நிசப்த சங்கீதம் – 5| ஜீ.ஏ.பிரபா
நேசம் மறக்கவில்லை சகியே
நெஞ்சம் உறங்கவில்லை.
“பி.பி கொஞ்சம் அதிகமா இருக்கு” டாக்டர் குரலில் கவலை.
“என்ன சாய் எதானும் டென்ஷனா”
அவர் கேள்விக்கு யாரும் பதில் சொல்லவில்லை.முகத்தை,முகத்தை பார்த்துக் கொண்டதில் டாக்டருக்குப் புரிந்து போயிற்று.
“ரிலாக்ஸா இருங்கன்னு சொல்லி சலிச்சுட்டேன்.கேட்டாத்தானே. ஏண்டா செத்தா உனக்குத்தான் நஷ்டம்? டாக்டர் நண்பர் என்பதால் சலித்துக் கொண்டார்.
பதில் சொல்லாமல் தலை குனிந்த சாய்நாதனைப் பார்க்கையில் வேதனையாக இருந்தது எல்லோருக்கும். முதல் அடி வசுமதி மூலம்.அடுத்து சந்தீப் மூலம். வசு பிரிந்து சென்ற ஏக்கத்தை சந்தீப் மூலம் மறந்தார். ஆனால் சந்தீப் இதயத்தில் ஆறத ரணத்தின் மீதே மீண்டும் அடித்தான்.இந்த முறை கொஞ்சம் குரூரமாக.
பிள்ளைகள் பெர்றவர்களின் ஆசையை மதிப்பதில்லை. அவர்கள் தங்களுக்காகச் செய்யும் தியாகங்களை, கஷ்டங்களை கருவேப்பிலையாகத்தான் நினைக்கிறார்கள். தனக்காக இத்தனை செய்தாரே என்று ஒரு நன்றி உணர்வு கூட அவர்களிடம் கிடையாது.தங்கள் ஆசைகளி அவர்கள் நிறைவேற்ற வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர அதே தாங்களும் செய்ய வேண்டும் என்று நினைப்பதில்லை. காலையில் பொம்மை உடைந்த கையோடு சாய் நாதன் டென்ஷன் ஆகி விட்டார்.
“ஏம்மா? ஒரு நாகரீகம் தெரியாதா உனக்கு?. பிச்சைக்காரி மாதிரி டிரஸ் போடறது பேஷன்னு நினைக்கத் தெரிஞ்ச உனக்கு ஒரு அன்னிய வீட்டில் எப்படி நடக்கறதுங்கற நாகரீகம் தெரியாதா?வாழற வீட்டில் பொம்மையை உடைச்சிருக்கியே. ஆர் யூ எ மேட்? சந்தீப் யாருடா இது. அரைகுறையா ஒருத்தியை இழுத்துண்டு வந்து நிக்கறே? ஒரு நல்ல டீசன்ட்டான் நட்பே உனக்கு இல்லையா?முதல்ல அவளை வெளிய கூட்டிண்டு போ”- கத்தினார்.
அதற்குள் ஹரிணி உடைந்த பொம்மை சில்லுகளை எடுத்து அந்த இடத்தைச் சுத்தம் செய்தாள். உடைந்த பொம்மையை ஒட்ட முயற்சித்தாள். முடியவில்லை. அது சில்லு,சில்லாகப் போயிருந்தது.
திருமணம் ஆன புதிதில் வசுமதி ஆசையாக எடுத்த பொம்மை.பெண் பொம்மை. அதற்கு அழகாய் உடை தைத்து, நகைகள் போட்டு அலங்கரித்திருந்தாள். அந்த அலங்காரம் கலையாமல் வைத்திருந்தார்.
