வரலாற்றில் இன்று – 12.08.2021 சர்வதேச இளைஞர் தினம்
நாட்டின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. இளைஞர்களின் வளர்ச்சிக்கு ஏற்ப நாட்டின் வளர்ச்சியும் அமைகிறது. எனவே இத்தகைய இளைஞர்களின் பிரச்சனைகளையும், செயல்பாடுகளையும் கவனத்தில் கொள்ளும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சர்வதேச இளைஞர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இதன்படி 1999ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் சர்வதேச இளைஞர் தினம் ஆகஸ்ட் 12ம் தேதி கொண்டாடப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. எனவே இத்தினம் 2000ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகின்றது.
உலக யானைகள் தினம்
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12ம் தேதி சர்வதேச யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது. தற்போது யானைகள், அரியவகை விலங்குகள் பட்டியலில் உள்ளன. பிற்கால சந்ததிகள், யானைகளைப் பார்க்கவும், அவற்றைப் பாதுகாப்பதும் நமது கடமையாகும்.
இன்று, பல யானைகள் தந்தத்திற்காக அதிக அளவில் வேட்டையாடப்படுகின்றன. நம் நாட்டின் செழிப்பு மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாக விளங்கும் யானைகளின் இனம் அழிந்து வருவதை பாதுகாக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
விக்ரம் சாராபாய்
இந்திய விண்வெளி அறிவியலின் தந்தை விக்ரம் ஆம்பாலால் சாராபாய் 1919ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிறந்தார்.
சிறுவயதிலிருந்தே கணிதத்திலும், இயற்பியலிலும் அதிக நாட்டம் கொண்டவராக இருந்தார். இங்கிலாந்தில் பிஹெச்.டி. ஆராய்ச்சியை முடித்த பிறகு 1947ஆம் ஆண்டு அகமதாபாத்தில் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தை நிறுவினார்.
இந்திய தேசிய விண்வெளி ஆராய்ச்சிகளுக்கான குழு பேரவை தொடங்கப்பட்டபோது அதன் தலைவராக நியமிக்கப்பட்டார். 1969ஆம் ஆண்டு இதற்கு மாற்றாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தொடங்கப்பட்டது.
இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டாவின் விண்ணேவுதலுக்கு முழுமுதல் காரணமானவர் இவரே. சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது, பத்ம பூஷண், பத்ம விபூஷண் (மறைவுக்குப் பிறகு) ஆகிய விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி, அணுசக்தி ஆராய்ச்சி, ஆராய்ச்சிக் கல்வியின் மேம்பாட்டிற்காக கடுமையாக பாடுபட்ட விக்ரம் சாராபாய் 52வது வயதில் (1971) மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1928ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி தமிழறிஞர் தமிழண்ணல் என்கிற இராம.பெரியகருப்பன் சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை என்ற ஊரில் பிறந்தார்.
1989ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி டிரான்சிஸ்டரைக் கண்டுபிடித்த மூவருள் ஒருவரான வில்லியம் ஷாக்லி மறைந்தார்.