“இந்திய கிரிக்கெட்டின் மகராஜா’ சௌரவ் கங்குலி..!”
இந்திய அணியின் ஆகச்சிறந்த கேப்டனாக வலம் வந்தவர் கங்குலி.வீரர்களுடைய திறமையை எவ்வாறு கண்டறிவது, அவர்களை எவ்வாறு ஊக்கப்படுத்துவது, ஆதரவு, சுதந்திரம் அளிப்பது குறித்து கங்குலிக்கு நன்கு தெரியும். இதைச் சரியாகச் செய்ததால்தான் கங்குலி வெற்றிகரமான கேப்டனாக அறியப்பட்டார்”கங்குலியின் 50வது பிறந்தநாளின்போது, அவரது நெருங்கிய நண்பரான, ‘லிட்டில் மாஸ்டர்’ என்று அறியப்படும் சச்சின் டெண்டுல்கர் பெருமையோடு கூறிய வார்த்தைகள் இவை.‘இந்திய கிரிக்கெட்டின் மகராஜா’, ‘ஆஃப் சைடின் கடவுள்’, ‘கொல்கத்தா இளவரசர்’, ‘தாதா’ என செளரவ் கங்குலியை அவரது ரசிகர்கள் இன்றும் செல்லமாக அழைத்து வருகிறார்கள்.இந்திய கிரிக்கெட்டின் மரபுகளை தயங்காமல் தகர்த்தவர். இயல்பிலேயே ஆளுமைப் பண்பு நிறைந்தவர். செளரவ் கங்குலியின் 51வது பிறந்தநாள் ஜூலை 8ஆம் தேதியன்று கொண்டாடப்படுகிறது.ஒரு கிரிக்கெட் வீரருக்கு அவரின் ரசிகர்கள் இத்தனை விதமான பெயர்களைக் கூறி செல்லமாக அழைத்தது என்பது கங்குலிக்கு மட்டுமாகத்தான் இருக்கும்.
ஆக்ரோஷம், ஆவேசம், கோபம் ஆகியவற்றின் கலவையாகத்தான் கங்குலி களத்தில் இருப்பார். இந்திய அணியின் கேப்டன்கள் வரிசையில் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்தவர் செளரவ் கங்குலி.கங்குலி கேப்டனாக இருந்த 2000 முதல் 2005 வரையிலான காலகட்டம் இந்திய அணியின் பொற்காலம் என்றுதான் சொல்ல வேண்டும்.கங்குலி அமைத்துக் கொடுத்த மலர்ப்பாதையில்தான் அடுத்து வந்த கேப்டன் தோனி பயணித்து இந்திய அணிக்காக உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்தார் என்பதுதான் நிதர்சனம். யுவராஜ் சிங், சேவாக், கம்பீர், நெஹ்ரா, ஜாகீர் கான், ஹர்பஜன் சிங், தோனி போன்றோர் கங்குலியால் உருவாக்கப்பட்டவர்கள்தான்.கங்குலி என்ற மனிதர் இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்காமல் இருந்திருந்தால், 2000ஆம் ஆண்டு கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சைக்குப் பிறகு இந்திய அணி தனது பொலிவை இழந்து, ரசிகர்கள் மத்தியில் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்திருக்கும்.இந்திய கிரிக்கெட்டை மீள்கட்டமைத்து, எழுச்சி பெறச் செய்து, இளைஞர்களைக் கொண்டு வந்து அணிக்கு புது ரத்தம் பாய்ச்சியவர் கேப்டன் கங்குலி என்றால் மிகையல்ல.இந்திய அணி தோனி தலைமையில் உலகக் கோப்பையை வென்றபோது அணியில் இருந்த பெரும்பலான வீரர்கள் கங்குலியின் பட்டறையில் பட்டை தீட்டப்பட்டவர்கள், செதுக்கப்பட்டவர்கள்தான்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த 1972, ஜூலை 8ஆம் தேதி பிறந்தவர் செளரவ் கங்குலி. தந்தை சந்திதாஸ், தாய் நிருபமா கங்குலி.கொல்கத்தாவில் வசதியான குடும்பத்தில் பிறந்த கங்குலிக்கு, சிறுவயதில் இருந்தே கால்பந்து ஆட்டத்தின் மீதுதான் அதிக ஆர்வம், விருப்பம்.ஆனால், கங்குலியின் மூத்த சகோதரர் ஸ்நேஹாசிஸ் கங்குலி கிரிக்கெட் விளையாடுவதைப் பார்த்து ஈர்க்கப்பட்டு கங்குலியும் கிரிக்கெட் மீது கவனத்தைச் செலுத்தினார்.ஆனால் கொல்கத்தாவின் இளவரசரான கங்குலியின் வாழ்க்கை விளையாட்டின் மீது செல்வதையும், திரும்புவதையும் தாய் நிரூபமா விரும்பவில்லை. ஆனால், சகோதரர் ஸ்நேஹிசிஸ் கங்குலியின் ஆதரவால் கங்குலிக்கு முறையான கிரிக்கெட் பயிற்சி கிடைத்து, அவரால் சிறந்த வீரராக உருவாக முடிந்தது.