மாண்புமிகு மாணவனாகிய மகன் | கவி செல்வ ராணி
சென்னை பனிமலர் மருத்துவ கல்லூரியில் MBBS படிக்கும்
R.S.B. மிகன் என் மகன் கிட்ட இருந்து அழைப்பு வந்துச்சி, போனை எடுத்து “தங்கம் சொல்லுப்பா எப்படி இருக்க? சாப்பிட்டியா?” ன்னு கேட்டேன்.
“”ம்..சாப்பிட்டேன்ம்மா” என்ற போதே மகனின் குரலில் சிறு மாற்றம் உணர்ந்தேன்.
“தங்க புள்ள… என்னப்பா ஒரு மாதிரி பேசுற? உடம்பு சரியில்லயா?” ன்னு கேட்டேன்.
“அதெல்லாம் எதுவுமில்லம்மா மிஸ் யூ ம்மா.” ன்னு குரல் தழுதழுத்துச்சி.
“என்னப்பா? அம்மா கிட்ட சொல்லு, ஏன் ஒரு மாதிரி பேசுற” ன்னு கேட்டேன்.
“இன்னைக்கி யூட்ரஸ் பத்தி கிளாஸ் எடுத்தாங்க பெண்ணா பொறந்தா இவ்வளவு கஸ்ட்டம் இருக்கும்ன்னு இப்பதாம்மா தெரிஞ்சிக்கிட்டேன்.
எவ்வளவு வலிய தாங்குறீங்க ஆனாலும் வெளியில காமிச்சிக்காம வாழ்றீங்களே எப்படிம்மா? பாப்பாவ நினைச்சி பார்த்தேன் அவளும் பாவம் தானேம்மா ?
புரபசர் பாடம் நடத்த நடத்த நான் தேம்பி அழவே ஆரம்பிச்சிட்டேன்ம்மா. பெண்கள் மேல எனக்கு ரொம்ப மரியாதையும், பாசமும் வந்திருச்சிம்மா” ன்னு சொல்லும்போதே நானும் கண் கலங்கிட்டேன்.
முதல்ல பனிமலர் மருத்துவ கல்லூரி பேராசிரியருக்கு தான் நன்றி சொல்லனும். மாணவர்களின் மனதை மாற்றி அவர்களை உயர்வான சிந்தனைக்கு கூட்டி செல்ல ஆசிரியர்களால் மட்டுமே சாத்தியம்
ஒரு வகையில என் மகன் கண்கலங்கினத கேட்டு துடிச்சி போனாலும் என் புள்ள பேசுனத கேட்க கேட்க இன்னும் கொஞ்ச நேரம் மகன் அழட்டுன்னு மனசு சொன்னுச்சி.
உலகத்துலயே தன்னோட மகன் அழுதத கேட்டு ஆனந்தப்பட்ட தாய் நானா தான் இருப்பேன்
என்னோட மகிழ்ச்சியெல்லாம் ஓண்ணே ஒண்ணு தான். என் மகன்கிட்ட மனிதம் இருக்கு, என் மகன் பெண்களை மதிப்பான், என் மகன் கிட்ட நோய்ன்னு வர பெண்களை தாயன்போட பார்த்துக்குவான். அதோட அவனுக்கு வர போற பொண்டாட்டிய நிச்சயமா நல்லா பார்த்துக்குவான்….
இதைவிட வேறென்ன வேணும் பெத்தவளுக்கு?
– கவி செல்வ ராணி, திருச்சி.