படைப்பாளிகளைச் சிரசேதம் செய்!
பூமி அதிபர் ருத்ரகிரி கிருஷ்ணன்கோயில் மிடுக்காய் அமர்ந்திருந்தார் வயது 52. உயரம் 182 செமீ. தினம் பத்தாயிரம் காலடிகள் நடந்து ஊளைச்சதை குறைத்து கச்சிதமாய் இருந்தார். சம்மர் கிராப்பிய தலை. காது மடல்களில் ரோமங்கள் நீண்டிருந்தன. பிடிவாதக்கண்கள். நீளமூக்கு நீளம் குறைந்த ஹிட்லர் மீசை உலக அரசியலை கரைத்துக்குடித்த கருத்துமுரடர். சுழற்சிமுறையில் பூமி அதிபர் பதவி இந்தியருக்கு வந்திருந்தது.
உள்துறை அமைச்சர் எழுந்து நின்றார் “காலைவணக்கம் பூமி அதிபரே!”
“காலை வணக்கம் மாலைவணக்கம் இரவுவணக்கம் சொல்லக்கூடாது என ஏற்கனவே உத்தரவு போட்டிருந்தேனே… மறந்து விட்டீர்களா?”
“மன்னிக்க வேண்டும்!”
“நான் சொன்னதை செய்து விட்டீர்களா?”
“செய்து விட்டேன். புதுமைபித்தன், குபரா, ந.பிச்சமூர்த்தி, ஜெயகாந்தன், எம்வி வெங்கட்ராம், கரிச்சான் குஞ்சு, மௌனி, அசோகமித்திரன், சுஜாதா, சுந்தர ராமசாமி, தோப்பில் முகமது மீரான், ஜாவர் சீதாராமன், ராகி ரங்கராஜன், ஜ.ரா. சுந்தரேசன், அம்பை, சாவி, அனுராதா ரமணன், சிவசங்கரி, ராஜேஷ்குமார், ரமணி சந்திரன், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர், தேவிபாலா, ஜெயமோகன் உள்ளிட்ட ஆயிரம் எழுத்தாளர்களின் கதைகளை தடைசெய்து பிரதிகளையும் கணினி பதிவுகளையும் எரித்து சாம்பலாக்கி விட்டோம்!”
“நல்லது!”
“பாரதியார், பாரதி தாசன், மருதகாசி, காமு ஷெரீப், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், சுரதா, நகுலன், அப்துல் ரகுமான், வைரமுத்து, மு.மேத்தா, சிற்பி, நா.முத்துக்குமார், கண்ணதாசன், வாலி, பிறைசூடன், முகமது பாட்சா, கோ.வசந்தகுமாரன், நிஷாமன்சூர், ரமீஸ் பிலாலி, வலங்கைமான் நூர்தீன், தபூ சங்கர் போன்ற கவிஞர்களின் கவிதைகளை தடைசெய்து பிரதிகளையும் கணினி பதிவுகளையும் எரித்து சாம்பலாக்கி விட்டோம்!”
“மகிழ்ச்சி!”
“ஸ்ரீதர், கே எஸ் கோபாலகிருஷ்ணன், கே.பாலசந்தர், வீணைபாலசந்தர், எல்லீஸ் ஆர். டங்கன், ஏ.பி நாகராஜன், பாரதிராஜா, கே,பாக்யராஜ், விசு, மணிவண்ணன், மனோபாலா போன்ற டைரக்டர்களின் சினிமாக்களின் பிரதிகளை எரித்து சாம்பலாக்கி விட்டோம்!”
“சபாஷ்!”
“கரடிக்குளம் ஜெயப்பாரதிப்ரியா, கோவி கோவன், சீர்காழி வெங்கட், சீர்காழி சீத்தாராமன், தஞ்சை தாமு, கபிஸ்தலம் ராஜேந்திரன், விசி ராஜரத்னம், இந்து குமரப்பன், அதிரை யூசுப் போன்ற ஜோக் எழுத்தாளர்கள் துணுக்கு எழுத்தாளர்களின் படைப்புகளையும் எரித்துசாம்பலாக்கி விட்டோம்… கார்ட்டூனிஸ்ட்களுக்கும் பட்டிமன்ற பேச்சாளர்களுக்கும் டிவி சீரியல்களுக்கும் வாழ்நாள்தடை விதித்துள்ளோம்!”
