வரலாற்றில் இன்று – 01.10.2020 சர்வதேச முதியோர் தினம்
சர்வதேச முதியோர் தினம் அக்டோபர் 1ஆம் தேதி 1991ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது. மருத்துவ வசதி மற்றும் கல்வி அறிவால் மனிதனின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் உலகளவில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
வயதான மூத்த குடிமக்களுக்கும் உரிய உரிமைகளையும், சுதந்திரத்தையும் அளிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையிலேயே இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
உலக சைவ தினம்
உலக சைவ தினம் அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. வட அமெரிக்கன் சைவக் கழகம் 1977ஆம் ஆண்டில் இத்தினத்தை அறிவித்தது. இதனை 1978ஆம் ஆண்டில் சர்வதேச சைவ ஒன்றியம் அங்கீகரித்தது. மகிழ்ச்சி, கருணை மற்றும் சைவ வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
அன்னி பெசண்ட்
பெண் விடுதலைக்காகப் போராடிய அன்னி பெசண்ட் 1847ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி லண்டனில் பிறந்தார். அன்னி பெசண்ட் இந்திய விடுதலை போராட்டத்திற்கு ஆதரவாக காமன் வீல் என்ற வாரப் பத்திரிகையை 1913ஆம் ஆண்டு துவங்கினார். 1917ஆம் ஆண்டில் கல்கத்தாவில் நடந்த மாநாட்டில் இந்திய காங்கிரசின் தலைவராக ஓராண்டிற்கு தேர்வு செய்யப்பட்டார்.
இந்திய விடுதலைக்காக பல போராட்டங்களில் கலந்து கொண்டு சிறைக்கு சென்ற அன்னி பெசண்ட் 1933ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி தனது 85வது வயதில் சென்னையில் மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
தேசிய தன்னார்வ இரத்த நன்கொடை தினம், அக்டோபர் 1ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. ஒரு நபரின் வாழ்வில் இரத்தத்தின் தேவை மற்றும் முக்கியத்துவத்தை பகிர்ந்து கொள்ளும் வகையில் 1975ஆம் ஆண்டு The Indian Society of Blood Transfusion and Immunohaematology மூலம் இது முதன்முதலாக கொண்டாடப்பட்டது.
1928ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி தமிழ் திரைப்பட நடிகர் சிவாஜி கணேசன் விழுப்புரத்தில் பிறந்தார்.
1971ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி வால்ட் டிஸ்னி வேல்ட் புளோரிடாவில் அமைக்கப்பட்டது.