நகைச்சுவை சிறுகதைப் போட்டி – முதல் பரிசுக் கதை!

 நகைச்சுவை சிறுகதைப் போட்டி – முதல் பரிசுக் கதை!

குமரேஷ் எல்.கே.ஜி.யைக் காணவில்லை!

முகில் தினகரன்

“அடக் கடவுளே!…புரமோஷனுக்கு ஆசைப்பட்டு இப்ப வேலையையே இழக்கப் போறேனே?” சூடான அல்வாவை வாயில் போட்டுக் கொண்டவர் போல். இரு கைகளையும் உதறிக் கொண்டு கத்தினார் துரையண்ணா.

“இருங்க இருங்க…இப்ப எதுக்கு இப்படிப் பதறுறீங்க…பயல் இங்கதான் எங்காச்சும் இருப்பான்…தேடுங்க…தேடுங்க” சொல்லியவாறே குட்டி யானை சைஸில் இருந்த அவர் மனைவி குப்பம்மா, கட்டிலுக்கடியில் குனிந்து பார்க்க முயன்று அப்படியே குப்புற விழுந்தாள். அவளது உருண்டை சரீரம் தரையில் உருண்டது.

“அடியே…உன்னை யாருடி குனியச் சொன்னா?…நீ வேகமா தும்மினாலே தொபுக்கடீர்னு விழுந்துடுவே…உனக்கெதுக்கு இந்த வேலை?” குப்புறக் கிடந்தவளைத் தூக்கியவாறே சொன்னார் துரையண்ணா.

அவளைத் தூக்குவதென்பது தன்னால் முடியாத காரியம் என்பது தெரிந்தும் அப்படியொரு முயற்சியில் அவர் ஈடுபட்டது போல்தான் நேற்று ஆபீஸில் ஜெனரல் மேனேஜர் அப்படியொரு வேண்டுகோளை வைத்ததும் அதன் பின்னணியில் உள்ள வில்லங்கங்களை உணராமல் ஒப்புக் கொண்டார்.

“இங்க பாருங்க துரையண்ணா…நாளைக்கு ஞாயிற்றுக் கிழமை…எங்க கல்யாண நாள்…நானும் என் மனைவியும் காலையில் கிளம்பி ராத்திரி வரை ஜாலியா வெளியில சுத்திட்டு…அப்படியே ஏதாவதொரு ஹைகிளாஸ் ஹோட்டல்ல தங்கி சந்தோஷமா இருந்திட்டு வரலாம்!னு இருக்கோம்”

“தாராளமா போயிட்டு வாங்க சார்”

“அதுல ஒரு பிரச்சினை என்ன?ன்னா..எங்க மகன் குமரேஷ் தானும் கூட வர்றேன்னு அடம் பிடிப்பான்…அப்படி அவன் வந்தா…அங்க ஜாலி இருக்காது…ஒரே ரகளைதான் இருக்கும்!…அதனால?”

“சொல்லுங்க சார்…அதனால?”

“நாளைக்கு ஒரு நாள் எங்க மகனை நீங்க உங்க வீட்டுல வெச்சு கவனிச்சுக்கணும்!…நான் நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை காலைல ஏழு மணிக்கு அவனைக் கொண்டு வந்து உங்க வீட்டுல விட்டுட்டு…மறுபடி திங்கட்கிழமை காலை அதே ஏழு மணிக்கு வந்து கூட்டிக்குவேன்!…எனக்காக இந்த உதவியைச் செய்யக் கூடாதா?” கெஞ்சலாய்க் கேட்டார் ஜி.எம்.

அடுத்த மாதம் இன்கிரிமெண்ட் மற்றும் புரமோஷன் குறித்த ரிப்போர்ட்டை இந்த ஜி.எம்.தான் மும்பை ஹெட் ஆபீஸுக்கு அனுப்புவார்…இந்தக் காரியத்தைச் செய்து இவர் கிட்ட நல்ல பேர் வாங்கிட்டா…நம்மைப் பற்றி நல்ல ரிப்போர்ட் அனுப்புவார்…புரமோஷன் வந்திடும்” வேறு விதமாய் கணக்கிட்டு தனது சம்மதத்தை தெரிவித்தார் துரையண்ணா.