சந்தீப் வயிற்றிலிருந்த காலத்தில் அவர் இந்த பொம்மையைத்தான் வசுமதி என்று நெஞ்சோடு அணைத்துக் கொள்வார். அதில் அவளுக்கு கோபம் வரும். ஆக்ரோஷத்துடன் அவரைக் கோபித்துக் கொள்வாள். கது, கன்னம் என்று கடித்து விடுவாள். அவர் தோளில் தலை வைத்துதான் தூங்குவாள்.
சாய் நதன் அழகாகக் கவிதை எழுதுவார். அதை இசையோடு பாடவும் செய்வார். வசுமதி அவர் தோளில் தலை வைத்துப் படுத்தபடி “சாய், எதானும் பாடு” என்பாள்.
அழகினுக் கழகைத் தந்த
அழகியே அம்மையே பூம்
பொழிலிடைப் பூந்துருத்திப்
பொய்யிலி நாதர்,கையில்
மழுவினை மானை ஏந்தும்
மன்னவன் பாகம் கொண்டோய்
தன்னை மறந்து அழகாய் வார்த்தைகள் வந்து விழும். இசையும், கவிதையும் அவரை மெய்மறக்க வைத்து விடும்.தன்னை மறந்து கவிதையில் தோய்ந்து விடிய, விடிய பாடிக் கொண்டிருப்பார். பிரமிப்பில் வசு தூக்கம் தொலைத்து விடுவாள்.
“சாய் எங்கிருந்து உனக்கு இத்தனி அற்புதமான திறமை. அழகாய் வார்த்தைகள் எத்தனை ஜீவகளையோடு விழுகிறது. இசையில் தோய்ந்து இனிமையாய் வருகையில் தூங்க முடியலை என்னால்” என்று அவர் கழுத்தை கட்டிக் கொள்வாள். விடிய, விடிய அவர் நெஞ்சிலேயே படுத்திருப்பாள். விடிந்து தூங்கும் அவளை எழுப்ப மனமில்லாமல் அவர் எழுந்து தனக்கு. அம்மா, அப்பாவுக்கு காஃபி போட்டுக் கொள்வார்.
அதன் பின்னால்தான் சுக்கான் எழுந்து வருவான்.
“என்னா, ராத்திரி பூரா இசைக் கச்சேரியா” அவனுக்கும் புரிந்து விடும்.
எஜமான் தூங்காம உடம்பு கெட்டுப் போயிடும். உனக்கு எதுவுமில்லை. வசு பாவம். வயித்துக்குள்ள பாப்பாக் குட்டி இருக்கு. அதுவும் காலைல வேலைக்குப் போவணும். உனக்கென்ன. வங்கி வேலை. ஃபைல் பாத்தா போதும். அது மண்டையை கசக்கிகிட்டு கம்ப்பூடர் பாக்கணும்” என்று அவன் எப்போதும் வசுமதிக்குத்தான் சப்போர்ட்.
வசுவுக்கு ஐடி கம்பெனியில் வேலை. எம்.சி.ஏ படித்து பிரபல எம்.என்.சி கம்பெனியில் வேலை பார்த்தாள். நிறைய சாதிக்க வேண்டும் என்ற ஆசை. அதற்குத் தடையாக நின்றதில்லை சாய் நாதன். ஆனால் அவள்தான் எந்த அன்பையும் புரிந்து கொள்ளாமல் எல்லாவற்றையும் உதறிப் போனாள்.
சாய் நாதனின் வசு பொம்மையாக அது மாறியது. இரவில் மெத்தையில் அதை தன் மார்பில் கிடத்திக் கொண்டு வசும்மா, வசும்மா என்று அலுவலக விஷயங்கள், சந்தீப்பின் குறும்புகள், விளையாட்டை அவளிடம் பகிர்ந்து கொள்வார்.
சந்தீப்பிற்குமே அது வசும்மா.அவன் சிறிது வளர்ந்து குறும்புகள் அதிகரித்த பிறகு அவர் பொம்மையை எடுத்து வைத்து விட்டார்.ஒவ்வொரு வருஷமும் கொலுவில் எடுத்து வைப்பார். அதைத் தன் உயிராக நினைப்பார்.
