கார்த்திக் ராஜா 50ஆவது பிறந்த நாளின்று

கார்த்திக் ராஜா 50ஆவது பிறந்த நாளின்று!💐

இசையமைப்பாளர் இளையராஜா வெறுமனே பாடல்களுக்கு மட்டுமின்றி அவரது பின்னணி இசைக்காகவும் பெரிதும் புகழப்படுபவர் என்பது நாம் அறிந்த ஒன்று. இந்த பின்னணி இசைக் கோர்ப்புப் பணிகளில் 90-களுக்குப் பிறகு இளையராஜாவின் இசையமைப்பில் வெளிவந்த திரைப்படங்களில் கார்த்திக் ராஜா பணியாற்றியிருக்கிறார். அவரது தந்தை இளையராஜாவிடம் தனது சிறுவயது முதலே பல்வேறு படங்களில் வந்த பாடல்களுக்கு கீபோர்ட் இசைத்திருந்த கார்த்திக் ராஜா, பின்னணி இசைக் கோர்ப்பு பணிகளை மேற்கொள்ளும் ஒரு நல்ல ஆர்கனைசரும் கூட.

குறிப்பாக 90-களின் பிற்பகுதியில் வெளியான உழைப்பாளி, பொன்னுமணி, தர்மசீலன், சர்க்கரைதேவன், அமைதிப்படை, ராசாமகன், உள்ளிட்ட படங்களுக்கு இசை இளையராஜா என்றாலும், பின்னணி இசையமைத்தவர் கார்த்திக் ராஜாதான்.

அதோடு மட்டுமின்றி, பாண்டியன், ஆத்மா, கண்மணி உள்ளிட்ட இளையராஜா இசையில் வந்த படங்களில் தலா ஒரு பாடலையும் கார்த்திக் ராஜா கம்போஸ் செய்துள்ளார். அதில் பாண்டியன் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த “பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா” கிளாஸிக் ரகம்.

1996 ஆம் ஆண்டு தான் முழுநேர இசையமைப்பாளராக கார்த்திக் ராஜா பணியை தொடங்குகிறார். அந்த ஆண்டில் எனக்கொரு மகன் பிறப்பான், மாணிக்கம், அலெக்சாண்டர் என வரிசையாக 3 படங்கள் ரிலீசாகி பாடல்கள் பெரும் வரவேற்பை பெறுகின்றன. ஆனாலும் கார்த்திக் ராஜாவுக்கு தனி அடையாளம் கொடுத்தது விக்ரம், அஜித் இணைந்து நடித்த உல்லாசம் படத்தில் பாடல்கள் தான்.

அதன்பின்னர் கார்த்திக் ராஜா காட்டில் அடைமழை தான். நாம் இருவர் நமக்கு இருவர், காதலா காதலா, வாஞ்சிநாதன், உள்ளம் கொள்ளை போகுதே, டும் டும் டும், ஆல்பம், த்ரீ ரோசஸ், குடைக்குள் மழை, நெறஞ்ச மனசு, ரெட்டைச்சுழி, படை வீரன் என ஏகப்பட்ட படங்களுக்கு இசை கார்த்திக் ராஜா தான்.

அதேசமயம் விஜய்யின் புதிய கீதை, சுந்தர் சி இயக்கிய அரண்மனை, சந்தானத்தின் தில்லுக்கு துட்டு ஆகிய படங்களுக்கு பின்னணி இசையும் அமைத்துள்ளார். அதேபோல் கமலை வைத்து முத்தே முத்தம்மா (உல்லாசம்), காசு மேல காசு வந்து (காதலா காதலா) பாடலை பதிவு செய்திருப்பார்.

மேலும் கன்னடம், இந்தி, மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம் என பழமொழிகளிலும் கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். தற்போது மிஷ்கின் இயக்கி வரும் பிசாசு 2 படத்துக்கு இசையமைத்துள்ளார்.

குறிப்பாக செல்லமே செல்லம் என்றாயடி, உள்ளம் கொள்ளம் போகுதே உன்னை கண்ட நாள் முதல், வீசும் காற்றுக்கு பூவைத் தெரியாத, ரகசியமாய் அவசரமாய் உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் மெலடி பாடல்களுக்கு சொந்தக்காரர் கார்த்திக் ராஜா. என்னதான் அவரின் தம்பி யுவன் ஷங்கர் ராஜாவை கொண்டாடினாலும், யுவனே பல நேர்காணலில் தன்னை விட திறமையானவர் கார்த்திக் ராஜா தான் என தெரிவித்துள்ளார்.

அப்பேர்பட்ட இசை இளவல் கார்த்திக் ராஜாவுக்கு ஆந்தை சினிமா அப்டேட்ஸ் சார்பில் ஹேப்பி பர்த் டே சொல்வதில் மகிழ்ச்சி கொள்கிறது🥰

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!