செல்லுலாய்ட் சோழன் ! | மு.ஞா.செ. இன்பா
பாட்டும் நானே பாவமும் நானே….
கணேசமுர்த்தி ! இதுதான் சிவாஜியின் இயற்பெயர். திருச்சிராப்பள்ளியின் பொன்மலை பக்கத்தில் சங்கலியாண்டபுரத்தில் சிவாஜி இருந்த காலம் அது. சங்கலியாண்டபுரத்தில் இருந்து பார்த்தால் மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் பளிச் என்று தெரிவார்.
கணேசமுர்த்தி என்ற கணேசனுக்கு காலை எழுந்தவுடன் உச்சிப் பிள்ளையாரைத் தரிசிப்பதுதான் முதல் வேலை. கணேசனின் தாய் இராஜாமணி அம்மையார் அதைத்தான் தன் மகனுக்குச் சொல்லியும் கொடுத்திருந்தார். காலையில் தலை நிறைய எண்ணெயை தாய் தேய்த்து விடும்போது, உச்சிப் பிள்ளையாரைப் பார்த்து இரசிப்பதுதான் கணேசனுக்கு வாடிக்கை.
திருச்சி ! தற்போது உள்ளது போல நெருக்கமான மக்கள் தொகை ஊர் அல்ல. பெரிய இடைவெளி விட்டுதான் ஒவ்வொரு வீடுகளும் அமைந்து இருக்கும். வீடுகளின் முன்புறம் தென்னை மரங்களும், வாழைமரங்களும் நிறைந்து காணப்பட்டன. எந்த வீட்டிலிருந்து பார்த்தாலும், காவிரி ஆறு நொங்கு நுரையுடன் ஓடிப்பாயும் அழகு தெரியும். நிலவு என்ற வீணையில் முகில் என்ற கம்பி இசையாய் உறவாடிக் களிப்பது போல…ஆற்றைத் தழுவி வரும் தென்றல், சுமந்து வரும் ஈரப்பதத்தை ஏற்பதற்கு என்று மரங்கள், காதலியாத் தவம் கிடக்கும்
மாட்டு வண்டிகள் பெரிதும் பயன்பாட்டில் இருந்த காரணத்தால் மாடுகளின் சாணங்கள் சாலைகளில் சிதறிக்கிடந்து, காலில் மிதிபடும்.
சலவைத் தொழிலாளர்களின் குடும்பங்கள் ஊரைத்தாண்டி, ஆற்றின் கரையோடும் தங்கள் குடிசைகளை வைத்திருந்தார்கள்.
ஆங்கிலேயர்கள் இந்தியக் கூட்டமைப்பை ஆண்டு கொண்டிருந்ததற்கு அடையாளமாக ஆங்காங்கே கிறிஸ்தவ ஆலயங்களும், கல்விக்கூடங்களும் உருவாகிக் கொண்டிருந்தன.
சிறு குழந்தைகளுக்கு மதிய உணவு தருவதாக ஆசைகாட்டி, மக்களின் மூளையைச் சலவை செய்து, கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றிக் கொண்டிருந்தார்கள் ஆங்கிலேயேர்கள் !
சங்கிலியாண்டபுரத்தில் கிறிஸ்தவர்களால் நடத்தப்பட்ட கல்விக்கூட்டம் ஒன்று இருந்தது. ஓலைகளினால் அமைக்கப்பட்டிருந்த அப்பள்ளியின் நான்கு பக்கங்களும் திறப்பாகவே இருந்தது. கூரை மட்டும் ஓலைகளைத் தாங்கிக் கொண்டிருந்தது. அங்கிருந்த கரும்பலபை ஒன்றுதான், கல்விக்கூடம் என்ற அதன் பெயரை மற்றவர்களுக்கு சொல்லிக் கொண்டிருந்தது. கணேசனும் அப்பள்ளியில்தான் படித்து வந்தான். கிறிஸ்து பிறந்த காலங்களில் அப்பள்ளியில் நடந்த சில கலை நிகழ்ச்சிகளில் கணேசன் பாடவும், ஆடவும் செய்தான்.