அதை உடைத்ததும் அவர் நம்பிக்கையே உடைந்து போனது போல் உணர்ந்தார்.வசு வருவாள் என்று அவர் நம்பினார். ஆனால் உடைந்ததும் மனசு நொறுங்கி விட்டது. அதை மேலும் நொறுக்கியவன் சந்தீப்.
சாய் நாதன் திட்டியவுடன் மித்ரா அழுதபடி வெளியில் ஓடினாள். அவள் பின்னாடியே பதற்றத்துடன் ஓடிய சந்தீப்பை வெறுப்புடன் பார்த்தாள் ஹரிணி.
இந்த வீட்டுக்கு சிறிதும் தகுதி இல்லாத ஒருத்தியை காதலித்த சந்தீப்பை அவளால் மன்னிக்க முடியவில்லை.அப்பாவை, இந்த வீட்டை கேவலப் படுத்தியிருக்கிறாள். அவளைக் கெஞ்சியபடி பின்னாடியே ஓடியிருக்கிறான் சந்தீப் என்ற வருத்தம் அவளிடம்.
“அப்பா நீங்க கொஞ்சம் நிதானமாப் பேசியிருக்கலாம். அவ அமெரிக்கால படிச்சவ.”
“எங்க படிச்சா என்னம்மா? பண்பாடுங்கறது எல்லாப் பக்கமும் ஒன்றுதானே”
“அந்த வழக்கம் அவளுக்கு. அதை விட முடியலை.”
“ஏன் ஹரிணி பொறந்தது இங்கதானே. அமெரிக்காதான் பிடிச்சிருக்குன்னா அந்த ஊர் ஆளுங்களையே அம்மா,அப்பான்னு கூப்பிட வேண்டியது தானே.”
சுக்கான் கேள்வி கேட்கும் போது சந்தீப் உள்ளே வந்து விட்டான்.
“சுக்கான், நீ ரொம்ப இந்த வீட்டு விஷயத்துல தலையிடறே” என்றான்
“ஏன், என் வீட்டு விஷயம்தானே இதுவும்?”
“நீ இந்த வீட்டு வேலைக்காரன். அதை முதல்ல ஞாபகம் வச்சுக்க”
“டேய்” சாய் நாதன் நிலை மறந்தார். பாய்ந்து சந்தீப் கன்னத்தில் அறைந்தார். “ராஸ்கல், யாரைப் பார்த்து என்ன வார்த்தை பேசறே?”
“அப்படித்தான் பேசுவேன்.ஒரு வேலைக்காரன் முன்னாடி என்னை அடிக்கறீங்களே அது நாகரீகமா?வீட்டுக்கு வந்த ஒரு பொண்ணை அவமானப் படுத்தி அனுப்பி இருக்கீங்களே? இது நாகரீகமா?” ஆக்ரோஷத்துடன் கத்தினான்.
“அவளைச் சொன்னா உனக்கு ஏன் கோபம் வருது?” சாய் நாதன்
“ஆமாம். அவளைத்தான் நான் கல்யாணம் செஞ்சுக்கப் போறேன்.”
“இதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன்” பதறினார் சாய் நாதன்.
“நான் பர்மிஷன் கேக்கலை. நியூஸ்தான் சொல்றேன்”
அதிர்ந்து நின்றார் சாய் நாதன் சந்தீப்பா பேசுவது. அப்பா என்று குழைவும், கொஞ்சலுமாய்ப் பேசும் தன் மகனா? இப்படித் தூக்கி எறிந்து பேச யாரிடம் எங்கு கற்றான்.”தான் தப்பு செய்து விட்டோமா?
ஹரிணியே கூட அதிர்ந்து நின்றாள்.
