பேய் ரெஸ்டாரெண்ட் – 16 | முகில் தினகரன்
கண்ணாடி வழியே கான்ஃப்ரன்ஸ் ஹாலுக்குள் அமர்ந்திருக்கும் சிவாவைப் பார்த்து அவனுடைய அண்ணன் கோவிந்தன் அரண்டு போய் பிதற்றினான். “சார்…சத்தியமாய் அவன் செத்துப் போயிட்டான் சார்…அவனைக் குழியில் போட்டுப் புதைச்சு…காரியங்களெல்லாம் செஞ்சவன் நான் சார்”
“சரி…போகலாம்..”என்று சொல்லி அந்த கோவிந்தனை அங்கிருந்து நகர்த்திச் செல்ல அவர்கள் முயல, “சார்…ஒரு தடவை…ஒரே தடவை…நான் அவனைப் பார்த்துப் பேசிட்டு வர்றேன் சார்” கெஞ்சினான்.
“கோவிந்தன்!…மொதல்ல ஒண்ணு நல்லாப் புரிஞ்சுக்கங்க!…அங்க உட்கார்ந்திட்டிருக்கறது…உங்க தம்பி சிவா அல்ல!…உங்க பங்காளி சுடலை” என்றான் திருமுருகன்.
“என்னை என்ன குருடன்னு நெனச்சிட்டீங்களா?…உள்ளார சிவா உட்கார்ந்திட்டிருக்கான்…நீங்க பாட்டுக்கு சுடலைனு சொல்றீங்க?…என்னய்யா கூத்து நடக்குது இங்கே?…இந்த மாதிரி “ஒரு பேய் ஓட்டலுக்கு வேலைக்குப் போறேன்!”னு சிவா சொன்னப்ப “வேண்டாம்டா சாமி”ன்னு தலையால அடிச்சுக்கிட்டேன்…பயபுள்ள கேட்காம வந்தான்!…இப்ப என்னென்னமோ ஆகுது…எதுவுமே புரிய மாட்டேங்குது” புலம்பினான் கோவிந்தன்.
“உங்களுக்குப் புரியற மாதிரி தெளிவா சொல்றேன்…மொதல் ரூமுக்குப் போகலாம் வாங்க”
ஆனந்தராஜின் அறைக்குள் வந்ததும், திருமுருகன் ஆரம்பித்தான். “இங்க பாருங்க கோவிந்தன்…நான் சொல்ற விஷயத்தை நம்பற கொஞ்சம் கஷ்டம்தான்…ஆனா…அதுதான் உண்மை!…நான் விலாவாரியா சொல்லி உங்களைக் குழப்ப விரும்பலை…ஒன் லைன சொல்லிடறேன்!…நம்ம சிவா சுடலைய கட்டைல அடிச்சிருக்கான்…பதிலுக்கு சுடலை சிவாவைக் குத்தியிருக்கான்…ரெண்டு பேரும் உசுரு போகற கடைசி நேரத்துல ஒருத்தரையொருத்தர் கூர்ந்து பார்த்திட்டே செத்திருக்காங்க!…இவன் கண்ணுல அவனும்…அவன் கண்ணுல இவனும் நல்ல பதிஞ்சிருக்காங்க!…அப்பத்தான் அந்த அதிசயம் நடந்திருக்கு…ரெண்டு பேரோட ஆன்மாவும் இடுகாட்டுல குழி மாறி இறங்கி…வெளிய வந்திருக்கு”
“ஏங்க…இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு?” கொவிந்தன் சலித்துக் கொள்ள,
“ஆயிரம் வருஷத்துக்கு ஒரு தரம்…லட்சம் வருஷத்துக்கு ஒரு தரம் இப்படி சரீர மாற்றம் ஆன்மாவுக்கு நிகழுமாம்!…அதனாலதான் சொல்றோம்…இங்க சிவா உருவத்துல வந்திருக்கறது சுடலை!…அவன் உங்களைப் பார்த்தா பகைல ஏதாச்சும் பண்ணிடுவானோ?ன்னுதான் நான் சிவாவை நேர்ல பார்க்க விடலை!…போதுமா?”
சில நிமிடங்கள் தீவிரமாய் யோசித்த அந்த கோவிந்தன், “அப்ப அங்க உயிரோட இருக்கற சுடலைக்குள்ளார இருக்கறது…எங்க சிவாவா?” கேட்டான்.
“எக்ஸாட்லி கரெக்ட்!…நீங்க அவன் கூடப் பேசிப் பாருங்க…கண்டுபிடிச்சிடுவீங்க” என்றான் முருகன்.
