இசைமேதை டி.ஆர்.பாப்பா பிறந்த நாளின்று
இசைமேதை டி.ஆர்.பாப்பா பிறந்த நாளின்று
தஞ்சாவூர் ராதாகிருஷ்ண பிள்ளை என்ற இயற்பெயர் கொண்ட டி.ஆர்.பாப்பா, 1923ம் ஆண்டு பிறந்தவர். தனதுதந்தை ராதாகிருஷ்ண பிள்ளை மற்றும் கும்பகோணம் வடிவேல் பிள்ளை ஆகியோரிடம் இசை கற்ற பாப்பா1965ம் ஆண்டு திரைப்படங்களுக்கு இசையமைக்கத் தொடங்கினார். சுமார் 60க்கும் மேற்பட்ட படங்களுக்கு அவர்இசையமைத்துள்ளார்.
சிந்துபைரவி ராகத்தில் அவர் இசையமைத்த சின்னஞ்சிறு பெண் போலே, சித்தாடை உடை உடுத்தி என்ற பாடல்தமிழகத்தின் பட்டி தொட்டிகளில் இன்றும் கூட ஒலித்துக் கொண்டுள்ளது.
இவரது இரவும் பகலும் படம் மூலம்தான் தென்னகத்தின் ஜேம்ஸ்பாண்ட் என்று புகழப்பட்ட ஜெய்சங்கர்திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். டி.ஆர்.பாப்பாவும், சீர்காழி கோவிந்தராஜனும் சேர்ந்து புகழ் பெற்ற பலமெல்லிசைப் பாடல்களை கொடுத்துள்ளனர்.
சீர்காழி கோவிந்தராஜனின் குரலில், டி.ஆர்.பாப்பாவின் இசையில் உருவான அபிராமி அந்தாதி பாடல் கேசட் மிகப்பெரிய அளவில் பிரபலமானது. திமுக தலைவர் கருணாநிதியின் வசனத்தில் உருவான பல படங்களுக்குஇசையமைத்துள்ளார் பாப்பா.கலைஞர் மு.கருணாநிதிக்கும் இவருக்கும் நீண்டகால நட்பு உண்டு. எத்தனையோ தடவை அவர் இவருக்கு உதவி புரிந்து வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறார். 1989-இல் முதலமைச்சராக ஆனதும் இவரை அரசு இசைக் கல்லூரியில் கௌரவ இயக்குநராக நியமித்தார். பிறகு அவரது ஆட்சி கலைக்கப்பட்ட போது முதன்முதலாக ராஜினாமா செய்தது இவர்தான். பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் முதல்வரான போது கலைஞர் பழையனவற்றை மறக்காமல் இவரை மீண்டும் தமிழ்நாடு இசைக் கல்லூரி இயக்குநராக பதவியேற்க வைத்தார்.
கலைமாமணி, இசைச்செல்வம், கலைச் செல்வம், இசைப் பேரறிஞர் ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
தேவாரம், திவ்ய பிரபந்தம், அபிராமி அந்தாதி, கந்தர் அலங்காரம், திருவெம்பாவை, வேல் விருத்தம் உள்பட பல காவியங்களுக்கு இசையமைத்த பெருமை இவருக்கு உண்டு.
நல்லவன் வாழ்வான், மல்லிகா, குமார ராஜா, அருணகிரி நாதர், எதையும் தாங்கும் இதயம், அன்பு, தாய் மகளுக்குக் கட்டிய தாலி, ஆசை, விளக்கேற்றியவள், டீச்சரம்மா, ஏன், விஜயபுரி வீரன், பிறந்த நாள், காதல் படுத்தும் பாடு, அவரே என் தெய்வம், யார் ஜம்புலிங்கம், மறு பிறவி, ரங்கோன் ராதா, வைரம், குறவஞ்சி, அவசர கல்யாணம், ராஜா ராணி, இரவும் பகலும், மாப்பிள்ளை, மகனே நீ வாழ்க போன்ற படங்கள் உட்பட அறுபது படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
தமிழில் மட்டுமல்லாது சில சிங்கள, மலையாளப் படங்களுக்கும் இசையமத்துள்ளார்.
15.10.2004-ஆம் ஆண்டு தனது 81-ஆவது வயதில் மாரடைப்பால் காலமானார்.