இளம் வயதில் வேலை கிடைக்காமல் மூட்டை தூக்கிய அனுபவத்தை இப்போது உபயோகித்து, குப்பம்மாவை தரையிலிருந்து தூக்கி சோபாவில் அமர வைத்த துரையண்ணாவின் உடம்பெங்கு வியர்வை ஆறு.

“ஹும்…அந்த வாலுப்பயல்தான் எங்கியோ காணாமல் போய் என்னை உயிரெடுக்கறான்னா…நீ வேற ஏண்டி இப்படி பழி வாங்குறே?” திட்டியவர், தானே குனிந்து கட்டிலுக்கடியில் பார்த்தார். “சர்”ரென்று வெளிப்பட்டு அவர் முகத்தில் கீறல் போட்டு விட்டு ஓடியது தாய் எலி. குட்டி எலிகள் “கீச்…கீச்”சென்று சப்தமெழுப்பி தங்கள் உற்சாகத்தைக் காட்டின.

“ச்சை…சனியன்…இது வேற?” என்றபடி முகத்தைத் துடைத்தார். ரத்தச் சிகப்பு விரல்களில் ஒட்டிக் கொள்ள, “இது எலி ரத்தமா?…என் ரத்தமா?” சந்தேகமாய் கேட்டார்.

“சத்தியமா உங்க ரத்தமாய்த்தான் இருக்கும்…ஏன்னா…இவ்வளவு நேரமாகியும் ஒரு ஈ கூட ரத்தத்தை மொய்க்க வரலையே?” என்ற குப்பம்மாவை கோபமாய் பார்த்தபடியே அங்கிருந்து அகன்று வீடு முழுவதும் ஜி.எம்.மின் மகன் குமரேஷைத் தேடினார்.

அதுவரையில் தனது அறையில் அமர்ந்து “மேக்கப் செய்கிறேன் பேர்வழி” என்று பெயரில் பல வண்ண கிரீம்களை முகத்தில் பூசிக் கொண்டு வெளியே வந்த அவர்களது மகள் கலா தந்தையின் முகத்திலிருந்த சிகப்புத் தீற்றலைப் பார்த்து, “அப்பா…இது என்ன கிரீம்…எனக்கு கொஞ்சம் குடுங்க” கேட்டாள்.

“ம்..அப்படியே இந்தக் கட்டிலுக்கடியில் குனிஞ்சு பாரு…எலி வந்து பூசி விடும்” என்று எரிச்சலோடு சொன்னார்.

“என்னாச்சு…அந்தப் பயல் கிடைச்சானா?” கிரீம் பூச்சுக்கள் கலையக் கூடாது என்பதற்காக உதட்டை அசைக்காமல் பல்லைக் கடித்துக் கொண்டு, விஜயகாந்த் போல் பேசினாள் கலா.

துரையண்ணா உதட்டைப் பிதுக்க, “அவன் கிடைக்க மாட்டான்…அவனுக்கு ஸ்நாக்ஸ் வாங்கிக் கொடுக்க உங்க ஜி.எம்.குடுத்த காசையெல்லாம் நீ பாக்கெட்டுல போட்டுக்கிட்டு…அவனுக்கு வீட்டுல இருக்கற பழைய பொட்டுக் கடலையையும்…எறும்பு அரிச்ச அச்சு வெல்லத்தையும் குடுத்தா அவன் இங்க இருப்பானா?…அதான் எஸ்கேப் ஆயிட்டான்”

“ஏய் கலா….இப்ப என்னடி பண்றது?…ஏதாச்சுமொரு ஐடியா குடுடி…”மகளிடம் கெஞ்சினார் துரையண்ணா.

“ம்ம்ம்ம்” என்று தாடைப்பகுதி கிரீமைச் சுரண்டியவாறே யோசித்த கலா, “எனக்கென்னமோ…பக்கத்துல பொருட்காட்சி நடக்குதல்ல?…அங்க போய்க் கூட்டத்துல கலந்திருப்பானோ?ன்னு தோணுது…ஒண்ணு செய்வோம் நாம மூணு பேரும் அங்க போய்த் தேடுவோம்”

அது வரையில அமைதியாயிருந்த குப்பம்மா, “அம்மாடி பொருட்காட்சிக்குப் போகும் இந்த மூஞ்சியோட வந்திடாதே…. “வேற்று கிரக பொம்பளை”ன்னு சொல்லி உன்னையும் கூண்டுல வெச்சு டிக்கெட் போட்டுடுவானுக” என்றாள்.

