
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு. தி. வேல்முருகன் அவர்கள் இன்று (01-11-2021) வெளியிட்டுள்ள அறிக்கை.
வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டு விவகாரத்தில், உயர் நீதிமன்ற மதுரைகிளை உத்தரவை ரத்து செய்யக்கோரி, தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்து, வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த உத்தரவு சமூகநீதிக்கு எதிரானது.
கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியா்களுக்கு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 விழுக்காடு இடஒதுக்கீட்டில், 10.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கி, கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் ஆட்சிக்கு வந்த மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு, அச்சட்டத்தை அமல்படுத்த உத்தரவிட்டது.
இந்த உத்தரவின்படி, வன்னியர்களுக்கு கிடைத்த இந்த 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு, அந்தச் சமுதாயத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதோடு, மிகப்பெரிய சமுதாயம் வளர்ச்சி அடைய வழிவகுக்கும்.
இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு என்பது, சாதாரணமாக கிடைத்ததில்லை. ஏறக்குறைய 35 ஆண்டுகளுக்கு மேலான கோரிக்கைக்கும், போராட்டத்திற்கும் கிடைத்த பலன்.
குறிப்பாக, தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 விழுக்காடும், மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 2 விழுக்காடும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, 1987 செப்டம்பர் மாதம் மாபெரும் போராட்டம் நடைபெற்றது.

வன்னியர் அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தில், போராட்டக்காரர்களை அடக்குவதற்கு தமிழ்நாடு காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 21 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மேலும், கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட சுமார் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வன்னியர் சொந்தங்கள், காவல்துறையினரின் பல்வேறு சித்ரவதைக்கு உள்ளாகினர்.
இப்போராட்டத்தின் விளைவாகவே, தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர் சமுதாயம் உட்பட மொத்தம் 108 சமுதாயத்திற்கு 20 விழுக்காட்டை, 1989-ல் முதல்வராக இருந்த கலைஞர் அவர்கள் ஒதுக்கீடு செய்தார். ஆனாலும், வன்னியர் சமுதாய மக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், இந்த ஒதுக்கீடு போதுமானதாக இல்லை.
இதனால், தொடர்ந்து வன்னியர் சொந்தங்களின் கோரிக்கை மற்றும் போராட்டங்களால், முந்தைய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படை யில், வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள சீர்மரபினர் மற்றும் பிற பிரிவினருக்கு முறையே 7 மற்றும் 2.5 விழுக்காடும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
இப்படி, வன்னியர் சொந்தங்களின் தொடர் போராட்டத்திற்கும், தியாகத்திற்கும் கிடைத்த 10.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வன்னியர்களுக்கான 10.5 இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அதே வழக்கில் 10.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்திருப்பது சமூகநீதிக்கு எதிரானது.
வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீட்டால் மற்ற பிரிவினருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதனையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், சிலர் சுயநலத்தோடு தொடர்ந்த வழக்கில், இப்படியான தீர்ப்பை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கியிருப்பது, ஒட்டுமொத்த வன்னியர் சமுதாயத்திற்கும் வேதனை அளிக்கிறது.

ஏற்கனவே, வன்னியர்களுக்கான 10.5 இட ஒதுக்கீட்டின்படி, தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு மற்றும் கல்வியில் இளைஞர்களும், மாணவர்களும் தேர்வு செய்யப்பட்டுவரும் நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவால், அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதோடு, வன்னியர் சமூகத்திற்கான வளர்ச்சி கேள்விக்குறியாகியுள்ளது.
எனவே, வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டு விவகாரத்தில், உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை ரத்து செய்யக்கோரி, தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்து, வன்னியர்களுக் கான இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த வேண்டும்.
சாதிவாரி கணக்கெடுக்க ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதோடு, அதுவரை வன்னியர் களுக்கான 10.5 இட ஒதுக்கீடு முறையைப் பின்பற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்குத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