எப்போதும் சந்திப் அப்பா என்று கொஞ்சலாய்த்தான் பேசுவான். அதுவும் எட்ட நின்று பேசவே மாட்டான். சோபாவில் தோளை உரசியபடி அமருவான். பின்னாடியிருந்து கழுத்தை கட்டிக் கொள்வான். அங்கும் இங்கும் போவான், சட்டென்று அப்பா என்று ஒரு முத்தம். சந்தோஷம் அதிகமானால் அவரை அப்படியே தூக்கி தட்டாமலை சுற்றுவான்.
சில சமயம் ஹலோ மிஸ்டர் சாய் நாதன் என்பான். சுக்கானைக் கூட இப்படிப் பேசியதில்லை.சம்பளம் வாங்கியதும் சுக்கானுக்குப் பிடித்த இனிப்பு பூந்து, முந்திரி பக்கோடா வாங்கித் தருவான். வாரா, வாரம் அவ்னுக்குப் பிடித்த சாய்ராம் கோவிலுக்கு சந்தீப்தான் கூட்டிப் போவான்.
அவனா இப்படி?
சுக்கான் கையில் ஒரு பையுடன் வந்து விட்டான்.
“நீ எங்கடா பையோட வந்து நிக்கறே? அடுத்த குண்டா?”
“நான் மார்லயும். தோல்லயும் போட்டு வளர்த்த பையன். அவனே என்னை வேலைக்காரன்னு சொன்னபிறகு நான் என்னத்துக்கு இங்க இருக்கணும்?”
“உன் தன்மானத்தை நான் தடுக்க மாட்டேன். ஆனா நீயும் போயிட்டா எனக்கு யாருடா இருக்கா?”சாய் நாதன் கை கூப்பிக் கலங்கினார். அதில் சுக்கான் பதறி விட்டான். சாய் நாதனின் கை, கால் நடுங்கியது. விரல்கள் நடுங்க எழுந்து நின்றவர் அப்படியே தடுமாறி விழுந்தார்.
“எஜமான்” சுக்கான் ஓடி வந்து அவரைத் தாங்கிப் பிடித்தான்.
“ஹரிணிக்கு என்னவென்று புரிந்து விட்டது.
ஓடி வந்து அவருக்கு முதலுதவி செய்து விட்டு குடும்ப டாக்டருக்குப் போன் செய்தாள். அவர் வந்து பார்த்து ஒரு ஊசி போட்டு விட்டு வெளியில் ஹரிணியைக் கூப்பிட்டார்.
“ஹரிணி, உனக்குத் தெரியும். லைட்டா ஸ்ட்ரோக். ஹாஸ்பிடல் போயிடறது பெஸ்ட்” என்றார். ஹரிணி உடனே அப்பாவுக்கு போன் செய்ய சங்கரன் வந்து விட்டார்.மடமடவென்று அவரைக் காரில் ஏற்றி தன் மருத்துவமனைக்குக் கொண்டு வந்து விட்டார்கள்.
எல்லா டெஸ்டும் எடுத்து அவரைத் தனி ரூமில் படுக்க வைத்து சிறிது நிதானம் ஆன பிறகு ஹரிணி மெதுவாக அவர் அருகில் வந்து அமர்ந்தாள்.
“நீ என்ன சொல்லப் போறேன்னு தெரியும். ஆனா நோ?”
“ஆனா, நானும் நோ”
“என்னம்மா?” அதிர்ந்தார் சாய் நாதன்.
“ஏன் மாமா என்னை மிக மோசமா வேண்டாம்னு சொல்லியிருக்கார் ஒருத்தர்.என் தன்மானத்தை குத்திக் கிழிச்ச பிறகு என்னால அவரை ஏத்துக்க முடியுமா?” வாழப் போறவர் மனசுல் கொஞ்சமானும் ஒரு விருப்பம் இருக்கணும். அது இல்லைனா வாழக்கைல என்ன சுவாரஸ்யம்” என்றவள் கேள்விக்கு என்ன பதில் சொல்வ்து என்று தெரியவில்லை.