அடுத்த பத்தாவது நிமிடம் அவர்கள் அந்தப் பொருட்காட்சி மைதானத்தில் ஜனக் கூட்டத்தின் நடுவில் “பேந்த….பேந்த” விழித்தபடி நின்றிருந்தனர்.

“அய்யோடா…இத்தனை கூட்டத்துல எப்படி அவனைத் தேடுறது?” தன் பருத்த தொந்தியைத் தேய்த்தார் துரையண்ணா.

“ஒண்ணும் பிரச்சினையில்லை…ஆளுக்கொரு பக்கம் போய்த் தேடுவோம்” என்றாள் கலா.

“நாம காணாமல் போயிட்டா?” குப்பம்மா கேட்க,

“சரியா அரை மணி நேரம் கழிச்சு நாம மூணு பேரும் இதோ இந்த ஐஸ் வண்டிக்காரன் கிட்டே வருவோம்…!…அதுக்கு முன்னாடியே பயலைக் கண்டுபிடிச்சிட்டா…கண்டுபிடிச்சவங்க இங்க வந்து வெய்ட் பண்ணுங்க”

மூவரும் பிரிந்தனர்.

புழுதியிலும், வெயிலிலும் அலைந்து திரிந்து, வியர்வை வழியும் முகத்தோடு, அரை மணி நேரத்திற்குப் பிறகு மூவரும் ஒன்று சேர்ந்தனர். சொல்லி வைத்தாற் போல் மூவரும் ஒரே மாதிரி உதட்டைப் பிதுக்கினர். குப்பம்மாவின் உதட்டுப் பிதுக்கலைக் கண்டு, விளையாடிக் கொண்டிருந்த குழந்தையொன்று “வீல்”என்று கத்திக் கொண்டு ஓடியது அவளுக்குத் தெரியாது.

“என்னாச்சு?…யாரு கண்ணிலும் அந்தப் பயல் படலையா?” சோகமாய்க் கேட்டார் துரையண்ணா.

“ஆமாம்ங்க”

அப்போது அழுது கொண்டே சென்ற ஒரு கறுத்த மேனி சிறுவன் அவர்கள் கண்ணில் பட, ஓடிச் சென்று நிறுத்தினாள் கலா. “யாரு தம்பி நீ?…எதுக்கு அழறே?”

“அக்கா…நான் என் அப்பா கூட இங்க வந்தேன்! அவர் காணாமல் போயிட்டார்…அதான் அழறேன்!”

“பளிச்”சென்று கலாவின் மூளையில் அந்தச் சிந்தனை ஓடியது, “இந்தப் பையனும் அந்த ஜி.எம்.பையன் குமரேஷ் சைஸில்தான் இருக்கான்…மூஞ்சி கூட நல்லாவே ஒத்து வருது…பேசாம இவனையே கூட்டிட்டுப் போய்… “இந்தாங்க உங்க பையன்!”ன்னு தள்ளி விட்டுட்டா என்ன?”

அந்த சிறுவனைக் கையோடு அழைத்துச் சென்று தன் பெற்றோர் முன் நிறுத்தினாள். அவர்கள் கலாவை வினோதமாய்ப் பார்க்க, அவர்களருகில் சென்று “கிசு…கிசு”குரலில் தன் ஐடியாவைச் சொன்னாள்.

“உன்னோட ஐடியாவைக் கொண்டு பக்கத்து வீட்டு குப்பைத் தொட்டில கொட்டு…! ஏண்டி…இந்தப் பயல் கன்னங்கரேல்னு கரும்பூனைக்குப் பொறந்தவன் மாதிரி இருக்கான்…குமரேஷ் வெள்ளை வெளேர்ன்னு சேட்டு வீட்டுப் பையனாட்டம் இருக்கான்…இவனைக் கொண்டு போய் “அவன்தான்”னு சொன்னா ஜி.எம்.எப்படி நம்புவார்?”

