வரலாற்றில் இன்று – 28.06.2021 பி.வி.நரசிம்ம ராவ்
இந்தியாவின் முன்னாள் பிரதமரான பி.வி.நரசிம்ம ராவ் 1921ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் தேதி தெலங்காணாவில், வாரங்கல் மாவட்டத்திலிருக்கும் லக்னேபல்லி என்ற கிராமத்தில் பிறந்தார்.
இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான ராவ், 1971ஆம் ஆண்டு முதல் 1973ஆம் ஆண்டு வரை ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்தார்.
பின்னர் மத்திய அரசின் கீழ் வெளியுறவு அமைச்சர் (1980-1984), உள்துறை அமைச்சர் (1984), பாதுகாப்பு அமைச்சர் (1984-85), மனித வள மேம்பாட்டு அமைச்சர் (1985) போன்ற பதவிகளையும் வகித்துள்ளார்.
1991ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட பிறகு, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1991ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஐந்து ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்தார். இந்திய பொருளாதார சீர்திருத்தங்களின் தந்தையான பி.வி.நரசிம்ம ராவ் 2004ஆம் ஆண்டு மறைந்தார்.
கோப்பெர்ட் மேயர்
நோபல் பரிசு பெற்ற ஜெர்மன் இயற்பியலாளர் மரியா கொப்பெர்ட் மேயர் (Maria Goeppert-Mayer) 1906ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் தேதி ஜெர்மனியின் ஒரு பகுதியாக விளங்கிய பிரஷ்யாவின் கட்டோவிஸ் நகரில் (தற்போதைய போலந்து) பிறந்தார்.
இவர் கோட்பாட்டு இயற்பியலில் ஆய்வுகளை மேற்கொண்டு, ஃபோட்டான்களின் (Photon) உள்ளீர்ப்பு குறித்த கோட்பாடுகளை வெளியிட்டு முனைவர் பட்டம் பெற்றார்.
பிறகு ஃபோட்டான்களின் குறுக்குப் பரப்பின் அலகு, ஜி.எம்.(GM)அலகு என்று இவரது பெயரால் குறிப்பிடப்பட்டது. அணுக்கரு கூடு அமைப்பின் மாதிரியை உருவாக்கியதற்காக 1963ஆம் ஆண்டு ஜென்சன், பால் வைனர் ஆகிய இருவருடன் இணைந்து இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
பெண்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்ட காலக்கட்டத்திலும், விடாமுயற்சியுடன் உழைத்து, அறிவியல் உலகில் தனியிடம் பிடித்த மரியா கோப்பெர்ட் மேயர் 1972ஆம் ஆண்டு மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1836ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் தேதி அமெரிக்காவின் நான்காவது அதிபரான ஜேம்ஸ் மேடிசன் மறைந்தார்.
1971ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் தேதி சென்னை மாகாண சட்டமன்ற தலைவராக இருந்த ஹச்.பி.அரி கௌடர் (H.B.Ari Gowder) மறைந்தார்.
1972ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் தேதி இந்திய அறிவியலாளரும், பயன்முக புள்ளியியல் அறிஞருமான பிரசந்தா சந்திர மகாலனோபிஸ் (Prasanta Chandra Mahalanobis) மறைந்தார்.