‘இலக்கிய வீதி’ இனியவன் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு

 ‘இலக்கிய வீதி’ இனியவன் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு

தமிழ் எழுத்தாளரும் சென்னை கம்பன் கழகச் செயலாளருமாக இருந்த கலைமாமணி ‘இலக்கிய வீதி’ இனியவன் நேற்று (2-7-2023) மறைந்தார்.  அவருக்கு வயது 81.

வேடந்தாங்கலை அடுத்துள்ள விநாயகநல்லூரைச் சொந்த ஊராக் கொண்ட இனியவன் 250க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 17 குறுநாவல்கள், 15 நாவல்களை எழுதியுள்ளார்.

இன்று இலக்கிய உலகில் பிரபலமாக இருக்கும் பலருக்கும் உந்துசக்தியாக இருந்தவர்களுள் முக்கியமானவர் இவர். தாமே ஓர் எழுத்தாளராக இருந்தபோதும் தம்மை முன்னிறுத்திக் கொள்ளாமல் இலக்கியவீதி அமைப்பின் மூலம் பல இளம் படைப்பாளிகளை ஊக்குவித்தவர். அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் பேரவையிடமிருந்து ஃபெலோஷிப் பெற்றவர். இலக்கியச் செம்மல், பாரதி பணிச் செல்வர், கலை இலக்கியப் பாரி, குறள்நெறிப் புரவலர் உட்பட பல்வேறு பட்டங்களைப் பெற்றுள்ளார்.

வானொலி, தொலைக்காட்சியில் இவரது சிறுகதைகள் நிறைய இடம் பெற்றன. நாடகங்களும் ஒளிபரப்பாகின. வேடந்தாங்கள் பறவைகள் சரணாலயம் குறித்து ஒரு அரிய நூலையும் எழுதியிருக்கிறார்.

பறவைகள் சரணாலயம் வேடந்தாங்கலை அடுத்துள்ள குக்கிராமம் விநாயகநல்லூர்தான் இவரது சொந்த ஊர். பள்ளி இறுதி வகுப்புவரை மட்டுமே படித்த இவருக்குள் இளமைப் பருவதிலிருந்தே இலக்கிய வேட்கை காரணமாக பாரதியார், பாரதிதாசன், கல்கி, புதுமைப்பித்தன் எனப் பலரின் நூல்களைப் படித்து தனது தகுதியை வளர்த்துக்கொண்டார்.

இளம் வயதிலேயே சிறுகதைகள் எழுதத் தொடங்கி பத்திரிகைளில் வெளியாகின. பரிசுப் போட்டிகளில் கலந்துகொண்ட இவரது சிறுகதைகள், நாவல்கள் பரிசுகளைப் பெற்றன.

இதன் தொடர்ச்சியாக இலக்கிய சர்ச்சைகள், விவாதங்கள், திறனாய்வுகள், கவியரங்குகள் போன்றவற்றை நடத்த ஓர் அமைப்பு தேவை எனக் கருதி மதுராந்தகத்தில் 1977ஆம் ஆண்டு ‘இலக்கிய வீதி’ எனும் அமைப்பை உருவாக்கினார். அது 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து பல இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் தளமாக அமைந்து இலக்கியப் பணியாற்றியது.

இலக்கிய வீதி அமைப்பின் மூலம் எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஓவியர்கள், திறனாய்வாளர்கள் என நுற்றுக்கணக்கானவர்கள் அடையாளப்படுத்தப்பட்டு பிரபலமாகியுள்ளனர். அவர்களின் கவிஞர் தாராபாரதி, மலர்மகன், பல்லவன், சொல்கேளான், சஞ்சீவி மோகன், கவிமுகில், இரண்டாம் நக்கீரன், வேடந்தாங்கல் சுகுணன், அனலேந்தி, தளவை இளங்குமரன், கி .வெங்கடேச ரவி எனப் பலர் சான்றாக உள்ளனர்.

கொல்லங்குடி கருப்பாயியை இவரது மேடையில் பாடவைத்தார், அதன்பிறகு அவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்தன. பொம்மலாட்டக் கலைஞன் முத்துக்கூத்தன் பாடலுடன் அரங்கேற்றப்பட்டார். பிறகு பாரதிதாசன் எழுதிய ‘கவிஞனின் காதல்’ அரங்கேற்றப்பட்டது. அவர் பிரபலமானார்.

இன்னொரு முக்கியமானவர் திருக்குறள் கவனகர் ராமையா. சட்டமன்ற உறுப்பினர் ஆனூர் ஜெகதீசன், நாவலர் நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் கவனக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு எம்.ஜி.ஆர். ராமையாவை அரசவைக் கவிஞர் ஆக்கினார். அவரைத் தொடர்ந்து அவரது மகன் கனகசுப்புரத்தினம் பதினாறு கவனராகப் புகழ்பெற்றார்.

இனியவன் பணி இயக்கியப் பாதையில் மறைக்க முடியாதது. அவர் மறைந்தாலும் அவரது தமிழ்த் தொண்டு மறையாது.

சமீபத்தில் கிருஷ்ணா ஸ்வீட் நடத்திய விழாவில் எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் இலக்கிய வீதி இனியவன் குறித்துப் பேசிய பதிவு

அவரது இறுதி அஞ்சலிக்குப் பொறுத்தமானது.

தந்தைக்கு இணையான தகைமையாளர்
எப்போதும் என் அன்பிற்குரிய பண்பாளர்
என் வணக்கத்திற்குரிய   வாய்மையாளர்
அவரது அருகமை எனக்குப் பெருமிதம்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...