“அய்ய…இது ஒரு பிரச்சினையா?…ஒரு படத்துல கவுண்டமணி தன்னோட கறுப்புத் தங்கச்சிக்கு செவப்பு பெயிண்ட் அடிச்சு கல்யாணம் பண்ணி வைப்பானே?…அதுமாதிரி இந்தப் பயலுக்கு லைட்டா வெள்ளைக் கலர் அடிச்சு விட்டுடுவோம்”

“ம்ம்ம்ம்” யோசித்தபடி தன் தொந்தியை தடவிய துரையண்ணா, “எப்படியும் அவன் அவங்க வீட்டுல போய் குளிப்பான்…அப்ப சாயம் வெளுத்துப் போகுமே?” கேட்டார்.

“அதைப் பத்தி நீங்க ஏன் கவலைப்படறீங்க?… “நாங்க ஒப்படைக்கும் போது சரியாய்த்தான் இருந்திச்சு…உங்க வீட்டுக்குப் போன பிறகுதான்…ஏதோ நடந்திருக்கு”ன்னு சொல்லி அவங்க மேலே பழியைப் போட்டு…தப்பிச்சுக்கலாம்”

“ஏய்…கலா…இது சாத்தியப்படுமா?” சந்தேகமாய்க் கேட்டாள் குப்பம்மா.

“சாத்தியப்படுமோ…படாதோ…இப்போதைக்கு இது ஒண்ணுதான் வழி” என்ற கலா, அந்தச் சிறுவனைப் பார்த்து, “தம்பி…எங்க கூட வர்றியா?” கேட்டாள்.

திரும்பி ஐஸ் வண்டிக்காரனைக் காட்டி, “ரெண்டு கப் ஐஸ் வாங்கிக் குடுத்தா எங்கே கூப்பிட்டாலும் வருவேன்…என்ன செய்யச் சொன்னாலும் செய்வேன்!…குட்டிக்கரணம் போட்டடா?” என்றான் அந்தச் சிறுவன்.

“ஆஹா…இந்தப் பொடியனோட வீக்னஸ் ஐஸ் கிரீம் போலிருக்கு…இது போதும் இதை வெச்சே மீதி காரியங்களை சாதிச்சிடலாம்” என்று தனக்குள் சொல்லிக் கொண்டே ஐஸ் வண்டிக்காரனிடம் அவனை அழைத்துப் போய், ரெண்டுக்கு நாலு கப் ஐஸ் வாங்கித் தந்தாள்.

****

“அய்ய…எதுக்கு இந்த வெள்ளைப் பெயிண்டை என் மேலே அடிக்கறீங்க?” கலா தன்னை நோக்கிக் கொண்டு வந்த பிரஷ்ஷை தட்டி விட்டான் கறுப்புக் குமரேஷ்.

“த பாரு…நாங்கெல்லாம் எப்படி வெள்ளையா இருக்கோம்…நீ மட்டும்தானே கறுப்பா இருக்கே?…உன்னையும் எங்களை மாதிரி வெள்ளை ஆக்கத்தான் கலர் அடிக்கறேன்!…இந்த ஏரியாவுல ஒரு பேய் இருக்கு அது கறுப்பா இருக்கறவங்களைப் பார்த்தா கடிச்சுக் கொதறிடும்” கலா பொய்யை அள்ளி வீச.

அவன் கொஞ்சமும் பயப்படாமல் அலட்சியம் காட்ட, ஐஸ்கிரீம் அஸ்திரத்தைப் பிரயோகித்தாள் கலா. உடனே சம்மதித்தான் கறுப்புக் கட்டழகன்.

சரியாக அரை மணி நேரத்தில் அவனை வெள்ளைத் தோல் சிறுவனாக்கி, ஜி.எம்.மின் மகனுடைய உடைகளை அணிவித்து ஹாலுக்கு அழைத்து வந்தாள் கலா.

“அப்பாடா…ஜி.எம்.மோட ஒரிஜினல் மகனே கிடைச்சுட்டான்” துரையண்ணா கரடி போல் முடி நிறைந்த தன் நெஞ்சில் கையை வைத்துச் சொல்ல, “அடச்சீ…போய் மொதல்ல உன் கண்ணுல சானிடைஸர் ஊத்திட்டு வந்து பாரு…இது ஒரிஜினல் இல்லை டூப்ளிகேட்” என்றாள் கலா.

