ஆண்மையோடு பேசக்கூடிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இல்லை!-நயினார் நாகேந்திரன்
அ.தி.மு.க.வில் அமைச்சராக இருந்தவர்தான் நயினார் நாகேந்திரன். தற்போது அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர்களாக உள்ள ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அமைச்சர்களாக இருந்தபோது நயினார் நாகேந்திரனும் அமைச்சராக இருந்தார். தற்போது பா.ஜ.க.வில் சேர்ந்து அ.தி.மு.க. கூட்டணி யில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நயினார் நாகேந்திரன், ‘‘தமிழக சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேசும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவரைக் கூட பார்க்கவில்லை என்று கூறினார். இது அ.தி.மு.க.வினர் மத்தியில் கொந் தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க. ஆதரவுடன் வெற்றி பெற்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை விமர்சித்த நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தனித்துப் போட்டியிட வேண்டும். அவர் நெல்லைக்கு வரும்போது கருப்புக்கொடி காட்டப்படு மென அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் சுதா பரமசிவம் கூறினார்.
இது தொடர்பாக அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் சுதா பரமசிவம், நெல்லையில் பேட்டி அளித்தார். “எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்டு 50 வருடங்களாகும் அ.தி.மு.க. இன்று இந்தியாவில் மாபெரும் அரசியல் இயக்கமாகத் திகழ்கிறது. இந்த இயக்கத்தில் அமைச்சராக, மூன்று முறை எம்.எல்.ஏ.வாகப் பதவி வகித்து, தற்போது அ.தி.மு.க. தயவால் வெற்றி பெற்ற நயினார் நாகேந்திரன், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் களைப் பற்றிப் பேசியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தஞ்சை மாணவி லாவண்யா மரணத்திற்கு சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக பா.ஜ.க. சார்பாக உண்ணா விரதப் போராட்டம் நடைபெற்றது. உண்ணாவிரதப் போராட்டத்தில் மாநிலத் துணைத் தலைவரும், சட்டமன்ற பா.ஜ.க. தலைவருமான நயினார் நாகேந்திரன் பேசும்போது,
“தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக் காலம் இன்னும் 4 ஆண்டுகள் உள்ளது. எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பிக்கும் நேரத்தில் எப்படி ஒரு எழுச்சி இருந்ததோ அதே எழுச்சி தற்போது அண்ணாமலை தலைவராக உள்ள இந்த நேரத்தில் எழுந்துள்ளது. தமிழகத்தின் எதிர்க்கட்சி போல மக்கள் பிரச்னைகளை பா.ஜ.க.தான் பேசி வருகிறது. சட்டமன்றத் தில் எதிர்க்கட்சியாக ஆண்மையோடு பேசக்கூடிய ஒரு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வைக் கூட பார்க்க முடியவில்லை. நீங்கள் பேச வேண்டியதுதானே என்று நீங்கள் கேட்க லாம். 4 பேர் உள்ள நாங்கள் எப்படி பேச முடியும்? என்றவர் மேலும் பேசும்போது,
“எதிர்க்கட்சியாக இல்லாமல் ஊடகங்களுக்கு தைரியமாகப் பேட்டி கொடுப்பவர் அண்ணாமலை மட்டுமே. அதேபோல நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இரண்டு தவறுகளை இழைத்த காரணத்தால் ஆட்சி அமைக்க முடியாமல் சென்றது. இல்லை என்றால் பா.ஜ.க. தயவோடு அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைத்திருக்கும். மேலும் இந்தத் தோல்வியும் நல்லதுதான். வரும் காலங்களில் பா.ஜ.க. தலைமையில் கூட்டணி அமைக்கப்படும்” என்றார்.