“எங்க போய் பேசறது?…அவனைத்தான் பொதைச்சிட்டோமே?”
“அவந்தான் குழியைப் பொளந்துக்கிட்டு வெளிய வந்திட்டானே?…” சரியான பதிலைச் சொன்னான் ஆனந்தராஜ்.
“ஆனா அவன் இப்ப ஊருக்குள்ளார இல்லையே?” என்று கோவிந்தன் சொல்ல,
“எப்படி…எப்படிங்க ஊருக்குள்ளார வருவான்?…குழில போனவன் வெளிய வந்து உலாத்தினா ஊர்க்காரங்க விடுவாங்களா?…அதுவும் சுடலையாகவே இருந்தால் கூட அவன் பங்காளி கூட்டம் ஏத்துக்கும்…ஆனா இப்ப அவனுக்குள்ளார இருக்கறது சிவாவோட ஆன்மாவாச்சே?…கண்டு பிடிச்சிட்டாங்கன்னா….போட்டுத் தள்ளிட மாட்டாங்க?” விளக்கினான் முருகன்.
“அப்ப அந்த சுடலையோட இருப்பிடத்தைக் கண்டுபிடிச்சா…சிவா கூடப் பேசலாம்!…அப்படித்தானே?” கோவிந்தன் கேட்டான்.
“நிச்சயமா…கண்டு பிடிச்சதும் இங்க கூட்டிட்டு வாங்க!…ரெண்டு ஆன்மாக்களையும் மறுபடியும் சரியாப் பொருத்திடலாம்” என்றான் விஜயசந்தர்.
“அது சாத்தியமா?” சந்தேகத்தோடு கேட்டான் கோவிந்தன்.
“நீங்க மொதல்ல கூட்டிட்டு வாங்க…பண்ணிடலாம்” என்ற திருமுருகன் தனது மொபைல் எண்ணைக் கொடுத்து, “சுடலை கிடைச்சதும் இந்த நெம்பருக்கு போன் பண்ணுங்க” என்றான்.
முருகன் குறிச்சுக் கொடுத்த எண்ணை வாங்கிக் கொண்டு, “அப்பச் சரி…ஊருக்குப் போனதும் என்னோட ஒரே வேலை அந்த சுடலையைத் தேடுறதுதான்” சொன்னபடியே அந்த கோவிந்தன் எழ,
“ஒரு நிமிஷம் இருங்க கோவிந்தன்” என்று சொன்ன ஆனந்தராஜ், தன் பர்ஸிலிருந்து சில ஐநூறு ரூபாய் நோட்டுக்களை எடுத்து அவன் கையில் திணித்து…, “இந்தாங்க கோவிந்தன் இதைச் செலவுக்கு வெச்சுக்கங்க” என்றான்.
முதலில் “வேண்டாம்” என்று மறுத்த கோவிந்தன், பின்னர் வாங்கிக் கொண்டு வெளியேறினான்.
கதவருகே சென்றவனிடம், “உங்க ஊரு எந்த ஊரு கோவிந்தன்?” சத்தமாய்க் கேட்டான் திருமுருகன்.
“குளித்தலைக்கும்…திருச்சிக்கும் நடுவுல “மாயனூர் கிராமம்”
*****
“செம்பருத்தி…செம்பருத்தி பூவைப் போல பெண்ணொருத்தி…காதலனைத் தேடி வந்தாள் கண்ணில் வண்ண மையெழுதி…மேலும் கீழும் ஆடுகின்ற நூலிடைதான்…மீண்டும் மீண்டும் நான் படிக்கும் நூலகம்தான்!…”
அந்த மினி பஸ்ஸிற்குள் ஒலித்துக் கொண்டிருந்த பாடலை மற்ற பயணிகள் அனைவரும் ரசித்துக் கேட்டுக் கொண்டிருக்கையில், கோவிந்தன் மட்டும் வேறொரு சிந்தனையில் பயணித்துக் கொண்டிருந்தான். “சிவா உடம்புக்குள்ளார சுடலை ஆவி!…சுடலை உடம்புக்குள்ளார சிவா ஆவி!…சிவா அந்த கோயமுத்தூர் ஹோட்டல் பத்திரமா இருக்கான்!….அப்படின்னா சுடலை எங்கே?…”
“பர்ர்ர்ர்ர்ர்ர்” என்று கண்டக்டர் விஸிலடிக்க, மினி பஸ் வேகம் குறைந்து நின்றது.