மகளின் ஆளை மாற்றிய அற்புத காரியத்திற்கு கை தட்டி பாராட்டுத் தெரிவித்த குப்பம்மா, “நிச்சயமா உங்க ஜி.எம்.மால் கண்டு பிடிக்கவே முடியாது” என்றாள்.

எல்லோரும் மறுநாள் காலை வரப் போகும் ஜி.எம்.முக்காக காத்திருக்கத் துவங்கினர்.

சரியாக காலை ஏழரை மணிக்கு வந்து சேர்ந்தனர் ஜி.எம்.மும் அவர் மனைவியும். “மிஸ்டர் துரை…ரொம்ப நன்றி!…” என்றபடி துரையண்ணனின் கைகளைப் பிடித்துக் கொண்டு ஜி.எம்.அசடு வழிய,

“ஏங்க வீட்டுக்குப் போயிட்டு ஆபீஸுக்குப் போகணும்!னு சொன்னீங்கல்ல?…கிளம்புங்க சீக்கிரம்” ஜி.எம்.மின் மனைவி அவரை உசுப்பினாள்.

“ஹி…ஹி…பையனை அனுப்புங்க…நாங்க கிளம்பறோம்”

அப்போது துரையண்ணன் மகள் கலா பெயிண்ட் அடிக்கப்பட்ட டூப்ளிகேட் குமரேஷனைக் கொண்டு வந்து நிறுத்த நெற்றி சுருக்கினார் ஜி.எம். “என்னது எங்க மகனோட முகஜாடை மாறியிருக்கு…”

திடுக்கிட்டுப் போன கலா, “அது…வந்து…வேறொண்ணுமில்லை…நீங்க…நேத்திக்கு ஒரு நாள் முழுசா உங்க மகன் முகத்தைப் பார்க்கலைதானே?…அதான் உங்களுக்கு அவன் முகம் மறந்து போச்சு” சமாளித்தாள்.

ஜி.எம். தன் மனைவியைப் பார்த்தார். அவளோ “அவங்க என்ன?…நம்ம பையனை வெச்சுக்கிட்டு வேற பையனையா? நமக்கு குடுத்துடப் போறாங்க?” என்றாள்.

“விட்டா…நாங்க எக்ஸிபிஷனிலிருந்து ஒரு கறுப்பு பையனைப் பிடிச்சுட்டு வந்து கலர் பெயிண்ட் அடிச்சுக் குடுத்துட்டோம்!னு சொல்லுவீங்க போலிருக்கு” என்று உடனே சொல்லி விட்டு, தன் நாக்கைக் கடித்துக் கொண்டாள் குப்பம்மா.

அவர்கள் அடுத்த கேள்வியைக் கேட்கும் முன் அவர்களைத் துரத்தி விடும் எண்ணத்துடன், “சார்…நீங்க சீக்கிரம் வீட்டுக்குப் போனால்தானே ஆபீஸுக்கு கிளம்பி வர முடியும்?” துரையண்ணன் ஞாபகமூட்டினார்.

“ஆமாம்…ஆமாம்” என்று சொல்லியவாறே பையனை இழுத்துக் கொண்டு வெளியேறினார்கள் அவர்கள்.

விதிப் புலிகேசி எங்கிருந்தோ அவர்களைப் பார்த்துச் சிரித்து விட்டு, “ஓஹோ…இப்படியொரு ஃப்ராடு நடக்குதா இங்கே?…இருங்க…இருங்க இப்பவே உங்க சாயத்தை வெளுக்க வைக்கிறேன்” என்று சன்னமாய்ச் சொல்லிக் கொண்டு, பக்கத்து வீட்டின் மொட்டை மாடியிலிருந்த சின்டெக்ஸ் டேங்க்கை முறைத்துப் பார்க்க, அது தானாகவே உருண்டு தனக்குள்ளிருந்த மொத்த நீரையும் மாமழை போல் பொழிந்தது.

கீழே சென்று கொண்டிருந்த டூப்ளிகேட் குமரேஷ் தண்ணீரால் கழுவப்பட்டு கறுப்பு குமரேஷாய் மாறி நிற்க, ஜி.எம்.மும், அவர் மனைவியும் பேயறைந்தது போல் நின்றனர். “என்னது?…நம்ம பையன் திடீர்னு ஜெராக்ஸ் காப்பி ஆயிட்டான்?”

