பேய் ரெஸ்டாரெண்ட் – 23 | முகில் தினகரன்
இரவு.
பகல் முழுவதும் ரெஸ்டாரெண்டில் ஓய்வில்லாமல் வேலை செய்த காரணத்தால் உடம்பெல்லாம் புண்ணாய் வலித்தது குள்ள குணாவிற்கு. புரண்டு புரண்டு படுத்தவன், கையை நீட்டி தலைமாட்டிலிருந்த வாட்சை எடுத்துப் பார்த்தான்.
மணி 12.20.
எழுந்து படுக்கையில் அமர்ந்து கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தான். “ம்ஹும்…இனி தூக்கம் அவ்வளவுதான்”
சட்டென்று மூளைக்குள் அந்த யோசனை தோன்றியது. “திருமுருகன் சார் சொல்லிக் குடுத்த மாதிரி அந்த ஒய்ஜா போர்டை வெச்சு ஆவியுலகத் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு, அவர் சொன்ன அந்த லட்சுமி நரசிம்மன் ஆவியோடு பேசினால் என்ன?…அவர்தான் அது நல்ல ஆவின்னு சொல்லியிருக்காரே…அப்புறம் என்ன பயம்?”
“கரெக்ட்….இப்போதைக்கு பொழுதைப் போக்க அதுதான் நல்ல வழி”
அதுநாள் வரையில், பணியாட்கள் தங்குமிடத்தில் எல்லோரோடும் கலந்து படுத்துறங்கிய குள்ள குணாவிற்கு சமீபத்தில்தான் தனியறையை ஒதுக்கிக் குடுத்திருந்தான் திருமுருகன். அது லட்சுமி நரசிம்மன் ஆவிக்கும் அவனுக்கும் இடையில் ஒரு தொடர்பினை உருவாக்க வேண்டும் என்கிற எண்ணத்தில்தான்.
எழுந்து ஆவியுலகத் தொடர்புக்கான ஆயத்தங்களில் ஈடுபட்டு, நீண்ட நேரம் போராடினான் குள்ள குணா.
ம்ஹும், ஆவியும் தொடர்பில் வரவில்லை. எந்தப் பாவியும் தொடர்பில் வரவில்லை.
“அடச்சே!…இது நமக்கு செட்டாகாது” என்று முடிவு செய்து எல்லாவற்றை ஒதுக்கி விட்டு எழ நினைத்தவன் கடைசி முயற்சியாய் மீண்டுமொரு முறை கண்களை மூடியமர்ந்தான்.
“லட்சுமி நரசிம்மன் என்னும் என் ஆவி நண்பரே…என்னோடு பேச வாருங்கள்?” தன் வழக்கமான குரலிலிருந்து மாறி, வித்தியாசமான ஒரு கரகரத்த குரலில் கேட்டான் குள்ள குணா
பக்கத்திலிருந்த வெள்ளைத் தாளில் அதற்கான பதிலை அவன் வலது கை நிதானமாய் எழுதியது.
“நண்பரே!…தங்களைப் பற்றிய ஒரு மாபெரும் கவலைதான் என்னை வாட்டிக் கொண்டிருக்கின்றது…வாழ்ந்த காலத்தில் ஒரு கல்யாணத் தரகராய் எத்தனையோ பேருக்கு திருமணம் செய்து வைத்த நான், முப்பது வயதிற்கும் மேலாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் தங்களைப் பார்த்து மிகவும் வேதனைப் பட்டுக் கொண்டிருக்கின்றேன்…அநேகமாக இப்போது அதற்கு ஒரு வழி பிறந்து விட்டது என்று எனக்குத் தோன்றுகின்றது…தாங்கள் விரும்பினால் தங்களுக்கு ஒரு நல்ல காரியம் செய்து…அதன் மூலமாய் நானும் ஆவியுலக முக்தியடைய விரும்புகிறேன்”
குள்ள குணா கை எழுதுவதை நிறுத்தியதும்,
கண் விழித்து தான் எழுதிய அந்த ஆவியின் தகவலைபடித்துப் பார்த்தான். குழப்பமாயிருந்தது. “என்ன சொல்லுகிறார் இந்த ஆவி நண்பர்?…செத்து ஆவியாய்ப் போன பின்னும் அந்த தொழில் புத்தி இன்னும் போகலை போலிருக்கு….ஆவியுலகத்துல அரூபமாய்த் திரிஞ்சிட்டிருக்கறவர் எனக்கு ஒரு நல்ல காரியம் செய்ய விரும்பறாராம்!…எப்படி?…எப்படி சாத்தியம்?”
