“தனுஷ் இயக்கி – நடிக்கும் D50 படப்பிடிப்பு துவங்கியது”
தனுஷ் இயக்கி – நடிக்கும் D50 படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமாகி உள்ளதாக படக்குழு, புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளது. நடிகர் தனுஷ் தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், சமீபத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று, மகன்களுடன் மொட்டை அடித்துக்கொண்டு தன்னுடைய நேர்த்திக்கடனையும் செலுத்தி வந்தார். இதைத்தொடர்ந்து லியோ படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தனுஷின் இந்த கெட்டப் சேஞ்சுக்கான பதில் தற்போது கிடைத்துள்ளது.
அதாவது நடிகர் தனுஷ், இயக்கி – நடிக்கும் D50 திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி, D50 படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டு, அறிவித்துள்ளது. மேலும் இதே போஸ்டரை தனுஷும் தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.சுவற்றில் ரத்தங்கள் கோடுகள் போட்டது போல் இருக்க, தனுஷ் சட்டை போடாமல் பாறைகள் மேல் நின்று கொண்டிருப்பது இந்த போஸ்டரில் உள்ளது. இந்த போஸ்டரே படம் மீதான எதிர்பார்ப்பை தூண்டி உள்ளது. தனுஷே எழுதி, இயக்கி, நடிக்கும் இந்த படம் குறித்த தகவல்கள் அவ்வபோது சமூக வலைதளத்தில் வெளியாகி வந்த நிலையில் தற்போது, படக்குழுவே படப்பிடிப்பு துவங்கியுள்ள தகவலை உறுதி செய்துள்ளது.
தனுஷ் இயக்கும் இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அதை போல் விஷ்ணு விஷால் மற்றும் சந்தீப் கிஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், தனுசுக்கு தங்கையாக துஷாரா விஜயனும், சந்திப் கிருஷ்ணனுக்கு ஜோடியாக அபர்ணா பால முரளி நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. மேலும் அமலா பால் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கவோ அல்லது முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவோ வாய்ப்புள்ளதாகவும் சில தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது வரை இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. தற்போது படப்பிடிப்பு ஆரம்பம் ஆகிவிட்டதாக போஸ்டரை மட்டுமே பட குழு வெளியிட்டுள்ள நிலையில், விரைவில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் – நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷின் ஐம்பதாவது படமான இப்படம் வடசென்னையை பின்னணியாக வைத்து, கேங் ஸ்டார் கதையம்சத்துடன் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.