அய்யா வைகுண்டரின் அவதாரமும் தத்துவமும்

 அய்யா வைகுண்டரின் அவதாரமும் தத்துவமும்

அதர்மம் தலைதூக்கும் போதெல்லாம் தர்மத்தை நிலைநாட்ட ஆண்டவனே அவதாரங்களை எடுப்பார். அதேபோல் இந்தக் கலியுகத்தில் பல்வேறு பிரச்சினைகளால் அதர்மம் தலைதூக்க, அதை அழித்து தர்மத்தை நிலைநாட்ட அய்யா வைகுண்டர் அவதாரம் எடுத்தார்.

ஒரு மனிதனைப் போல் மண்ணுலக மாந்தர்களுக்குக் காட்சி தந்த அய்யா வைகுண்டர் செய்த அற்புதங்கள் எண்ணிலடங்காதவை.

கன்னியாகுமரிக்கு மிக அருகில் உள்ள சாஸ்தான் கோவில்விளை (இப்போது சாமித்தோப்பு என அழைக்கப்படுகிறது) என்னும் ஊரில் 1809-ம் ஆண்டு பொன்னுமாடன் – வெயிலாள் தம்பதிருக்கு மகனாகத் தோன்றினார் அய்யா வைகுண்ட சுவாமிகள். பெற்றோர் அவருக்கு முடிசூடும் பெருமாள் எனப் பெயரிட்டனர்.

அந்தக் கால திருவாங்கூர் மன்னராட்சி நிர்வாகம் கொடுத்த நெருக்கடி காரணமாக முடிசூடும் பெருமாள் என்ற பெயரை முத்துக்குட்டி என மாற்றி அழைக்கச் சொன்னார்கள். முத்துக்குட்டி 17 வயதில் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சுமார் 22 வயது இருக்கும்போது மிகவும்

பயங்கரமான நோய் உருவானது. முத்துக்குட்டியின் தாய் மிகவும் கவலைப்பட்டார். அவரின் கனவில் நாராயணன் வந்தார். திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெறும் விழாவுக்கு முத்துக்குட்டியைக் கொண்டுவந்தால் மிகுந்த பேறு கொடுப்பதாகக் கூறினார்.

அதனால் வெயிலாள் ‘சுற்றத்தார் சூழ முத்துக்குட்டியை ஒரு தொட்டிலில் வைத்து சுமந்து சென்றார். அங்கே கடலருகே சென்றதும் அவர் எழுந்து வேகமாக நடந்து கடலுக்குள் சென்றது போல் அனைவருக்கும் தெரிந்தது. ஒரு நாள் காத்திருந்த பிறகு அனைவரும், போனவர் வரமாட்டார்; அவர் இறந்து விட்டார் என்று ஊர் திரும்பினார்கள். ஆனால் தாய் வெயிலாள் மட்டும் அழுதபடி கடற்கரையிலேயே அமர்ந்திருந்தார்.

மூன்றாம் நாள் கொல்லம் ஆண்டு 1008 மாசி 20-ஆம் நாள் சரியாக
4.3.1833ஆம் ஆண்டு கடலிலிருந்து முத்துக்குட்டி மகர விஞ்சை பெற்று தெய்விக விஷ்ணுவாய் திரும்பினார். தாய் பாசத்தோடு “மகனே” என அழைத்தார்.

“ஆண்டு ஆயிரத்தெட்டுக்கு முன்னே அன்னை எனவே நீ இருந்தாய், இப்போ நான் விஷ்ணு மகனாய் வருகிறேன்” என்றார் வைகுண்டர்.

திருச்செந்தூர் பாற்கடலில் அவதரித்து தருவையூரில் மனித உருவில் வாழ்ந்த அய்யா வைகுண்டர், அங்கிருந்து சாமிதோப்பு வந்தடைந்தார்.
பத்து மாதங்களாக அங்கே இருந்து, அதற்கு முன்பு நடந்த யுகாந்திர சம்பவங்களையும், பின்னால் நடக்கப்போகும் எதிர்கால விஷயங்களையும் கூறிக்கொண்டே இருந்தார். இவ்வண்ணமாக பத்து மாதங்கள் கடந்ததும் அய்யா தவம் புரியும் தவ வாழ்க்கையை மேற்கொள்ளத் தொடங்கினார். அய்யா ஆறு ஆண்டுகள் தவ வாழ்க்கை வாழ்ந்தார். அவர் தவம் புரிந்த இடமே சாமிதோப்பு ஆலய வடக்கு வாசல். அதனால் வடக்கு வாசல் அய்யாவின் தவ வாசல் எனப் போற்றப்படுகிறது.

