விபத்தில்லா தீபாவளி

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பாதுகாப்பான  தீபாவளி கொண்டாட  தேவகோட்டை  தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. பள்ளி தலைமையாசிரியர்
லெ.சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
 

 மாவட்ட உதவி தீயணைப்பு  அலுவலர் தாமோதரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், விபத்தில்லா தீபாவளி மற்றும் தீ விபத்து ஏற்படாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் தீ விபத்து ஏற்பட்டால், முதலுதவி சிகிச்சை குறித்து விளக்கினர். பள்ளி தலைமையாசிரியர் லெ.சொக்கலிங்கம் மற்றும் தேவகோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ரவிமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி ஆசிரியர்கள் ஸ்ரீதர், கருப்பையா, செல்வமீனாள், முத்துலெட்சுமி ஆகியோர் நிகழ்வுக்கான ஏற்பாடுகளைச் செய்து இருந்தனர்.

மாவட்ட  உதவி தீயணைப்பு அலுவலர் மாணவர்களிடம் பாதுகாப்பான தீபாவளி குறித்து கூறுகையில், எரியும் பொருள்கள் ஏ, பி, சி, டி என நான்கு வகையாகப் பிரிக்கப்படுகிறது. இதில் ‘ஏ’ கிளாஸ் நெருப்பு என்பது எரிந்து சாம்பல் ஆவது. தண்ணீர் ஊற்றி அணைக்கலாம். மற்ற பிரிவுகளை மணல், தண்ணீர், எலக்ட்ரிகல் ஸ்விட்சுகளை அணைப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

 மாணவர்கள்  பட்டாசுகளை கவனமுடன் எடுத்துச் செல்ல வேண்டும். வீட்டின் சமையல் அறையிலோ, மொத்தமாகவோ குவித்து வைத்திருக்கக் கூடாது. வீதிகள், பஸ்  நிலையப் பகுதி, கியாஸ் குடோன், பெட்ரோல் பங்க் அருகில் பட்டாசு வெடிக்கக் கூடாது. குடிசை உள்ள பகுதிகளில் பட்டாசு வெடிக்கக் கூடாது.

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் அருகில் சென்று பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. குழந்தைகள் பட்டாசுகளை சட்டைப் பையில் வைத்திருக்க அனுமதிக்கக் கூடாது. பட்டாசுகளை வெடிக்கும்போது ஒரு வாளி தண்ணீர் வைத்துக்கொண்டு, பாதுகாப்புடன் வெடிக்கலாம். வெடிக்காத பட்டாசுகளை கையில் தொடவோ காலால் மிதிக்கவோ கூடாது.

திறந்தவெளியில்தான் பட்டாசு வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும் போது ஏற்படும் தீ காயத்திற்கு குளிர்ந்த நீர் ஊற்றி பின் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.

இவ்வாறு  தீயணைப்புத் துறையினர் பிரசாரம் செய்தனர். பட்டாசு வெடிக்கும்போது செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை குறித்து விழிப்புணர்வு நோட்டீஸ் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும் வடகிழக்குப் பருவ மழை தொடங்கியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வெள்ள பாதிப்புகளிலிருந்து காத்துக்கொள்வது மற்றும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்தும் பள்ளி மாணவர்களுக்குச் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. மாணவர்களும் தங்களது சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெற்றனர்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...