யோசித்தான். “சரி…அவரையே கேட்டுப் பாத்திட்டாப் போச்சு”
மீண்டும் கண்களை மூடி, ஆவி நண்பரை நினைத்து மனதை ஒரு முகப்படுத்திக் கேட்டான்.
“ஆவி நண்பரே!…நீங்க சொல்வது எனக்குப் புரியவில்லை…ஆனாலும் நீங்க ஏதோ நல்ல காரியம்தான் செய்யத் துடிக்கிறீர்கள் என்பது புரிகின்றது…ம்ம்ம்…நீங்க எது செய்தாலும் அதை நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்றான் குள்ள குணா கரகரத்த குரலில்.
மறு கணம் வெள்ளைத் தாளில் ஆவியில் பதில், குணாவின் வலது கை வழியாய் வந்திறங்கியது.
“ரொம்ப சந்தோஷம்…சீக்கிரமே தங்களுக்கு ஒரு நல்ல செய்தியைக் கொண்டு வந்து தருகிறேன்!…அச்செய்தியில் நான் சொல்வதை தாங்கள் முழுமையாகக் கேட்டு…தவறாமல் செய்ய வேண்டும்…செய்வீரா?”
ஆவி நண்பரின் அந்த பதில் கேள்வியால் மீண்டும் குழப்பமானான் குணா. “என்ன சொல்ல வருது?ன்னே புரியலை!…சரி…ஆனது ஆகட்டும்!…அவர் சொல்றபடியே செஞ்சுதான் பார்ப்போமே?”
ஆவி நண்பர் மீதிருந்த அபார நம்பிக்கையில், “சரி…செய்கிறேன்” என்று ஒப்புக் கொண்டு எழுந்தான்.
விளக்கை அணைத்து விட்டு குணா உறங்கப் போக, மனதில் ஒரு மகிழ்ச்சியோடு அங்கிருந்து புறப்பட்டது லட்சுமி நரசிம்மனின் ஆவி.
*****
மாலை ஆறே கால்,
அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய சுமதி நைட்டிக்கு மாறி முகம் கழுவ பாத்ரூம் பக்கம் சென்றாள். பாத்ரூம் கதவு சாத்தியிருக்க, உள்ளே யாரோ குளித்துக் கொண்டிருக்கும் ஓசை கேட்டது. “யாரது?…இந்த நேரத்துல குளிக்கறது?” யோசனையுடன் கதவை நாசூக்காகத் தட்டினாள்.
“யாரூ?” உள்ளேயிருந்து தாய் ராஜேஸ்வரியின் குரல்.
“ம்ம்…நான்தான்மா…சுமதி!…அது செரி…என்ன இந்த நேரத்துல குளியல்?”
“வெளில வந்து சொல்றேன் இருடி”
சுமதி திரும்பி தன் அறைக்கே வந்தாள்.
ஐந்தே நிமிட்த்தில் குளித்து விட்டு வந்த ராஜேஸ்வரி, “ஊரே அல்லோல கல்லோலப் பட்டுக்கிடக்கு….உனக்கு விஷயமே தெரியாதா?…” கேட்க,
“எனக்குத் தெரிஞ்சு…அப்படி எதுவுமே இல்லையே?”
“இன்னிக்குக் காலைல…திருப்பதில பத்மாவதி அம்மான் கழுத்துல இருந்த தாலிக்கயிறு கழன்று இறங்கிடுச்சாம்…அதோட விளைவா நாட்டுல இருக்கற சுமங்கலிப் பெண்களோட தாலிக்கு ஆபத்தாம்…அதனால சுமங்கலிப் பெண்களெல்லாம் குளிச்சு…நெறைஞ்ச பக்தியோட புதுத் தாலிச் சரடுக்கு பூஜை பண்ணி கழுத்துல கட்டிக்கணுமாம்!…அதுவும் இன்னிக்கு ராத்திரிக்குள்ளார பண்ணிடணுமாம்!…இப்பத்தான் அய்யர் வீட்டம்மா வந்து சொல்லிட்டுப் போனாங்க” விழிகளைப் பெரிதாக்கிக் கொண்டு பய பக்தியோடு தாய் சொன்னதை பொறுமையாக கேட்டு முடித்த சுமதிக்கு ஒரு புறம் சிரிப்பாகவும், இன்னொரு புறம் வேதனையாகவும் இருந்தது.