“வில்லியனூர் டிக்கெட்டெல்லாம் இறங்குங்க” கண்டக்டர் கத்தியவுடன் அஞ்சாறு பேர் இறங்கினர்.
வாசலிலே பூசணிப்பூ வச்சுப்புட்டா…வச்சுப்புட்டா!…நேசத்திலே என் மனச தெச்சுப்புட்டா…தெச்சுப்புட்டா”
பாடல் தொடர்ந்தது.
அடுத்து மாயனூரில் மினி பஸ் நிற்க, “மாயனூரெல்லாம் இறங்குங்கப்பா”
கோவிந்தன் இறங்கினான்.
“சிவாவுக்குள்ளார சுடலை இருந்தும் சிவா மறக்காம தான் வேலை பார்த்த அந்த கோயமுத்தூர் ஹோட்டலுக்குப் போயிட்டான்!…அப்படின்னா..அந்த சுடலையும் தான் வேலை பார்க்கற இடத்துக்குத்தான் போயிருப்பான்” யோசித்தவாறே நடந்து கொண்டிருந்த கோவிந்தன் சட்டென்று நின்றான்.
“எனக்குத் தெரிஞ்சு…அந்த சுடலைப் பயல்….உறையூர்ல ஏதோ ஒரு தியேட்டர்ல டிக்கெட் குடுக்கற வேலைதான் பார்த்திட்டிருந்தான்!…அப்படின்னா அந்த தியேட்டருக்குப் போனா அங்கே நிச்சயம் அவன் இருப்பான்…கரெக்ட் இப்பவே போனாத்தான் பிடிக்க முடியும்”
வந்த பாதையிலேயே திரும்பி நடந்து, பேருந்து நிறுத்தத்தை அடைந்து, உறையூர் செல்லும் பஸ்ஸுக்காக காத்திருந்தான்.
“என்ன கோவிந்தா…இந்தப் பக்கம்?” பளீரென்று மின்னும் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையில் வந்த உள்ளூர் அரசியல்வாதி கேட்க,
“உறையூர் வரை போயிட்டிருக்கேன்” என்றான் கோவிந்தன்.
“உறையூர்ல என்ன ஜோலி?”
“சுடலையைப் பார்க்கப் போறேன்” என்று கோவிந்தன் சொன்னதும், “ஹா….ஹா…ஹா.”வெனச் சிரித்தான் அந்த அரசியல்வாதி.
அப்போதுதான் தான் தவறாய்ப் பேசி விட்டோம், என்கிற ஞாபகமே கோவிந்தனுக்கு வந்தது. சட்டென்று நாக்கைக் கடித்துக் கொண்டான்.
“என்னய்யா உளர்றே?…….சுடலை செத்து பத்துப் பதின்ஞ்சு நாளாச்சு…அவனைக் கொன்னதே உன் தம்பிதான்…”
என்ன சொல்லிச் சமாளிப்பதென்று புரியாமல், “அது வந்து…சுடலை வேலை பார்த்த தியேட்டருக்குப் போறேன்…அதைத்தான் சொன்னேன்” என்றான் கோவிந்தன்.
“ம்ஹும்….இதுல ஏதோ விஷயமிருக்கு” என்று மனசுக்குள் சொல்லிக் கொண்ட அரசியல்வாதி, “ஏம்பா கோவிந்து நம்மூரிலேயே மூணு தியேட்டர் இருக்கு…அடுத்து மாயனூர்ல ரெண்டு தியேட்டர் இருக்கு!…இதையெல்லாம் விட்டுட்டு…நாப்பது கிலோமீட்டர் தள்ளியிருக்கற உறையூர்ல போயி படம் பார்க்கப் போறியா நீ?” சந்தேகமாய்க் கேட்க,
“அட என்னண்ணே?…நானென்ன படம் பார்க்கப் போறேன்”ன்னா சொன்னேன்?…அந்த தியேட்டர்ல கேண்டீன் வெச்சிருக்கற ஆளு நமக்கு வேண்டப்பட்டவர்… “மாட்டுச் சந்தைக்குப் போகணும்…எனக்கு மாடு வாங்கற வெவரமெல்லாம் தெரியாது…நீ என் கூட வா”ன்னு அவரு ஒரு மாசமா கூப்பிட்டுட்டே இருக்கார்…அதான் போறேன்” என்று பொய் மேல் பொய்யை அடுக்கினான் கோவிந்தன்.