கங்குலி கிரிக்கெட் பயிற்சி எடுத்தபோது வலது கை பேட்ஸ்மேனாக தான் இருந்தார். ஆனால், அவருக்கு வலது கையில் பேட்டிங் செய்வது சற்று சிரமமாக இருந்ததால், இடது கைக்கு மாறினார்.அவருக்கு அது வசதியாக இருக்கவே இடது கையில் முறைப்படி பேட்டிங் பயிற்சி எடுத்தார், இடது கையில் பேட்டிங் கங்குலிக்கு அனாசயமாக வந்தது.பதினைந்து வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் புனித சேவியர் பள்ளி அணிக்கு கேப்டனாக இருந்த கங்குலி, ஒடிசா அணிக்கு எதிராக சதம் விளாசி இடது கை பேட்டிங்தான் சரியானது என்பதை உணர்ந்தார்.கங்குலி 1989ஆம் ஆண்டு பெங்கால் அணிக்கு தேர்வானார். 1990-91 ரஞ்சி சீசனில் அவரது ஆட்டம் அனைவராலும் ஈர்க்கப்பட்டு வெளிச்சத்துக்கு வந்தார்.
இந்திய அணி 1992ஆம் ஆண்டில், அசாருதீன் தலைமையில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டது.பிரிஸ்பேனில் காபாவில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில்தான் செளரவ் கங்குலி முதன்முதலில் இந்திய அணிக்காக களமிறங்கினார்.கபில்தேவ், ஸ்ரீகாந்த் போன்ற அனுபவ வீரர்களுடன் தனது 19 வயதிலேயே களமிறங்கிய கங்குலி, முதல் ஆட்டத்தில் 6வது வீரராக வந்து 3 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.முதல் போட்டியின் அறிமுகமே கங்குலிக்கு சோதனையாக அமைந்தது, சிறப்பாகச் செயல்படவில்லை, அணிக்குள் மூத்த வீரர்களுடன் முரண்பட்ட போக்கு போன்ற காரணங்களால் அந்தத் தொடருக்குப் பிறகு அணியிலிருந்து கங்குலி நீக்கப்பட்டார்.ஆனால், கங்குலியின் கடின உழைப்பு, தீவிரப் பயிற்சியால் 1993, 1994, 1995 ரஞ்சிக் கோப்பை சீசன்களில் கங்குலியின் பேட்டிங் அனைவராலும் ரசிக்கப்பட்டது, கவனத்தை ஈர்த்தது.குறிப்பாக 1995-96 ஆம் ஆண்டு துலீப் டிராபியில் கங்குலி 171 ரன்கள் ஸ்கோர் செய்தது அவரை இந்திய அணிக்குள் தவிர்க்க முடியாத சக்தியாக உருவாக்கி, தேர்வாக வைத்தது.
இதையடுத்து, 1996ஆம் ஆண்டு இந்திய அணியின் இங்கிலாந்து டெஸ்ட் தொடர் பயணத்தில் கங்குலி தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் டெஸ்ட் போட்டியில் கங்குலிக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை, அந்த டெஸ்டில் இங்கிலாந்து அணி வென்றது.இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது நவ்ஜோத் சித்து, திடீரென நாடு திரும்பவே அவரின் இடத்தில் தொடக்க வீரராக கங்குலி களமிறங்கினார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி அடுத்தடுத்து இரு சதங்களை அடித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிய கங்குலி தனது முதல் போட்டியிலேயே சதம்(131) அடித்து அசத்தினார். இதே போட்டியில்தான் ராகுல் திராவிட்டும் அறிமுகமாகி 95 ரன்கள் சேர்த்தார். டிரென்ட் பிரிட்ஜில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியிலும் கங்குலி 136 ரன்கள் விளாசி தனது தேர்வை நியாயப்படுத்தினார்.அறிமுகமாகி முதல் 2 இன்னிங்ஸில் சதம் அடித்த உலகின் சிறந்த பேட்டர்களான காளிச்சரண், லாரன்ஸ் ரோவ் ஆகியோருக்குப்பின் 3வது வீரராக கங்குலி புகழப்பட்டார்.
