“தாஜ்மஹால் உலக அதிசயமான நாள் இன்று..!”

 “தாஜ்மஹால் உலக அதிசயமான நாள் இன்று..!”

Amazing view on the Taj Mahal in sunset light with reflection in water. The Taj Mahal is an white marble mausoleum on the south bank of the Yamuna river. Agra, Uttar Pradesh, India

உலகின் புதிய ஏழு அதிசயங்கள் பட்டியலில் இந்தியாவின் பெருமை மிகு தாஜ்மஹால் முதலிடத்தைப் பிடித்து இந்தியர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய நாள் இன்று…
உலக அதிசயங்களில் ஒன்றான இந்த தாஜ் மஹால் முழுவதும் பளிங்குக் கற்களினால் கட்டப்பட்ட கட்டிடமாகும். இந்த தாஜ் மஹால் ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது. இது காதலின் சின்னமாக உலகப் புகழ் பெற்றது. ஏழு உலக அதிசயங்களின் புதிய பட்டியலில் தாஜ் மகாலும் சேர்க்கப்பட்டுள்ளது.

இக் கட்டிடம் முகலாய மன்னனான ஷாஜகானால், இறந்து போன அவனது இளம் மனைவி மும்தாஜ் நினைவாக 22,000 பணியாட்களைக் கொண்டு 1631 முதல் 1654 ஆம் ஆண்டுக்கு இடையில் கட்டிமுடிக்கப்பட்டது. ஜஹாங்கீர் முகலாயப் பேரரசராக இருந்தார். இந்த மன்னருக்கு மொத்தமாக நான்கு மகன்கள். அதில் ஒருவர்தான் ஷாஜகான். ஜஹாங்கீருக்கு அடுத்து முகலாயப் ஆட்சியை யார் பிடிப்பது என்ற பிரச்சனை ஏற்பட்டபோது தன்னுடைய உடன் பிறந்த மற்ற மூன்று சகோதரர்களையும் கொன்று, ஆட்சியை பிடித்தவர் தான் ஷாஜகான். ஷாஜஹான் ஆட்சியை தன்னுடைய சிறுவயதிலேயே பிடித்துவிட்டார்.

அரசராக இருந்த ஷாஜகான், மும்தாஜை சந்தித்த முதல் சந்திப்பிலேயே காதல் வசத்தில் விழுந்து விடுகின்றார். மும்தாஜை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்ற முடிவுக்கும் வந்து, இருவருக்கும் நிச்சயிக்கப்படுகிறது. இருப்பினும் திருமணம் நடக்கவில்லை. இதற்கு காரணம் அரச ஜோதிடர்கள் இவர்களுக்கு திருமணம் 5 ஆண்டுகளுக்கு பின்பு தான் நிகழவேண்டும் என்று கணித்து கூறிவிட்டனர். இந்த இடைப்பட்ட காலத்தில் அவரது ராஜியத்தை பாதுகாப்பதற்காக ஷாஜஹானுக்கு இரண்டு திருமணமும் செய்து கொண்டாராம். ஐந்து வருடம் கழித்து முகலாய மன்னர்களின் இந்த ஷாஜகான் மிகப்பெரிய மன்னராக பேசப்பட்டவர். இந்தியாவிலேயே அதிகப்படியான படைபலமும் பணபலமும் கொண்ட மன்னர் என்ற பெருமை இவருக்கு உண்டு. ஆக அரசியல்ரீதியாக மற்ற நாடுகளுடன் சண்டை வரும்போது, தன்னுடைய ஆட்சிக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்பதால் போர் செய்யக் கூடிய நாடுகளில் இருக்கும் இளவரசிகளை திருமணம் செய்துகொண்டு சுமூகமாக சண்டையை முடித்துக் கொள்வார்கள். இதனால், ஷாஜகான் அரசியல் ரீதியாக பல திருமணங்கள் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

