அண்ணா என்றொரு அற்புதன்

அறிஞர் அண்ணா நினைவு நாள் இன்று (3-2-2022)

தமிழர்கள் தமிழ்நாட்டில் மற்ற மாநிலங்களைவிட சமத்துவமாக வாழ்வதற்கும், தமிழகம் இன்று அனுபவிக்கும் அனனத்து முன்னேற்றங்களுக்கும் அடிகோலிட் டவர் அறிஞர் அண்ணா.

கண்ணாடி பார்க்க மாட்டார். அண்ணா தலை சீவமாட்டார். மோதிரமும், கைகடி காரமும் அணிவது கிடையாது. என்னை காலண்டர் பார்க்கவைத்து, கடிகாரம் பார்க்கவைத்து சூழ்நிலை கைதியாக்கிவிட்டதே இந்த முதமைச்சர் பதவி என்று அடிக்கடிச் சொல்லிக்கொள்வார்.

அண்ணா முதமைச்சராக இருந்து மறைந்தபோது அவரிடமிருந்த சொத்துக்கள் காஞ்சிபுரத்தில் ஒரு ஏக்கர் நிலம், ஒரு வீடு, சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு வீடு, நுங்கம்பாக்கம் இந்தியன் வங்கிக்கணக்கில் ரூ. 5000 இருப்பு, மைலாப்பூர் இந்தியன் வங்கியில் ரூ.5000 இருப்பு. இவை மட்டும்தான் அவர் விட்டுச்சென்ற சொத்துக்கள்.

அண்ணா பொதுக் கூட்டங்களில் தொடர்ந்து மணிக்கணக்கில் பேசக்கூடியவர். அதுவும் அடுக்குமொழியில் பேசுவதில் அவரை மிஞ்ச தமிழகத்தில் ஆள் கிடை யாது. அப்படிப்பட்ட அண்ணா ஒரு கூட்டத்தில் வெறும் ஐந்து வினாடிகள் மட்டுமே பேசிய சம்பவமும் உண்டு. அது தேர்தல் நேரம். அவர் பேசியது, “காலமோ சித்திரை, நேரமோ பத்தரை, உங்களுக்கோ நித்திரை, போடுங்கள் உதயசூரியனுக்கு முத்திரை” என்பதே அந்தப் பேச்சு.

ஆங்கிலத்தில் ஆழ்ந்த புலமை கொண்டவர் அண்ணா. அவரது ஆங்கிலப் பேச்சாற் றல் ஆங்கிலேரையே வியக்கவைக்கும் அளவுக்கு ஆற்றல் கொண்டது. யேல் (yale) பல்கலைக்கழகத்தில் அவர் ஆற்றிய உரை ஒரு வரலாற்றுச் சம்பவம்.

தமிழிலும், ஆங்கிலத்திலும் மிகச் சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான இவர் பல முற்போக்கு, சீர்திருத்த நாடகங்களையும் எழுதி இயக்கி அதில் ஒரு பாத்திர மாக நடித்தார். தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதி  சீர்திருத்தக் கருத்துக்களை அதன் மூலம் முதன்முதலாகப் பரப்பியவரும் இவரே.

அறிஞர் அண்ணா 1962 லிருந்து 1967 வரை மாநிலங்கவை உறுப்பினராகப் பதவி வகித்தார். 1965ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தன்னையும், கழகத் தையும் அதில் தீவிரமாக ஈடுபடுத்திகொண்டதால் தமிழக மக்களின் பேராதரவு அவருக்கும், தி.மு.க.விற்கும் கிடைத்தது.

1967இல் நடைபெற்ற தேர்தலில் பங்கு பெற்ற தி.மு.கழகம் வெற்றி பெற்று முதன் முறையாகத் திராவிட ஆட்சியைத் தமிழகத்தில் அமைத்தார் அண்ணா. அவரது தலைமையில் அமைந்த அமைச்சரவை இளைஞர்களைக்கொண்ட அமைச் சரவையாக விளங்கியது. ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் சுயமரியாதைத் திருமணங்களை சட்டப்பூர்வமாக்கினார்.

மேலும் மதராஸ் மாநிலம் என்றிருந்த சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றி தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றார். அண்ணா சாதுர்யமாகப் பேசுவதில் வல்லவர். ஒருமுறை தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் அண்ணாவைப் பார்த்து, “உங்களுடைய (ஆட்சியின்) நாட்கள் எண்ணப்படுகின்றன” என்று சொன்னதும் அதற்கு அண்ணா, “என்னு டைய ஒவ்வொரு அடியும் அளந்து வைக்கப்படுகிறது” என்று நயம்பட பதில் கூறினார்.

1962இல் அண்ணா மற்றும் அவரது கட்சியினர் 50 உறுப்பினர்கள் வெற்றிபெற்று சட்டமன்றத்தில் இடம்பெற்றிருந்தபொழுது, ஆளும் காங்கிரஸ் சார்பில் வைக்கப் பட்ட குற்றச்சாட்டுக்கு, மிகச் சாதுர்யமாகப் பதிலளித்ததைக் கண்டு ஆளுங்கட்சி யான காங்கிரஸ் கட்சியே வியந்தது. அவர்கள் அண்ணாவை நோக்கி வைத்த குற்றச்சாட்டு, “அண்ணாதுரையால் நல்ல எதிர்க்கட்சியாக இயங்கத் தெரிய வில்லை.” அதற்கு அண்ணா இவ்வாறு பதிலுரைத்தார்.