அதுமட்டுமல்ல கங்குலியின் பேட்டிங் நுணுக்கம், பேட்டிங் ஸ்டைல், அதிரடியான ஷாட்கள், ஆப்-சைடில் அவர் அடிக்கும் டைமிங் ஷாட்கள் ரசிகர்களால் பெரிய வரவேற்பைப் பெற்றன. கிரிக்கெட் உலகம் கங்குலியை அடையாளம் கண்டு கொண்டாடத் தொடங்கியது.பாகிஸ்தானுக்கு எதிராக 1997ஆம் ஆண்டு நடந்த தொடரில் தொடர்ந்து 4 ஆட்ட நாயகன் விருதுகளை வென்ற ஒரே வீரர் கங்குலி மட்டும்தான். 1999ஆம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில், இலங்கை அணிக்கு எதிராக திராவிட்டும், கங்குலியும் சேர்ந்து அடித்த 318 ரன்கள் பார்ட்னர்ஷிப் கிரிக்கெட் உலகை மிரட்டியது. இலங்கைக்கு எதிராக 183 ரன்கள் சேர்த்தார் கங்குலி.1999-2000 ஆண்டு இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய கறையை ஏற்படுத்திய காலகட்டம்.
உலகக் கிரிக்கெட்டில் சூதாட்டப் புகார் சுழன்றடித்தது. இந்தச் சூறாவளியில் இந்திய வீரர்களும் சிக்கினார்கள். முகமது அசாரூதீன், ஜடேஜா மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு தடைவிதிக்கப்பட்டனர்.’ஜென்டில்மேன் கேம்’ என அழைக்கப்பட்ட கிரிக்கெட்டில் சூதாட்டம், ஸ்பாட் ஃபிக்ஸிங் போன்றவை மலிந்துவிட்டதால், ரசிகர்கள் மத்தியில் திடீரென கிரிக்கெட் மீதான மோகம், ஆர்வம் மலியத் தொடங்கி பெரும் இழிவைச் சந்தித்தது. சர்வதேச அளவில் மட்டுமின்றி இந்தியாவிலும் கிரிக்கெட்டின் மதிப்பு சரிந்தது.இதுபோன்ற கடினமான காலத்தில் இந்தியாவில் ரசிகர்களிடையே கிரிக்கெட் மீதான நம்பகத்தன்மையற்ற காலம் இருந்தபோதுதான், இந்திய அணிக்கு கேப்டனாக செளரவ் கங்குலி நியமிக்கப்பட்டார்.கங்குலி கேப்டனாக நியமிக்கப்பட்ட காலத்தில் இந்திய அணியில் சொல்லிக்கொள்ளும் பேட்ஸ்மேன்களாக சச்சின், திராவிட் ஆகிய மும்மூர்த்திகளே இருந்தனர். யுவராஜ் சிங், ஹேமங் பதானி, அறிமுகமான காலகட்டம். வேகப்பந்துவீச்சில் அகர்கர், ஜாகீர்கான் அறிமுகமாகிய காலம், வெங்கடேஷ் பிரசாத் மட்டுமே நம்பிக்கையளிக்கும் விதத்தில் இருந்தார்.
இந்த இக்கட்டான கால கட்டத்தில் இந்திய அணியின் கேப்டனாக கங்குலி நியமிக்கப்பட்டார். ஏகத்துக்கும் சரிந்திருந்த இந்திய கிரிக்கெட்டின் இமேஜை தூக்கி நிறுத்த வேண்டிய பொறுப்பு கங்குலி தலையில் விழுந்தது.கங்குலி கேப்டனாக பதவி ஏற்றதும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி வென்றது, 2000 ஆம் ஆண்டில் நடந்த ஐசிசி நாக்அவுட் கோப்பையில் இறுதிப் போட்டிவரை இந்திய அணி முன்னேறியது.அந்த நேரத்தில் ஸ்வீட் வாஹ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி உலகக் கிரிக்கெட்டில் பெரிய அண்ணான வலம் வந்தது. எந்த அணியையும் அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி 16 டெஸ்ட் போட்டிகளில் வென்று சாதனை படைத்ததிருந்தது. ஆனால், 2001ம் ஆண்டு இந்தியாவுக்கு பயணித்த ஆஸ்திரேலிய அணியை தோற்கடித்த கங்குலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.அது மட்டுமல்ல.. இந்தத் தொடரில்தான் ஹர்பஜன் சிங் எனும் இளம் சுழற்பந்துவீச்சாளரை செளரவ் கங்குலி அடையாளம் கண்டு இந்திய அணிக்குள் கொண்டு வந்தார். ஆஸ்திரேலிய அணிக்கு இந்தத் டெஸ்ட் தொடர் முழுவதும் ஹர்பஜன் சிங் சிம்மசொப்பனமாக வலம் வந்தார்.
