நிசப்த சங்கீதம் – 6| ஜீ.ஏ.பிரபா
கண்ணில் தெரியுதொரு தோற்றம்
அதில் கண்ணன் அழகு முழுதில்லை.
“சாய்” சட்டென ஒரு மெல்லிய கூவலோடு விழித்துக் கொண்டாள் வசுமதி.
ஒரு சின்னக் கேவல் எழும்பித் தணிந்தது.
எதிர்ச் சுவரில் தெரிந்த கண்ணன், ராதைப் படத்தைப் பார்த்தபடி வெறித்த பார்வையுடன் உட்கார்ந்தாள் வசுமதி. மனம் சாய், சாய் என்றே உச்சரித்தது.
ஏன் இப்படி என்று தெரியவில்லை.
அவர் நினைவு இல்லை என்றில்லை. நாளில் ஒரு நிமிஷமனும் சாய் என்ற பெயரும் அவர் நினைவும் வந்து மனதில் மோதி விட்டுச் செல்லும். யாரோ ஒருவர் அவர் உருவத்தை நினைவு படுத்துவார்கள்.
அவரை மறக்க முடியுமா?
அன்பையும், பிரியத்தையும் ஆற்று வெள்ளமாக— இல்லை, இல்லை, காட்டாற்று வெள்ளமாகப் பொழிந்தவர். ஆனால் அதில் நனைய விருப்பமில்லாமல் தன் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்ற வெறி—படிப்பு வீணாகக் கூடாது என்று விலகிப் போனாள். தன் முன்னேற்றத்துக்கு கணவன், குடும்பம், குழந்தைகள் இடையூறு என்றுதான் அனைத்தையும் உதறிப் போனாள்.
அதிகார போதை, தான் என்ற மமதை. இத்தனை வருஷம் அதில் மயங்கி தன்னை மறந்திருந்தாள். அவரை, குழந்தைகள் பற்றிய நினைவு கூட இல்லை. அவளை முழுதாக புகழ், மதிப்பு, பாராட்டு, சமூக அந்தஸ்து என்ற போலி கௌரவங்களே கவசமாய் சூழ்திருந்தது. அவ்வப்போது சாய் ஞாபகம் வரும்போதெல்லாம் அதை தட்டி விடப் பழகியிருந்தாள்.சில நாட்கள் மட்டும் அவரின் அணைப்பில் மெய் மறந்திருந்தது நினைவுக்கு வரும்.சில மணி நேரம் அதில் ஆழ்ந்து கிடப்பாள்.
அடுத்து உடனே கம்பெனி, அதன் முன்னேற்றம், செய்ய வேண்டிய வேலைகள் என்று புத்தியை ஆக்கிரமித்துக் கொண்டு விடும்.சாய் அவள் மனதிலிருந்து ஒதுங்கி இருந்தாரே தவிர விலகி விடவில்லை. அவளால் விலக்க முடியவில்லை.
அதனால்தான் அவள் பல ஆண்களை தன் பணி நிமித்தம் சந்திக்க நேர்ந்தாலும் பாதை விலகாமல் இருக்க முடிந்தது.வசுமதியா? நெருப்பு என்ற பாராட்டுதான் அவளுக்கு.
ஒரு அற்புதமான தெய்வத்தின் கரங்களுக்குள் இருந்து விட்டு கேவலம் சாதாரண உடல் இச்சைக்காக சாக்கடையில் விழ முடியுமா?அவள் மகாவிஷ்ணுவின் மார்பில் இருக்கும் மகாலஷ்மி.
அவளுக்குள் ஒரு நம்பிக்கை இருந்தது.எத்தனை வருஷங்கள் ஆனாலும் தான் சாய் என்று போனால் தன்னை இருகரம் விரித்து ஏற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கை அவளிடம் உண்டு
அவளுக்குள் இன்னும் தன் வேலை குறித்து கனவுகள் இருந்தது.
