ஆசையின் விலை ஆராதனா | 4 | தனுஜா ஜெயராமன்

 ஆசையின் விலை ஆராதனா | 4 | தனுஜா ஜெயராமன்

போலீஸ் ஜீப் ‘மில்லினியம் ஸ்டோன்’ அபார்ட்மெண்டில் நுழைந்தது. அதிலிருந்து அனாமிகா, ரவி மற்றும் அலெக்ஸ் குதித்து இறங்கினர்.

வெளியே செக்யூரிட்டி சர்வீஸில் இருந்தவரை நோக்கி… “இங்க மேனேஜர் யாருங்க..?” என்றார் ரவி.

“நான் தாங்க..” என வந்தவரிடம்…

“நேத்து வந்தவங்களை நோட் பண்ண லெட்ஜர் இருக்கா?”

“இருக்குங்க..” என லெட்ஜரை கொண்டு வந்தார்.

அதனைப் பிரித்து நேற்றையப் பக்கங்களை மொபைலில் ஒரு போட்டோ எடுத்துக்கொண்ட அனாமிகா… “அலெக்ஸ், இதில நேத்து வந்தவங்களோட போன் நம்பர்கள்ல தரோவா விசாரிச்சிடுங்க..”.

“ஏங்க… இதில உள்ளவங்களை தவிர யாரும் உள்ளே போக முடியாதா..?”

“மேம்… ஃபுட் திங்க்ஸ் ஏதாவது வந்து அவங்க உள்ளே போவாங்க… அட்ரஸ் போன்நம்பர் வாங்கறதில்லை.”

“ஏன்..?”

“மேம்… ஒரு நாளைக்கு காலையிலிருந்து ராத்திரி வரை டெலிவரி பர்ஸன்ஸ் வர்றதும் போறதுமா இருக்காங்க… எல்லாரையும் எப்படி நோட் பண்றது..? தவிர ஏதாவது டவுட் இருந்தா மட்டுமே செக் பண்ணுவோம்..”

“அந்த மாதிரி… நேத்திக்கு ஏதாவது..?”

“அப்படி எதுவும் இல்லீங்க மேடம்..” என்றார் பவ்யத்துடன்.

“சரி… வண்டியை பார்க்கிங்குக்கு விடுங்க ரவி. ஆராதனாவோட வண்டியை செக் பண்ணிடலாம்.”

ராதனாவின் வண்டி அவளது பார்க்கிங் இடத்திலேயே பார்க் செய்யபட்டிருந்தது. நேற்று டீபாயில் கண்டெடுத்த சாவியால் காரைத் திறந்தார் ரவி.

ஒன்றும் அகப்படவில்லை. “பச்…” என உதட்டைப் பிதுக்கிய அனாமிகா… “சரி வாங்க, செகரெட்டரியை விசாரிப்போம்.”

லைக்கு டை அடித்து வயதை குறைத்திருந்த விக்னேஸ்வரன், “சொல்லுங்க மேடம்..” என்றார்.

“அம்ரிஷ் இந்த வீட்டை எப்பட வாங்கினார்..?”

“அது… ஒரு வருஷம் இருக்கும்… இந்த ப்ளாக்ல இது கடைசியா வித்தது. ஆராதனா, அம்ரிஷ் இரண்டு பேரும் போனமுறை இந்தியா வந்தப்ப வந்து பார்த்தாங்க. பிடிச்சிருந்ததால உடனே புக் பண்ணி வாங்கிட்டாங்க…”

“அதோட இப்ப தான் வர்றாங்களா ஆராதனா..?”

“ஆமா… ஆனா அம்ரிஷ் ஆறுமாசம் முன்னாடி இந்தியா வந்தப்ப வந்தாரு. வீட்டுக்கு இன்டீரியர் அவரோட பிரண்ட் பரணிதரன்தான் பண்ணிகிட்டிருந்தாரு. அதுல சில மாடிபிகேஷன்ஸ் சொல்ல வந்திருந்தாரு. அப்ப பரணியை எனக்கு அறிமுகப்படுத்தி வைச்சாரு.”

“அந்த பரணிதரன் நம்பர் உங்கள்ட்ட இருக்கா..?”

“இருக்கு. ஏன்… வெங்கடாச்சலம்கிட்டக் கூட இருக்குமே…” என்று நம்பரைக் கொடுத்தார்.

“ஆராதனாவோட பக்கத்து ப்ளாட்டைக் கொஞ்சம் விசாரிக்கலாமா..?”