தன் மனதே அதிர்ச்சி அடைந்திருக்கிறது என்றால் அவள் மனது எப்படி நிலை குலைந்திருக்கும் என்று உணர முடியும் அவரால். ஆனால் அவளைத் தவிர் வேறு யாரையும் தன் வீட்டு கஷ்மியாக நினைக்க முடியவில்லை…
சுக்கான் ஓரமாக மௌனமாக இருந்தான். அவனை எப்படிச் சமாதானம் செய்வது என்றுத் தெரியவில்லை. அவனுக்கு எந்த ஆறுதல் வார்த்தைகளும் காயத்துக்கு மருந்திடாது.
அன்பால் பின்னப் பட்ட உலகம் அவனுடையது.
அதை மிதித்து எறிந்து விட்டான் சந்தீப்.
“சுக்கான்” மெல்ல அழைத்தார். அருகில் வந்து நின்றான்.
“உனக்கு என் ஆறுதல் வார்த்தைகளால் எந்தப் பயனும் கிடையாது. ஆனா எனக்குன்னு இருக்கறது நீ மட்டும்தான். நீயும் என்னை விட்டுப் போகப் போறியா?”
அவர் வார்த்தைகளில் கதறி விட்டான் சுக்கான்.
“உன்னை விட்டுப் போவேன்னு நினைக்கிறியா எஜமான்?”என்ற அவர் கண்ணீர் ஹரிணியையும் கலக்கியது.தேங்கிய கண்ணீருடம் அவர் பக்கத்தில் நின்றாள்
“வீடு இப்போ போர்க்களமா இருக்கு. இதுல என் மனசுக்கு நிம்மதி, சந்தோஷம் நீங்க மட்டும்தான் தர முடியும். நீங்களும் விலகிட்டா எப்படி? கூட இரு சுக்கான். அவன் விரும்பிய பொண்ணை அவனுக்குச் செஞ்சு வைச்சுட்டு நாம எங்கேயனும் போயிடலம்.”
“என் வீட்டுக்கு வந்துருங்கப்பா.”
ஹரிணி புன்னகைக்க முயன்று தன் கண்ணீரை மறைத்துக் கொண்டாள்.அதை எதுவும் செய்ய முடியாத வேதனையுடன் பார்க்கத்தான் முடிந்தது அவரால். சந்தீப் குறித்து அவர் மனசில் ஒரு கசப்பு பரவியது.
காதல் இவ்வளவு தூரம் ஒருத்தர் கண்ணை மரைக்க முடியுமா?மனங்களைப் புண்படுத்தி விட்டு அதில் நிம்மதியாக வாழ்ந்து விட முடியுமா?
புதை மணலில் அஸ்திவாரம் தோண்டுகிறான். இது ஆட்டம் கண்டு விடாதா? உதிர்ந்து விடாதா?
மித்ரா தோற்றம் அழகாக இருக்கலாம்.ஆனால் மனசு. மோகம் தீர்ந்து சில நாட்களில் வெறுப்பு வந்து விடும். அப்போது வாழ்க்கை விஷம் ஆகிடாதா? இப்படி, வெறுப்பும். விரக்தியுமாய் வாழவா அன்று அத்தனை தியாகங்கள் செய்தது?
அவர் கண்ணில் படர்ந்த வேதனையை சங்கரனால் உணர முடிந்தது.
“எல்லாம் சரியாகும்” சாய் நாதன் தோளில் தட்டித் தந்தார்.
“வாலிப வயசு. புரியலை. ஒருனாள் புரியும்.அதுவரை அமைதியா இரு”
நண்பரின் கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டார் சாய் நாதன்.
அதில் தெரிந்த தனிமை உணர்வு, வேதனை அவருக்குப் புரிந்தது.
| பகுதி – 1 | பகுதி – 2 | பகுதி – 3 | பகுதி – 4 | பகுதி – 5 | பகுதி – 6 | பகுதி – 7 | பகுதி – 8 | பகுதி – 9 | பகுதி – 10 |