அப்போது உறையூர் பஸ் வந்து நிற்க, “அப்பாடா…தப்பிச்சோம்டா சாமி” என்று ஓட்டமாய் ஓடிப் போய் ஏறிக் கொண்டான் கோவிந்தன்.
ஐம்பது நிமிடங்களில் நாப்பது கிலோமீட்டர் தள்ளியிருந்த உறையூரில் கோவிந்தனை இறக்கி விட்டது அந்தப் பேருந்து.
பேருந்து நிலையத்திற்கு வெளியே வந்து அங்கிருந்த ஆட்டோக்காரரிடம் விசாரித்தான் கோவிந்தன். “தியேட்டர்ன்னு மொட்டையா சொன்னா எப்படிப்பா?…தியேட்டர் பேரைச் சொல்லு…இங்க அஞ்சு தியேட்டர் இருக்கு”
“ஆஹா…பங்காளி சண்டை காரணமா…சுடலை எந்த தியேட்டர்ல வேலை பார்த்திட்டிருந்தான்?னு தெரிஞ்சுக்காம போயிட்டோமே?…இப்ப என்ன சொல்லிக் கேட்கறது?”
“அது வந்து….தியேட்டர் பேர் தெரியலைங்க” ஆட்டோக்காரரிடம் வழிந்தான் கோவிந்தன்.
“போய்த் தெரிஞ்சிட்டு வந்து கேளு….சாவு கிராக்கி”
அங்கிருந்து நகர்ந்து சற்று தூரம் வந்தபின் ஞாபகம் வந்தது, “அட அவன் வேலை பார்த்த தியேட்டர் ஓனர் கூட இந்த தடவை எலக்ஷன்ல நின்னு தோத்துப் போனாரே…அதைச் சொல்லிக் கேட்டா தெரியுமே?”
வேகமாய்த் திரும்பி அதே ஆட்டோக்காரரிடம் வந்து, “அண்ணே எலக்ஷன்ல நின்னு தோத்துப் போனாரே?…அவரோட தியேட்டர்” என்றான்
“நாகவள்ளி தியேட்டர்!…இதோ இப்படியே நேரா ஒரு கிலோ மீட்டர் போனா…ரெண்டு பெட்ரோல் பங்க் அடுத்தடுத்து இருக்கும்…அதுக்கு நேர் எதிர்ல தியேட்டர்”
ஆட்டோக்காரர் காட்டிய திசையில் வேக வேகமாய் நடந்தான்.
பெட்ரோல் பங்க் கண்ணுக்குத் தெரிய எதிர்சாரியைப் பார்த்தான்.
“நாகவள்ளி திரையரங்கம்” என்ற பெரிய எழுத்துக்கள் அவன் கண்ணில் பட, வேகமாய் ரோட்டைக் கிராஸ் செய்து தியேட்டர் வாசலுக்கு வந்தான்.
கேட் பூட்டியிருந்தது.
கேட்டின் ஓட்டை வழியே உள்ளே பார்த்தான். அப்போது அவனருகே வந்த ஒருவன், “என்னப்பா…என்ன வேணும்?” என்று கேட்க,
“இங்க வேலை பார்க்கற சுடலையைப் பார்க்கணும்” என்றான் கோவிந்தன்.
“சுடலையா?…அவன் மொதலாளி பங்களாவுல அல்ல இருக்கான்?”
“அவன் இங்கதான் தியேட்டர்ல வேலை பார்க்கறதா சொன்னான்!” கோவிந்தன் சொல்ல,
“ஆமாம்…இங்கதான் டிக்கெட்டு குடுத்திட்டிருந்தான்…என்னமோ தெரியலை…பத்துப் பதினஞ்சு நாளைக்கு முன்னாடி வந்து “தியேட்டர்ல வேலை பார்க்கப் பிடிக்கலை…வேலையை விட்டு நின்னுக்கறேன்”னு சொன்னான்…அவனோட நல்ல பழக்கவழக்கங்கள் மொதலாளிக்கு ரொம்ப பிடிச்சிருந்ததால…அவனை விட மனசில்லை!…அதான் பங்களாவுக்குக் கூட்டிட்டுப் போய் அங்கியே அவுட் ஹவுஸ்ல தங்கிக்க இடம் குடுத்து வீட்டு வேலைக்காரன் ஆக்கிட்டாரு!”
“நீங்க யாரு?” கோவிந்தன் கேட்க,
“நான்…இந்த தியேட்டர் வாட்ச்மேன்!….உனக்கு சுடலையைப் பார்க்கணும்ன்னா…அதோ தெரியுது பார்….ரோஸ் கலர் பங்களா…அங்க போய்ப் பாரு” சொல்லி விட்டு காதில் செருகியிருந்த பீடியை எடுத்து வாயில் வைத்துப் பற்ற வைத்தான் அவன்.