“நீங்கள் எதிர்க்கட்சி சரியில்லை என்று அடிக்கடிச் சொல்லிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் விரைவில் நீங்களே அந்தக் குறையைப் போக்கிவிடுவீர்கள் என்று எண்ணுகிறேன். நாங்கள் ஒரு காலத்தில் நீங்கள் இப்போது உள்ள இடத்தில் அமர வேண்டியவர்கள் என்பதால் பொறுப்புணர்ந்து அடக்கத்துடன் கூறுகிறேன்” என்று தீர்க்கதரிசனத்துடன் குறிப்பிட்டார்.

அண்ணா மிகச் சிறந்த தமிழ் சொற்பொழிவாளரும், மேடைப் பேச்சாளரும் ஆவார். தமிழில் சிலேடையாக, அடுக்கு மொழிகளுடன், மிக நாகரிகமான முறை யில், அனைவரையும் கவர்கின்ற வகையில் தனிக்குரல் (கரகரத்த குரலில்) வளத்துடன் பேசும் திறன் பெற்றவர். எழுத்தாற்றளும் பெற்றவர்.

“கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு” என்ற அண்ணாவின் முழக்கம் தமிழகத்தில் புகழ்பெற்ற ஒன்றாகும்.

அதுபோன்றே “எதையும் தாங்கும் இதயம் வேண்டும், மறப்போம் மன்னிப்போம், கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு, எங்கிருந்தாலும் வாழ்க, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம், சட்டம் ஒரு இருட்டறை அதில் வக்கீலின் வாதம் ஒளி விளக்கு, மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு -இதுபோன்ற பிரபலமான வசனங்களும் அண்ணாவின் எழுத்தாற்றலுக்கும், பேச்சாற்றலுக்கும் மிகச் சிறந்த எடுத்துக் காட்டுகளாகும்.

புத்தகங்கள் படிப்பதில் மிகுந்த ஈடுபாடுகொண்டவர். “வாசிக்கும் திறன்தான் ஒரு மனிதனை அறிவுடையவனாக அடையாளம் காட்டும்” என்பார் அண்ணா. பழைய மூர்மார்க்கட்டில் இருந்த யுனிவர்சல், சென்னை ஹிக்கிம்பாதம்ஸ், இந்த இரண்டு கடைகளுக்கும் வரும் அத்தனை ஆங்கிலப் புத்தகங்களையும் வாங்கிவிடுவார்.

ஹிக்கிம்பாதம்ஸ் எடுத்த கணக்கின்படி மைசூர் மகாராஜா சாம்ராஜ் உடையாரும், அண்ணாவும்தான் அந்தக் காலத்தில் அதிகமான புத்தகங்கள் வாங்கியவர்கலாம். ‘ஓர் இரவு’ திரைப்படத்தின் மொத்த வசனத்தையும் (360 பக்கங்கள் கொண்டது) ஒரே நாள் இரவிலேயே எழுதி முடித்தார். எந்தப் பொதுக் கூட்டத்திற்கு வந்தாலும் தாமதமாகத்தான் வருவார்.

முன்னால் வந்தால் அடுத்தவரை பேசவிடாமல் செய்துவிடுகிறார்கள், அதனால் ஊருக்கு வெளியில் நின்று அனைவர் பேச்சையும் கேட்டுவிட்டு கடைசியில் வருகிறேன் என்பார்.

இத்தாலிக்குச்சென்ற அண்ணா போப்பாண்டவரைச் சந்தித்து, கோவா விடுதலைக் குப் போராடி போர்ச்சுக்கல் சிறையில் இருக்கும் ‘மோகன் ரானடோவை’ விடுதலை செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

அண்ணாவின் கோரிக்கையை ஏற்று மோகன் ரானடே விடுதலை செய்யப்பட் டார். விடுதலையான ரானடே, அண்ணாவிற்கு நன்றி சொல்ல சென்னை வந்தார். ஆனால் அண்ணா இறந்துபோயிருந்தார்.

அண்ணாவுக்குப் புற்று நோய் தீவிரமாகி அறுவை சிகிச்சைக்கு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அறுவை சிகிச்சைக்குத் தேதி குறித்து மருத்துவர் சொன்னபோது அறுவையை ஒருநாள் தள்ளிவைக்கும்படி கேட்டுக் கொண்டார் அண்ணா. மருத்துவர் காரணம் கேட்டபோது, ‘நான் ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் ஒரு நாளில் படித்து முடித்துவிடுவேன். அறுவை சிகிச்சைக்குப்பின் நான் இறந்துவிட்டால் அந்தப் புத்தகம் என்னால் படிக்கமுடியாமே போய்விடும்’ என்றார். அந்தளவுக்கு நூலறிவின்மேல் பற்றுக் கொண்டவர் அண்ணா.

வாழும்போதும் சரித்திர நாயனாக வாழ்ந்த அண்ணா தன் இறப்பிலும் ஒரு சாதனையைப் படைத்துவிட்டார். ஆம், அண்ணாவின் இறுதி அஞ்சலியின் போது திரண்ட மக்கள் கூட்டம் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. 1806ஆம் ஆண்டு மறைந்த பிரிட்டன் துணைத் தளபதி நெல்சன், 1970ஆம் ஆண்டு மறைந்த எகிப்து ஜனாதிபதி கமால் அப்துல் நாசர் ஆகியோருக்குக் கூடிய மக்கள் கூட்டத்தை அடுத்து அதிகமான மக்கள் கூடியது அண்ணாவுக்குத்தான் என்கிறது உலக சாதனை புத்தகமான கின்னஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!