கோகுலாஷ்டமி – கிருஷ்ண ஜெயந்தி வேறுபாடு என்ன?

கோகுலாஷ்டமி, கிருஷ்ணருடைய பிறந்தநாள். உலகம் முழுவதும் இருக்கக் கூடிய பக்தர்கள் கிருஷ்ணருடைய பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள். இதில் இரண்டு விதமான விஷயங்களை முதலில் நாம் பார்த்துவிடலாம்.

கீதாசாரம்:

பகவான் கிருஷ்ணர் கூறுகிறார்:-

பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே

எப்பொழுதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் தலைஎடுக்கிறதோ அப்பொழுதெல்லாம் தர்மத்தை நிலைநாட்ட நான் அவதரிப்பேன் யுகம் யுகமாக என்பது கீதாசாரம்.

கோகுலாஷ்டமி என்றால் என்ன? கிருஷ்ண ஜெயந்தி என்றால் என்ன? இவை இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்பது குறித்து விளக்குகிறார் .

கோகுலாஷ்டமி-கிருஷ்ண ஜெயந்தி : வித்தியாசம்

ஆவணி மாதம் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி இரவு தங்கி இருந்தால் அது கோகுலாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. இன்னொன்று அதே தேய்பிறை அஷ்டமியும் ரோகிணி நட்சத்திரமும் ரிஷப லக்னமும் சேர்ந்து வருவது ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி ஆகும். சிவன் சம்பந்தமான வழிபாட்டை பிரதானமாக கொண்டவர்கள் கோகுலாஷ்டமி என்றும் – பெருமாளை அடிப்படையாகக் கொண்டு வாழ்பவர்கள் கிருஷ்ண ஜெயந்தி என்றும் கிருஷ்ணருடைய பிறந்த நாளை கொண்டாடுவார்கள்.

2 விதமான ஆகமங்கள்

இதிலும் பெருமாளை அடிப்படையாகக் கொண்டு வாழ்பவர்களுக்கு 2 ஆகமங்கள் சொல்லப்பட்டிருக்கிறது. ஒன்று வைகானச ஆகமம், இன்னொன்று பாஞ்சராத்ர ஆகமம். வைகானஸ ஆகமத்திற்கு அஷ்டமி பிரதானமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. பாஞ்சராத்ர ஆகமம் அஷ்டமியினுடைய மிச்சமும் ரோகினி நக்ஷத்ரத்தினுடைய மிச்சமும் – முக்கியமாக சூரிய உதயம் கழிந்து 2 நாழிகைகள் மேற்சொன்ன அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரமும் இருந்தால் அதை பாஞ்சராத்திர ஆகம கிருஷ்ண ஜெயந்தியாக எடுத்துக் கொள்வார்கள். ஸ்ரீவைஷ்ணவ ஜெயந்தி அதாவது வைஷ்ணவ கிருஷ்ண ஜெயந்தி என்று சொல்லப்படுவதும் பாஞ்சராத்திர ஜெயந்தி தான்.

கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கொண்டாடும் இடங்கள்

கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை பிருந்தாவனம், மதுரா, கோகுலம், துவாரகை, குருவாயூர், உடுப்பி, பூரி ஜெகன்நாத், பண்டரிபுரம் மற்றும் ஏனைய பெருமாள் ஆலயங்களில் மிகவும் விசேஷமாக விண்ணும் மண்ணும் வியக்கும் வண்ணம் கொண்டாடி வருகிறார்கள்.

கிருஷ்ணருடைய விளையாட்டுகள்

இந்த கிருஷ்ண ஜெயந்தியில் வழுக்குமரம் ஏறுவதையும் உறியடி திருநாளாக உறியடி அடிப்பதையும் மக்கள் கிருஷ்ணருடைய விளையாட்டாகக் கொண்டு விளையாடுகிறார்கள். இந்த கண்ணன் பிறந்தநாள் வீடுகளில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை. அன்றைய தினம் வீட்டினை சுத்தமாக்கி மலர்களினால் அலங்கரித்து, கோலமிட்டு, கையில் வெண்ணெயுடன் தவழும் குழந்தை கண்ணனுடைய படத்தை வைத்து அலங்கரித்து, வாசல் முதல் சுவாமி வரை உள்ள இடம் வரை சிறுசிறு பாதங்கள் வரைவது வழக்கம்.

அரிசி மாவினால் பாதம் போடுவது வழக்கம்

அதற்கு காரணம் உண்டு. கோகுலத்தில் கண்ணன் தோழர்களுடன் கோபியர் வீடுகளில் வெண்ணை திருடும் போது அவசரத்தில் கீழே சிதறிய வெண்ணையில் கண்ணனின் மலர் பாதங்கள் வீடு முழுவதும் வெண்ணெய் ஆனது. அதனால் தான் அந்த காலத்தில் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடும் மக்கள் வெண்ணெயினால் பாதங்கள் போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். அந்த காரணத்தினாலேயே பின்னாட்களில் அரிசி மாவினால் கோலம் அதாவது பாதம் போடுவதை வழக்கமாக்கி இருக்கிறார்கள்.

இன்று பஜனை பாடல்கள் பாடுவது மிகச்சிறப்பு

ஒவ்வொருவர் வீட்டிலும் கண்ணன் பிறந்ததாகவே தோன்றும் வண்ணம் தோற்றமளிக்கும் படி சிறப்பாக கொண்டாடப்படுவதை நாம் காணலாம். இந்த கிருஷ்ண ஜென்மாஷ்டமி (கிருஷ்ண ஜெயந்தி) அன்று கிருஷ்ணர் அஷ்டோத்திரம் – விஷ்ணுசஹஸ்ரநாமம் இதையெல்லாம் பாராயணம் செய்வது நன்மை தரும். பஜனை பாட்டு என்று வாத்தியங்களுடன் இன்னிசை பாடல்கள் பாடுவதும் மிகச்சிறப்பு. சிறு குழந்தைகளுக்கு பிரசாதம் கொடுப்பதும் வந்திருக்கக்கூடிய விருந்தினர்களுக்கு தாம்பூலம் கொடுப்பது மிக விசேஷமானதாகும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!