மும்தாஜ் ஷாஜகானுக்கு முதல் மனைவி கிடையாது மூன்றாவது மனைவி ஆவார். மும்தாஜை திருமணம் செய்த பின்பும் ஷாஜஹான் இன்னும் பல திருமணங்களை செய்து கொண்டாராம். எத்தனை திருமணங்களை ஷாஜகான் செய்து கொண்டாலும், தன்னுடைய உயிருக்கு உயிரான மனைவியாக, காதலியாக நினைப்பது மும்தாஜை மட்டும்தான். பொதுவாக ’குழந்தை பிறந்துவிட்டாலே மனைவி மீது பாசம் போய்விடுகிறது’ என்பது பெண்களின் குற்றச்சாட்டு. ஒருசில ஆண்களின் செயல்களும் அப்படித்தான் இருக்கிறது. ஆனால், ஒரு குழந்தை அல்ல… இரண்டு குழந்தையும் அல்ல… ஷாஜகான் மும்தாஜ் தம்பதிகளுக்கு 14 குழந்தைகள். அத்தனை குழந்தைகள் பிறந்த பிறகும், திருமணம் செய்தபோது இருந்த அதே ஆழமான காதலோடு நேசித்து மனைவிக்கு உலகமே அதிசயிக்கும் வகையில் கல்லறை கட்ட முடிகிறது என்றால், அந்தக் காதல் உலக அதிசயங்களை விட பேரதிசயமானதுதான்.ஷாஜகானின் மூன்றாவது மனைவியான மும்தாஜ் தனது 14 வது குழந்தை குஹாரா பேகம் பிறந்தபோது இறந்துவிட்டார். அவர், இறந்த ஒரு வருடம் முழுக்க துயரத்திலேயே மூழ்கி இருந்த ஷாஜகானின் நரை முடிகளும் வாடிய முகமுமே மனைவியின் மீதான பிரிவையும் காதலையும் உணர்த்தியது.அப்படியொரு அன்பால் நிறைந்தது இவர்களின் வாழ்க்கை. இந்தியாவிற்கு பெருமையாக… காதலின் மகத்துவமாக காட்சியளிக்கும் தாஜ்மஹால் உருவாக காரணமாக இருந்தது மும்தாஜின் அன்புதான். அந்த பேரன்பே ஷாஜகானை தாஜ்மஹாலை கட்ட வைத்தது.

ஆதிகாலத்தில் அறிவிக்கப்பட்ட 7 அதிசயங்கள் அனைத்துமே 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தவை. அவற்றில் இப்போதும் இருப்பது எகிப்தின் பிரமிடு மட்டுமே. இந்த உலக அதிசயங்களை கிரேக்க எழுத்தாளர் ஆன்டிபேட்டர் என்ற தனி நபர் ஒருவராகவே தேர்வு செய்ததாக நம்பப்படுகிறது. இந்த ஏழு உலக அதிசயங்களில் பாபிலோனின் தொங்கும் தோட்டம் உள்ளிட்டவையும் அடக்கம். இந்த நிலையில், தற்போதுள்ள கால கட்டத்தின் அடிப்படையில் உலகின் புதிய ஏழு அதிசயங்களை தேர்வு செய்வதற்காக புதிய கருத்துக் கணிப்பு உலகம் தழுவிய அளவில் நடத்தப்பட்டது. இதற்கான முயற்சிகளை ஸ்விட்சர்லாந்தை நாட்டைப் பூர்வீமாகக் கொண்ட கனடா நாட்டவரான பெர்னார்ட் வெப்பர் என்பவர் தொடங்கினார். இந்த உலகளாவிய வாக்கெடுப்பு குறித்து ஆரம்பத்தில் பெரும் சர்ச்சைகள் எழுந்தன. யுனேஸ்கோ அமைப்பு இந்த வாக்கெடுப்புக்கு கண்டனம் தெரிவித்தது. உலக அதிசயங்களை ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுப்பது சரியல்ல என்று அது கருத்து தெரிவித்தது.

மேலும், இந்தக் கருத்துக் கணிப்பு மூலம் பெருமளவில் பண முறைகேடுகள் நடப்பதாகவும், மக்களின் பணத்தை சுரண்டும் முயற்சி என்றும் சர்ச்சைகள் கிளம்பின. இருப்பினும் இதைப் பொருட்படுத்தாமல், உலகின் புதிய ஏழு அதிசயங்களை தேர்வு செய்வதற்காக உலக அளவில் இணையதளம் மூலமாகவும், எஸ்.எம்.எஸ். மூலமாகவும் வாக்கெடுப்பு நடந்து வந்தது. இந்தப் பட்டியலில் ஆரம்பத்தில் ஏராளமானவை போட்டியில் இருந்தன. உலகம் முழுவதிலுமிருந்து 10 கோடி பேர் www.new7wonders.com என்ற இணைய தளம் மூலம் ஆன்லைன் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்தனர்.

