அஷ்ட நாகன் – 11| பெண்ணாகடம் பா. பிரதாப்
-அமானுஷ்ய தொடர்-
நாகங்களில் ‘ஆதிசேஷன்’ அதீத சக்தி வாய்ந்தவர்.நாக இனமானது, காஷ்யபர்-கத்ரு தம்பதிகள் மூலம் தோன்றியது என்று புராணங்கள் கூறுகின்றன. கத்ரு, தனக்கு அதிசக்தி வாய்ந்த ஆயிரம் நாகங்கள் வாரிசாக பிறக்க வேண்டும் என்று தன் கணவரான காஷ்யப முனிவரிடம் வரம் பெற்றாள்.காஷ்யப முனிவரும், தன் மனைவி கத்ரு கேட்ட வரத்தை அளித்தார்.காஷ்யப முனிவரின் வரத்தின்படி, கத்ருவிற்கு ஆயிரம் நாகங்கள் வாரிசுகளாக பிறந்தன.கத்ருவின் முதல் நாக வாரிசு ‘சேஷன்’ என்னும் நாகமாகும்.நாக இனத்தில் முதன் முதலாக ‘சேஷன்’ என்ற நாகம் தோன்றியதால், சேஷன் என்னும் நாகத்தை நாகங்களின் முன்னோடியாக கருதி ‘ஆதிசேஷன்’ என்ற சிறப்புப் பெயரோடு அழைத்தனர்.சேஷன் என்ற சொல்லின் பொருள் ‘நாகம்’ ஆகும்.ஆதிசேஷன் சாம்பல் நிறத்தை உடைய ‘ஐந்து தலை’ நாகமாகும். ஐந்துதலை நாகத்தை கனவில் கண்டால், கனவு கண்ட நபர் நாக லோகத்தை சேர்ந்தவர் என்பது சூட்சுமமான பொருளாகும்.
– நாக சாஸ்திர ஏடுகளிலிருந்து.-
இன்றளவும் கொல்லிமலையை ‘கொல்லிப் பாவை’ காவல் காத்து வருவதாக இப்பகுதி மக்களால் ஆணித்தரமாக நம்பப்படுகிறது.
பாவை என்பது மண்ணாலும், மரத்தாலும்,தோலாலும் மட்டும் வேர் கிழங்காலும் செய்யப்படுவதாகும். விக்கிரமாதித்த மகாராஜனுக்கு, இந்திரனால் வழங்கப்பட்ட ரத்தின சிம்மாசனத்தில் உள்ள படிகளில் இருந்த பாவைகள் அவ்வப்போது தங்களுக்குள் பேசிக்கொள்ளும் என்று கூறப்படுகிறது. அதைப் போலவே,போகர் சித்தருக்கு ஒரு ‘பாவை’, உயிர் பற்றிய ரகசியத்தைக் கூறி, அபூர்வமான சில மூலிகைகளை காண்பிப்பதாக சித்த நூல்கள் கூறுகின்றன.
பாவை பொம்மைகள் பெரும்பாலும் குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்களாக பயன்படுகின்றன.தோலால் செய்யப்பட்ட பாவை ஆடும் ஆட்டத்திற்கு ‘தோற்பாவைக் கூத்து’ என்பர்.தோற்பாவைக் கூத்து ‘பொம்மலாட்டம்’ என்றும் கூறுவர்.சங்க இலக்கியங்களில் செய்வுறுப் பாவை,கடவுள் ஆக்கியப் பாவை,உயிர் பெய்தப் பாவை, ஈனாப் பாவை,அல்லிப் பாவை என பலவகைப் பாவைகள் இடம் பெற்றுள்ளதைக் காணலாம்.
கொல்லிப்பாவை எவர் கண்களுக்கும் புலப்படாது என்றும், தற்போது கொல்லிப்பாவை என்று கூறப்படும் தெய்வம் ‘எட்டுக்கை அம்மன்’ என்றும் கூறப்படுகிறது.
ஆர்ப்பரித்து கொட்டி தீர்த்துக் கொண்டிருந்த ஆகாய கங்கை அருவிக்கு மேல் பாம்பு போல வளைந்து நெளிந்து ஒரு ஒத்தையடிப் பாதை சென்றுக் கொண்டிருந்தது.
அந்த பாதையின் வழியாக ஏலக்காய் சித்தரை தரிசிப்பதற்காக முருகேசன் சென்றுக் கொண்டிருந்தான்.
வழி நெடிகிலும் ஆங்காங்கே சில பாம்பு புற்றுகள் கண்ணில் பட்டன்.முருகேசனின் கால் தடத்தின் அதிர்வுகளை உணர்ந்த சில நாகங்கள், தங்களது புத்திற்குள் இருந்து வெளிப்பட்டு தன் படம் விரித்த தலையை காட்டி ‘புஸ்ஸ்ஸ்’ என சப்தமிட்டது.
இவை சாதாரண வன நாகங்கள் மட்டுமல்ல ! இவை அனைத்தும் ஏலக்காய் சித்தரின் காவல் நாகங்கள்.இந்த நாகங்களின் அனுமதியின்றி எவராலும் ஏலக்காய் சித்தர் இருக்கும் திசை பக்கம் கூட செல்ல முடியாது.
முருகேசன் ஏலக்காய் சித்தரின் அன்புக்கு பாத்திரமானவன் என்பதால் வழி நெடுகிலும் இருந்த எந்த நாகமும் முருகேசனை தடுத்து நிறுத்தவில்லை !