“ஓ.. யெஸ்…” என எழுந்தார்.

‘B2’ வில் காலிங்பெல்லை அழுத்த, கதவை திறந்தார் ஈஸ்வர்.

“யெஸ்… சொல்லுங்க”

“இன்ஸிடென்ட் நடந்த அன்னைக்கு வித்யாசமா ஏதாவது..?”

“சாரிங்க, நான் ஆபீஸ் போயிட்டேன்… என் வொய்ப் கிட்ட கேளுங்க. அவங்க தான் வீட்ல இருந்தாங்க. வித்யா…” என உள்ளே பார்த்து குரல் கொடுத்தார்.

ஹார்லிக்ஸ் விளம்பர அம்மா போலிருந்தாள் வித்யா.

“அன்னைக்கு 12 மணிக்கே வெளிய கெளம்பிட்டேன். எனக்குக் கொஞ்சம் பர்ச்சேஸ் பண்ண வேண்டியிருந்தது. அப்படியே பையனுக்கு லன்ச் கொடுத்துட்டு இரண்டு மணிக்கு மேலதான் வீட்டுக்கு வந்தேன். ஸோ… எனக்கு எதுவும் தெரியாது…”

“கிளம்புறதுக்கு முன்னாடி ஏதாவது….”

தலையைத் தட்டி யோசித்தவள்… “ஸாரி.. அப்படி ஸ்பெஷலா ஏதும் தோணலை… ஞாபகம் வந்தா கண்டிப்பாச் சொல்றேன் மேம்…”

“ஓக்கே” என்றுவிட்டு நன்றி சொல்லிக் கிளம்பினார்கள்.

“என்னய்யா கேஸ் இது..? ஒரு க்ளூவும் கிடைக்கலை. முட்டுச்சந்தில் நிற்கிற மாதிரி. ச்சே…” என்று அலுத்துக் கொண்டாள் அனாமிகா. “அந்த நம்பர் இருக்கில்ல… அந்த பரணிதரனையும் விசாரிச்சுடலாம். ஸ்டேஷனுக்கு வெங்கடாச்சலம், அவர் ஒய்ப் ரெண்டு பேரையும் வரச்சொல்லியிருக்கீங்க இல்ல..?”

“ஆமாம்.. இரண்டு மணிக்கு வருவாங்க”

“சரி… நாம லன்ச் முடிச்சிட்டு அவங்ககிட்ட பேசலாம்”

விஜயலஷ்மி முன்பு பார்த்ததைவிட சற்று மெலிந்தது போல தெரிந்தார். முகத்தில் தோன்றிய கவலை காரணமாக இருக்கலாம். விஜயலஷ்மியை மட்டும் தனியாக அழைத்து விசாரித்தாள் அனாமிகா.

“சொல்லுங்க… உங்க மகளைப் பத்தி..”

“ஆராதனா எனக்கு ஒரே பொண்ணு… ரொம்ப அமைதி.. நல்ல மாதிரியாத்தான் இருப்பா..”

“அவங்க மேரேஜ் லைப் பத்தி சொல்லுங்க..? அது அரேஞ்ச்டு மேரேஜ் தானே..?”

“இல்லீங்க… அது லவ் மேரேஜ்…”

“ஓ… ஐஸீ..”

“உங்க மருமகன் அம்ரிஷ் பத்திச் சொல்லுங்க..?”

“அவரு பத்தரை மாத்துத் தங்கம்ங்க… ஆராதனா, ஆத்யா இரண்டு பேர் மேலேயும் உயிரா இருப்பார்… எங்கிட்டயும், என் ஹஸ்பெண்ட் கிட்டயும் ரொம்ப மரியாதையா நடந்துப்பார்..”

“நீங்க ஒரே கேஸ்ட் தானே…”

“இல்லீங்க… நாங்க வேற அவங்க வேற…”

“உங்க வீட்டுக்காரரும், ஏன்… நீங்களும் விருப்பப்பட்டுத் தானே இந்தக் கல்யாணத்திற்கு ஒத்துகிட்டீங்க..?”

“இல்ல… மொதல்ல ஆராதனாவை நாங்க என் ஹஸ்பெண்டோட தங்கச்சி பையனுக்குத்தான் நிச்சயம் செய்திருந்தோம். ஆனா ஆராதனா கல்யாணத்தை நிறுத்திட்டு இவரைத்தான் கட்டுவேன்னு ஒத்தைக்கால்ல நின்னுதான் எங்களைச் சம்மதிக்க வைச்சா…

“உங்க கணவருக்கு இதுல..?”

