லண்டன் நகரில் உற்சாக வலம்வந்த பாடகி நஞ்சம்மா

 லண்டன் நகரில் உற்சாக வலம்வந்த பாடகி நஞ்சம்மா

கேரளாவைச் சேர்ந்த  70 வயதான பழங்குடியினப் பெண் நஞ்சம்மா லண்டன் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு லண்டன் லிவர்பூல் நகரத் தெருக்களில் உற்சாகமாக வலம் வந்த காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.

கேரள மாநிலம் அட்டப்பாடி மலைக்கிராமத்தைச் சேர்ந்த பாடகி நஞ்சம்மா,  ‘அய்யப்பனும் கோஷியும்’ திரைப்படத்திற்காகத் தேசிய விருது பெற்றவர். பழங்குடி இனத்தைச் சேர்ந்தவரான நஞ்சம்மா கிராமியப் பாடல்கள் பாடுவதில் வல்லவர். அவர் பாடிய பாடல்களைக் கேட்ட கேரளத் திரை உலகினர் நஞ்சம்மாவிற்கு ‘அய்யப்பனும் கோஷியும்’ என்ற படத்தில் ஒரு பாடல் பாட வாய்ப்பு அளித்தனர். அந்தப் பாடலில் தமிழ் வார்த்தைகளும் உச்சரிப்பில் மலையாளமும் கலந்து பாடப்பட்ட ‘களக்காத்த’ பாடல் கொரோனா காலத்தில் பட்டிதொட்டி எங்கும் பரவி வைரலானது.

அந்தப் படத்தில் ‘களக்காத்த சந்தனமேரம் வெகுவோக பூதிரிக்கும், பூ பார்க்க போகிலமோ விமோனாதே பக்கிலமோ’ என்ற பாடலைப் பாடினார். படம் வெளியான பின்னர் இந்தப் பாடல் பட்டிதொட்டி எங்கும் ஒளிக்கத் தொடங்கியது. இந்தப் பாடலுக்காக நஞ்சம்மாவுக்கு  2020-ம் ஆண்டுக்கான 68-வது தேசிய விருது அண்மையில் அறிவிக்கப்பட்டது.  மத்திய அரசு சார்பாக அந்தப் பாடல் பாடியதற்காகச் சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருது நஞ்சம்மாவுக்கு வழங்கியது. சமீபத்தில் இந்த விருது வழங்கும் விழா டெல்லியில் நடந்தது. பழங்குடியினப் பெண்ணான திரௌபதி முர்மு இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராக ஆகியிருக்கிறார். அவர் கையால் மலைக்கிராமப் பெண் பாடகி நஞ்சம்மா விருது பெற்றதும், அரங்கில் இருந்த அனைவரும் எழுந்து நின்று நஞ்சம்மாவுக்கு கரகோஷம் எழுப்பி வாழ்த்தினர். அரங்கமே அதிர்ந்த சந்தோஷத்தில் சிரித்துக் கொண்டே விருது வாங்கினார் நஞ்சம்மா. அவருக்கு வாழ்த்துக்கள் பெருமளவில் குவிந்தது.

அட்டப்பாடி காடுகளில் ஆடு மேய்க்கும் நஞ்சம்மா தனது இட்டுக்கட்டில் நாட்டார் பாடல்களைப் பாடுவதை வழக்கமாகக் கொண்டவர். அவ்வாறு அவர் சிந்தனையில் உதித்ததுதான் ”களக்காத்த சந்தனமேரம் பாடல். சச்சி என்ற அழைக்கப்பட்ட மறைந்த மலையாள இயக்குநர் கே.ஆர்.சச்சிதானந்தன் இயக்கிய ‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தில் ”களக்காத்த ” பாடலுக்காக நஞ்சம்மாவுக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. இதற்கு முழு காரணம் இயக்குநர் சச்சியும், இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய்யும் தான்.

‘அயப்பனும் கோஷியும்’ படத்தில் பாடுவதற்கு முன்பாகவே சிந்து சாஜன் என்ற பெண் இயக்குநர் இயக்கிய ‘அகுடு நாயக’ என்ற ஆவணப்படத்தில் நஞ்சம்மா ஒரு பாடல் பாடியுள்ளார்.

இந்த நிலையில் நஞ்சம்மாவை லண்டனில் உள்ள லிவர்பூலில் நடைபெறும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க அங்குள்ள அமைப்பு ஒன்று அழைப்பு விடுத்திருந்தது. இதனை முன்னிட்டு நஞ்சம்மா டெல்லியில் விருது வாங்கியதும் நேரே லண்டன் நகருக்கு விமானத்தில் பறந்தார்.  

அங்கு நிகழ்ச்சியை முடித்துக்கொண்ட நஞ்சம்மா லிவர்பூல் நகரின் தெருக்களில் உற்சாகமாக வலம் வந்த காட்சிகளை உடன் பயணித்தவர்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தற்போது அந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகிறது. அந்தக் காட்சியைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் பாராட்டி கருத்துச் சொல்லி வருகிறார்கள்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடியில் உள்ள நாக்குபதி பிரிவு எனும் பகுதியில் மகள், மகன், மருமகள் மற்றும் பேத்தி ஆகியோரோடு வசித்து வரும் நஞ்சம்மா, கால்நடை வளர்ப்பின் மூலம் குடும்பத்தை நடத்தி வருகிறார். 

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...