முருகேசன் மனதில் ‘சித்தர் ஐயா,உங்களைப் பார்க்க தான் வரேன்.நீங்க தான் என்ன காப்பாத்துணும்’ என்று வேண்டிக் கொண்டான்.
ஏலக்காய் சித்தர் ஒன்றும் லேசுபட்ட மனிதர் இல்லை.அவர்,அன்னை கலைவாணி என்று போற்றப்படுகிற ‘சரஸ்வதி தேவி’யின் முழு அருளாசிகளை கைவரப் பெற்றவர்.சரஸ்வதி தேவியின் அருள் கடாக்ஷம் கிடைக்க வேண்டி, ஏலக்காய் சித்தர் அடிக்கடி ஏலக்காயை தன் வாயில் வைத்து அதக்கிக் கொண்டிருப்பார்.
ஏலக்காயை அவர் தொடர்ந்து பயன்படுத்துவதால் அவர் எண்ணிய விஷயமெல்லாம் தொடர்ந்து ஜெயமாகி வருகிறது. நாம் எண்ணிய காரியம் வெற்றி பெற வேண்டுமெனில்,நாம் குறிப்பிட்ட அந்த நபரை சந்திக்க செல்லும் போது, ஏலக்காயை மென்று தின்றுவிட்டு சென்றால் அந்த காரியம் சுபமாகும்.
சுமார் இரண்டரை மணி நேர பயணத்திற்கு பிறகு முருகேசன் ஏலக்காய் சித்தரின் குடிலை அடைந்தான்.
ஏலக்காய் சித்தரின் குடில் கோரைப் புற்களால் வேயப்பட்டிருந்தது.அவர் குடிசையில் இரண்டு கோரைப்பாய்,ஒரு மண் குடம்,இரண்டு மண் சட்டி மற்றும் ஒரு ஸ்படிக லிங்கம் இருந்தது.அந்த ஸ்படிக லிங்கத்தின் மீது சில வில்வ இலைகள் இருந்தன.அவரின் குடிலில் ஒரு பரண் இருந்தது.அந்த பரணில் தான் ‘நாக சாஸ்திர ஏடுகள்’ இருந்தது.அந்த நாக சாஸ்திர ஏடுகளை ஒரு ‘ராஜ நாகம்’ பாது காத்து வருகிறது.
நாக சாஸ்திர ஏடுகளிலில் தான் நாகங்கள் பற்றிய பல அரிய,அறிவியல் பூர்வமான தகவல்கள் மற்றும் கொல்லிமலை பற்றிய பல இரகசிய தகவல்களும் உள்ளன.நாக சாஸ்திர ஏடுகளை பாதுகாக்கும் ராஜ நாகம் எப்போதும் அந்த ஏடுகளின் மேல் தான் ஊர்ந்து படுத்திருக்கும்.ஏலக்காய் சித்திரைத் தவிர அந்த ஏடுகளை வேறு எவராலும் தொட இயலாது.ஏலக்காய் சித்தர் கூட உரிய நாக மந்திரத்தை உச்சரித்த பின்பு, அந்த ராஜ நாகத்தை வணங்கிவிட்டு தான் அவர் அந்த ஏடுகளை தொடுவார்.
வருடாவருடம் ஆயுத பூஜையன்று ஏலக்காய் சித்தர் ‘நாக சாஸ்திர ஏடுகளை’ சுத்தம் செய்து உரிய மூலிகை தைலம் பூசி அந்த ஏடுகளை தன் உயிருக்கு இணையாக பாதுகாத்து வருகிறார்.அவை சாதாராண ஏடுகள் அல்ல.அவை,
கொல்லிமலை காட்டில் வழிதவறி இச்சாதாரி நாகங்களின் கோயிலாக கருதப்படும் ‘அஷ்ட நாக லிங்கேஸ்வரர்’ கோயிலுக்கு வந்த ஏலக்காய் சித்தருக்கு ‘ஒரு இச்சாதாரி’ நாகமொன்று கொடுத்தது.
முருகேசன் சித்தர் சாமியின் குடிலுக்குள் நுழைந்தான்.
“சாமி ! வணக்கம்” என்று தன் இரு கைகளை தலைக்கு மேல் வைத்து கூப்பிக் கொண்டு,முருகேசன் ஏலக்காய் சித்தரை வணங்கினான்.
தன் குடிசையில் ‘கம்பஞ் சோறு’ ஆக்கிக் கொண்டிருந்த ஏலக்காய் சித்தர் கம்பஞ் சோற்றை ஆக்குவதை நிறுத்திவிட்டு, “இப்ப நீ எங்கிருந்து வர? உன் மேல இச்சாதாரி நாகத்தோடு வாசம் வீசுது” என்றார்.
முருகேசனுக்கு குப்பென்று வியர்த்து விட்டது.
6 Comments
தொடர் மேலும் மேலும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது அமானுஷ்யங்கள் தொடர வாழ்த்துக்கள்
மனம் மகிழ்கிறேன் நண்பரே.நன்றி
நண்பரே தொடர்ச்சியை காணவில்லையே. ஆவலுடன் எதிர் நோக்கி காத்திருக்கிறேன். நன்றி.
தொடர் மிகவும் விறுவிறுப்பாக செல்கிறது.
வாழ்த்துக்கள்.
இரு வாரங்களாக பதிவு வெளிவரவில்லையே நண்பரே!
ஏன் இதன் அடுத்த பகுதி வெளியிடப்படவில்லை?