படைத்திறல் பல்லவர்கோன் | 12 | பத்மாசந்திரசேகர்
12. பாண்டியர் பாசறை
காஞ்சியை நோக்கிப் புறப்பட்ட பாண்டியப்படையில் முன்னணியில் வந்துகொண்டிருந்த வீரர்கள் ஒரு பெரிய திடலை அடைந்தனர். அந்தத் திடலின் மறுபக்கம் ஒரு படை முகாமிட்டிருப்பதைக் கண்டதும் சற்று அதிர்ச்சியடைந்து, மேற்கொண்டு முன்னேறாமல் அங்கேயே காத்திருக்கத் தொடங்கினர்.
சற்று நேரத்தில் படைத்தளபதி அழகன், பாண்டியப்படை காத்திருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்.
“திடலுக்கு அந்தப்பக்கம் பல்லவப்படை காத்திருக்கிறது. பல்லவப்படை எந்நேரமும் தாக்குதலைத் தொடங்கலாம். அனைவரும் தயாராக இருங்கள்” சொல்லிக்கொண்டே வந்தவர் அருகிலிருந்த வீரனைப் பார்த்தார்.
“சமையல் பொருட்கள் ஏற்றி வந்த வண்டி வந்து விட்டதா?”
“இன்னும் இல்லை ஐயா” சொல்லிக்கொண்டே எதேச்சையாக நிமிர்ந்து பார்த்த அந்த வீரன் உற்சாகமாகக் குரல் கொடுத்தான்.
“அதோ வந்துக்கொண்டிருக்கிறது ஐயா” சொன்னதும் தனது புரவியிலேறி அந்த வண்டியை நோக்கி விரைந்தார் அழகன்.
“ஐயா. வண்டியை இங்கேயே நிறுத்துங்கள். உடனடியாக உணவு சமைக்க ஏற்பாடு செய்யுங்கள். எவ்வளவு சீக்கிரம் இயலுமோ, அவ்வளவு சீக்கிரம் உணவு தயார் செய்யுங்கள். பல்லவப்படை எதிரே காத்திருக்கிறது. அவர்கள் தாக்குதலைத் தொடங்கினால், நமது வீரர்கள் பசியினால் சோர்வடைந்து விடக்கூடாது.”
அழகன் உத்தரவிட்டதும் அவசர அவசரமாகச் சமையல் பணி ஆரம்பமானது. வீரர்கள் அணிவகுத்து பல்லவர்கள் தாக்குதல் நடத்தினால் தடுக்க தயாராக இருந்தனர். எனினும் பல்லவப்படையில் தாக்குதலுக்கான எந்த அறிகுறியும் காணப்படவில்லை.
நேரம் செல்லச் செல்ல, பாண்டியப்படை மெல்லமெல்ல முழுப் படையும் தெள்ளாறு வந்தடைந்தது. புரவிகளும், யானைகளும் தனித்தனியாக அணிவகுத்து நின்றன. இரதங்கள் ஒரு பக்கத்தில் நிறுத்தப்பட்டன.
பாண்டியப்படை அணிவகுத்து தயாராக இருக்க, தெள்ளாறு வந்தடைந்தனர் பாண்டிய வேந்தர் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபரும், இளவரசர் வரகுணவர்மரும். சற்று தூரத்தில் வரும்போதே எதிரில் காத்திருந்த பல்லவப்படையைக் கண்டுவிட்டார் ஸ்ரீவல்லபர்.
“காஞ்சிக்கோட்டையை முற்றுகையிட்டுக் கைப்பற்றலாமென எண்ணியிருந்தேன். அதற்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டான் அந்த நந்திவர்மன்” சற்று ஏமாற்றமான குரலில் கூறிய ஸ்ரீவல்லபர் தொடர்ந்து பேசினார்.
“அழகா… நமது படை தயாராக இருக்கட்டும். இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தும் வழக்கம் நமக்கில்லை. எனவே, நாமாகத் தாக்குதலை முன்னெடுக்கவேண்டாம். ஆனால், ஒருவேளை, பல்லவப்படை தாக்குதல் நடத்தினால், அதை எதிர்க்கொள்ளத் தயாராக இருப்போம்”
ஸ்ரீவல்லபர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே எதிரே இருந்த பல்லவ பாசறையில் ஏதோ நடமாட்டம் தெரிந்தது. வரகுணவர்மர் எதிர்த் திசையில் உற்றுப்பார்த்தார்.
“தந்தையே. பல்லவ மன்னர் வந்துள்ளார் போலுள்ளது. வீரர்களின் உற்சாகம் அதை தெளிவுபடுத்துகிறது” சொல்லிவிட்டு எதிர்த் திசையையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். ஸ்ரீவல்லபரும் பல்லவப் படையின் நடமாட்டத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார்.
பல்லவப்படையின் ஒரு குறிப்பட்ட இடத்தில், பல தீவர்த்திகள் ஏற்றப்பட்டன. சற்று நேரத்தில், ஒரே ஒரு தீவர்த்தி தனியாகப் பிரிந்து வந்தது. அந்த தீவர்த்தி பாண்டியப்படையை நோக்கி வந்ததாகத் தோன்றியது.
“வீரர்களே. பல்லவப்படையிலிருந்து நம்மை நோக்கி எவரோ வருகின்றனர். எச்சரிக்கையாக இருங்கள். வருபவரைத் தாக்க வேண்டாம். ஆனால் நம்மை இழிவுபடுத்தி ஏதேனும் பேசினால், தாக்குதல் நடத்தத் தயாராக இருங்கள்” சொல்லிக்கொண்டிருக்கும் போதே பல்லவப்படையிலிருந்து புறப்பட்ட புரவி பாண்டியப்படையை நெருங்கியது. அந்த வீரனை அழகன் எதிர்கொண்டார்.
