாக கூட ஒருவர் திரையில் துல்லியமாக காட்சிபடுத்த முடியுமா? என்ற ஆச்சர்யங்கள் எழாமலில்லை.
சின்னத்திரை வெள்ளித்திரை என கடைசிவரை கோலோச்சியவர் கே்பி. இவரின் கதை சொல்லும் திறனையும், புதுமைகளையும், காட்சியமைப்பின் துல்லியங்களையும், திரைக்கதை வடிவங்களையும் எவ்வளவு வேண்டுமானாலும் சொல்லிக்கொண்டே போகலாம்… அதற்கு முடிவில்லை. பாலசந்தர் இல்லாமல் தமிழ் திரையுலக வரலாற்றை எழுதிவிட இயலுமா என்ன? அவரின் பிறந்த தினத்தில் அதில் ஒரு துளியையாவது சுவைத்து மகிழ்வோமே..!!!
Thanuja Jayaraman