“மண்வாசனை நாயகி ரேவதி பிறந்தநாள் இன்று..”
ரேவதி. தமிழ் சினிமா நடிகைகளின் வரையறை வார்ப்புகளுக்குள் சிக்காமல் தனக்கென பிரத்யேகங்களை வடிவமைத்துக் கொண்டு வளர்ந்த நாயகி. எண்பதுகளில் இருந்த அனைத்து முன்னணி இயக்குநர்களின் படங்களிலும் நடித்து, தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்ட நடிகை ரேவதி, இந்தி, மலையாள திரைப்படங்களிலும் நடித்து புகழ் பெற்றார். கேரளாவின் கொச்சியில் பிறந்த ஆஷா கெலுன்னி (ரேவதி), தந்தையின் ராணுவப் பணியால் இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் வளரும் சூழல் ஏற்பட்டது. அந்த வகையில், ஏழாம் வகுப்பு படித்தபோது, சென்னையில் குடியேறினார். தந்தையின் பணிச் சூழல் காரணமாக, அம்மாவே தனி ஆளாக ரேவதியையும், அவரது தங்கையையும் வளர்த்திருக்கிறார். ஏதேனும் ஒரு கலையில் தேர்ச்சியடைந்தால், ஒழுக்கமும் உடன் வரும் என்ற அம்மாவின் போதனையே, நடனத்தின் மீதான ஈர்ப்பை ரேவதிக்கு ஏற்படுத்தியுள்ளது.அதனால், டான்சராகவும், டாக்டராகவும் வேண்டும் என்கிற இரட்டைக் கனவுகளுடனேயே பயணப்பட்டு இருக்கிறார் ரேவதி.
ப்ளஸ் டூ முடித்திருந்த நேரத்தில்தான் ‘மண்வாசனை’ திரைப்படத்தில் நடிப்பதற்காக அவரை அணுகியிருக்கிறார் இயக்குநர் பாரதிராஜா. “நான் நடிகையா” எனக் கேட்டு வியந்து போயிருக்கிறார் 16 வயதே ஆன ரேவதி.அவரது குடும்பத்தினர் சமதானப்படுத்திய பிறகு அந்தப் படத்தின் நாயகியானார். அந்த நேரத்தில், பாரதிராஜா சொல்வதை மிகவும் உன்னிப்பாகக் கவனித்து, அப்படியே நடித்ததாக தெரிவித்திருக்கிறார் ரேவதி.முழுக்க முழுக்க நகரங்களிலேயே வாழ்ந்து நகர வாழ்க்கைக்கு பழக்கப்பட்டவர் ரேவதி.அப்படிபட்ட அவருக்கு, ‘மண்வாசனை’ திரைப்படமே கிராமத்து வாழ்வியலை நெருக்கமாகக் காட்டியது. அந்தப் படத்திற்காகவே முதல்முறையாக புடவை அணிந்திருக்கிறார். அதோடு, அந்தப் படத்தின்போதுதான் ஆஷா கெலுன்னி எனும் பெயரை ரேவதியாக மாற்றினார் இயக்குநர் பாரதிராஜா.
கேந்திரிய வித்யாலயா மாணவர் என்பதால், ஆங்கிலம், இந்தியில் மட்டுமே தேர்ந்தவராக இருந்த ரேவதிக்கு, மண்வாசனை படத்தின் ஒவ்வொரு வசனத்தையும் உடனிருந்து பேச வைத்தவர் பாரதிராஜா.டப்பிங்கிலும் உடனிருந்து சிறப்பாகப் பேச வைத்தவர் பாரதிராஜா என்று குறிப்பிட்டுள்ளார் ரேவதி. அவர் ஏற்று நடித்த முத்துப்பேச்சி கதாபாத்திரம் ரசிகர்களின் மனங்களைக் கொள்ளையடித்தது.‘மண்வாசனை’படத்தை முடித்ததும், மலையாளத்தில் ‘காற்றத்தே கிளிக்கூடு’ படத்தில் ரேவதி நடித்தார். அந்தப் படமும் பெரும் வெற்றியடைய தமிழ்நாடு, கேரளாவில் வெற்றிகரமான நாயகியாக அவர் மாறினார்.இதனால், ஏராளமான பட வாய்ப்புகள் குவிய, நடிப்பா, படிப்பா எனும் குழப்பம் ரேவதிக்கு ஏற்பட்டது. அதன்பிறகு, குடும்பத்துடன் கலந்து பேசி, சிறிது காலம் மட்டும் நடிப்பது எனும் முடிவை எடுத்திருக்கிறார். அந்த நேரத்தில், பாரதிராஜாவிடம்தான் அடுத்தடுத்த படங்கள் குறித்து ஆலோசித்து முடிவெடுப்பாராம் ரேவதி.