அய்யா சொன்ன உபதேசங்கள்

ஆன்மிகத்தில் மூடநம்பிக்கைகளை எதிர்த்த வைகுண்டர், எப்படிப்பட்ட ஆன்மிக வாழ்க்கை தேவை என்பதை வரையறுத்துள்ளார்.

  • கைகட்டி, வாய் பொத்தி அடுத்தவனிடம் அடங்கிக் கிடக்கும் அடிமை வாழ்வு ஒழியவேண்டும்.
  • ஆதிக்க ஜாதியினர் செய்யும் சூழ்ச்சியில் சிக்கித் தனிமைப்பட்டுக் கிடக்காதீர்கள். எல்லோரும் ஒற்றுமையாக வாழுங்கள்.
  • எவருக்கும் எதற்கும் வரி என்ற பெயரில் பணத்தைக் கொடுக்காதீர்கள்.
  • இந்த பூமியில் வாழப் பிறந்தவர்கள் நீங்கள். அந்த வாழ்க்கையை அடுத்தவனிடம் கேட்டுப் பெற வேண்டிய அவசியம் உங்களுக்கு வேண்டாம்.
  • எவரையும் போற்றி வணங்க வேண்டாம். அதேபோல், எவருக்கும் அஞ்ச வேண்டாம். உங்களுக்கு அடங்கி நடந்தாலே போதும்.
  • வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு உடனே கூலியைக் கொடு. உரிய கூலி கொடுக்காமல் ஏமாற்றினால் இறைவன் உன்னை மன்னிக்க மாட்டான்.
  • இனி நீ அடிமை கிடையாது. ஆதிக்க ஜாதியினருக்குப் பயந்து கால் முட்டிக்கு மேலே வேட்டி கட்ட வேண்டிய அவசியம் இல்லை. பூமியை முத்தமிடும் அளவுக்கு நீ வேட்டி கட்டலாம். கை இடுக்கில் துண்டைச் சொருகி வைத்துக் குனிந்து நின்ற நீ இனிமேல் நெஞ்சம் நிமிரலாம். அந்தத் துண்டை உன் தலையில் தலைப்பாகையாகக் கட்டு.
  • ஆதிக்க ஜாதியினர் வணங்கும் கோவில்களில்தான் இறைவன் இருக்கிறான் என்று தப்புக் கணக்குப் போடாதே. எனக்குள்ளேயே என் இறைவனை நான் சுட்டிக்காட்டும் கோவிலில் வழிபடு. அந்தக் கோவிலில் உங்கள் சக்தியை நீங்களே தரிசியுங்கள்.
  • இன்று முதல் நீங்கள் புதிய மனிதராகிவிட்டீர்கள். உங்களுக்குள் ஜாதி, மத வேறுபாடுகள் எல்லாம் வேண்டாம். முத்திரிக் கிணற்றில் எல்லோரும் ஒன்றாக நீரெடுத்து அருந்துங்கள்.
  • ஆதிக்க ஜாதியினருக்குப் பயந்து செருப்பு அணிவதையே மறந்துபோன நீங்கள், இனி யாருக்கும் அஞ்சாமல் செருப்பு அணியுங்கள். குடையும் எல்லோருக்கும் உரியதுதான். வெயிலில் செல்லும்போதும் அதைப் பிடித்துச் செல்லுங்கள்.
  • எல்லா ஊர்களும் நமது ஊரே. நீங்கள் எங்கே சென்றாலும் தைரியமாக, சுதந்திர உணர்வுடன் செல்லுங்கள்.
  • ஆண்களைப் போல் பெண்களும் இன்று முதல் சுதந்திரம் பெற்று விட்டார்கள். என்னைப் பார்க்க வரும் பெண்கள் கண்டிப்பாகத் தோளுக்குச் சீலை அணிந்து மார்பை மறைத்தே வர வேண்டும். எல்லா சுதந்திரமும் பெண்களுக்கு உண்டு.

பெண்கள் தோள் சீலை அணியக்கூடாது என்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திருவாங்கூர் மன்னரை எதிர்த்துப் பேராடினார் என்பதால் அய்யாவை மன்னர் ஆட்களைக் கொடுமைப்படுத்தினர்.

அதையெல்லாம் வெற்றி கொண்டு மக்கள் மனதில் நின்றவர் அய்யா வைகுண்டர். வள்ளலாருக்கு முன் ஜோதி வழிபாட்டை தொடங்கியவர். அய்யா வைகுண்டரின் உருவப்படம் இதுவரை கிடைக்கவில்லை. அவர் சாதி மத பேதங்களை ஒழித்தார். அன்னமிடுதலை ஊக்குவித்தார். சோஷலிச சமுதாயம் படைக்க விரும்பினார். ஆன்மிக நெறியைப் பரப்பி மக்களுக்கு ஒழுக்கநெறியைப் போதித்தார். அன்னார் அவதார தினம் இன்று.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...