“கொஞ்சம் மனவருத்தம் தான்… ஆனா போகப்போக அம்ரிஷ் எங்க மகளை நல்லா பாத்துக்கிட்டதாலயும்… அவரோட நல்ல குணத்தாலயும் நாங்க பழசையெல்லாம் மறந்துட்டு நல்லபடியாத்தான் இருந்தோம்.”

“ம்… வேற ஏதாச்சும் உங்களுக்குத் தோணினா எங்களுக்கு சொல்லுங்கம்மா….”

“வேற… ன்னா…. இதைச் சொல்லணுமான்னு தெரியலை…” எனத் தயங்க…

“எந்த விஷயமா இருந்தாலும் தைரியமாச் சொல்லுங்க. எங்களுக்கு ஒரு சின்ன க்ளூ கெடைச்சாலும் இந்த கேசுக்கு உதவியா இருக்கும்…”

“இவர் என்னோட ரெண்டாவது கணவர் தாங்க. ஆராதனா பொறந்த வருஷத்திலேயே என் மொதல் கணவர் ஆக்ஸிடென்ட்ல தவறிட்டார்…”

“ஓ… அப்டியா..?”

“எங்கப்பாதான் இவரைப் பாத்து ரெண்டாவதா எனக்குக் கல்யாணம் செஞ்சு வைச்சார்…”

“இந்த ப்ராப்பர்ட்டி..?”

“இதெல்லாம் எங்க அப்பாவோடது தான்… அவருக்குப் பிறகு இது எங்களுக்கு வந்தது… இவர் அவ்ளோ வசதியில்லை… மிடில் கிளாஸ் குடும்பம் தான்…”

“ஓ.… ஆராதனாவுக்கும் வெங்கடாசலத்துக்கும் ஒத்துப்போனதா..?”

“ஆமாங்க… என்னைவிட அவர் தான் அவளை நல்லா பாத்துக்குவாரு… ஆராதனாவும் அவர் சொன்னா எதையும் கேட்பா… பெத்த மகளைப் போல பாசமா வளர்த்தது அவர்தான்… இந்த விஷயமே அவ்வளவா எங்களுக்கு ஞாபகத்தில வராது… ஏதோ நீங்க கேட்டதால சொன்னேன்.. அவ்ளோதான்.”

“ம்… உங்களுக்கு ஆராதனா தவிர வேற பசங்க..?”

“இல்லீங்க… எங்களுக்கு அந்த பாக்யம் கெடைக்கலை…”

“சரிம்மா… வேற ஏதாவது ஞாபகம் வந்தாலும் உடனே போன் பண்ணிச் சொல்லுங்க. எதையும் இக்னோர் பண்ண வேண்டாம்..”

“சரிங்க…” என்றபடி எழுந்து போனார் விஜயலட்சுமி.

ஆராதனாவுக்கு வெங்கடாச்சலம் இரண்டாவது அப்பாவா..? பெரிய ட்விஸ்டா இருக்கே..? விஜயலட்சுமி, வெங்கடாசலத்தைப் பற்றி நல்ல மாதிரியாகவே சொல்கிறார். ஆனால்.. வெங்கடாசலத்தை எவ்வளவுக்கு நம்பலாம்..? என்று யோசனையாக இருந்தது.

வெளியே வெங்கடாச்சலம் சேரில் அமர்ந்து அலெக்ஸிடம் பேசிக் கொண்டிருந்தார். அவரது பேச்சில் பார்வையில் ஏதும் பதட்டமோ பரபரப்போ இல்லை.

என்ன இருந்தாலும் அந்த வெங்கடாச்சலத்தின் மீது ஒரு கண்ணை வைக்க வேண்டும் என்று மனத்திற்குள் நினைத்துக்கொண்டாள் அனாமிகா.

–அனாமிகா வருவாள்…

ganesh

1 Comment

  • கைதேர்ந்த பிரபல க்ரைம் எழுத்தாளர் போலவே இருக்கு உங்க எழுத்துகள்.முதல் க்ரைம் கதைன்னா நம்பறது கஷ்டம்தான்.
    கதையோட்டமும் உரையாடல்களும் அருமை.இதை பிரபல பத்திரிகைகளிலேயே தொடராக்கி இருக்கலாம் தனுஜா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...