தங்கள் குட்டு வெளிப்பட்டு விட்டதில் சோகமான துரையண்ணன் குடும்பத்தினர் வீட்டு வாசற்படியிலேயே நின்று கைகளைப் பிசைய, அவர்களைத் தள்ளிக் கொண்டு வீட்டினுள்ளிருந்து வெளியே ஓடி வந்தான் ஒரிஜினல் குமரேஷ், “டாடி…மம்மீ”

தாவிச் சென்று அவனை வாரியணைத்துக் கொண்டாள் ஜி.எம்.மனைவி.

ஆனால், ஜி.எம்.மட்டும் அந்த கறுப்பு சிறுவனையே “குறு…குறு”வென்று பார்த்தபடி நின்றிருந்தார். அவர் மூளைக்குள் சிந்தனைகள் இடியாப்பம் போல் சிக்கல் சிக்கலாய் வந்து போயின. “யோவ் துரை…இந்தக் கறுப்புப் பயல் யாருய்யா?….இவனுக்கு வெள்ளைப் பெயிண்ட் அடிச்சது யாருய்யா?” தன்னுடைய காட்ஜில்லா குரலில் அவர் கத்தலாய்க் கேட்க,

“அது வந்து சார்…உங்க பையன் காணாமல் போயி…” திக்கித் திணறினார் துரையண்ணன்.

“என்னய்யா உளர்றே?…என் பையன் உங்க வீட்டுக்குள்ளிருந்துதானே ஓடி வர்றான்?…அவனைப் போய் காணாமல் போயிட்டான்!னு ஏன்யா பொய் சொல்றே?”

“அதுதான் சார் எனக்கே புரியலை” என்ற துரையண்ணன் ஒரிஜினல் குமரேஷைப் பார்த்து, “தம்பி…நேத்திருந்து உன்னையத் தேடறோமே?…நீ எங்கேப்பா இருந்தே?” பவ்யமாய்க் கேட்டார்.

“நான் டாய்லெட்ல இருந்தேன்”

“என்னது டாய்லெட்டிலேயா?…என்னப்பா சொல்றே அங்க ரொம்ப நாறுமே?…அங்க எப்படி முழு நாள் இருந்தே?” நம்ப முடியாமல் கேட்டாள் குப்பம்மா.

“நான் படுக்கறதுக்குன்னு நீங்க ஏற்பாடு பண்ணிக் குடுத்த ரூம்ல அடிச்ச மூட்டைப் பூச்சி நாத்தத்தை விட டாய்லெட்டே தேவலாம்!ன்னு அங்க போய் படுத்துத் தூங்கிட்டேன்”

அதைக் கேட்டதும் கோபமாகிப் போன ஜி.எம்., “நான்சென்ஸ்…என் பையன் ஒரு நாள் முழுவதும் டாய்லெட்ல இருந்திருக்கான்…அங்கேயே தூங்கியும் இருக்கான்!…ஓ மை காட்!…யோவ் துரை!….உன்னை சும்மா விட மாட்டேன்யா…இதுக்கு உனக்கு ஒரு தண்டனை குடுக்காம விட மாட்டேன்யா” கத்திக் கொண்டே அவர்கள் சென்று விட,

“இல்ல…இல்ல….இந்த வருஷ புரமோஷன் லிஸ்டுல என் பேர் இல்லை!…போச்சு…போச்சு…மேனேஜர் பதவி என் கையை விட்டுப் போச்சு!…சொக்கா…ஒண்ணா ரெண்டா சொளையா பதினஞ்சாயிரம் ரூபாய்!…ஹெட் கிளார்க்கா இருக்கற நான் மேனேஜர் ஆயிட்டா எனக்கு கிடைக்கப் போற ஊதிய உயர்வு பதினஞ்சாயிரம்…அதுமட்டுமா?…கம்பெனி கார்…வருஷம் ஒரு தடவை வெளிநாடு டூர்…எல்லாம் போச்சு!” என்று தெருவில் நின்று திருவிளையாடல் நாகேஷ் போல அவர் புலம்பிக் கொண்டிருக்க, அவரை நோக்கி வந்தனர் அந்த இருவரும்.