தமிழில் ரேவதியின் மூன்றாவது திரைப்படம் ‘கை கொடுக்கும் கை’. ரஜினிகாந்த் நாயகனாக நடித்த இந்தப் படத்தில் பார்வை மாற்றுத் திறனாளி கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார் ரேவதி. இந்த கதாபாத்திரத்திற்காக படப்பிடிப்புக்கு முன்பாக இரு கண்களையும் கட்டிக் கொண்டு நடந்து பழகியதாகவும், நடிப்பிற்காக முதலும் கடைசியுமாக எடுத்த ஒரே பயிற்சி அதுதான் எனவும் ரேவதி ஒருமுறை குறிப்பிட்டார். முதல்நாள் படப்பிடிப்பின்போது, `கண்ணு தெரியாத பொண்ணுதானே. கண் மை உட்பட எந்த மேக்கப்பும் வேண்டாமே’ என இயக்குநர் மகேந்திரனிடம் ரேவதி கூறியிருக்கிறார்.காதாபாத்திரத்துடன் ஒன்றிப்போன ரேவதியின் அனுகுமுறையை ‘சூப்பர்’ என மகேந்திரன் பாராட்டியிருக்கிறார்.அதைத் தொடர்ந்தே அந்த கதாபாத்திரத்தில் மேக்கப்பே இல்லாமல் நடித்திருந்தார் ரேவதி.
‘கைகொடுக்கும் கை’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த நேரத்தில்தான், கமல்ஹாசனின் ‘ஒரு கைதியின் டைரி’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் ரேவதி. இதனால், ஒரே நேரத்தில், கமல், ரஜினி படங்களில் நடித்தார். பாரதிராஜா இயக்கத்தில் மீண்டும் ரேவதி நடித்த ‘புதுமைப் பெண்’, ‘ஒரு கைதியின் டைரி’ படங்கள் பெரும் வெற்றியடைந்தன. ரேவதியின் திறமையான நடிப்பால், அவர் வயது குறித்தெல்லாம் எந்தவிதமான கேள்விகளுமின்றி அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்தன. அந்த வகையில், அவர் கைம்பெண் கதாபாத்திரமேற்ற திரைப்படம்தான் ‘வைதேகி காத்திருந்தாள்’.ஏற்கெனவே கற்றிருந்த நடனம் இந்தப் படத்தின் கதாபாத்திரத்திற்கு உதவ, ரேவதிக்கு மக்கள் மத்தியில் பெரும் பாராட்டும் கிடைத்தது. அந்தப் படத்தின் ‘அழகு மலராட’ இப்போதும் ஒலித்துக் கொண்டிருப்பதில் ரேவதியின் பங்கு பெரிதும் உண்டு.
அறிமுகமானது முதல் அடுத்தடுத்த 7 திரைப்படங்களுக்கு உள்ளாகவே பாரதிராஜா, மகேந்திரன், பரதன், பாபு என அப்போதைய முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்துவிட்டார் ரேவதி. 20 வயதிற்குள்ளாகவே, அவர் நடித்த சவாலான கதாபாத்திரங்கள்தான் சினிமாத்துறையில் அவரைத் தொடர்ந்து ஈடுபாட்டுடன் இயங்க வைத்தது.ரேவதியின் தந்தை, அவரை பாலச்சந்தர் இயக்கத்தில் நடிக்க வைக்க வேண்டும் எனும் ஆசையுடன் அந்த வாய்ப்புக்காக காத்திருந்தார். அவரது ஆசை, ‘புன்னகை மன்னன்’ பட வாய்ப்பால் நிறைவேறியது. அந்த நேரத்தில், கமல்ஹாசனுக்கு இணையாக நடிப்பு, நடனம் ஆகியவற்றில் அசத்த இயக்குநர் பாலச்சந்தர் உறுதுணையாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார் ரேவதி.ரேவதியின் திரை வாழ்க்கையில், திருப்புமுனையாக அமைந்த படம் ‘மௌன ராகம்’.மணிரத்னம் இயக்கிய முதல் படமான, ‘பகல் நிலவு’ படத்தில் இருந்தே அவரோடு நட்புடன் இருந்திருக்கிறார் ரேவதி. அதனால், அப்போதே ‘மௌன ராகம்’ படத்தின் கதையை ரேவதியிடம் சொல்ல, உடனே ஒப்புக் கொண்டு, நடிக்க சம்மதமும் தெரிவித்திருக்கிறார்.