இன்னும் அவள் சாதிக்க வேண்டியது அதிகம் இருக்கிறது. அமெரிக்காவின் மிக முக்கியமான சி.ஈ.ஓக்களில் முதல் இடத்திற்கு வர வேண்டும்.அதற்கான விருதுகள் பெற வேண்டும்.தனியாக சொந்த ஐடி கம்பெனி ஆரம்பித்து, தனக்குக் கீழ் ஆயிரக் கணக்கானவர்கள் பணி புரிய வேண்டும் என்று தணியாத ஆர்வம். அதிகார போதை. ஒருவருக்கு கீழ் கைகட்டி பணி புரிய அவள் விரும்பவில்லை.
அந்த ஆசையை அவளுக்குள் ஏற்றி வைத்தது அவள் அத்தை. சிறு வயதிலிருந்து அவள்தான் வளர்த்தாள். அத்தை கணவனை இழந்தவள். அப்பா பொதுப்பணித்துறையில் வேலை. வசுமதி பிறக்கும்போது பிரசவம் சிக்கலாகி விட வசு அத்தையின் வளர்ப்பில்.அவளை அழகி,அழகி என்றே கூப்பிட்டு கர்வத்தை வளர்த்தாள். நீ கலெக்டர்டீ என்று சொல்லி படிக்க வைத்தாள். ஏராளமான கனவுகள், ஆசைகளுடந்தான் வளர்ந்தாள்.
“வசு பொண்ணுன்னா அவ ஒருத்தனுக்கு பொண்டாட்டியா, அம்மாவா வாழ்ணும்கீறது எதுவும் சட்டம் இல்லை. அவ வானத்துல ஒளிர்ற சந்திரன் மாதிரி. இல்லை, இல்லை, சூரியன் மாதிரி. அவ ஒருத்தனுக்கு அடங்கி, ஒடுங்கி வாழணும்கிறது சட்டம் இல்லை. அவ தனித் திறமைகளும் வளர்த்துக்கணும். மேல, மேலன்னு போ. உன் திறமைகளை வெளிச்சம் போட்டு காட்டு.இதுக்கு எது தடையா இருந்தாலும் அதை தூக்கி வீசி எறிய கத்துக்கோ. குடும்பம், குழந்தை, புருஷன்கிறது எல்லாம் நம்மைக் கட்டிப் போடும் விலங்குகள்.’
சொல்லிச் சொல்லி வளர்த்தாள்.
அத்தை, வசுவின் கர்வத்தில் குளிர் காய்ந்தாள்.
ஆதரவு இல்லாதவள். எந்த வருமானமும் இல்லை. அண்ணா காலத்திற்குப் பிறகு தனக்கு ஆதரவு இல்லை. வசு கல்யாணமாகிப் போயிட்டா த்ன் கதி அதோ கதி. வசு எப்போதும் தன் கூடவே இருக்க வேண்டும் என்று நினைத்தவள் கலயாணம், குடும்பம் என்பது பற்றி அவளுக்குள் வெறுப்பை விதைத்தாள்.
அது நன்றாகவே வேலை செய்தது.
ஆனால் விதி வசுவை சாய் நாதனுடன் முடிச்சு போட்டிருந்தது.
வசுவிடம் கர்வம் இருந்தாலும் அடிப்படையில் அவள் இளகிய மனம் படைத்தவள்.கருணை மனம் கொண்டவள். ஒரு முதியோர் இல்லத்துடன் தன்னை இணைத்துக் கொண்டிருந்தவள் அங்கிருந்த ஒரு வயோதிகப் பெண்மணிக்கு கண் ஆபரேஷன் செய்ய பணம் சேர்த்தாள். எம்.சி.ஏ. படிக்கும்போது பகுதி நேர வேலை செய்து காசு சேர்த்து கண் ஆபரேஷனுக்கு அழைத்து வந்தாள். அங்குதான் சாய் நாதன் அறிமுகம். அப்பாவின் கண் ஆபரேஷனுக்கு அழைத்து வந்திருந்தவர். அங்கிருந்தவர் அனைவருக்கும் வசு பணி விடைகள் செய்வதைப் பார்த்து மனம் இழந்தார் அவளிடம்.
