விலகாத வெள்ளித் திரை – 14 | லதா சரவணன்

 விலகாத வெள்ளித் திரை – 14 | லதா சரவணன்

கையில் உணவுப் பொட்டலங்களோடு வந்த வாத்யாரை நன்றியுடன் பார்த்தார் ராமதுரை.

“நீங்க கிளம்பின நேரத்திற்கு ஏதும் சாப்பிட்டு இருக்க மாட்டீங்கன்னு நினைக்கறேன் அதான். முதல்ல சாப்பிடுங்க மத்ததை அப்பறம் பேசிக்கலாம்.”

“ரொம்ப நல்லது வாத்தியாரே நான் பசி தாங்க மாட்டேன். சென்னை மாதிரி இங்கே கிளப்பு கடைகளும் இல்லை பசிக்கு என்ன பண்றதுன்னு யோசிச்சி கிட்டே இருந்தேன் !”. ராமதுரை கட்டுச்சோற்றை பிரித்து உண்ண ஆரம்பித்து விட்டார். வாத்தியார் வேணியிடம் ஒரு பார்சலை நீட்டினார்.

“எனக்கு இப்போ பசியில்லை ஸார் அப்பறமா சாப்பிட்டுக்கறேன்” “சிறு தயக்கத்துடன் கண்ணன் வரலையா ? அவருக்கு நான் வந்தது தெரியுமா ஸார். ஒருவேளை என்னைப் பார்க்க சென்னை வந்தப்போ நான் பேசலைன்னு அவருக்கு என்மேல கோபமா ? அதுக்கு காரணம் என் சூழ்நிலைதான் நான் அவர்கிட்டே என்னன்னு ?!”

பேசியவளை கையமர்த்திய வாத்தியார் “இப்போ எதுக்கும்மா வந்திருக்க ?”

“கண்ணனைப் பார்க்கதான் எங்க விஷயம்தான் உங்களுக்கு தெரியுமே அவருக்காக நான் ஒட்டு மொத்தமா சினிமாவுக்கு முழுக்கு போட்டுட்டு வந்திட்டேன். இப்போ ஒரு குடும்பம் குழந்தைன்னு சராசரி வாழ்க்கைதான் எனக்கு வேணும் அதுக்காகத்தான்!”.

“நீ கண்ணனை என்னம்மா நினைச்சே ? அவனென்ன நீ விளையாட பொம்மையா வேணுன்னா இடுப்பிலே தூக்கி வைச்சிக்கவும், வேண்டான்னா கால்ல போட்டு மிதிக்கவும். அதான் வெளிச்சம் படற வாழ்க்கையிலே சாதிக்கப் போறீயே அப்பறம் ஏன் இந்த பட்டிக்காட்டு இருட்லே வாழனுமின்னு சொல்றே ? இதுவும் நடிப்புதானா ?!”

“உங்க கோபம் எனக்கு புரியுது ஸார் தப்பு என்பேரில் மட்டும் இல்லை, நாம எல்லாருமே சூழ்நிலைக் கைதிகள் தானே, என் வரையில் இரண்டு அம்மாக்களும் எங்களைப் பிரிச்சிட்டாங்க ?! . கண்ணனை முதன் முதல்ல பார்த்தப்பவே எனக்கு அவர் மேல ஒரு பிடிப்பு ஏற்பட்டு போச்சு, அதை நான் தைரியமா சொல்லவும் செய்தேன்.”

“ஒரு நட்சத்திரமா வானத்திலே இருக்கிறதை விடவும் பூஜையறை விளக்கின் ஒளியாக இருக்கத்தான் நான் நினைச்சேன் நான் என் மனதை வெளிப்படுத்தி இரண்டு முறையில் ஒரு தடவை மெளனமாக கடந்திட்டார். இரண்டாவது தடவை தன்னோட அம்மாகிட்டே பேசிட்டு நல்ல முடிவு சொல்றதா சொன்னார். அதேபோல நாங்க நாடகம் முடிஞ்சி ஊருக்கு கிளம்பும் போது கண்ணனோட அம்மா என்கிட்டே தன்னோட பிள்ளையை விட்டுக்கொடுக்கச் சொல்லி கேட்டாங்க.”

“அவங்களுக்கு என்னை ரொம்ப பிடிச்சிருந்தது என்னோட தொழிலும் பிறப்பும் பிடிக்கலை, எனக்கு பிடிக்கலைன்னாலும் எங்க அம்மாவுக்காகத்தான் நான் இந்த தொழிலுக்கு வந்தேன் அதே போலதானே கஷ்டப்பட்டு அவங்க அம்மாவும் கண்ணனை வளர்த்து இருப்பாங்க அதனாலதான் கண்ணன் என்னை தேடி வந்தப்ப அவங்க அம்மாவையும், காட்டிக் கொடுக்காம என் மனசையையும் காட்டிக் கொடுக்காம அலட்சியப் படுத்திட்டேன்!”

“ஆனா,…?!”

“வேண்டான்னு போனவ இப்போ மட்டும் என்ன திடீர்னு கண்ணன் மேல பாசம் அக்கறைன்னு கேக்குறீங்க. ஒரு தாயா எங்கம்மா என்னை விடுவிச்சிட்டாங்க, எந்தத் தாயும் பிள்ளைங்க கெட்டுப் போகணுன்னு நினைக்கிறது இல்லைங்க, நான் சென்னைக்குப் போன சில நாள்களிலேயே கண்ணன் கிட்டே இருந்து எனக்கு ஒரு கடிதாசி வந்தது அதிலே தன்னோடு விருப்பத்தை அவர் எழுதியிருந்தார். வெகு சீக்கிரம் என்னை சந்திக்க வருவதாகவும் என் அம்மாவிடம் எப்படியாவது பேசி சம்மதம் வாங்குவதாகவும் என்னோட பாராமுகத்திற்கான காரணத்தையும் கேட்டு இருந்தார். அந்த கடிதம் ஒன்றுதான் என்னோட வாழ்க்கையிலே நான் பயணிப்பதற்கு ஊன்றுகோல் !”

