சினிமாவே வேணாம்! -டைரக்டர் எஸ்.பி.முத்துராமன்
சினிமா உலகில் புகழ் மற்றும் பண போதை தலைக்கேறாத வெகு சிலரில் டைரக்டர் எஸ்.பி.முத்துராமனும் ஒருவர். எளிமை, தன்னடக்கம்! இனிய பழக்க வழக்கங்கள்! போட்டி – பொறாமை – சதி – புறங்கூறல் – கவிழ்த்தல் இன்றி இவரிடம் வியக்கும் விஷயங்கள் ஏராளம்.
ஏவி.எம்.ம்முடன் ஐக்கியமாகி ரஜினி 25+ கமல் மற்றும் பிற முன்னணி நாயகர்களையும் இயக்கி இருந்தாலும் தன்னை முன்னிலைப் படுத்தி கொள்ள ஆசைப்படாதது இவரது பலம். பலவீனமும்கூட.!
பகட்டின்மை, பிறர் நோகும்படி பேசாமை, வலிய சென்று உதவுதல், என்றும் எல்லோருக்கும் நல்லவராக இருத்தல் இவரது சிறப்பு அம்சங்கள்.
ஒரு முறை பழகிவிடடால் -மறக்க மாடடார்.கல்யாணம் -காட்சி -நிகழ்வுகள் என்று கலந்துக்கொண்டு நட்புக்களின் மதிப்பை உயர்த்துபவர்.
ஊரில் இருந்தால், போதும் எனது சார்பு விழாக்கள் அனைத்திற்கும் வந்து வாழ்த்திவிடும் பேருள்ளம் கொண்டவர்.
டிவி வரதராஜன் அவர்களின் முலம் இவர் எனக்கு அறிமுகம்.தேசிய விருது பெற்ற நடிகர் விக்ரமுக்கு நாங்கள் குவைத்தில் எடுத்த பாராட்டு விழாவிற்கு வந்தவர் –
“எனக்காக அனாவசிய செலவு வேணாம். உறவினர் வீட்டிலேயே தங்கிக்கிறேன்” என்று ரொம்ப கராராக சொல்லிவிடடார்.
தனக்குத் தயாரிப்பாளர், கதாசிரியர், நடிகர்கள், மனைவி எல்லோரும் நல்லபடியாக அமைந்ததால் லட்சிய வாழ்வு கிடைத்தது என்று பெருமைபடுகிறார்.
“சினிமா என்பது நித்ய கண்டம்-பூர்ண ஆயுசு போன்றது. என்னதான் திருப்தி இருந்தாலும் சினிமா சினிமா என்று எனது வாழ்வு தொலைந்துப் போயிற்று . இளமையை தொலைத்தேன். குடும்பத்தை மறந்தேன். என் மனைவிக்கு நான் நல்ல கணவனாக இருந்தேன் என்று சொல்ல முடியாது.
அதனால் என் பிள்ளைகளுக்கு சினிமா வேணாம் என்று வேறு துறைகளுக்கு அவர்களை திருப்பி விட்டேன்.
தொழில் – லட்சியம் – சம்பாத்யம் முக்கியம் என்றாலும் கூட அதைவிட குடும்பம் – மனைவி – பிள்ளைகள் முக்கியம். அதை நம்மில் பலரும் உணர்வதில்லை. உள்ளதை விட்டுவிட்டு எதற்கோ பறக்கிறோம்!
என் மனைவிக்குத் தேவைப்பட்ட போது நான் அவருக்கு நேரம் ஒதுக்கவில்லை. “சினிமா உலகில் நீண்ட நாள் நிலைக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட வயதுக்கப்புறம் உன்னுடனேயே இருப்பேன், பாண்டியன் படம் முடிந்து உன்னை சிங்கப்பூருக்கு அழைத்துப் போகிறேன் “ என்று அவளிடம் சொல்லியிருந்தேன்.
ஆனால்… அது முடியும் முன்பே அவளது வாழ்வு முடிந்துவிட்டது!
மனைவிக்குத் தேவைப்பட்ட போது நான் அவளுடன் இல்லாமல் பிசியாயிருந்தேன். ஆனால் இப்போது துணை தேவைப்படும் போது அவள் என்னுடன் இல்லை.
தனியாய் பட்டமரமாக காய்கிறேன். பணம் எப்போது வேண்டுமானாலும் வரும் – போகும். இளமையும் குடும்பமும் அப்படியில்லை. வாழ வேண்டிய வயதில் வாழுங்கள்!”
எஸ்.பி.எம்.உருகுகிறார். உருக்குகிறார்.
-என்.சி.மோகன்தாஸ் முகநூல் பக்கத்திலிருந்து…