மெல்ல மெல்ல அவளைப் பற்றி விசாரிக்கையில் வெளிப்பட்ட சில விஷயங்கள் அவளைப் பற்றிய ஒரு கனிவான பிம்பத்தைக் காட்டியது. சிறிது நாள் அவளைப் பின் தொடர்ந்தார் சாய் நாதன்.
அவளுடைய சமூகப் பணிகள்தான் அவரைக் கவர்ந்தது.தினசரி தெரு ஓரத்து பிச்சைக்கார்ர்களுக்கு சோறு கொண்டு வந்து தந்தாள். அவள், அவளுடைய தோழிகள் வீடுகளில் மீதமாகும் உணவுகளைக் கொண்டு வந்து தருவாள். ஹாஸ்பிடலில் உள்ள நோயாளிகளுக்கு ஆறுதலையும், ஏழைகள் என்றால் அவர்களுக்கு வேண்டிய, விருப்பப் பட்டவைகளையும் நிறைவேற்றித் தருவாள்.
குழந்தைகளோடு, குழந்தையாய் விளையாடும் அவளின் குழந்தைத் தனம், திறமை, அவற்றை வெளிப்படுத்த முடியாத குடும்பச் சூழ்னிலை என்று எல்லாமே அவரை அவளிடம் ஈர்த்தது.அப்பாவிடம் சொல்லி அவளைப் பார்க்கச் சொன்னார்.
வசுவின் அப்பாவுக்கு இது வராது வந்த மாமணியாய்த் தோன்றியது.
மறுத்த வசுவிடம் கோபித்து சண்டை பிடித்து, செத்துருவேன் என்று பயம் காட்டினார்.
இதான் பொம்பளைங்களுக்கு வந்த சாபம். திருமணம்கிறது ஒரு சூதாட்டம் போல்தான். நீ அவன் கிட்டப் பேசு,உன்னைப் பத்தி எல்லாம் சொல்லு. அவனே ஓடிப் போயிடுவான் என்றாள்.
வசு தனியாகப் பேசினாள் சாய் நாதனிடம். சாய் அவளுடைய இளகிய மனதையும் ஆசைகள், எதிர் பார்ப்புகளைப் புரிந்து கொண்டாள். கடினமாக இருப்பது போல் தோன்றினாலும் உள்ளுக்குள் அவள் இளகிய மனம் படைத்தவள் என்பது புரிய அவர் வசுவுக்கு சத்தியம் செய்து தந்தார்.
எந்தக் காலத்திலும் உன் ஆசைகள், கனவுகளுக்கு நான் குறுக்கே நிற்க மாட்டேன் என்று செய்த சத்தியத்தைக் காப்பாற்றவே அவர் கடைசியில் வசுவையும் பிரிந்தார்.
நெகிழ்கிறது இப்போது மனது. அப்போது கடினமாக இருந்தது.ஆனால் வசு தன் கடமைகளில் தவறவில்லை.மாமியர், மாமனார் மெச்சும்படிதான் நடந்து கொண்டாள். சுக்கனை தன் சகோதரணாக நினைத்து சுக்கா அண்னா என்றுதான் அழிப்பாள். அதில் மயங்கி சுக்கான் அவளுடைய தாசனாகிப் போனான். எல்லோரும் மெச்சும்படிதான் நடந்தாள். சாய் நாதனின் தோளில் தவழும் பூமாலையாய் மடியில் தவ்ழும் குழந்தையாய். கைகளுக்குள் நெகிழும் கலையரசியாக முழுதான் உருகிப் போனாள்.
எம்.சி.ஏ. முடித்து ஒரு ஐடி கம்பெனியில் வேலை கிடைத்த போது மாமியார் சொன்னார்.
