வரலாற்றில் இன்று – 21.05.2021 உலக கலாச்சார பன்முகத் தன்மையின் முன்னேற்ற தினம்
கலாச்சாரம் என்பது பழங்கால வரலாற்றையும், பழக்க வழக்கங்களையும் அறிந்து கொள்ள நமக்கு உதவுகிறது. ஒரு குழுவின், இனத்தின், நாட்டின் கலாச்சாரத்தை அறிந்துகொள்ள முடிகிறது.
ஐ.நா.பொதுச்சபை 2001ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தது. அதன்மூலம் மே 21ஆம் தேதியை உலக கலாச்சார பன்முகத் தன்மையின் முன்னேற்ற தினமாக அறிவித்தது.
மேரி அன்னிங்
புதைபடிம ஆராய்ச்சி என்ற புதிய அறிவியல் துறை உருவாக காரணமாக இருந்த தொல்பொருள் ஆய்வாளர் மேரி அன்னிங் 1799ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி இங்கிலாந்தின் டோர்செட் நகரில் பிறந்தார்.
இவர் சிறுவயதிலிருந்தே புதைபடிமங்களான சிப்பி, சங்குகளை சேகரிக்க, தந்தையுடன் செல்வார். அதனால் பண்டைய விலங்குகளின் எலும்புகள் உட்பட பல அரிய வகை தொல்படிமங்களை சேகரிப்பதில் மெல்ல மெல்ல மேரியும் திறமை பெற்றார்.
1823ஆம் ஆண்டு முதன்முதலாக ப்ளிசியோசரஸ் என்ற அரிய விலங்கின் முழு எலும்புக்கூட்டை கண்டறிந்தார். அதன் பிறகு டிராகன் எலும்பு, ஸ்கொலராஜா என்ற அரிய வகை மீனின் எலும்புக்கூட்டையும் கண்டுபிடித்தார். பிரித்தானியாவில் அறிவியல் வளர்ச்சிக்குப் பாடுபட்ட பத்து பெண்களின் பட்டியலில் இவரது பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.
பழைய சரித்திரத்தை எதிர்வரும் சந்ததிகள் அறிந்துகொள்ள வழியமைத்துக் கொடுத்த சாதனை மங்கையான மேரி அன்னிங் 47வது வயதில் (1847) மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
தீவிரவாத எதிர்ப்புத் தினம் :
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி கொலை செய்யப்பட்டதன் நினைவாக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.