“சிறப்பு… இனி நம்ம நாட்ல ஒரு பய கதைகவிதை ஜோக் துணுக்கு எழுதக் கூடாது குறும்படம் வெப் சீரியல், டிவி சீரியல், சினிமா எடுக்கக்கூடாது ஒருபய பார்க்கக்கூடாது. எடுத்தலும் பார்த்தலும் படித்தலும் மரணதண்டனைக்குரிய குற்றங்கள்!”
அரசவை சலசலத்தது.
ஒரு குறும்புக்கார வாலிபரை கைவிலங்கிட்டு இழுத்து வந்தனர் காவலாளிகள்.
“யார் இவர்?”
“ஜோக் எழுத்தாளர் சி.பி. செந்தில் குமார்!”
“என்ன செய்தார்?”
“அரசியலை கிண்டல் செய்து ஜோக் எழுதியுள்ளார்?”
“என்ன ஜோக் அது?”
“செருப்புக்கான ஜிஎஸ்டி வரியை ஐந்து சதவீதத்திலிருந்து 28சதவீதமாக உயர்த்திட்டாங்களாமே?
செப்பல் ஷாட் ந்யூஸ்னு சொல்லு…”
“யாரங்கே… இவரை இழுத்து சென்று சிரச்சேதம் செய்யுங்கள்!”
“போறதுக்கு முன்னாடி இன்னொரு ஜோக்” பரபரத்தான் செந்தில்குமார் “இரண்டு ஜோக்குக்கு ரெண்டு சிரச்சேதம் செய்ய முடியாதில்ல…”
“சரி சொல்லு…”
“மன்னா! அந்தப்புரத்தில் இருந்த அழகிகள் பாதிப்பேரை மகாராணி துரத்தி விட்டுட்டாரே.. எப்படி?
ஐம்பது சதவீத பேருக்கு மட்டுமே கொரோனா கால அனுமதின்ற சட்டத்தை மகாராணி சாமர்த்தியமா இதுல காட்டிட்டாங்க!”
“சிரச்சேதம் செய்வதற்கு முன் இவருக்கு ஒரு கிலோ பச்சைமிளகாயை ஊட்டி விடுங்கள்!”
இடுப்பை ஆட்டி வலிப்பம் காட்டியபடி நடந்து போனான் செந்தில்குமார்.
உள்துறை அமைச்சர் பூமி அதிபரிடம் திரும்பினார். “அதிபரே! ஒரு சிறு சந்தேகம்..”
“என்ன?”
“படைப்பாளிகளின் மீது என்ன கோபம் உங்களுக்கு?”
“தனிப்பட்ட கோபம் எதுவுமில்லை. போன நூற்றாண்டுடன் கதை கவிதை ஜோக்குகள் தேவை முடிந்துவிட்டது. காதல் புலம்பல் கவிதைகளை கேட்டுகேட்டு காது புளித்து போய்விட்டது. திரும்பதிரும்ப 28வகை தீம்களில் தான் கதைகள் எழுதுகிறார்கள். டாக்டர் ஜோக் ராஜாராணி ஜோக் புருஷன் பொண்டாட்டி ஜோக்குகள்தானே சுற்றிசுற்றி வருகின்றன. கார்ட்டூன்களில் அரசியல்வாதிகள் உருவங்களை வக்கிரமாக வரைகிறார்கள். சினிமா உப்புசப்பில்லாத உப்பும்மா. சீரியல்கள் மனநோயாளிகளின் வேடந்தாங்கல். எழுதுவதும் அதை படிப்பதும் நேரவிரயம்…”
“வேறென்னென்ன கருத்துகள் வைத்துள்ளீர்கள் அதிபரே!”