படிச்சுட்டு ஏன் அதை வேஸ்ட் செய்யணும்?. திறமையை வீணாக்கக் கூடாது என்றாள். அத்தை மட்டும் அவசரப் பட்டு குழந்தை உண்டாயிடாதே. அப்புறம் அதுக்குப் பால், ஆய் துணி கழுவறதுன்னு உன் காலம் ஓடிப் போயிடும் என்று மாத்திரை வாங்கித் தந்தாள்.அதை யாருக்கும் தெரியாமல் போட்டு வந்தாள்.இரண்டு வருஷம் ஆகியும் குழந்தை இல்லை என்று மாமியார் முணுமுணுக்க ஆரம்பிக்க, சின்ன வெப்பச் சலனம் வீட்டுக்குள். சாய் தனிமையில் கெஞ்சினார்.
யாருக்கும் அடங்கவில்லை அவள். அந்தச் சமயம் அவளுக்கு ஒரு வருஷம் ஜெர்மனி போகும் வாய்ப்பு வந்து கிளம்பிப் போனாள். ஆறு மாசம் கழித்து வந்தவள் சாய் நாதனின் ஆக்ரோஷமான அன்பில் மாத்திரைகளை மறந்தாள்.அவளை வெளியூர் அழைத்து ச் சென்றார். ஒரு மாதம் கழித்து வந்தவள், மாத்திரைகலைப் போடவில்லை. அத்தை அப்போது தன் பெரிய மச்சினன் பையன் கல்யாணம் என்று போயிருந்தாள். போதனை செய்ய ஆள் இல்லை.
வசு உண்டானாள்.கலைக்கப் போகிறேன் என்று குதித்த போது சாய் கெஞ்சினார்.
“வேண்டாம் வசு. இது இந்த வீட்டோட வாரிசு. நீ உன் வேலையைக் கவனி. குழந்தையை நான் பாத்துக்கறேன்” என்றவரின் பேச்சில் அடங்கினாள். ஆறாம் மாசம் , ஒன்பதாம் மாசம் என்று எல்லாம் தானே செய்தார். வாந்தி எடுக்கும் போது கூடவே நின்று கவனித்து வாய்க்கு ருசியானதைச் செய்து கொடுத்து, இரவில் தூங்காமல் கஷ்டப் படும் போது தன் மடியில் போட்டு தூங்க வைப்பார்.
அவளைத் தூங்க விட்டு., தான் கண் விழித்து, சடாரென்று திரும்பி விடாமல், மின்சாரம் போனால் அருகில் அமர்ந்து விசிறி, கால் இழுத்துக் கொண்டால் பிடித்து விட்டு, தினசர் அவளை வாக்கிங் அழைத்துப் போய் என்று தன் அன்பினால் அவளைத் திக்கு முக்காட வைத்தார்.
வீடே அவளை உள்ளங்கையில் வைத்துத் தாங்கியது.
வலி வந்து வசு அழுத போது சுக்கானும் அழுதான்.கண்ணம்மா, கண்ணம்மா என்று சாய் நாதனும் கலங்கினார். பையன் என்ற போது அவனைச் சுக்காந்தான் வாங்கினான்.
வசு எப்படி இருக்கிறாள் என்றுதான் ஓடினார் சாய் நாதனும். அத்தை துணைக்கு வரவில்லை. மாமியார்தான் கூட இருந்தார்.அத்தையை விட மாமியாரின் அருகாமை அவளுக்கு இனிமையாக இருந்தது.
நார்மல் டெலிவரி என்பதால் ஒரே மாதத்தி எழுந்து விட்டாள். மூன்றாம் மாசம் வேலைக்குப் போக ஆரம்பித்து விட்டாள். அப்போதுதான் அவளின் வேலைத் திறமையைப் பாராட்டி அமெரிக்காவுக்கு அனுப்பியது கம்பெனி.
யார் அனுமதியையும் கேட்கவில்லை வசுமதி.
உனக்குச் செய்து தந்த சத்தியத்தை நான் மீற மாட்டேன்.தாராளமா போய்ட்டு வா” என்று அனுப்பி வைத்தார் சாய் நாதன்.
