கொல்லைப்புற வழியாக அதிகாரத்துக்கு வர நினைக்கும் நடிகர் விஜய்

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் நடிகர் விஜய் மக்கள் இயக்கம் பெரிய அளவில் வெற்றியைப் பெற்றிருக்கிறது. இதைத் தொடர்ந்து வெற்றி பெற்ற 129 ஊராட்சித் தலைவர்களையும் அழைத்து, வாழ்த்துத் தெரிவித்ததோடு அவர்களுடன் அமர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டது ஊடகங்களில் வைரலானது.  அது மட்டுமல்லாமல் டிசம்பர் மாத இறுதிக்குள் நடக்கவிருக்கும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளாட்சித் தேர்தலிலும் அதிக இடங்களில் வெற்றிபெறவேண்டும் அதனால் பூத் கமிட்டிகளை வலுப்படுத்த நடிகர் விஜய் அதிரடி உத்தரவு பிரப்பித்திருக்கிறார். அதற்காக ஒவ்வொரு வார்டிலும் ஐந்து பேர் குழு நியமனம் செய்யவுள்ளார்.

தோனியின் ஸ்டைலில் விஜய்

விஜய் ஒரு முழு நேர நடிகர். இன்று அதிக பட்ஜெட்டில் எடுக்கும் படங்களில் அதிக சம்பளம் வாங்கி நடிக்கும் நடிகர் விஜய். மக்கள் பணியில் இன்னும் ஒரு துளி கூட இறங்கவில்லை விஜய். தன் இயக்கத்துக்கென்று ஒரு கொள்கை, கோட்பாடு வகுத்துக்கொள்ளாமல் மக்கள் பணியில் இறங்காமல், அணுக்கழிவு அபாயம் பற்றிப் பேசாமல், தூத்துக்குடி துப்பாக்கிச் சம்பவம் பற்றிப் பேசாமல், ஏன் சாத்தான்குளம் காவல்துறையால் கொல்லப்பட்ட இரண்டைக் கொலை பற்றியும் பேசாமல் அரசியலுக்கு வருவதற்கான முயற்சிகளைச் செய்துவருகிறார். அதாவது படத்தில் நடிக்கும் வருமானமும் போகக்கூடாது. அரசியலிலும் ஜெயிக்கவேண்டும். அதாவது ஒரு கல்லில் இரண்டு மாங்காய்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெயலலிதா, விஜயகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்கள் எல்லாம் சினிமா வாய்ப்பு குறைந்தவுடன் அரசியலுக்கு வந்தார்கள். மக்களிடம் நேரடியாகக் கொள்கை பேசினார்கள். கட்சி கட்டினார்கள். தேர்தல் களத்தில் நின்றார்கள். ஜெயித்தார்கள், தோற்றார்கள்.

புஸ்ஸி ஆனந்துடன் விஜய்

ஆனால் விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவராகத் தன்னை லெட்டர் பேடு மூலமே அறிவித்துக் கொண்டு தனக்குக் கீழே புஸ்ஸி ஆனந்த் என்கிற முன்னாள் எம்.எல்.ஏ.வை வைத்துக்கொண்டு அரசியல் ஆட்டம் ஆடத் தொடங்கி விட்டார் நடிகர் விஜய்.

விஜய் மக்கள் இயக்கத்துக்கு இது முதல் தேர்தல் அல்ல. விஜய் ரசிகர்கள் ஏற்கெனவே 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் சுமார் 400 இடங்களில் போட்டியிட்டு 128 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

தற்போது தமிழகத்தில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6, 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. `இந்தத் தேர்தலில் நாம் போட்டியிட வேண்டும்’ என விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் அகில இந்திய தலைவர் புஸ்ஸி ஆனந்திடம் கோரிக்கை வைத்தனர்.

அதைத் தொடர்ந்து செப்டம்பர் 17-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று பனையூரில் உள்ள அலுவலகத்தில் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட அளவிலான 20 முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்ட அந்தக் கூட்டத்தில், “கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தளபதியின் பெயரைச் சிலர் தவறாகப் பயன்படுத்திவிட்டார்கள். இந்த முறை அப்படி எந்தத் தவறும் நடந்துவிடக் கூடாது. அதனால் இந்தத் தேர்தலில் அனைவரும் சுயேச்சை வேட்பாளர்களாகக் களமிறங்குங்கள்” என்று கூறிய புஸ்ஸி ஆனந்த், விஜய்யின் பெயர், புகைப்படம், இயக்கக் கொடியைப் பயன்படுத்திக்கொள்ளவும் அனுமதி கொடுத்திருக்கிறார்.

