காவல்துறையினர் அத்துமீறல்

 காவல்துறையினர் அத்துமீறல்

தமிழகத்தில் காவல்துறையினர் அத்துமீறல்களில் ஈடுபடாமல் பார்த்துக் கொள்வதுடன், சட்டத்துக்குட்பட்டு செயல்படுமாறு அறிவுறுத்தவேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வேண்டுகோள்.

இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:

பொதுமக்களின் நண்பனாக விளங்க வேண்டிய காவல்துறை, பொதுமக்களை அடித்து துன்புறுத்தும் நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன், விருதுநகர் மாவட்டம், மலையப்பட்டி, குறிஞ்சிநகரைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளியான பாலமுருகன், கரோனா நிவாண நிதி மற்றும்மளிகைத் தொகுப்பை வாங்கச்சென்றபோது, வாய்த் தகராறு ஏற்பட்டதாகவும், பின் வீட்டுக்கு சென்றுவிட்ட அவரை ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸார்பூட்ஸ் காலால் தாக்கி, அவரைகாவல் நிலையம் அழைத்துச் சென்றதாகவும், சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது. இதன் காரணமாக தொடர்புடைய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

இதேபோல் தென்காசி மாவட்டம், செங்கோட்டை அடுத்த புளியரை தாட்கோ நகரைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான பிரான்சிஸ் அந்தோணி, ரேஷனில் வாங்கிய அரிசியை தன் உறவினர் வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார். அப்போது, சோதனைச்சாவடியில் அவரிடம் இருந்து காவல்துறையினர் அரிசியை பறிமுதல் செய்ததுடன், விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தியதில், அவர் பலத்தகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

தன் தந்தையை தாக்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க மகள் போராட்டம் நடத்தியதால், தொடர்புடைய காவல்துறையினர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மனித உரிமை ஆணையமும் வழக்குப் பதிவு செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

இந்நிலையில், சேலம் மாவட்டம் இடையபட்டியைச் சேர்ந்த முருகேசன், காவல் துறையினரின் தாக்குதலுக்கு ஆளாகி மரணமடைந்ததால், தொடர்புடைய அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். தவறு செய்வோர் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. தவறு செய்திருந்தால் அதற்கான ஆதாரங்களை திரட்டி அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டுமே தவிர, காவல்துறையினரே தாக்குதல் நடத்துவது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. இது மனித உரிமை மீறிய செயலாகும்.

எனவே, தமிழக முதல்வர் இதில்தனிக்கவனம் செலுத்தி, காவல்துறையினரின் இதுபோன்ற அத்துமீறல்கள் இனி நடைபெறாவண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். சட்டத்துக்குட்பட்டு செயல்படுமாறு காவல்துறையினருக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...