இந்தியாவிலிருந்து தாஜ்மஹால், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், குதுப்மினார் உள்ளிட்ட பல கட்டட அதிசயங்கள் இடம் பெற்றிருந்தன. இறுதியில், தாஜ்மஹால் உள்ளிட்ட 21 கட்டடங்கள், அதிசய சின்னங்கள் இறுதிப் பட்டியலுக்குத் தேர்வு செய்யப்பட்டன. இவற்றிலிருந்து ஆறு மட்டுமே உலக அதிசயங்களாக சேர்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. எகிப்தில் உள்ள பிரமிடுகளின் காலம், பெருமை உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு அது உலக அதிசயமாக வாக்கெடுப்பின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. எனவே 6 உலக அதிசயங்களை அறிவிக்கும் நிகழ்ச்சி இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பெரும் திரளாக கூடியிருந்தவர்கள் மத்தியில் ஆறு உலக அதிசயங்களும் ஒன்றன் பின் ஒன்றாக அறிவிக்கப்பட்டன. லிஸ்பனில் உள்ள பென்பிசியா ஸ்டேடியத்தில் நடந்த வண்ணமிகு நிகழ்ச்சியில் ஆறு உலக அதிசயங்களும் அறிவிக்கப்பட்டன.

அதன்படி உலகின் புதிய ஏழு அதிசயமாக அறிவிக்கப்பட்டவற்றின் பட்டியல், 1. இந்தியாவின் தாஜ்மஹால். 2. சீனப் பெருஞ்சுவர். 3. ஜோர்டானின் பெட்ரா. 4. பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில், மலை உச்சியில் உள்ள பிரமாண்ட இயேசு நாதர் சிலை. 5. பெருவின் மச்சு பிச்சு. 6. மெக்ஸிகோவின் மயன் கட்டடங்கள். 7. ரோம் நகரின் கொலோசியம். நவீன ஏழு அதிசயங்களில் ஐரோப்பாவிலிருந்து இடம் பெற்றுள்ள ஒரே இடம் ரோம் நகரின் கொலோசியம்தான். இந்தப் போட்டியில் பிரான்ஸின் ஈபிள் டவர், அக்ரோபோலிஸ் ஆகியவையும் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. புதிய ஏழு அதிசயங்கள் தேர்வு குறித்து இந்த வாக்கெடுப்புக்ககான கமிஷனராக செயல்பட்ட முன்னாள் போர்ச்சுகல் வெளியுறவு அமைச்சர் ஜோஸ் பெரேடஸ் டோ அமரல் கூறுகையில், உலக அளவில் நடந்த மிகப் பெரிய வாக்கெடுப்பு இதுதான் என்பதில் புதிய வரலாறு படைத்துள்ளோம். இந்த நிகழ்வு சிறப்பான முறையில் முடிந்துள்ளது மகிழ்ச்சி தருகிறது என்றார். ஏழு உலக அதிசயங்களை அறிவிக்கும் நிகழ்ச்சி படு ரசனையுடன் வடிவமைக்கப்பட்டிருந்தது. பாப் ஸ்டார் ஜெனீபர் லோபஸ் கலந்து கொண்ட கலக்கல் ஆடல், பாடல் நிகழ்ச்சி ரசிகர்களை குஷிப்படுத்தியது. உலக அதிசயங்களாக அறிவிக்கப்பட்டவுடன் ரியோ டி ஜெனீரோ, பெரு, மயன் கட்டடங்கள் அமைந்துள்ள சிச்சேன் இட்ஸா ஆகிய நகரங்களில் மக்கள் வீதிகளில் ஆடிப் பாடி மகிழ்ந்தனர். ரியோ டி ஜெனீரோவில் உள்ள பிரமாண்ட இயேசு நாதர் சிலை உலக அதிசயமாக அறிவிக்கப்பட்டதை பிரேசில் மக்கள் பெரும் உற்சாகத்துடன் கொண்டாடினர். ரியோ நகரின் தெருக்கள் எல்லாம் மக்கள் தலைகளாக தென்பட்டது. இந்த கருத்துக் கணிப்பின் மூலம் வசூலான பணத்தின் பாதியைக் கொண்டு ஆப்கானிஸ்தானின் பாமியான் மலைத் தொடரில் உள்ள புத்தர் சிலையை மறு சீரமைப்பது உள்ளிட்ட செயல்களுக்காக பயன்படுத்தப் போவதாக வெப்பர் ஏற்கனவே அறிவித்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...