“தாலி ஏறாத கழுத்தோட…கிட்டத்தட்ட அரைக் கிழவியாய் நான் இந்த வீட்டுக்குள்ளார உலாத்திட்டிருக்கேன்…அதுக்கொரு வழி பண்ணத் தோணலை…இருக்கற தாலியை இறுக்கிக் கட்டிக்கறதுக்கு இங்க பூஜை நடக்குது…”முணுமுணுத்தாள்.
“என்னடி முனகறே?” புடவையைச் சுற்றிக் கொண்டே கேட்டாள் ராஜேஸ்வரி.
“மூட நம்பிக்கையின் மொத்த உருவமே…உன்னை ஒன்றும் சொல்லலை தாயி” தலைக்கு மேல் கைகளை உயர்த்திக் கும்பிட்டுச் சொன்னாள் சுமதி.
அவளை வெறுப்புடன் பார்த்த ராஜேஸ்வரி, “கழுத்துல தாலின்னு ஒண்ணு ஏறியிருந்தா அதோட அருமை தெரியும்…மொட்டைக் கழுத்துதானே?…அதனால நீ என்ன வேணா பேசுவே?” வார்த்தைக் கங்குகளைக் கொட்டி விட்டு, பின்னர் அதன் தவறை உணர்ந்து நாக்கைக் கடித்துக் கொண்டாள்.
அவள் அப்படிச் சொன்னது சுமதியின் மனதை வெகுவாய்ப் பாதித்து விட, “ஏன்தான் அம்மாவிடம் பேசினோமோ?” என்றிருந்தது அவளுக்கு.
சோகம் அப்பிய முகத்துடன் தளர்வாய் அங்கிருந்து நகர்ந்தாள்.
“நான் சாமி கும்பிட போறேன்…நீயும் வந்து என் கூட நின்னு கும்பிடு” தன் பேச்சுக்கு பிராயச்சித்தம் தேடுவது போல் ராஜேஸ்வரி அழைக்க,
“மொட்டைக் கழுத்துக்காரிக்கு பூஜை எதுக்கு?…புனஸ்காரம் எதுக்கு?…நீ போய்க் கும்பிட்டு தாலியை இறுக்கிப் பிடிச்சுக்கோ” பட்டென்று சொல்லி விட்டு, கட்டிலில் சென்று குப்புறப் படுத்தாள் சுமதி.
“சரி…சரி…சாமி கும்பிட வராட்டி பரவாயில்லை…கிச்சன்ல டிபன் ரெடியாயிருக்கு…போய் சாப்பிடு” மகளருகே வந்து அவளைத் தொட்டு எழுப்பியபடி சொன்னாள் ராஜேஸ்வரி.
“எனக்குப் பசிக்கலை…டிபன் வேண்டாம்” தலையைத் தூக்காமலே பதில் சொன்னாள் சுமதி.
“பசியில்லையா?…ஏன்?…ஏன்?”
“விருட்”டென தலையைத் தூக்கி, “ஏம்மா…பசிக்காததற்கெல்லாம் ஒரு காரணம் சொல்லிட்டிருக்க முடியுமா?…பசிக்கலைன்னா…பசிக்கலை…அவ்வளவுதான்…விடு” கரித்துக் கொட்டினாள்.
“இருடி…இருடி…இப்ப எதுக்கு இப்படிக் கத்தறே?…நான் என்ன உன்னைய சமையல் பண்றதுக்கா கூப்பிட்டேன்?…சாப்பிடத்தானே கூப்பிட்டேன்…அதுக்குப் போய் இப்படி எரிஞ்சி விழறியே?…என்னாச்சு உனக்கு?”
“அதைத்தான் நானும் கேட்கறேன்… “என்னாச்சு எனக்கு?” திருப்பிக் கேட்டாள் சுமதி.
சில நிமிடங்கள் மகள் முகத்தையே கூர்ந்து பார்த்த ராஜேஸ்வரி, அவளை ரொம்ப நெருங்கி, அவள் தலையைத் தடவி, “சுமதிக்கண்ணு…நீ பசி தாங்க மாட்டே…அதான் நான் திரும்பத் திரும்ப கூப்பிடறேன்” என்றாள் மிகவும் தணிந்த குரலில்.