“சொந்தஊரில் எவனும் தங்கக்கூடாது. வீட்டை விற்றுவிட்டு பெருநகர் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு இடம் பெயருங்கள். வீட்டில் சமையல் செய்யக் கூடாது. நூறில் தொன்னூறு சதவீத விவசாயிகள் விவசாயத்தை விட்டுவிட்டு வேறு தொழிலுக்கு தாவிவிடவேண்டும். அனைவரும் சொத்துகளை விற்று உலகசுற்றுலா செல்ல வேண்டும். மதபண்டிகைகள் கொண்டாடுவது வீண். ஒரு நாட்டு ஆண்பெண் இன்னொரு நாட்டு ஆண் பெண்ணை மணந்து கொள்ள வேண்டும். நாட்டுக்கு நாடு தாவி வேலை செய்ய வேண்டும்!”
அரசவைக்குள் இன்னொருவர் அழைத்து வரப்பட்டார். “யார் இவர்?”
“ஜோக் எழுத்தாளர். லக்ஸ் வேணி என்கிற பெயரில் எழுதுகிறார். இயற்பெயர் லட்சுமணன். இவர் ஒரு மயக்கவியல் மருத்துவர்!”
“மருத்துவருக்கு ஏன் ஜோக் எழுதும் வேலை? இவர் எழுதிய ஜோக்கை கூறுங்கள்!”
“என்னய்யா இது… சிபிஐ அனுப்பி இருக்கிற லெட்டர்ல ஒரே கறுப்புவெள்ளை கட்டங்களா இருக்கு?
அது க்யூஆர் கோடு தலைவரே! ஸ்மார்ட்போனை வச்சு ஸ்கேன் பண்ணிங்கன்னா உங்களோட குற்றபத்திரிக்கையை வாசிக்கலாம் தலைவரே!”
“இவருக்கு மயக்கமருந்து கொடுத்து சிரச்சேதம் செய்யுங்கள்!” அடுத்த ஜோக்கை யோசித்தபடி நடந்து போனார் டாக்டர் லட்சுமணன்.
“இத்துடன் அரசவை கலையலாம்!” என உத்தரவிட்டார் ருத்ரகிரி கிருஷ்ணன் கோயில்.
அதிபர் மாளிகை. இரவாடையில் இருந்தார் ருத்ரகிரி. பிபிசி எர்த் சானல் பார்த்தபடி பாதாம் பருப்பு கொறித்தார்.
“அறைக்குள் வரலாமா?”
“வா மகனே!”
பதினேழுவயது பரிமேலழகன் உட்பட்டான். “உங்களின் அடுத்தபணி என்ன தந்தையே?”
“செய்தித்துறை அனுப்பிய செய்திகளை தணிக்கை செய்து ஒளிபரப்புக்கு அனுமதி கொடுப்பேன்!”
“நான் ஒன்று உங்களை கேட்கலாமா?”
“கேள்!”
“படைப்பிலக்கியங்களின் மேல் ஏன் உங்களுக்கு காழ்ப்புணர்ச்சி? இதுவரை 848 படைப்பாளிகளை சிரச்சேதம் செய்திருக்கிறீர்கள்?”
“இலக்கியங்கள் தேவையில்லாத ஆணி மகனே!”
