ஆணவமலம் நீக்கும் திருப்போரூர் முருகன் திருத்தலம்

 ஆணவமலம் நீக்கும் திருப்போரூர் முருகன் திருத்தலம்

முருகப்பெருமான் அசுரர்களை எதிர்த்து நிலம், ஆகாயம், கடல் ஆகிய மூன்று பகுதிகளில் நின்று போரிட்டு வெற்றி கண்டார்.

அசுரர்களின் கர்மத்தை நிலத்தில் நின்று போரிட்டு திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான் அடக்கினார்.

அவர்களின் மாயையை கடலில் நின்று போரிட்டு திருச்செந்தூரிலே வெற்றி கண்டார்.

இவ்வகையில் அசுரர்களின் ஆணவத்தை விண்ணில் நின்று முருகப்பெருமான் அடக்கி, ஒடுக்கிய இடமே திருப்போரூர் திருத்தலம்.

தாரகனுடன் போர் நடந்ததால் இத்தலத்திற்கு போரூர், தாருகாபுரி, சமராபுரி என்ற பெயர்கள் ஏற்பட்டன.

400 ஆண்டுகளுக்கு முன்னரே இந்துக் கோவில் ஒன்றில் முஸ்லிம் மன்னர் ஒருவ ரின் சிலை பொறிக்கப்பட்டு மத நல்லிணக்கத்திற்கு ஆதாரமாக விளங்கிவருகிறது திருப்போரூர் கந்தசாமித் திருக்கோயில்.

ஆலயத்தின் தெற்கே அமைந்துள்ள திருக்குளமான ‘வள்ளையார் ஓடை’ என்னும் சரவணப் பொய்கையில் நீராடி, கிழக்குப் பார்த்த ராஜகோபுரத்தை வணங்கி உள்ளே நுழைந்தால் கருவறையில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன்  காட்சியளிப்பார். அங்கே அவரை தரிசிக்கலாம்.

பொதிகை செல்லும் வழியில் அகத்தியர், இங்குள்ள முருகனைத் தரிசித்துள்ளார் என்கிறது ஸ்தல வரலாறு.

கந்தசஷ்டி கவசத்தில் இத்தலத்து முருகனை ‘சமராபுரிவாழ் சண்முகத்தரசே’ எனக் குறிப்பிட்டுள்ளார் பாலதேவராய சுவாமி. இக்கோவில் ஒரு காலத்தில் மண்ணில் புதையுண்டு போனது. சுவாமி சிலையும் ஒரு பனை மரத்தடியில் இருந்தது. மதுரையில் வசித்த சிதம்பர சுவாமியின் கனவில் தோன்றிய முருகன், இது பற்றி அவருக்குத் தெரிவித்தார்.

சிதம்பர சுவாமி இங்கு வந்து, முருகன் சிலையைக் கண்டெடுத்து பிரதிஷ்டை செய்தார். காட்டை சீர்திருத்தி புதிய கோவில் எழுப்பினார். கந்தசுவாமியைப் போற்றி 726 பாடல்கள் பாடினார். இவருக்கு இங்கு சன்னதி உள்ளது.

இங்கு கந்தசுவாமி, சுயம்புமூர்த்தியாக இருப்பதால் பிரதான பூஜைகள் செய்வதற் காக சுப்பிரமணியர் யந்திரம் பிரதிஷ்டை செய்துள்ளனர். எனவே இவருக்கு அபிஷேகம் கிடையாது. கூர்ம (ஆமை) பீடத்தின் மேலுள்ள இந்த யந்திரத்தில், முருகனின் 300 திருப்பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. முருகனுக்கு பூஜை நடந்தபின், இந்த யந்திரத்திற்கு பூஜை நடக்கும்.

பிரம்மாவிற்குரிய அட்சர மாலை, கண்டிகை, சிவனைப்போல வலது கையால் ஆசிர்வதிக்கும் அபயஹஸ்த நிலை, பெருமாளைப்போல இடது கையைத் தொடையில் வைத்து ஊருஹஸ்த நிலை என மும்மூர்த்திகளின் அம்சமாக முருகன் விளங்குகிறார்.

கோவிலுக்கு அருகிலுள்ள குன்றில் கைலாசநாதர், பாலாம்பிகை கோவில் உள்ளது. இவ்வாறு மலையில் சிவனும், அடிவாரத்தில் முருகனுமாக அமைந்த தலம் இது.

இத்தலத்தில் முருகன் சிலை கண்டறியப்பட்டபோது, அது ஒரு பனை மரத்தில் செய்த பாத்திரத்தில் வைக்கப்பட்டிருந்தது. இந்தப் பாத்திரத்தைத் தற்போதும் வைத்துள்ளனர். அள்ள அள்ளக் குறையாத அட்சயபாத்திரம் போல இந்தப் பானை செல்வத்தைத் தருவதாக ஐதீகம்.

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள யந்திர முருகனை வழிபடுகின்றனர். மாங்கல்ய பாக்கியம் கிடைக்க இங்குள்ள அம்மனை வழிபடுகின்றனர்.

இங்குள்ள சுவாமிக்கு திரிசதி அர்ச்சனை, அபிஷேகம் செய்தும், பால் குடம் எடுத் தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா…

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...