மனிதர்களுக்கு உகந்த மகாசிவராத்தியின் மகிமைகள்

 மனிதர்களுக்கு உகந்த மகாசிவராத்தியின் மகிமைகள்

மகாசிவராத்திரி அன்று நாடு முழுவதும் சிறப்பு வழிபாடும், அபிஷேகமும் நடைபெறும். உயிர்கள் செயலற்று சிவன் நினைவாக ஒடுங்கும் காலமே சிவராத்திரி என்பர்.

சிவனுக்குரிய விரதங்களாக மாத, நித்ய, யோக, மகாசிவராத்திரிகள் என ஆண்டு முழுவதும் பல சிவராத்திரிகள் உள்ளன. இதில் மகாசிவராத்திரி விரதம்தான் சிறப்பானது.

மகா சிவராத்திரி என்பது ‘சிவனின் சிறந்த இரவு’. ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரியில் விரதம் இருப்பது குடும்பத்திற்கு நல்லது. நினைத்த காரியங்கள் கைகூடும். ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலம் குறைந்து, வசந்த காலமும் கோடை காலமும் தொடங்கும் சமயத்தில்தான் சிவராத்திரி வரும். பலர் அன்றைய தினம் உறங்காமல் விடிய விடிய விரதமிருந்து சிவனை மனமுருகி வழிபடுவர். சிவனின் திருநாமத்தைப் பாடுவர். 

இந்தப் புண்ணிய காலத்தில் சிவனின் நாமத்தைக் கூறி நான்கு கால பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கத்தில் உள்ளது. அதிலும் சிவராத்திரி காலத்தில் சிவனை வழிபட்டால் நம் பாவங்கள் நம்மைவிட்டு விலகும் என்பது நம்பிக்கை.

சைவ சமயத்தின்படி, சிவபெருமான் இந்த இரவில் தான் ஆக்கல், அழித்தல், காத்தல் ஆகியவையும் பரவசமான அவரது பரலோக நடனத்தையும் நிகழ்த்தினார். புராண நம்பிக்கைகளின்படி, இந்த இரவில் சிவனுக்கும் சக்திக்கும் திருமணம் நடந்தது. தென்னிந்திய நாட்காட்டியின்படி மாசி மாதத்தில் வரும் கிருஷ்ண பக்ஷத்தின்போது சதுர்த்தசி திதி மகா சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.

சதுர்த்தசி திதி பிப்ரவரி 18ஆம் தேதி இரவு 08:02 மணிக்கு தொடங்கி பிப்ரவரி 19ஆம் தேதி மாலை 04:18 மணிக்கு முடிவடைகிறது. விரதமிருப்பவர்கள் பிப்ரவரி 18ஆம் தேதி அன்று மாலை விரதத்தைத் தொடங்கி ஞாயிற்றுக்கிழமை விரதத்தை முடிப்பார்கள்.

பிப்ரவரி 18ஆம் தேதி பகல் முழுவதும் உறங்கக்கூடாது. அன்று இரவும் தூங்காமல் கோயில்களில் நான்கு கால பூஜைகளில் பங்கேற்க வேண்டும். நான்கு கால பூஜைக்கும் கண் விழிக்க முடியாத நபர்கள் 3ஆவது கால பூஜையில் கண்டிப்பாக தூங்காமல் கண் விழித்து, சிவனை வணங்க வேண்டும். பிப்ரவரி 19ஆம் தேதி மாலை 6 மணிக்குப் பின்னர் சிவனுக்கு விளக்கேற்றி வழிபட்ட பின் தூங்கலாம். 

மகா சிவராத்திரி நாளில், இரவு முழுவதும் சிவாலயங்கள் நடை சாத்தப்படாமல் திறந்திருக்கும். வழக்கமாக சிவன் கோயில்கள் இரவு 8 முதல் 9 மணிக்குள் பள்ளியறை பூஜையை முடித்து நடையை சாத்திவிடுவார்கள். மகா சிவராத்திரி அன்று மட்டும் விடியவிடிய கோயில் திறந்தே இருக்கும்.  ஒவ்வொரு கால பூஜைகளும் வெகுசிறப்பாக நடக்கும். 