“ஹும்…ஏதேதோ பசியையெல்லாம் தாங்கிட்டிருக்கேன்…இந்த வயித்துப் பசியைத் தாங்கிக்க மாட்டேனா?” என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டு, “சரி…நீ போய் பூஜையை முடிச்சுக்கிட்டு வா…ரெண்டு பேருமே ஒண்ணா சாப்பிடுவோம்” என்றாள் சுமதி தாழ்ந்த தொணியில்.
அம்மாவின் ஆசைக்காக அவளுடன் அமர்ந்து அரையும் குறையுமாய் எதையோ சாப்பிட்டு விட்டு, மீண்டும் தன் அறைக்குள் வந்து படுக்கையில் விழுந்த சுமதிக்கு, அம்மா சொன்ன அந்த அமில வார்த்தைகள் திரும்பத் திரும்ப காதுகளுக்குள் ஒலிக்க, “ ச்சே…எப்பேர்ப்பட்ட கொடூர வார்த்தைகள்?….மொட்டைக் கழுத்தாம்!…நானா தாலி கட்டிக்க மாட்டேன்!ன்னு அடம் பிடிச்சேன்…வயசுக்கு வந்த நாளிலிருந்து அந்த தாலிக்கனவுகளோடதானே?….தெனமும் தூங்கி எந்திரிச்சேன்?…இப்ப அது கிடைக்காமப் போனதினாலதானே விரக்தில தூக்கமும் இல்லாம…கனவுகளும் இல்லாமக் கிடக்கறேன்?…ஹும்…பெத்த பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கத் துப்பில்லை…என்னைப் பேசறா…” பொருமினாள்.
அவள் மனம் ஆறுதல் மொழிக்கு ஏங்கிய போதுதான் ஆவி நண்பன் ஞாபகம் வந்தது.
எழுந்தாள்.
ஒரு குழந்தையை வாரியெடுப்பது போல் அந்த ஒய்ஜா போர்டை வாஞ்சயுடன் அள்ளியெடுத்து தன் முன் பரப்பினாள்.
கலங்கிப் போயிருந்த கண்களை கண்ணீர்த் திவலைகளோடு மூடினாள்.
அவளது மனம் புண்பட்டுக் கிடக்கின்றதென்பதை உடனே புரிந்து கொண்டது போல் லட்சுமி நரசிம்மன் ஆவி இன்று வெகு சீக்கிரத்திலேயே வந்திறங்கியது.
வந்ததும் வராததுமாய் பரபரவென்று தன் செய்தியை, சுமதியின் கையெழுத்தின் வாயிலாய்த் தந்து விட்டு அதே வேகத்தில் திரும்பியும் சென்றது.
அசுவாரஸியமாய் காகிதத்திலிருந்த தகவலைப் படிக்க ஆரம்பித்தாள் சுமதி.
“நல்ல நேரம் வந்து விட்டது….
உங்கள் வேதனை தீரும் காலம் வந்து விட்டது”
எடுத்த எடுப்பில் உற்சாகமான வார்த்தைகளை உதடு உச்சரிக்க, அசுவாரஸியம் மாறி ஆர்வமானாள் சுமதி.
“நான் உயிரோடு வாழ்ந்த காலத்தில் ஒரு கல்யாணத் தரகர் என்பதைத் தங்களிடம் ஏற்கனவே சொல்லியிருக்கேன்…பல ஜோடிகளை இல்லற வாழ்வில் ஒன்றிணைத்துள்ளேன்…இப்போது நான் இறந்து போய் ஆவியுலகில் இருந்தாலும்,,,என்னால் மண்ணுலகில் வாழும் உங்களுக்குத் திருமணம் செய்து வைக்க முடியும்…என் மேல் முழு நம்பிக்கை வைத்து நான் சொல்வதை நீங்கள் தட்டாமல் செய்ய வேண்டும்…அவ்வாறு செய்தால் உங்களுக்கு ஒரு நல்ல வரனை என்னால் ஏற்பாடு செய்ய முடியும்…எனக்கு உங்களைப் போலவே ஒரு ஊடக நண்பர் உண்டு…நானும் அவரும் அடிக்கடி உரையாடிக் கொள்வதுமுண்டு…அவர் மிகவும் நல்லவர்…அவருக்கு வயது முப்பது….இறைவன் அவருக்கு எல்லா வளங்களையும் தந்து விட்டு ஒரேயொரு குறையை மட்டும் வைத்து விட்டான்!…அதாவது அவரைக் குள்ளமாக…வெறும் மூணடி உயரமே உள்ள ஆண் மகனாகப் படைத்து விட்டான்!…அதன் காரணமாக தனக்கு யார் பெண் தரப் போகிறார்கள்?…என்கிற எண்ணத்தில் தனித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்….வாழும் காலத்தில் ராசியான தரகராய் வாழ்ந்து முடித்தவன் நான்….அதனால் சொல்கிறேன்….அந்த நண்பருக்கு ஏற்ற மனைவி நீங்கள்தான்…அதே போல் அந்த நண்பர்தான் உங்களுக்கும் ஏற்ற கணவர்….நீங்கள் மட்டும் சம்மதம் தெரிவித்தால்…நீங்கள் இருவரும் நேரில் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை நான் செய்கிறேன்…”
படித்து முடித்ததும் சுமதியின் கண்களிலிருந்து கண்ணீன் தாரை தாரையாக் கொட்டியது. “என்னைப் பெத்தவங்களும்…என்னைச் சுற்றியுள்ள மத்தவங்களும்…என்னைக் குத்தல் பேசியும்…நக்கல் பேசியும்…தெனமும் காயப்படுத்திக் கொண்டிருக்கும் போது…ஒரு ஆவிக்கு என் மேல் இத்தனை அக்கறையா?…இத்தனை அன்பா?”