கங்குலி கேப்டனாக இருந்தபோது, வழக்கமாக கடைபிடிக்கப்படும் மரபுகளை உடைத்தெறிந்து புதிய விஷயங்களை செயல்படுத்தி, அணிக்கு புதிய ரத்தம் பாய்ச்சினார். ஸ்பெஷலிஸ்ட் விக்கெட் கீப்பரான நயன் மோங்கியாவை நீக்கிவிட்டு சபாகரீம் போன்ற பேட்டிங் செய்யும் விக்கெட் கீப்பர்களை பரிசோதித்தார் கங்குலி. அதுவும் தோல்வியில் முடிந்ததால், ராகுல் திராவிட்டை கீப்பிங் செய்ய வைத்தார்.சேவாக் நடுவரிசையில் பேட்டிங்கில் தடுமாறிக் கொண்டிருந்த நேரத்தில் கங்குலி எடுத்த அதிரடியான முடிவு, சேவாக்கின் வாழ்க்கையையும், இந்திய அணியின் நிலையையும் புரட்டிப் போட்டது. சேவாக்கை, சச்சினுடன் களமிறக்கி கங்குலி தனது இடத்தை விட்டுக்கொடுத்தார்.சேவாக்கிற்கு இந்த மாற்றம் அவரின் வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. சர்வதேச அளவில் சச்சின், கங்குலி ஓபனிங் பார்ட்னர்ஷிப் பெரிய சாதனைகளை படைத்திருந்த நேரத்தில் தனது தொடக்க வரிசை இடத்தை அணியின் நலன் கருதி சேவாக்கிற்கு கங்குலி விட்டுக்கொடுத்து 3வது வீரராக களமிறங்கினார்.
அது மட்டுமல்ல.. நடுவரிசையில் இந்திய அணி தடுமாற்றம் அடைந்தபோது பிஞ்ச் ஹிட்டர் தேவை என்பதாலும், ஸ்கோரை உயர்த்த வேண்டும் என்பதாலும் இர்பான் பதான், தோனியை 3வது மற்றும் 4வது வீரராகக் களமிறக்கி அதிரடியாக ஆடச் செய்து பரிசோதித்ததும் கங்குலிதான்.தோனிக்கு அதிரடியான பேட்டிங் திறமை இருக்கிறது என்பதை கண்டறிந்தது வெளிஉலகிற்கு நிரூபித்தது கங்குலி என்பதை மறுக்க முடியாது என்று சேவாக் ஒரு பேட்டியில் கங்குலியை பெருமையாகக் குறிப்பிட்டுள்ளார்.கங்குலி இந்திய அணிக்கு கேப்டனாக இருந்த காலத்தில் ஏராளமான வெற்றிகளைப பெற்றது. குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் 2000 முதல் 2005 வரை உள்நாட்டில் 21 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடி 11 போட்டிகளில் வென்றது 3 மட்டுமே தோற்றது.வெளிநாடுகளில் 28 போட்டிகளில் பங்கேற்று 11 ஆட்டங்களில் வென்றது, 10ல் தோற்றது. ஒட்டுமொத்தமாக 49 டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்த கங்குலி 21 வெற்றிகளை பெற்றுக்கொடுத்தார், 13 தோல்விகள் மட்டுமே கண்டார்.
ஒருநாள் போட்டிகளில் உள்நாட்டில் 36 போட்டிகளில் 18ல் வெற்றியும், 18ல் தோல்வியும் இந்திய அணி அடைந்தது. வெளிநாட்டில் 51 போட்டிகளில் கங்குலி தலைமையில் விளையாடிய இந்திய அணி 24 வெற்றி, 24 தோல்விகளைக் கண்டது. 146 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி கங்குலி தலைமையில் 76 வெற்றிகளையும், 65 தோல்விகளையும் அடைந்தது. ஒட்டுமொத்தத்தில் இந்திய அணியின் டெஸ்ட், ஒருநாள் வெற்றி சதவீதத்தை 50 சதவீதத்துக்கு மேல் உயர்த்தியது கங்குலி கேப்டன்ஷிதான் என்பது மிகையல்ல.இந்திய அணிக்கு பயிற்சியாளராக கிரேக் சேப்பல் இருந்த காலம் இருண்டகாலம் என்று முன்னாள் வீரர்கள் பலரும் காட்டமாக விமர்சித்துள்ளனர். அதிலும் சேப்பலுக்கும், கங்குலிக்கும் இடையிலான மோதல்தான் கங்குலியின் பேட்டிங்கில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியது. கங்குலி குறித்து சேப்பலின் பிசிசிஐக்கு அனுப்பிய மின்னஞ்சலும், அதில் அவர் வைத்த குற்றச்சாட்டுகளும் கங்குலிக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தியது. இருதரப்பையும் பிசிசிஐ சமாதானப்படுத்த முயன்றது. ஆனால், இந்த விவகாரத்துக்குப்பின் கங்குலியின் பேட்டிங் ஃபார்ம் மோசமாகவே அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.