அதில் உற்சாகமான விஜய் ரசிகர்களும் நிர்வாகிகளும் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களிலும், இடைத்தேர்தல் நடக்கும் மாவட்டங்களிலும் 159 இடங்களில் களமிறங்கினார்கள். அதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும் 75 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

`தேர்தலில் வெற்றி பெறுபவர்களுக்குத் தளபதி விஜய்யிடம் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது’ என்று கூறப்பட்டிருந்ததால் இயக்கம் செய்த நற்பணிகள், தேர்தல் வாக்குறுதிகள், அனல் பறக்கும் பிரசாரங்கள் என அரசியல் கட்சிகளுக்கு நிகராகத் தேர்தல் களத்தில் சுறுசுறுப்பாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர். விஜய் ரசிகர்கள்.

மொத்தம்159 இடங்களில் போட்டியிட்டு  129 இடங்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் வெற்றி பெற்றிருக்கின்றனர். 108 இடங்களில் மக்கள் வாக்குகள் மூலமும், 13 இடங்களில் போட்டியின்றியும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் விழுப்புரம் மாவட்டம், வானூர் ஒன்றியம், எறையூர் பஞ்சாயத்து பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கு எல்.சாவித்திரி போட்டியிட்டு ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்றிருக்கிறார்.

அதன் பிறகுதான் 25-10-2021 அன்று அகில இந்திய தலைமை, தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்கிற பெயரில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில்

“ஊரக உள்ளாட்சித் தேர்லில் தளபதி விஜய் மக்கள் இயக்கத்திற்கு வாக்களித்த தமிழக மக்களுக்குத் தளபதி அவர்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைப் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

வெற்றி வாகை சூடிய மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 129 மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் தளபதி அவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். இவர்கள் அனைவரும் தமிழக மக்களின் அடிப்படை பிரச்சினைகளைத் தீர்க்க மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்குக் கொண்டுசென்று அதனைத் தீர்க்கும் நல்வாழ்வுப் பணியினை தளபதி அவர்களின் உத்தரவுப்படி செவ்வனே செயல்படுத்தி மக்கள் பணிகளைத் தொடருவார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்” என்ற அறிக்கையில் நடிகர் விஜய் படம் போட்ட இந்த அறிக்கையில் இவண் புஸ்ஸி என்.ஆனந்து, பொதுச்செயலாளர் என்று மட்டும் கையொப்பம் இடப்பட்டுள்ளது. விஜய் பெயரில் அறிக்கை இல்லை. இந்த லெட்டர்பேடில் வேறு எந்த நிர்வாக உறுப்பினர்களின் பெயரும் இடம் பெறவில்லை.

உள்ளாட்சித் தேர்தலில் விஜய் குரல் கொடுக்கவில்லை, பிரசாரத்துக்கும் போகவில்லை. ஆனால் தேர்தலில் சுயேச்சையாகத் தேர்தல் களத்தில் நிற்கிறார்கள். 80 சதவிகிதம் ஜெயிக்கிறார்கள். நாட்டு மக்களுக்கு என்ன சொல்ல வருகிறார் விஜய்? யார் பேச்சைக் கேட்டுக்கொண்டு அரசியல் ஆட்டம் ஆட்டுகிறார்? நடந்து முடிந்த எல்லாமே விஜய்யின் மைன்ட் வாய்ஸ்தான். நேரடியாக இறங்கவில்லை. லாபம் வந்தால் நமக்கு நஷ்டம் வந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு. நல்லா இருக் குஇந்தக் கணக்கு.