“உனக்காக நான் எப்பவும் காத்துட்டு இருப்பேன், நீ என் உடலோடு கலந்த உயிர். உடல் அழியும்போதுதான் உயிர் பிரியும். நீ எப்படி வந்தாலும் நான் ஏத்துப்பேன். நீ தவறான பாதையில் போவேன்னு நான் சொல்ல்லை. என்னைத் தவிர வேறு யாரையும் உன்னால் ஏத்துக்க முடியாது. நான் சொல்றது, இந்த அழகு, இளமை எல்லாம், அப்படியே வந்தாலும் சரி, அழிஞ்சு போய் வந்தாலும் சரி, என் மனசும், வீடும் உனக்காகத் திறந்திருக்கும்.” என்று இறுக்கி அணைத்து உச்சந்தலையில் முத்தமிட்டு அனுப்பி வைத்தார்.
அதன் பிறகு அவள் மேலே, மேலே பறந்து கொண்டுதான் இருக்கிறாள். அடுத்து, அடுத்து என்று அவளின் திறமைக்கு வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறது. கம்பெனி மாறினாள்.அத்தையைத் தன்னுடன் கூட்டிக் கொண்டாள். அப்பா அவளுடன் வர மாட்டேன் என்று கூறி விட்டு ஓய்வு பெற்ற முதியோர் இல்லத்திற்குச் சென்று விட்டார்.
அத்தையை உலக நாடுகள் முழுதும் சுற்றிக் காட்டினாள். தன் பெருமையான தருணங்களில் அதற்கு முழுக் காரணம் அத்தை என்று அறிமுகப் படுத்தி முன் வரிசையில் அமர வைத்தாள்.
இன்னும், இன்னும் என்று பறந்தாலும் எதையோ இழந்தது போன்ற உணர்வு.
சந்தீப்பிற்கு ஐந்து வயதான போது இந்தியா வந்தாள். குழந்தை அவளிடம் வரவே மறுத்தான். ஒரு நாள் பயணம்.உடனே திரும்பி விட்டாள். அதன் பிறகு தொடர்பு அறுந்து விட்டது.
ஒரு குற்ற உணர்ச்சி, அவர்களைப் பார்க்க மனம் பின் வாங்கியது.வேலை, வேலை என்று மூழ்கி விட்டாள். எந்த கோபமோ, விரோதமோ எதுவும் இல்லை. ஆனால் ஒரு கட்டுக்குள் அகப்பட விரும்பாத அவள் குணம், திறமையால் முன்னேற வேண்டும் என்ற தாகம் அவளை விலக வைத்தது.
ஒரு அற்புதமான கணவன், அவன் அன்பைப் புரிந்து கொள்ளாமல் விலகி வந்து போலி மாயைக்குள் சிக்கிக் கொண்ட அவளை அத்தைதன் கடைசி நாட்களில்தான் விட்டு விலகினாள் என்றாலும் போதனை மட்டும் விலகவில்லை.
அமெரிக்காவின் அந்த நகரத்தின் கௌரவ மேயராக ஒரு நாள் பதவி ஏற்ற போது அத்தை கேட்டாள்.
“குடும்பம்கற கட்டுக்குள் அகப் பட்டிருந்தா உனக்கு இந்தக் கௌரவம் கிடைச்சிருக்குமா? அது சாதாரணம். இது அசாதரணம். இதற்காக அதை விடலாம். தப்பில்லை என்று அவள் குற்ற உணர்ச்சியை, ஏக்கத்தைத் தணித்தாள்.
என்றாலும் நோய் என்று வந்த பின் மனம் அன்பை எதிர்பார்க்கிறது. சாய் கைகளுக்குள் புகுந்து கொண்டு கீமோவின் வலியை, மறக்க நினைக்கிறது. கனவில் அவர் வருவதைத் தடுக்க முடியவில்லை.
“சாய்” என்று மீண்டும் முணுமுணுத்தாள்.
| பகுதி – 1 | பகுதி – 2 | பகுதி – 3 | பகுதி – 4 | பகுதி – 5 | பகுதி – 6 | பகுதி – 7 | பகுதி – 8 | பகுதி – 9 | பகுதி – 10 |