சிவராத்திரி விரத முறை

அதிகாலை எழுந்து நீரில் நீராடவேண்டும். பின்னர் நெற்றியில் விபூதி பூசி, சிவபெருமானின் படம் முன்பாக உள்ள தீபத்தை ஒளியூட்டி விரதத்தைத் தொடங்க வேண்டும். 19ஆம் தேதி பகல், இரவில் ஆகாரம் ஏதும் உண்ணக்கூடாது. தண்ணீர் அருந்தலாம். சிவனின் நாமங்களை மனமுருகி சொல்ல வேண்டும். எல்லா தோஷங்களும் நிவர்த்தியாகும். செல்வ செழிப்பாக இருக்கலாம். 

சிவராத்திரி விழாவுக்காக தமிழ்நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வடபழநி ஆண்டவர் கோவிலில் மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு இன்று இரவு 8.30 மணிக்கு முதல் கால பூஜை தொடங்குகிறது. ஒவ்வொரு இரண்ட மணி நேரத்திலும் ஒரு கால பூஜை என தொடர்ந்து நான்கு கால பூஜைகள் நடக்கிறது. மேலும் இன்று காலை 6 மணி முதல் நாளை அதிகாலை 2 மணி வரை சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுக்கின்றன.

அதேபோல் சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயில் அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் இன்று மாலை 6 மணிக்கு மங்கள இசை, திருமுறை விண்ணப்பத்துடன் மகாசிவராத்திரி விழா தொடங்குகிறது.

அதேபோல திருவான்மியூர் மருந்தீஸ்வர் கோயில், திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயில், வேளச்சேரி தண்டீஸ்வரர் கோயில், மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயில், பள்ளிக்கரணை ஆதிபுரீஸ்வர் கோயில் உள்ளிட்ட பல சிவாலயங்களில் நான்கு கால பூஜைகள் அபிஷேகங்கள், ஆராதனைகள் நடத்தப்படுகிறது.

சிவராத்திரி அன்று  பாரம்பரியமான சிவாலய ஓட்டம்

கன்னியாகுமரியில் உள்ள திக்குறிச்சி, திற்பரப்பு, திருவிதாங்கோடு, திருநந்திக்கரை, கல்குளம், திருமலை, பொன்மனை, பன்றிப்பாகம், திருவிடைக்கோடு,  திருப்பன்றிக்கோடு, மேலாங்கோடு, திருநட்டாலம் ஆகிய 12 சிவ ஆலயங்களில் இந்த சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. சிவராத்திரிக்கு முந்தைய தினத்தில் இருந்து ஓடியோடி இந்த தரிசனத்தை பக்தர்கள் செய்கிறார்கள்.

பக்தர்கள் இரவு முழுக்க ஒவ்வொரு சிவாலயமாக ஓடியோடி வழிபடுவார்கள். இந்த ஓட்டத்தில் பல சிறப்புகள் உள்ளன. முதலாவதாக இந்த ஓட்டம் கன்னியாகுமரியில் மட்டும்தான் உள்ளது. 

சிவாலய ஓட்டத்தில் கலந்து கொள்பவர்கள் மகா சிவராத்திரிக்கு முன்னர் வரும் தேய்பிறை ஏகாதசிக்கும் ஒரு வாரத்திற்கு முன்பாகவே விரதத்தை தொடங்குவர். விரத தினங்களில் காலை தொடங்கி மாலை வரை இளநீர், நுங்கும், இரவில் துளசி இலை, துளசி தீர்த்தமும் எடுத்துக் கொள்கின்றனர். சிவாலய ஓட்டத்தில் சபரிமலைக்கு செல்பவர்களுக்கு இருப்பது போல இதற்கும் குருசாமி வழிகாட்டுவார். 

மகாசிவராத்திரி தினத்தில் நாடு முழுக்க இருக்கும் சிவன் கோயில்களில் ‘சிவாயநம’ என்ற மந்திரம்தான் கேட்கும். ஆனால் குமரிக்கு நீங்கள் அன்றைய தினம் சென்றால்,
12 சிவன் கோயில்களில் மட்டும் “கோவிந்தா! கோபாலா!” என்ற ஸ்ரீநாராயணனின் திருநாமம் எங்கும் ஒலிக்கும். இந்த முரணான வழிபாடு ஏன் என்றால், சிவனும், நாராயணனும் வெவ்வேறானவர்கள் இல்லை என்பதை நிலைநாட்ட எனக் கூறப்படுகிறது.  இதை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை கூட விடப்பட்டுள்ளது. 

நாமும் “சிவாய நம” எனக் கூறி சிவராத்திரியில் விரதமிருப்போம்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...