குழந்தை பாக்கியம் அருளும் சந்தான கோபால விரதம்
ஒருவர் எத்தனைதான் விதவிதமான செல்வங்களைப் பெற்றிருந்தாலும், குழந்தைச் செல்வம் இல்லையென்றால் பிறவிப் பயன் கிட்டுவதில்லை. திருமணமான ஒவ்வொரு தம்பதியும் திருமணம் ஆன நாளில் இருந்து தங்களுக்கு ஒரு வாரிசை எதிர்பார்த்து கனவு காண்பது இயற்கையே! வாரிசு சரியான நேரத்தில் பிராப்திக்க கைகூடாதவர்களுக்காகவே நம் முன்னோர்கள் பல்வேறு விரதங்களை உருவாக்கிக் கொடுத்து, அதனை மேற்கொள் ளும் வழிகளையும் அறிவுறுத்தியுள்ளனர். அதில் ஒன்றுதான் “சந்தான கோபால விரதம்”.
புத்திரகாரகன் குருவின் நாளில் பௌர்ணமியும் சந்தான கோபால விரதமும் இணைந்த நன்னாளில் சந்தான கோபாலருக்கு விரதமிருப்பது விசேஷம். இந்த விரதம் புரட்டாசி மாதத்தில் அமாவாசையை அடுத்து வரும் பௌர்ணமி தினத்தில் குழந்தை இல்லாத தம்பதிகளால் பகவான் கிருஷ்ணனை வேண்டி மேற்கொள்ளப்படுகிறது.
9-10-2022 ஞாயிற்றுக்கிழமை காலையில் சௌபாக்கியம் அருளும் சந்தான கோபால விரத நாள். இன்று விரதம் இருந்து கிருஷ்ணரை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.
இன்று சந்தான கோபால விரதத்தை முழுமையாகப் பின்பற்ற முடியாதவர்கள் பிரத்யேக மாக சில ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டால் பலன் கிடைக்கும்.
அத்தகைய தலங்களில் ஒன்றுதான் மேல்வெண்பாக்கம் ஸ்ரீஸ்வதந்த்ர லட்சுமி நாயிகா சமேத ஸ்ரீ யுகநாராயணப் பெருமாள் கோவில். காஞ்சியை அடுத்து தாமல் செல்லும் வழியில் பாலுசெட்டிசத்திரம் அருகில் உள்ளது மேல்வெண்பாக்கம் கிராமம். இங்குள்ள )லஷ்மி நாராயணப் பெருமாள் மிகவும் பழமையானவர். மூலவர் முழுவதும் சாளக்கிராம திருமேனியானவர். நான்கு யுகங்களாக அருள்புரியும் பெருமாள்.
அங்கு போக முடியாதவர்கள் சென்னை முகப்பேர் மற்றும் பல இடங்களில் உள்ள சந்தான ஸ்ரீநிவாசரை வணங்க குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களுக்கு விரைவில் நற்புத்திர பாக்கியம் அமையும்.
சந்தான பாக்கியத்துக்கும், மகாலட்சுமி கடாட்சத்துக்கும் உகந்த மந்திரங்கள் அடங்கிய ஸ்ரீ லட்சுமி நாராயண இருதயம். பகவான் கிருஷ்ணனே திருவாய் மலர்ந்தருளுவதாக ஸ்ரீமந் நிகழாந்த தேசிகன் அருளிச் செய்த ‘யாதவாப்யுதயம்’ மகா காவியத்தில் காணப்படும் கோவர்தன கிரி மகாத்மியம், பிரம்மாவின் புத்திரர் சனத்குமாரர் அருளிச் செய்த ஸ்ரீ சந்தான கோபால தோத்திரம் ஆகிய மூன்றும் இத்தலத்தில் பெருமாள் சந்நிதியில் பாராயணம் செய்யப்படுகிறது. இதைக் கேட்பவர்களுக்கு சந்தான பிராப்தி கிடைப்பது உறுதி என கூறப்படுகிறது.
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகே உள்ள ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோவிலுக்குச் சென்றும் வழிபடலாம். இந்த ஆலயம் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரத்தை அடுத்து பாலுசெட்டி சத்திரம், தாமல்தாண்டி பனப் பாக்கம் செல்லும் சாலையில் உள்ளது.