“பாஜ்ஜி எனும் ஹர்பஜன் சிங்”
ஹர்பஜன் சிங் சூலை 3, 1980 ஜலந்தர், பஞ்சாப்), இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு விளையாடும் ஓர் துடுப்பாட்ட வீரர். 1998 இலிருந்து இந்திய அணியில் விளையாடுகிறார். பாஜ்ஜி எனவும் அழைக்கப்படுபவர். புறத்திருப்பப் பந்து வீச்சாளராகிய இவர் தேர்வுகளில் இந்தவகைப் பந்து வீச்சில் மிகக் கூடுதலான இலக்குகளை வீழ்த்திய முத்தையா முரளிதரனுக்கு அடுத்தநிலையில் உள்ளார். சூலை 7, 2011 அன்று மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது தேர்வில் இரண்டாம் நாள் ஆட்டத்தில் 400 இலக்குகள் வீழ்த்திய மூன்றாவது இந்தியர் எனும் சாதனை படைத்தார். இவர் இந்திய அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20 ஆகிய வடிவங்களில் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இவர் பஞ்சாப் மாநிலத் துடுப்பாட்ட அணியின் தலைவராக உள்ளூர்ப்போட்டிகளில் விளையாடினார். மேலும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராக இருந்தார். தற்போது இவர் 2018 இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிவருகிறார்
ஹர்பஜன் தேர்வு மற்றும் ஒருநாள் துடுப்பாட்ட ஆட்டங்களில் 1998ஆம் ஆண்டு விளையாடத் துவங்கினார். துவக்க காலங்களில் இவரது ஆட்டப்பணி பந்துவீச்சு செயல்முறை குறித்த மற்றும் ஒழுங்கீன செயல்கள் குறித்த சர்ச்சைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. 2001ஆம் ஆண்டு இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே காயமடைந்ததை அடுத்து அப்போதைய அணித்தலைவர் சௌரவ் கங்குலியால் மீண்டும் வாய்ப்பு பெற்றார். ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான அந்தப் போட்டித்தொடரில் 32 இலக்குகள் வீழ்த்தி தொடரை வெல்ல காரணமாக அமைந்ததால் அணியில் நிரந்தர இடம் பிடித்தார். இந்தப் போட்டிகளின்போது ஓர் தேர்வுத் துடுப்பாட்டத்தில் அடுத்தடுத்து மூன்று இலக்குகளை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை நிகழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையும் பெற்றார்
ஹர்பஜன் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இந்தியன் போர்ட் பிரசிடண்ட்ஸ் லெவன் அணியில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். இந்தப் போட்டியில் 127 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 1 இலக்குகளை மட்டுமே வீழ்த்தினார். பின் முதல் இரண்டு போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்காத பின் பெங்களூருவில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் அறிமுகமானார். அதில் ஒரு ஆட்டப்பகுதியில் 4 ஓட்டங்களும் மற்றதில் ஓட்டங்கள் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதில் 136 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 2 இலக்குகளை வீழ்த்தினார். இந்தப்போட்டியில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி 8 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.பின் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 10 ஓவர்கள் வீசி 32 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 1 இலக்குகளை வீழ்த்தினார். இந்தப் போட்டியில் 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் 10 போட்டிகளில் விளையாடி 11 இலக்குகளை வீழ்த்தினார். இவரின் பந்து வீச்சு சரசரி 30.45 ஆகும். இவர் அனில் கும்ப்ளேவுடன் இணைந்து 3 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்தத் தொடரில் ஆத்திரேலியாவிற்கு எதிரான இரண்டு போட்டிகளில் மட்டும் இலக்குகளை வீழ்த்த முடியவில்லை. இந்தத் தொடரில் அதிக இலக்குகள் வீழ்த்திய இந்தியர்களின் தரவரிசையில் ஜாகிர் கான், ஆசீஷ் நேரா மற்றும் ஜவகல் ஸ்ரீநாத்திற்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தில் உள்ளார்.[9] இந்தத் தொடரில் 11 இலக்குகளை வீழ்த்தினார். ஒரு ஓவருக்கு சராசரியாக 3.65 ஓட்டங்கள் எடுத்துள்ளார். வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியின் போது நடுவரை அவமதிக்கும் வகையில் நடந்ததால் தண்டனை பெற்றார். அவ்வப்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார், 2021 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் ப்ரன்ஷிப் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.