“அப்பா! கற்பனைதான் மனிதனை மிருகங்களிடமிருந்தும் பறவைகளிடமிருந்தும் வேறுபடுத்தி மகிமைபடுத்துகின்றன. கற்பனை இல்லா விட்டால் மனிதன் கற்கால மனிதனாகவே இருந்திருப்பான். கற்பனைதான் விஞ்ஞானத்திற்கான ஒளிவேக வாகனம். படைப்பிலக்கியத்தின் தேவை உலகின் கடைசி மனிதன் இருக்கும் வரை இருக்கும். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் குறைந்த பட்சம் ஒருநாவலும் பத்து சிறுகதைகளும் ஒளிந்துள்ளன. சிறுகதை நாவல் ஜோக்குகள் காலத்திற்கேற்றவாறு பரிணாமவளர்ச்சி கொண்டுள்ளன. பத்துவருடங்களுக்கு ஒருமுறை இலக்கியம் புதுசட்டை அணிந்து கொள்கிறது. கவிதைகளுக்கான பாடுபொருள் வெறும்காதல் அல்ல. வெறும் வார்த்தைகள் கரிக்கட்டை என்னால் கவிதைகள் வைரங்கள். கடலில் மில்லியன் வகை மீன்கள் இருப்பது போல படைப்பிலக்கியத்திலும் சுமார்-படுசுமார்-சராசரி- அற்புதம்-மகா அற்புதம் என்கிற படிநிலைகளில் இலக்கியங்கள் காணக்கிடைக்கும். படிக்கும் வாசகர்கள் அன்னப்பறவைகளாய் செயல்பட்டு திராபைகளை ஒதுக்கித்தள்ளுவர். ஒரு கார்ட்டூன் 100பக்க விமர்சன கட்டுரைக்கு சமம். கார்ட்டூன் உயர்கலாசார வெளிப்பாடு. சீரியல்கள் இல்லத்தரசிகளுக்கான வடிகால். சினிமா ஒரு ஆன்மஉணவு. மறைக்காமல் சொல்லுங்கள்… சிறுகதை எழுத முயன்று தோற்றுப் போனவரா நீங்கள்? நீங்கள் தோற்ற விஷயத்தை அடுத்தவர் செய்யக்கூடாது என படைப்பாளிகளை பழி வாங்குகிறீர்களா?”
“கல்லூரி நாட்களில் நிறைய சிறுகதைகள் எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பினேன். அவை அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. அதுவே என் கொள்கை முடிவுக்கு காரணமல்ல…”
“அதுவும் ஒரு காரணம்!”
“ஒரு ஐம்பது வருஷம் படைப்பிலக்கியங்கள் அறவே இல்லாமல் பூமி செயல்படட்டுமே… அதன்பின் லாபநஷ்டகணக்கை பார்ப்போம்!”
பரிமேலழகன் மாயஉண்மைகாட்சி கருவியை கையில் எடுத்தான்.
“படைப்பிலக்கியம் இல்லாமல் பூமி ஐம்பது வருடங்கள் கழித்து எப்படி இருக்கும்?’ – கேள்வியை கருவிக்குள் தள்ளினான்.
இருநூறு ஆண்டுகள் பின்தங்கிய பூமியும் அதன் மக்களும் பரிதாபமாய் காட்சியளித்தனர்.
‘படைப்பிலக்கியம் அனுமதிக்கப்பட்ட பூமி ஐம்பது வருடங்கள் கழித்து எப்படி இருக்கும்?’-கேள்வியை கருவிக்குள் தள்ளினான்.
இன்னும் நூறு ஆண்டுகள் முன்னேறிய பூமியும் அதன் மக்களும் உல்லாசமாய் காட்சியளித்தனர்.
வெட்கி தலைகுனிந்தார் ருத்ரகிரி கிருஷ்ணன்கோயில். “அடுத்து நான் என்ன செய்ய?”
“தடைகளை ஒரேயடியாக நீக்கினாலும் உங்க இமேஜ் கெட்டுவிடும். படிப்படியாக தடைகளை நீக்குங்கள்!”
-தடைகள் நீக்கப்பட்ட ஆறுமாதம் கழித்து-
ருத்ரகிரி கிருஷ்ணன்கோயில் மகனிடம் ஓடி வந்தார். “பரி! ஒரு சிறுகதை எழுதியிருக்கிறேன்… படித்து பார்!”
படித்து பார்த்தான் பரிமேலழகன். “சிறுசிறு திருத்தங்கள் செய்து அரசு மின்னிதழில் பிரசுரிக்கிறேன்!”
சிறுகதை பிரசுரமானது. “ஹைய்யா… என் சிறுகதை பப்ளிஷ் ஆய்ருச்சு!” உள்ளத்தை அள்ளித்தா ரம்பா போல கங்காரு தாவல் செய்தார் ருத்ரகிரி கிருஷ்ணன் கோயில்.