“நெல்லையில் பா.ஜ.க.வுக்கு என்று தனியாக ஓட்டு வங்கி கிடையாது. அ.தி.மு.க. தொண்டர்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பணியாற்றி நயினார் நாகேந்திரனை வெற்றி பெற வைத்தனர். அ.தி.மு.க.விலிருந்து பா.ஜ.க.வுக்குச் சென்ற நயினார் நாகேந்திரனுக்கு அ.தி.மு.க.வை விமர்சிக்க எந்தத் தகுதியும் கிடையாது. சட்டமன்றத் தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் பேசி வெளிநடப்பு செய்துள்ளார். ஆனால் சட்டமன்றத்தில் நயினார் நாகேந்திரன் பேசுவதில்லை. வானதி சீனிவாசன் தான் பேசுகிறார். எனவே அ.தி.மு.க. தயவால் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற நயினார் நாகேந்திரன், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தனித்துப் போட்டியிட வேண்டும். அ.தி.மு.க. தயவு இல்லாமல், தமிழகத்தில் பா.ஜ.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது. என்று எதிர்ப்புத் தெரிவித்தார் சுதா பரமசிவம்.
இதற்கிடையே நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அ.தி.மு.க. வினர் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர். நயினார் நாகேந்திரனின் பேச்சுக்கு அ.தி.மு.க. தரப்பில் சமூக வலைதளங்களிலும் டிவிட்டர் பக்கத்திலும் கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் சிங்கை ராமச்சந்திரன், ராஜ்சத்தியன் ஆகியோர் கூறும்போது, “நீங்கள் வேண்டுமானால் அ.தி.மு.க. தோள் மீது தொற்றிக்கொண்டு பெற்ற எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் வெற்றி பெற்று தங்கள் ஆண்மையை நிரூபியுங்களேன். ஆண்மை என்பது சொல் அல்லது செயல்” என்று கூறியுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக பெரவள்ளூர் காவல்நிலையத்தில் அ.தி.மு.க.வின் வட சென்னை வடக்கு மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்டச் செயலாளர் கொளத்தூர் கிருஷ்ண மூர்த்தி தலைமையிலான சுமார் 50க்கும் மேற்பட்டோர் பா.ஜ.க.வின் சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர். அதன் பின்பு பேசிய கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, “நயினார் நாகேந்திரன் தொலைபேசி மூலமாக எங்களது ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாள ரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் போராட்டங்கள் தொடரும்” என்றார்.
புகார் கொடுத்த பின் வெளியே வந்த அ.தி.மு.க.வினர் கோஷமிட்டதால் சிறிது நேரம் காவல் நிலையத்தில் பரபரப்பு நிலவியது.
2019ல் ஆடிட்டர் குருமூர்த்தி அ.தி.மு.க.வினரை ஆண்மை இல்லாதவர்கள் என்று விமர்சித்ததோடு, பிச்சைக்காரர்கள் என துக்ளக் இதழில் கார்ட்டூன் போட்டு அதிர வைத்தார்.
அ.தி.மு.க.வை விமர்சித்தால் எப்படி பதிலடி கிடைக்கும் என்பதை ஜெயலலிதா இப்போது இருந்தால் குருமூர்த்தியின் கதி அதோகதிதான். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சுப்பிரமணிசுவாமி அ.தி.மு.க. ஆட்சியை விமர்சித்ததால் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சுப்பிரமணியன் சுவாமிக்கு வெளிப்படுத்திக் காட்டியது அக்கட்சி மகளிரணி. (அப்போது மகளிர் அணியின் தலைவியாக இருந்தவர் வளர் மதி). தமிழக வரலாற்றில் இன்றளவும் பேசுபொருளாக இருக்கிறது அந்த மகளிரணியின் பலான போராட்டம்.
இப்போது ஜெயலலிதா இல்லை. அ.தி.மு.க.வினரின் வாய்மொழியாகச் சொல்வதா னால் தலையில்லா உடல்கள்… அதனால்தான் குருமூர்த்தி, நயினார் நாகேந்திரன் போன்றோர் ஏகத்துக்குமாக ஆண்மையில்லாதவர்கள், பிச்சைக்காரர்கள் என கடும் சொற்களால் அர்ச்சிக்கிறார்கள். ஆனாலும் அ.தி.மு.க. தலைமை அமைதி காத்துக் கொண்டே இருக்கிறது.