“ பம்பர் “ நம்பிக்கையை விதைப்பதில் டாப்பர்…!!! திரை விமர்சனம்-தனுஜா ஜெயராமன்
கேரள மாநிலத்தில் புழங்கும் லாட்டரியை மையமாகக் கொண்ட ‘பம்பர்’ என்ற தமிழ் திரைப்படத்தில் ‘8 தோட்டாக்கள்’ மற்றும் ‘ஜீவி’ படத்தில் நடித்து புகழ் பெற்ற வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார். வேதா பிக்சர்ஸ் பேனரில் சு. தியாகராஜா தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் எம். செல்வக்குமார் இயக்குகிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்க பாடல்கள் கவனம் ஈர்த்துள்ளது. படத்தின் பாடல்களைகார்த்திக் நேத்தா இயற்றியுள்ளார் . ஜூலை 7ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது பம்பர் திரைப்படம்
இப்படத்தின் கதாநாயகியாக ‘பிக் பாஸ்’ புகழ் ஷிவானி நாராயணன் நடிக்கிறார். நண்பன் கதாபாத்திரம் ஒன்றை “விஐய் டிவி தங்கதுரை “ஏற்றுள்ளார்.
வெற்றி கதாநாயகனாக மிக சிறப்பான நடிப்பை தந்திருக்கிறார். அதற்கு இணையான கதாபாத்திரத்தில் நடிகர் ஹரீஷ் பேரடியும் நடித்திருக்கிறார். படத்தின் ஒளிப்பதிவை , ஒளிப்பதிவாளர் வினோத் ரத்தினசாமி கையாள்கிறார். படத்தொகுப்பினை மு.காசிவிஸ்வநாதன் செய்திருக்கிறார்.
திருட்டு , அடாவடி, ரவுடித்தனத்தில் ஊறிப்போய் , வெட்டியாய் ஊரை சுற்றும் பொறுப்பற்ற இளைஞனாக கதாநாயகன் வெற்றி. அவரது முறைப்பெண்ணாக வரும் ஷிவானி நாராயணனை காதலிக்கிறார். ரவுடி பயலுக்கு பொண்ணை தர மாட்டேன் என்கிறார் ஷிவானியின் அம்மா.
ஊருக்கு புதியதாக வரும் இன்ஸ்பெக்டருக்கு பயந்து வெற்றியும் , அவரது கூட்டாளிகளும் சபரிமலைக்கு மாலை போட்டு தப்பிக்கிறார்கள். அவர்கள் சபரிமலைக்கு செல்லும் வழியில் ஒரு லாட்டரி விற்கும் மலையாள முஸ்லீம் பெரியவரை சந்திக்கிறார்கள். அவரிடம் ஒரு லாட்டரி டிக்கெட்டை வாங்கி அதை அங்கேயே தொலைத்து விட்டு மறந்து போகிறார் வெற்றி. அதனை அந்த முஸ்லீம் பெரியவர் பத்திரமாக எடுத்து வைக்கிறார்.
எதிர்பாராத விதமாக அந்த லாட்டரிக்கு பம்பர் பரிசு விழுகிறது. அந்த பரிசு என்னவாகிறது? யாருக்கு சேருகிறது என்பது மீதிக் கதை. இதனை மிக யதார்த்தமாக நேர்மறையாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் எம். செல்வக்குமார் .
கதாநாயகி ஷிவானி நாராயணன் நடிக்க அவ்வளவு ஸ்கோப் இல்லையென்றாலும் பாந்தமாக கச்சிதமாக கொடுத்ததை நிறைவாய் செய்யும் விதமாக வந்து போகிறார்.
திரைக்கதையில் பணம் வந்ததும் நிறம் மாறும் மனிதமனங்களை இயல்பு மீறாமல் சொல்லியிருக்கிறார்கள். பணம் வந்ததும் உறவுகள் ஒட்டிக் கொள்வதாகட்டும், பெற்ற தகப்பனை கொல்ல முயல்வதாகட்டும் , நண்பர்களின் வன்மமாகட்டும் எப்படி மாறிப்போகிறது மனிதர்களின் பஞ்சோந்தி குணங்கள் என்பதை தோலுரித்து காட்டியிருக்கிறார் இயக்குனர்.
இறுதி காட்சியில் நேர்மை குறித்து ஹீரோ பேசும் வசனங்கள் நிச்சயம் தியேட்டரில் அப்ளாஸை அள்ளும். ஏழமையிலும் நேர்மை என்ற கதைக்களத்தினை தேர்வு செய்ததற்காகவே படக்குழுவினரை பாராட்டலாம்.
படத்தின் ஆரம்ப காட்சியில் ஏற்படும் இழுவையை தவிர்த்திருக்கலாம். படத்தின் நீளம் கதையில் சிறிது தொய்வை ஏற்படுத்துகிறது.
வங்கியில் ஆறரை கோடி கேஷாக டேபிள் வைப்பதெல்லாம் நம்ப முடியாததாக தருணம். இது போன்ற கிளிஷேவான சில காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.
பத்து கோடி ரூபாயை தேடியலைந்து தந்தவரை பத்து ரூபாய் கூட தராமல் நடுவழியில் இறக்கி விடுவதும் யதார்த்ததினை மீறும் காட்சிகள்.
சிற்சில குறைகள் தவித்து படம் ஒரு முழு நிறைவினை பாசிட்டிவிட்டியை தருகிறது. மொத்தத்தில் பம்பர் நம்பிக்கையை விதைப்பதில் டாப்பர்…!!!