நெகிழந்து போனாள்.
அதே நெகிழ்வுடன், “ஆவி நண்பா…நீ எது செய்தாலும் எனக்குச் சம்மதம்…”என்று அந்தச் செய்தியின் எழுதி வைத்து விட்டு உறங்கப் போனாள்.
அவள் உறங்கிய பின் காற்றாய் வந்து போன நரசிம்மன் ஆவி அவள் பதிலுக்கு சந்தோஷப்பட்டுக் கொண்டு வேகமாய் பறந்து சென்றது, குள்ள குணாவிடம் பேச….
*****
குணாவின் அறையை அடைந்ததும்,
“ர்ர்ரூரூம்ம்ம்!….ர்ர்ரூரூம்ம்ம்” என்று அறைக்குள் அங்குமிங்கும் அலைந்தது.
அவனோ கும்பகர்ணனின் வாரிசு போல், வாயைப் பிளந்து கொண்டு தூங்கினான்.
1.45
“ர்ர்ரூரூம்ம்ம்!….ர்ர்ரூரூம்ம்ம்” என்ற சத்தம் குணாவின் தலைமாட்டில் கேட்க, அது தன் ஆவி நண்பர் அழைப்புத்தான் என்பது அவனுக்குப் புரிந்தது.
ஆனாலும் உடனே எழுந்து ஆவியுடன் உரையாடலைத் துவக்க முடியாதபடி உடல் அசதி அவனை அப்படியே படுக்கைக்குள் அழுத்தியது. “நண்பரே…இன்னிக்கு ஒரு நாள் லீவு விட்டுடலாமே?…நாளைக்குப் பேசலாமே?” என்று சத்தம் வரும் திசையைப் பார்த்துச் சொன்னான்.
ஆனால், அவன் அப்படிச் சொல்லியதும் அந்த ““ர்ர்ரூரூம்ம்ம்!….ர்ர்ரூரூம்ம்ம்” சத்தம் உச்சஸ்தாயிக்குப் போய், அறைக்குள் அங்குமிங்கும் தாறுமாறாய் ஒலித்தது.
சட்டென மேஜை மேலிருந்து “ர்ர்ரூரூம்ம்ம்!….ர்ர்ரூரூம்ம்ம்” என்றது.
அடுத்த விநாடியே கதவருகே “ர்ர்ரூரூம்ம்ம்!….ர்ர்ரூரூம்ம்ம்”
சட்டென்று கட்டிலுக்கடியில்“ர்ர்ரூரூம்ம்ம்!….ர்ர்ரூரூம்ம்ம்”
ஜன்னலுக்குப் பக்கத்தில்….மேஜைக்கு அடியில்….சீலிங் ஃபேன் மேல்…
“ஏதோ ரொம்ப முக்கியமான சமாச்சாரம் இருக்கணும்…இல்லேன்னா இப்படித் துடிக்க மாட்டான்” தனக்குத்தானே பேசிக் கொண்டு கட்டிலை விட்டு இறங்கினான்.
தன்னுடைய ஒய்ஜா போர்டை எடுத்து வைத்து அதன் முன் அமர்ந்து ஆவி நண்பரைத் தொடர்பு கொண்டான்.
(தொடரும்)