ஐஸ்வர்யம் அள்ளித்தரும் ஐப்பசி மாதப் புனித நீராடல்

 ஐஸ்வர்யம் அள்ளித்தரும் ஐப்பசி மாதப் புனித நீராடல்

பெருமாளுக்கு உரிய புண்ணிய தரும் புரட்டாசி மாதம் நிறைவடைந்து, இன்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 18 ) முதல் ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாதம் பிறந்துள்ளது.  இந்த மாதத்தில் இரவும் பகலும் சமமாக இருக்கும் என்பதால் துலா மாதம் என்றும் அழைப்பார்கள்.

தமிழ் மாதங்களின் படி, ஆண்டின் ஏழாவது மாதம் ஐப்பசி ஆகும். சூரிய பகவான் துலாம் ராசியில் பயணிக்கும் 29 நாட்கள் தான் ஐப்பசி மாதம் ஆகும். ஐப்பசி மாதம் அடைமழைக் காலம் என்பார்கள். அத்துடன் ஐப்பசி, ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் மாதமும் ஆகும். 

ராசிகளின் வரிசையில் துலாம் ராசி 7-வது ராசி. இந்த ராசியில் ஆத்மகாரகன் சூரியன் நீசம் அடைகிறார். எனவே இந்த மாதத்தில் புனித நீராடுவதன் மூலம் ஆத்மபலத்தை அதிகரித்துக் கொள்ள முடியும்.

ஐப்பசி மாதத்தில் காவிரி நதியில் நீராடுவதை நமது முன்னோர்கள் காலம் காலமாக பாரம்பரியமாகக் கடைப்பிடித்து வருகிறார்கள். காவிரியில் ஒவ்வொரு நாளும் நீராடுவது சிறப்பு என்றாலும் ஐப்பசி மாதத்தில் நீராடுவது மிகச் சிறப்பு. பொதுவாக நதிகளில் கங்கை நதி உயர்வானது என்பார்கள். கங்கையில் நீராடும்போது எல்லா பாவங்களும் போய்விடும் என்பது சாஸ்திரம். அந்த கங்கையின் பாவங்கள் காவிரி நதியில்தான் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை. அதனால், ஆழ்வார்கள் ‘கங்கையின் புனித மாயக் காவிரி’ என்று காவிரியைச் சிறப்பித்துப் பாடினர். இந்தக் காவிரிக்கரையில்தான் ஸ்ரீமன் நாராயணனின் ஐந்து அரங்கங்கள் இருக்கின்றன.

தலைக்காவிரியில் ஆரம்பித்து மாயவரம் திரு இந்தளூர் வரை காவிரிக்கரை யில் பெருமாள் யோக சயனத்தில் எழுந்தருளி உள்ளார். ஐப்பசி மாதத்தில், கங்கை, யமுனை, சரஸ்வதி முதலிய அத்தனை புனித நதிகளும் காவிரியில் நீராடி புனிதம் பெறுகின்றன.

புனிதமான ஐப்பசி மாதத்தில் அனைத்து புனித நதிகளும், தமிழகத்தில் ஓடும் தெய்வீக நதியான காவிரி நதியில் சங்கமிப்பதாக ஐதீகம். ஜோதிட ரீதியாக, துலாம் ராசி நவகிரகங்களில் “சுக்கிரன்” பகவானின் ஆதிக்கத்திற்குரிய ராசியாகும். காவிரி நதிக்கு நடுவே இருக்கும் ஸ்ரீரங்கம் எனப்படும் திருவரங்கத்தில் வீற்றிருக்கும் “ஸ்ரீரங்கநாதர்” சுக்கிர பகவானின் அம்சம் நிறைந்தவராவார். இவருக்கு காவிரியில் நீராடும் துலா ஸ்நானம் என்ற நிகழ்வும் இம்மாதத்தில் மேற்கொள்ளப்படுகிறது.

ஐப்பசி மாதத்தில் ஒரு நாளாவது காவிரியில் நீராட வேண்டும். அன்றைய தினம் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அப்போது சங்கல்பம் செய்துகொண்டு சூரியனை நோக்கி அர்க்கியம் விட வேண்டும். ஸ்ரீரங்கம், திருப்பராய்த்துறை, பவானி கூடுதுறை, திருவையாறு, திருவிடை மருதூர், பூம்புகார், மாயவரம் முதலிய பல்வேறு இடங்களில் ஐப்பசி மாதத் தில் நீராடுவதற்குச் சிறப்பு நீர்நிலை கட்டங்கள் உண்டு. அங்கு சென்று புனித நீராடலாம்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...