கிறிஸ்தவ மறைநூலின் சம்பவங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டமைந்த அந் நிகழ்ச்சிகளில் நடித்த கணேசனுக்கு நடிக்க முதல் அச்சாரமிட்டவர்கள் கம்பளக் கூத்துக்காரர்களே !
திருச்சியில் அப்போத முகாமிட்டிருந்த கம்பளத்து கூத்துக்காரர்கள், கட்டபொம்மன் வரலாற்றைக் கூத்தாக நடத்திக் கொண்டிருந்தார்கள். ஒரு சிறிய தள்ளுவண்டியில் கூத்து நடப்பதை விளம்பரம் செய்துகொண்டு போவதுதான் விளம்பரமுறை !
கம்பளத்துக்காரர்களும் அதே முறையைக் கடைபிடித்து விளம்பரம் செய்தார்கள். பள்ளியை விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த கணேசன் அதைப் பார்த்தான் மனதிற்குள் ஒரு துடிப்பு. எப்படியாவது அப்பாவை அழைத்து கொண்டு கூத்து பார்க்கப் போய்விட வேண்டும் என முடிவு செய்தான்.
வீட்டிற்கு வந்த கணேசன் கையில் இருந்த சிலேட்டை வீட்டினுள் வைத்துவிட்டு, வீட்டின் முற்றத்திலிருந்த கிணற்றடியில் முகம் அலம்பிக் கொண்டிருந்த தந்தை சின்னையா மன்றாடியாரிடம் நாடகத்திற்கு அழைத்தக் கொண்டு போகச் சொல்லி அடம்பிடித்தான்.
கணேசன் ஏதாவது ஒன்று வேண்டும் என்று அடம்பித்து விட்டால், அந்த தேவை நிறைவேறும் வரை விடமாட்டான் என்பது மன்றாடியாருக்குத் தெரியும். கூத்திற்கு அழைத்துக் கொண்டு போவதாக ஒத்துக் கொண்டார். கணேசனுக்கு மகிழ்ச்சித் தாங்க முடியவில்லை. தந்தையுடன்கூத்துப் பார்க்கப் போன கணேசனுக்கு இன்ப அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.
கூத்து கட்டிக் கொண்டிருந்த கம்பளக் கூத்துக்காரர்கள் கூத்தில் இடம்பெறும் சிறிய வேடங்களுக்கு அவர்கள் எங்கு கூத்து போடுகிறார்களோ, அந்த ஊரிலுள்ள சிறுவர்களைப் பயன்படுத்திக் கொள்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்கள். அந்த வழக்கத்தின் படி கூத்துப் பார்க்கப் போன கணேசனை தங்கள் கூத்தில் வெள்ளைக்காரச் சிப்பாய் வேடத்தில் நடிக்க வைத்தார்கள். மூக்கும் முழியுமா இருந்த கணேசனுக்கு சிப்பாய் வேடம் தந்த கம்பளக் கூத்துக்காரர்கள்தான், முதன்முதலில் கணேசனை நடிப்பிற்கு அழைத்து வந்தவர்கள்.
கூத்தில் வெள்ளைக்காரச் சிப்பாய் வேடத்தில் நின்ற கணேசனுக்கு விடுதலைப் புலியாய் சீறிய கட்டபொம்மனின் வீரத்தைக் கண்டு வியப்பு ஏற்பட்டது. வியப்பு காதலாய் மாறியது. தன்னையும் அறியாது கட்டபொம்மனை நேசிக்க ஆரம்பித்தான்.
கூத்து முடிந்து வீட்டிற்கு வந்த கணேசனின் மனதில் கட்டபொம்மன்கோலோச்ச ஆரம்பித்தான். வீரமறவன் கட்டபொம்மனாக ஒருநாளாவத வேஷம் கட்டிவிட வேண்டும் என்ற வேட்கை கணேசனின் மனதில் இறுமாப்பாய் இருக்கை இட்டுஅமர்ந்திருந்தது. அப்போது கணேசனுக்கு வயது ஏழு. கள்ளம் கபடம் இல்லா அந்தப் பிஞ்சு மனதில் கட்டபொம்மன் காவல் தெய்வமாய் உருமாறியிருந்தான்.