திவ்யா எனும் கதாப்பாத்திரத்தை வைத்து மணிரத்னம் எழுதிய சிறுகதையே பின்னர் ‘மௌனராகம்’ எனும் முழு நீளப் படமாக உருவானது. அந்தக் காலத்தில் பின்பற்றப்பட்ட எந்தவகை திரைக்கதை வடிவங்களுக்குள்ளும் சிக்காமல் எளிமையான, அதே நேரம் அனைவரையும் ஈர்க்கிற விதமான மென்-காதல் கதையுடன் வெளியான மௌனராகம் திரைப்படத்தில், ரேவதி ஏற்றிருந்த திவ்யா கதாபாத்திரம் இன்றளவும் ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவருடன் திடீரென நடக்கும் திருமணம், முதலிரவில் விவாகரத்து கேட்கும் மனைவி, அதன்பின் அவள் முன் குறுகியபடியே நடக்கும் கணவன் என மிகச் சாதாரணமான களத்தினை காதல் எனும் ஒற்றைப் புள்ளியில் கவித்துமாக்கியிருந்தார் மணிரத்னம்.அதோடு, பெரும்பாலானவர்களுக்குள் தீரா வடுவாய் நிழலாடும் முதல் காதலின் வலியை ரேவதி அந்தக் கதாபாத்திரத்தின் ஊடாக வெளிப்படுத்திய விதம் பெரும் பாராட்டுகளைப் பெற்றது.
முதல் காதலின் வலியை எந்தளவிற்கு மௌனராகம் பேசியதோ, அதே அளவிற்கு இரண்டாவதாக வரும் காதலின் வலிமையையும் சொன்னது. குறும்புத்தனமான காதலனாக ஃபுல் எனர்ஜியுடன் திரையில் உலவும் கார்த்திக்கை கொண்டாடிய அளவிற்கு, துயரத்தை சுமக்கும் ரேவதி கதாபாத்திரத்தையும் ரசிகர்கள் ரசித்து மகிழ்ந்தார்கள்.மௌன ராகம் படத்தில் ஏற்று நடித்திருந்த திவ்யா கதாபாத்திரம் தனிப்பட்ட முறையில் தனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் என்று பலமுறை பதிவு செய்திருக்கிறார் ரேவதி.முதல் படம் தொடங்கி கொஞ்சம் சீரியஸான கதாபாத்திரங்களிலேயே அதிகமாக நடித்து வந்த ரேவதியின் நகைச்சுவை நடிப்புக்கு தீனி போடும் விதமாக அமைந்த படம் `அரங்கேற்ற வேளை’.இந்தப் படத்தில் அவரது ‘மாஷா’ கதாபாத்திரம் காமெடியில் கலக்க, தன்னால் எல்லாவித பாத்திரங்களையும் ஏற்று சிறப்பாக நடிக்க முடியும் என பார்வையாளர்கள் மத்தியில் ரேவதி பெயரெடுத்தார்.
அதைப் போலவே, மாடர்ன் பெண்ணாக நடித்த ‘மகளிர் மட்டும்’, அம்மன் போன்ற தோற்றத்தில் நடித்த ‘கிழக்கு வாசல்’ எனப் பெரும் புகழுடன் வலம் வரத் தொடங்கினார் ரேவதி. அவரது, திரை வாழ்க்கையில், ‘அஞ்சலி’ படமும் மைல்கல்லாக அமைந்தது. தொடர்ந்து வாய்ப்புகள் வந்தாலும் ஒருநாளைக்கு ஒரு கால்ஷீட், ஒரு ஷெட்யூல் முடிந்ததும் இரண்டு நாட்கள் பிரேக், பயணம், உடல்நலம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவது எனச் சில விதிகளைத் தனது தாயாரின் விருப்பப்படி தொடர்ந்து கடைபிடித்து வந்தார் ரேவதி. அதேபோல், கதை, கதாபாத்திரம், நடிப்பு ஆகியவற்றுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ‘நோ கிளாமர்’ என்ற கொள்கையிலும் உறுதியாக இருந்தார்.
வெற்றி, தோல்விகள் குறித்து அலட்டிக் கொள்ளாத ரேவதி, தனது நடிப்பில் வெளியாகும் படங்களை, தானே திரையரங்கில் பார்த்து மதிப்பீடு செய்து, அடுத்தடுத்த படங்களில் தன் முந்தைய தவறுகளைச் சரிசெய்து கொள்வார். இதனால்தான், ‘உதய கீதம்’, ‘இதய தாமரை’, ‘மறுபடியும்’, ‘தேவர் மகன்’, ‘பிரியங்கா’ என ஏராளமான வெற்றிப் படங்களில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் பெரியளவில் பேசப்பட்டன.அழுத்தமான கதைக்களங்களையும், கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடிப்பதைத் தனது பாணியாகக் கொண்டிருந்த ரேவதி, தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், 4 படங்களை இயக்கியும் இருக்கிறார். இப்போதும் இயக்கப் பணிகளில் ஈடுபட்டு வரும் ரேவதி சினிமாவில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள ஒருபோதும் முற்படாமல் இருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு ராஜ்கிரணுடன் நடித்த ப. பாண்டி, ஜோதிகாவுடன் நடித்த ஜேக்பாட் போன்ற படங்கள் ரேவதியின் வெரைட்டி நடிப்பு திறன் குறையவில்லை என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தியது. இப்போதும், திரைப்படத் துறையை நோக்கி நகர்பவர்களுக்கு ரேவதி ரோல் மாடலாகவே திகழ்கிறார்.