யானைக்கும் அடி சறுக்கும் என்பதைப் போல் அணியிலிருந்து நீக்கப்பட்ட கங்குலி, மீண்டும் உள்நாட்டுப் போட்டிகளிலும் ரஞ்சியிலும் கவனம் செலுத்தினார். 10 மாதங்களில் மீண்டும் இந்திய அணிக்குள் கங்குலி இடம் பெற்றார்.தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் கங்குலியின் இயல்பான ஆட்டம் வெளிப்பட்டதையடுத்து, ஒருநாள் தொடரிலும், பின்னர் 2007 உலகக் கோப்பைத் தொடரிலும் கங்குலி இடம் பிடித்தார். 2007ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கங்குலி அடித்த இரட்டை சதம், கொல்கத்தா புலி மீண்டும் ஃபார்முக்கு வந்துவிட்டதாக ரசிகர்கள் உற்சாக மடைந்தனர்.ஆனால் புகழின் உச்சியில் இருக்கும்போதே விலகிவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த கங்குலி, 2008ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.இந்திய அணிக்கு கிரிஸ்டனுக்குப்பின் சிறந்த பயிற்சியாளரைத் தேடிக் கொண்டிந்த போது அனில் கும்ப்ளேயை பயிற்சியாளராக அடையாளம் காட்டியதும் கங்குலிதான். ஆனால், பல்வேறு காரணங்களால் கும்ப்ளே பாதியிலேயே விலகியது வேறுகதை. பிசிசிஐ தலைவராக கங்குலி பதவி ஏற்றபின் பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடத்துவதில் இவர் காட்டிய வேகம், வீரர்களுக்கு ஊதிய உயர்வு, ரஞ்சிக் கோப்பை விளையாடும் வீரர்களுக்கு ஊதிய உயர்வு, மகளிர் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் அதிகரிப்பு போன்றவை இந்திய கிரிக்கெட்டை புதிய சகாப்தத்துக்குள் அழைத்துச் சென்றது.
இந்திய அணிக்காக செளரவ் கங்குலி, 311 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 11,363 ரன்கள் குவித்துள்ளார். இதில் 32 சதங்களும், 72 அரைசதங்களும் அடங்கும். 113 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 16 சதங்கள், 32 அரைசதங்கள் உள்பட 7,212 ரன்களை கங்குலி சேர்த்துள்ளார். அது மட்டுமல்லாமல் மிதவேகப் பந்துவீச்சாளரான கங்குலி சர்வதேச ஒரு போட்டிகளில் 100 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.உலக அரங்கை மிரட்டிய சச்சினுடன் சேர்ந்து கங்குலி வெளிநாட்டில் தொடக்க விக்கெட்டுக்கு 255 ரன்கள் சேர்த்தது இன்றுவரை சாதனையாக இருந்து வருகிறது. இருவரும் சேர்ந்து 136 போட்டிகளில் 7000 ரன்கள் சேர்த்துள்ளார்கள். 26 முறை 100 ரன்களுக்கு மேலாகவும், 44 முறை 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளார்கள்.கங்குலி ஆப்சைடில் அடிக்கும் டைமிங் ஷாட்கள், கவர் திசையில் அடிக்கும் ஷாட்களை எந்த பீல்டராலும் அவ்வளவு எளிதாகத் தடுத்துவிட முடியாது. கங்குலி பேட்டில் பட்டவுடன் பந்து மின்னல் வேகத்தில் பவுண்டரிக்கு பறக்கும். ஆப்-சைடில் கங்குலி பேக்புட்டிலும், பிரண்ட் புட்டிலும் கால்களை நகர்த்தி விளையாடுவதில் வல்லவர். ‘ஆப்-சைடின் கடவுள்’ என்ற பெயரை கங்குலிக்கு வழங்கியதே ‘இந்தியாவின் சுவர் என வர்ணிக்கப்படும் ராகுல் திராவிட்தான் என்பது பலருக்கும் தெரிந்திருக்காது.