“என்னய்யா…என்ன வேணும் உங்களுக்கு?” கோபமாய்க் கேட்டார்.

“எங்க பையன்”

“நான் இங்கே பையன்களைத் தயாரிச்சு வியாபாரமா பண்ணிட்டிருக்கேன்?” என்று அவர் உச்சஸ்தாயில் கத்த, “அப்பா…..மாமா” என்று கூவிக் கொண்டு அவர்களை நோக்கி ஓடி வந்தான் கறுப்பு குமரேஷ்.

“என்னது?…இவர் உன் அப்பாவா?”

“ஆமாம் சார்…பையனைக் காணோம்”ன்னு தவியாய்த் தவிச்சோம்!…தேடாத இடமில்லை…போகாத தெருவில்லை!…..இப்ப எதிர்ல போன ஒரு பெரிய மனுஷர்தான் சொல்லிட்டுப் போனார் “அங்க ஒரு கறுப்பு சிறுவன் இருக்கான்!…அவனா?ன்னு போய்ப் பாருங்க”ன்னு!…வந்து பார்த்தோம்!…எங்க பையனேதான்” என்றார் பையனின் தந்தை.

“அப்படியா?…ரொம்ப சந்தோஷம்…கையோட கூட்டிட்டுப் போயிடுங்க…உங்களுக்கு ரொம்ப புண்ணியமாய்ப் போயிடும்” என்று அவர்களை அப்படியே விரட்டியடித்தார் துரையண்ணன். பாவம், புரமோஷனும் போச்சு…இன்கிரிமெண்டும் போச்சு, என்கிற வருத்தம் அவருக்கு.

அடுத்த வந்த நாட்களில் ஆபீஸுக்குப் போய் அந்த ஜி.எம்.மை எதிர் கொள்ள பயந்து வீட்டோடு கிடந்த துரையண்ணன் ஒரு வாரம் கழித்து மெல்ல ஆபீஸ் பக்கம் சென்றார்.

அங்கே ஜி.எம்.அறையில் அவர் இல்லை.

குழப்பமாய் அவர் எல்லோரையும் பார்க்க, எல்லோரும் வரிசையாய் வந்து “கன்கிராட்ஸ்” சொல்லி அவருடன் கை குலுக்கிச் சென்றனர்.

“என்னப்பா?…என்ன விஷயம்?…எதுக்கு எனக்கு இந்த வாழ்த்துக்களெல்லாம்?” பியூனிடம் கேட்டார்

“பின்னே?…உங்களை வாழ்த்தாம என்ன பண்றது?…சாதாரண காரியமா பண்ணியிருக்கீங்க?”

“சாமி…கொஞ்சம் புரியும்படி சொல்லுப்பா”

“பழைய ஜி.எம்….ஆபீஸ் ஸ்டாப்களையெல்லாம் பர்சனல் வேலைக்காக பயன் படுத்தி…ரொம்ப தொந்தரவு பண்றார்!ன்னு அவர் மேலே கம்ப்ளைண்ட் ஏற்கனவே இருந்திருக்கு…!…மேனேஜ்மெண்டும் அவரை சைலண்டா வாட்ச் பண்ணிட்டே இருந்திருக்கு!…அது தெரியாம அவர் உங்களை மிரட்டி தன்னோட மகனை உங்க வீட்டுல தங்க அனுப்பியிருக்கார்!…அந்த விஷயத்துக்காக அவரை இங்கிருந்து தூக்கி ஒரிஸாவுக்கு டிரான்ஸ்பர் பண்ணிடுச்சு மேனேஜ்மெண்ட்”

“சரி…அடுத்ததா…அந்த சீட்டுக்கு யாரு வரப் போறா?” துரையண்ணன் சன்னக் குரலில் கேட்க,

“உங்க எக்ஸ்பீரியன்ஸையும்….சின்சியாரிட்டியையும் பார்த்து உங்களையே ஜி.எம்.ம்மா போட மேனேஜ்மென்ட் யோசிச்சிட்டிருக்கு”

தலை “கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்”ரென்று சுற்ற, தள்ளாட்டமாய் நின்ற துரையண்ணனை தாங்கிப் பிடித்தான் பியூன்.

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...