நேரே அந்த ரோஸ் நிற பங்களாவிற்குச் சென்று, அங்கு கேட்டிலிருந்த நேபாளி வாட்ச்மேனிடம், “சுடலையைப் பார்க்கணும்” என்றான் கோவிந்தன்.
“ஆப் கோன்?” வாட்ச்மேன் சைகையோடு கேட்க, அதைப் புரிந்து கொண்ட கோவிந்தன், “அவனோட பங்காளி…கோவிந்தன்”
“ஏக் மினிட்” என்று சொல்லி அவன் பங்களாவுக்கு வெளியேயிருந்த பெரிய மரத்தைக் காட்ட, அங்கே போய் நிழலில் நின்று கொண்டான் கோவிந்தன். பங்களாவினுள் சென்ற வாட்ச்மேன் சில நிமிடங்களில் சுடலையோடு வந்து, மர நிழலில் நின்றிருந்த என்னைக் காட்டினான்.
வந்தவன் உண்மையிலேயே சுடலையாய் இருந்திருந்தால், கோவிந்தனைப் பார்த்ததும், கடுங் கோபமுற்று வேக வேகமாய் வந்து, அவன் இடுப்பில் எட்டி உதைத்துக் கீழே தள்ளி, வயிற்றின் மேல் அமர்ந்து, கோவிந்தனின் கழுத்தை நெறித்திருப்பான். ஆனால், இப்போது அதற்கு நேர் மாறாக, கோவிந்தனைக் கண்டதும், “அண்ணே” என்று கத்திக் கொண்டு ஓடி வந்து அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு, “அண்ணே நல்லாயிருக்கியாண்ணே?” என்று கேட்க,
சுடலை வாயிலிருந்து வந்த சிவாவின் குரல் கோவிந்தனை நெகிழச் செய்ய, ஆனந்தக் கண்ணீர் வடித்தான் அவன்.
ஆனால், அந்த ஆனந்தக் கண்ணீர் அடுத்த வினாடியே காய்ந்து போனது.
கோவிந்தனின் போறாத காலமோ என்னவோ?…அந்த சுடலைக்குள்ளிருந்த உண்மையான சுடலை சட்டென்று வெளிப்பட்டு விட, தன்னைப் பிடித்திருந்த கோவிந்தனின் கைகளை மின்னல் வேகத்தில் உதறி விட்டு, கோவிந்தனின் இடுப்பில் ஓங்கி உதைத்தான் சுடலை.
மல்லாக்க விழுந்த கோவிந்தனின் வயிற்றின் மீது அமர்ந்து அவன் கழுத்தை நெறிக்கத் துவங்கினான் சுடலை. கண்கள் மேலே செருக, சுவாசத்திற்காகத் திணறி, கைகளால் தரையைப் பிறாண்டினான் கோவிந்தன்.
சாலையில் சென்று கொண்டிருந்த டூவீலர்க்காரன், இந்தக் காட்சியைக் கண்ட்தும், பைக்கை நிறுத்தி விட்டு ஓடி வந்து, கோவிந்தன் வயிற்றின் மீது அமர்ந்திருந்த சுடலையின் கையை கழுத்திலிருந்து விடுவித்தான். சுதாரித்துக் கொண்ட கோவிந்தன், ஒரே உதறலில் அவனைத் தள்ளி விட்டு எழுந்து நின்றான்.
அந்த விநாடியில் சுடலைக்குள்ளிருந்த சிவா வெளிப்பட்டு, “அண்ணே…கோவிந்தண்ணே…சப்பிட்டீங்களாண்ணே?” என்று அன்பொழுகக் கேட்க,
அந்த டூ வீலர்க்காரன் முகம் பேயறைந்தது போலானது.
“என்னய்யா…ரெண்டு பேரும் என்னைக் கிறுக்கன் ஆக்கறீங்களா?” என்று கேட்டவாறே தன் பைக் அருகில் செல்ல, அவன் பின்னாலேயே சென்ற கோவிந்தன், “தம்பி…என்னையும் கூட்டிட்டுப் போ தம்பி” என்று கெஞ்ச,
“சரி உட்காருங்க!” என்று சொல்லி, கோவிந்தை ஏற்றிக் கொண்டு பறந்தான் அந்த டூ வீலர்க்காரன்.