‘சுழல்’ வெப்சீரிஸ் தவறான முன்னுதாரணம்

 ‘சுழல்’ வெப்சீரிஸ் தவறான முன்னுதாரணம்

அமேசான் பிரைம் வீடியோ ஓ.டி.டி. தளம் முதல்முறையாக தமிழில் நேரடியாக ‘சுழல்  என்ற வெப் சீரிஸைத் தயாரித்துள் ளது. இந்த வெப் சீரிஸ்க்கான கதையை புஷ்கர் & காயத்ரி தம்பதிகள் இணைந்து எழுதியுள்ளனர். இயக்குநர்களான பிரம்மா மற்றும் அனுசரண் இருவரும் இணைந்து இயக்கியுள்ளார்கள். 6 மணி நேரம் ஓடக்கூடிய எட்டு பாகங்களைக் கொண்டது சுழல். இந்த வெப்சீரிஸ் ஒரு க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

புஷ்கர் – காயத்ரி திரைக்கதையில் உருவான ‘சுழல்’ இணையத் தொடரில் காணா மல் போன தனது தங்கையைத் தேடி அலைந்து கொண்டிருக்கும் அக்காவாக ஐஸ்வர்யா ராஜேஷ், அவரைத் தேடும் காவல்துறை அதிகாரியாக கதிர், தொழிற் சங்கத் தலைவராக ஆர். பார்த்திபன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு செம்ம வில்லி ரோலில் போலிஸ் பெண் அதிகாரியாக ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் மட்டுமல்லாமல் 30-க்கும் மேற்பட்ட மொழிகளில் இந்த வெப் சீரிஸ் ஒளிபரப்பாகியுள்ளது.

தமிழில் ‘ஓரம் போ’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி. தொடர்ந்து, ‘வ – குவாட்டர் கட்டிங்’, ‘விக்ரம் வேதா’ போன்ற படங்களை இயக்கியுள்ளனர். ‘விக்ரம் வேதா’ திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் மூலம் கவனம் பெற்ற இந்தத் தம்பதிதான் ‘சுழல்’ என்ற இணையத் தொடருக்குத் திரைக்கதை எழுதியுள்ளனர்.

கொங்கு மண்டலத்தில் இருக்கிறது சாம்பலூர் என்ற கிராமம். அக்கிராமத்தில் ஒரு பேக்டரி இயங்கி வருகிறது. அந்தப் பேக்டரிக்கு எதிராக அங்கு வேலை செய்யும் பார்த்திபன் தனது தலைமையில் ஒரு போராட்டத்தை நடத்துகிறார். அவர் போராட்டம் நடத்திய பிறகு அந்தப் பேக்டரிக்கு தீ வைத்து விடுகிறார்கள். இதற்கு காரணம் பார்த்திபன்தான் என இன்ஸ்பெக்டர் ஆன ஸ்ரேயா ரெட்டியும், எஸ்.ஐ. ஆன கதிரும் சந்தேகப்படுகிறார்கள். ஆனால் பார்த்திபன்தான் செய்தார் என்பதற்கான ஆதாரம் இல்லை.

இந்நேரத்தில் பார்த்திபனின் 15 வயது மகள் காணாமல் போகிறாள். அதற்குக் காரணம் இன்ஸ்பெக்டர் ஸ்ரேயா ரெட்டியின் மகன்தான் என்பது தெரியவரு கிறது. அதிலும் ஒரு ட்விஸ்ட் வர.. ஐஸ்வர்யா ராஜேஷ் கதைக்குள் என்ட்ரி ஆகிறார். பேக்டரியை கொளுத்தியது யார்? பார்த்திபன் மகளைக் கடத்தியது யார்? அடுத்தடுத்து என்ன நடந்தது என்ற தேடலின் முடிவே சுழல்.

நடிகர்களின் தேர்வும் பெர்பாமன்ஸும் எப்படி பலமோ அதேபோல், டெக்னிக்கல் பணியிலும் இந்த சீரிஸ் வீரியத்தோடு இருக்கிறது. முகேஷின் ஒளிப்பதிவு மிகவும் நேர்த்தி. குறிப்பாக மயானக் கொல்லை நடக்கும் காட்சிகளில் எல்லாம் முகேஷின் லைட்டிங் வொர்க், அட்டகாசம். விதவிதமான ஆங்கிளில் மயானக் கொல்லை காட்சிகளைப் படமாக்கியுள்ளார். சாம்.சி.எஸ்.ஸின் பின்னணி இசை யும் தரமாக இருக்கிறது.

ஆனால் படத்தில் வரும் தொழிற்சங்கத் தலைவரான பார்த்திபன் சிமென்ட் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளிகளுக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்தவர். இன்னொரு தொழிலாளியும் அந்த மக்களுக்காகவே வாழ்ந்து வருபவராகக் காட்டிவிட்டு அவர்கள்தான் குற்றவாளிகள் என்பதுபோல் காட்டு கிறார். அதிலும் கம்யூனிஸ்ட் தொழிசங்கத் தொழிலாளிகள் வீட்டில் யாரும் உறவோடு இல்லை என்பதுபோல் காட்டியிருக்கிறார்கள். கம்யூனிஸ்ட் தொழிற் சங்கத் தலைவர் பார்த்திபன் வீட்டில் மனைவி, மகள், இன்னொரு மகள் யாரும் உறவு முறையில் சரியாக இல்லை என்றும், அவரது உறவினர் ஒருவர் தொழிற் சங்கத் தலைவரின் மகள்களை செக்ஸ் டார்ச்சர் செய்து கற்பழித்ததாகவும் காட்டியிருக்கிறார்கள். அவரின் மனைவியும் இன்னொரு டியூஷன் வாத்தியாரு டன் உறவு வைத்துள்ளதாகக் காட்டப்பட்டுள்ளது. இதற்கும் மேல் சிமென்ட் பேக்டரியின் முதலாளி சேட்டும், காவல்துறை பெண் ஆய்வாளர் ஸ்ரேயாவும், தொழிற்சங்கத் தலைவர் பார்த்திபனும் சேர்ந்து அந்தப் பேக்டரிக்கு தீவைத்து விட்டு நாடகமாடுவதாகவும் அதற்கு இன்சூரன்ஸ் செக்கிங் ஆபீஸராக வரும் சந்தான பாரதியும் அவர்களின் சதிக்குத் துணைபோவதாக எடுக்கப்பட்டுள்ளது.

பரபரப்புக்காகக் கதையை உருவாக்குவதற்காக தவறான கருத்தை வலியுறுத்தும் சுழல் வெப்சீரிஸ் ஒரு தவறான முன்னுதாரணம்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published.