ஒரு இயக்கத்தின் தலைவர், மக்கள் போராட்டத்தில் சிறை சென்றிருப்பார். அல்லது அவர் உடல் நிலை காரணமாக மருத்துவமனையில் இருப்பார். அங்கிருந்து அவர் படம் அல்லது வாய்ஸ் மூலம் அவரின் கொள்கைகள் கோட்பாடுகள் மூலம் அவரின் பிரதிநிதிகள் மக்களிடம் சென்று  வாக்குக் கேட்பார்கள். இதுதான் நடைமுறை. ஆனால் ஒரு இயக்கத்தின் தலைவரான விஜய் கட்சியின் பிரபலமாக நடித்துக்கொண்டிருப்பார். தன் கட்சிக்காரர்களாக பிரசாரத்துக்கு வரமாட்டார். கொள்கை களைப் பேசமாட்டார், மக்கள் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கமாட்டார், போராட மாட்டார், மக்கள் இன்னலுறும்போது நிதி வழங்கமாட்டார். ஆனால் தன் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரிவிலக்குப் பெற கோட்டுப் படி ஏறுவார். நீதிபதி நியாயத்தைக் கேட்டால் தீர்ப்பை மாற்றச்சொல்லி மன்றாடுவார்.

நடிகர் விஜயை முதல்வராக சித்திரித்து ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சுவரொட்டியில் 2031ல் ஜோசப் விஜய் எனும் நான் உண்மையான நம்பிக்கையும், மாறா பற்றும் கொண்டிருப்பேன் என உறுதி கூறுகிறேன் என பிரமாணம் எடுப்பது போன்ற வாசகங்களுடன்  விஜய் ரசிகர்கள் பதிவு செய்துள்ளனர்.  அந்த சுவரொட்டியில் நடிகர் விஜய் முதலமைச்சராக பதவியேற்பது போல சித்தரித்து காட்டியுள்ளது விஜய் ரசிகர்களின் சேட்டையின் உச்சம் எனலாம்.

திருச்சியில் நாளைய முதல்வரே என்று விஜய்க்கு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்த நிலையில், ரசிகர் மன்ற நிர்வாகிகளை விஜய் சந்தித்துள்ளார்.

இளைஞர்களைச் சீரழிக்கும் வியாபார சினிமாவில் கதாநாயகனாக நடித்து தமிழக இளைஞர்களை சினிமா எனும் கவர்ச்சியில் இழுத்து அவர்களின் பின்னால் நின்றுகொண்டு அவர்களைத் தேர்தலில் நிற்கவைத்து தன் செல்வாக்கைப் பெற நினைக்கும் விஜய் போன்ற தலைவர்கள் நாட்டில் தலையெடுத்தால் என்னாகும் என்பதை இன்றைய தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

விஜய் மக்கள் இயக்கம் மாவட்ட அளவில் மாணவர் அணி, இளைஞர் அணி, மகளிர் அணி, தொண்டர்கள் அணி, தொழிற்சங்க அணி, விவசாய அணி என ஆறு அணிகள் உள்ளன. தற்போது வக்கீல்கள் அணி அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. கொரோனா தொற்று பரவுவதற்கு முன்பு சுமார் 110 சட்டமன்றத் தொகுதிகளுக்கான பூத் கமிட்டிகளின் விவரங்களை விஜய் நேரில் சரி பார்த்தார். விரைவில் மீதமுள்ள தொகுதிகளின் பூத் கமிட்டி விவரங்களையும் சரி பார்ப்பார் என்கிற தகவலும் வருகிறது.  

ஆக தற்செயலாக விஜய் ரசிகர்கள் தேர்தலில் நிற்பது நடக்கவில்லை. திட்டமிட்டே எதிர்காலத்தில் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் செயல்படுகிறார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

தான் நடிகராகவே சம்பாதித்துக்கொண்டிருக்க வேண்டும். அரசியலில் முகம் காட்டக்கூடாது. அதனால் பொருளிழப்பு ஏற்பட்டுவிடக்கூடாது. என்ற உயர்ந்த எண்ணத்தால்தான் இப்படி கண்ணாமூச்சி அரசியல் ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கிறார் நடிகர் விஜய்.

நடிகர் விஜய்யைவிட அரசியல் தனக்கு ஒத்துவராது என்று சினிமாவில் கோடி கோடியாகச் சம்பாதிக்கச் சென்று விட்ட ரஜினிகாந்த் எவ்வளவோ மேல். நடிகர் விஜய் தன் தாய் தந்தைக்கும் உண்மையாக இல்லை. தன் நாட்டு மக்களுக்கு உண்மையாக இல்லை. தன் ரசிகர்களுக்கும் உண்மையாக இல்லை. நடிகர் விஜய் இப்படி செய்துகொண்டிருப்பது எதிர்காலத்தில் இளைஞர்கள் மத்தியில் மிகப் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பது நிச்சயம். விழித்தெழு இளைஞர்களே.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...