“ஐயா… நான் பல்லவ மன்னர் நந்திவர்மரின் செய்தியுடன் வந்துள்ளேன். பாண்டிய வேந்தரைச் சந்தித்து, அவர் சொன்ன தகவலைச் சொல்ல விரும்புகிறேன்”
“சற்றுப் பொறுங்கள் ஐயா. நான் வேந்தரின் அனுமதி பெற்று வருகிறேன்” சொல்லிவிட்டு அழகன், ஸ்ரீவல்லபரிடம் வந்து, தகவலைக் கூறி அனுமதி பெற்றார். பல்லவ தூதன் சில கணங்களில் பாண்டிய வேந்தர் ஸ்ரீவல்லபரின் முன்னே நிறுத்தப்பட்டார்.
“சொல் வீரனே. என்ன தகவல்?” உறுமலுடன் கேட்டார் ஸ்ரீவல்லபர். பாண்டிய வேந்தரை நேரில் கண்டதும், வணங்கினான் பல்லவ வீரன்.
“வேந்தே. பல்லவப்படை தங்களை எதிர்கொள்ளத் தயாராகக் காத்திருக்கிறது. எனினும் சுக்கிரனின் ஒளியில் போரிடுவது வழக்கமில்லை என்பதால், தற்போது ஓய்வெடுத்து, காலை ஆதவன் உதித்ததும் போர் தொடங்கலாமென தெரிவிக்கக்கூறினார் பல்லவ மன்னர் நந்திவர்மர்” சொன்ன அந்த வீரன் தொடந்தான்.
“இது எங்கள் மன்னரின் விருப்பம். ஆயினும், தங்கள் விருப்பம் வேறு மாதிரியாக இருந்து, இப்போதே தாக்குதலுக்குத் தயாராக இருந்தால், நாங்களும் தயாராகவே உள்ளோம்” சற்று பணிவுடனும், அதே நேரம் உறுதியாகவும் கூறினான் அந்த வீரன். சில கண நேரம் அமைதி காத்தார் ஸ்ரீவல்லபர். பின்னர் பல்லவ தூதனை நோக்கி பேசத்தொடங்கினார்.
“வீரனே. உங்களுக்கு தெரிந்த அதே நியாயம் எங்களுக்கும் தெரிந்தே இருக்கிறது. சுக்கிரனைக் கொண்டு போரிடல் கூடாதென எங்களுக்கும் தெரியும். எனவே, காலையில், கதிரவனின் பார்வையில் போரிட நாங்களும் தயாராக உள்ளோமென உங்கள் மன்னரிடம் சென்று கூறு” சொன்னதும் மீண்டும் வணங்கி வெளியேறி, தனது புரவியில் ஏறி விரைந்தான் பல்லவ வீரன். அவன் செல்லும் வரை காத்திருந்த ஸ்ரீவல்லபர், அந்த வீரன் சிறிது தூரம் சென்றதும் அழகனைப் பார்த்தார்.
“அழகா… உணவு தயாராகி விட்டதா?”
“நாம் இங்கு வந்தவுடனேயே தயார் செய்யக் கூறிவிட்டேன் வேந்தே. இந்நேரம் தயாராகி இருக்கும்”
“உணவுண்டு அனைவரும் ஓய்வெடுங்கள். நாளைக் காலை போரிடத் தயாராக வேண்டும்” ஸ்ரீவல்லபர் கூறியதும் அழகன் வணங்கி, பின்வாங்கினார்.
சில கண நேரத்தில் மீண்டும் வந்த அழகனின் கரங்களில் பாண்டிய வேந்தர் மற்றும் இளவரசருக்கான உணவு இருந்தது. அவர்கள் இருவரும் உணவுண்ணத் தொடங்கியதும், மற்ற வீரர்களுக்கும் உணவுப் பரிமாறப்பட்டது. அனைவரும் உணவுண்ட பின்னர், ஓய்வெடுக்கத் தொடங்கினர்.
வீரர்கள் அனைவரும் உறங்கச் சென்றபின்னர், அங்கிருந்த பாறை ஒன்றின் மேல் உறக்கம் வராமல் அமர்ந்திருந்தார் பாண்டிய வேந்தர் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபர். மௌனமாக அமர்ந்திருந்த ஸ்ரீவல்லபரைத் தொந்தரவு செய்யாமல் சற்றுத் தள்ளிருந்த பாறை மேல் அமர்ந்திருந்தார் பாண்டிய இளவரசர் வரகுணவர்மர். இருவரையும் பார்த்தபடி வேகமாக விரைந்துக் கொண்டிருந்தான் சுக்கிரன்.
3 Comments
போர்த்தளத்தில் போர் காட்சிகளையே அதிகம் பார்த்திருக்கேன். அதைவிட்டு போருக்கு முன்பான பேச்சுகள், வீரர்களுக்கு உணவு வழங்கல் என படிப்பது நன்றாக உள்ளது. வந்தான் போரிட்டான் மான்டான் என சொல்லாமல், வந்த காவலாளி உண்டான் என படிக்க வைத்த எழுத்தாளருக்கு வாழ்த்துகள் 💐
நன்றி ப்பா.. 🙂🙂
Enjoyed reading