“ராமதுரை மாமா வீட்டில் இருந்தா கண்ணன் என்னைத் தேடி வருவார். நான் எங்கே அவருடைய அம்மாவிற்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்றாமல் போயிடுவேனோன்னு பயந்து அந்த இடத்தைவிட்டு ஒளிஞ்சிக்க சரியான இடத்தை தேடி ஓடினேன். என்னோட ஆசைதான் நிராசையா போயிடுச்சி, பாவம் என்னைப் பெத்தவ ஏமாற்றமே அவ வாழ்க்கையின் அநேக பக்கங்கள் அதனால அவ ஆசைப்படி அரிதாரம் பூச தொடங்கினேன். கண்ணன் என்னைப் பார்க்க வந்தப்போ எனக்கு உள்ளுக்குள்ளே எத்தனை பூரிப்பா இருந்தது தெரியுமா ?”

“நான் இன்னொருத்தரால் நேசிக்கப்படுகிறேன் என்பதே ஒரு பெருமை ஸார். அந்த பெருமை கண்ணனின் முகத்தில் அவர்கள் கண்களில் எனக்கு தெரிந்தது. என்னோட வைராக்கியம் எங்கே தகர்ந்து போயிடுமோன்னுதான் அந்த இடத்தை விட்டு ஓடினேன். கண்ணனோட கடிதம் மட்டும்தான் என்னோட உரிமைன்னு நினைச்சேன் அந்த கடிதம் ஒருநாள் அம்மாகிட்டே கிடைச்சது. அப்போதான் நான் எதிர்பார்க்காத ஏன் நானே இதுவரையில் பார்க்காத என் அம்மாவைப் பார்த்தேன்.”

“சினிமா என்னோட ஆசைதான் வேணி ஆனா உனக்கு ஒரு நல்ல வாழ்வு கிடைக்கும்போது அதையேன் எனக்காக நீ அழிச்சிக்கணும். உன்னோட வாழ்க்கையை நீ வாழும்மா அதுக்கு நான் எந்த வகையிலும் தடையா நிக்க மாட்டேன்!”.

“இல்லைம்மா காலம் கடந்து போச்சு, கண்ணனோட கடிதம் மட்டும்தான் என்னோட உரிமை அவன் இல்லை, நடைமுறையில் உள்ள சிக்கலை நான் சொல்றேன் அவங்க அம்மாவே என்கிட்டே நேரடியா பேசிட்டாங்க. அஸ்தஸ்து, பணம், ஜாதி இதையெல்லாம் தாண்டி குறுக்கே நிக்கிறது என்னோட பொறப்பு அப்பா பேரு தெரியாம…!”

“வேணி….?”

“நான் இன்னமும் சொல்லி முடிக்கலைம்மா, சினிமாவிலே நடிக்கிறது என்னோட பிறப்பு, இத்தனையும் மைனஸ்தான். விடும்மா நான் மட்டும் விருப்பப்பட்டா மட்டும் போதுமா ?! மூடிய கதவுகளை நான் திருப்பி தட்டக் கூட முடியாத இடத்தில் இருக்கிறேன்
விடும்மா ?!”

“நான் பூவும் பொட்டுமா இருந்தாத்தானே இந்த கேள்வி வரும் உங்கப்பா ஒரு பெரிய ஆளு இதே சினிமா சம்பந்தப்பட்டவருதான். ஆனா வெளியே சொல்ல முடியாத நிலைமையிலே இருக்கேன் எனக்கு வயித்தை மட்டும் ரொப்பிட்டு எதுக்கும் பிரயோசனப்படாத அவனுக்காக சுமங்கலி வேஷம் போடறதை விட உனக்காக நான் விதவையா இருக்கிறது பெருமைடி, நான் வந்து அந்தம்மாகிட்டே பேசறேன்டி நான் விழுந்தது போதும் நீ போக வேண்டாம்!”.

“இல்லைம்மா வேண்டாம் ?”

“கைவிடப்பட்டவன்னு சொல்றதை விட கைம்பெண் என்று சொல்வது கெளரவம் தான் என்று கண்ணனை பார்க்க சொல்லி அனுப்பி வைச்சாங்க அம்மாவோட இந்த மாற்றம் என்னாலயே நம்பவே முடியலை, இதை கண்ணன் கிட்டே சொல்லி உடனே எங்க காதலை புதுப்பிக்கத்தான் வந்தேன். அதுவுமில்லாம மாறவே மாட்டேன்னு நினைச்ச எங்கம்மாவே மாறினப்போ, கண்ணனால அவங்க அம்மாவையும் மாற்ற முடியுமின்னு தோணிச்சு, அதனாலதான் உடனே புறப்பட்டு வந்திட்டேன். எனக்கு நம்பிக்கை இருக்கு, என்னால கண்ணனையோ கண்ணனால என்னையோ மறக்க முடியாது அதனால அவரை ஒருதடவை பார்த்திட்டா மட்டும் போதும் அவரை சந்திக்க மட்டும் ஏற்பாடு பண்ணுங்க ஸார் !”

< பகுதி – 13

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...