அதே நேரத்தில் திருச்சியில் முகாம் இட்டிருந்த இன்னொரு நாடகக்குழு மதுரை சிறீ பாலகான சபா, சிறுவர்களை வைத்து புராண நாடகங்களை நடத்திக் கொண்டிருந்தது. யதார்த்தம் பொன்னுசாமி என்பவரால் நடத்தப்பட்டு வந்த அந்த நாடகக்குழு,திருச்சியில் நாடகங்களை முடித்துவிட்டு திண்டுகல்லுக்கு முகாமை மாற்றிக் கொண்டிருந்தது.
சிறுவர்கள் முகாமின் பொருட்களை மாட்டு வண்டியில் அடுக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்த கணேசனுக்கு அந்தக் குழுவில் சேர வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டடுவிட்டது. வீட்டிற்குத் தெரியாமல் அக்குழுவில் எப்படியாவது சேர்ந்து விடவேண்டும் எனத் திட்டமிட்டு, தான் ஒரு அநாதை என்று கூறி நாடகக் குழுவில் சேர்ந்து கொண்டான்.
மதுரை பாலகான சபாவில் சேர்ந்த கணேசனுக்கு திண்டுக்கல்லில் நடிப்பதற்கான பயிற்சிகளை ஆரம்பித்தார் பொன்னுசாமி.
கணேசனின் விழி காட்டிய அப்பாவித்தனமும், அந்தக் கருவிழி ஓட்டத்தில் தெரிந்த ஒருவித ஈர்ப்பும், கன்னிமாடத்து சீதை வேடத்துக்குச் சரியா இருக்கும் என்று கனித்த பொன்னுசாமி அந்த வேடத்திற்கு மட்டுமே கணேசனுக்குப் பயிற்சி அளித்தார்.
ஜனகனின் மகள் சீதை, கன்னிகா மாடத்தில் அமர்நது கொண்டு வில்லை உடைத்து யார் தனக்கு மாலை சூட வருவார்களோ என்பதை பயத்துடனும், ஆவலுடனும், பரபரப்புடனும் பார்ப்பதாகக் காட்சி !
பல நாடுகளைச் சேர்ந்த இளவரசர்கள் சுயம்வரப் போட்டியில் கலந்து கொண்டு வில்லை உடைக்க முயலும்போது பரிதவிப்போடு சீதை பார்பது போலவும், இராமன் வில்லை எடுத்து உடைக்கும் போது, தன் வேண்டலை இறைவன் கேட்டான் என்ற ஆனந்தத்தை விழிகளில் காட்டுவது போலவும் கணேசன் நடிக்க வேண்டும்.
நாடக உலகில் சீதை வேடத்தில் கேணசனின் முதல் அரங்கேற்றம், திண்டுக்கல்லில் நாடகம் அரங்கேறியது. கணேசன் எப்படி நடிப்பானோ என்ற பதட்டம் பொன்னுசாமிக்கு…
யாரென இந்தப் புருஷனை அறியனே……..
என் ஆசை கிளியே,
என் முன்நிற்பவன்
யாரென இந்தப் புருஷனை அறியேனே….
என கணேசன் நளினத்தோடு பாட்டு பாட, பெண்மையின் உச்சக்கட்டம் பதிவுகளாக அரங்கேறின. பொன்னுசாமிக்கு மனதில் ஒரு நிம்மதி ! தேறிவிட்டான் தன் மாணவன் என்று !
உருவாய் எழுதும் சித்திரம் உயிர்பெற்று எழுந்தாற்போல, உன்னதமான என்முன் நிற்பது மாதவமோ ! என கணேசன் நடிப்பில் சீதையாக உருமாறிபோது பொன்னுசாமியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர். கணேசனிடம் ஏதோ இருக்கிறது என்பது மட்டும் அவருக்குத் தெரிந்தது.
நாடகம் முடிந்தவுடன் பொன்னுசாமி கணேசனைத் தட்டிக்கொடுத்து, ஒரு அர்த்தமுள்ள புன்னகையைப் பதிவாக்கினார். நாடக சபாவில் இருந்த காக்கா இராதாகிருஷ்ணனும் சேலத்தைச் சேர்ந்த நடேசனும் கணேசனின் முதல் நாள் நடிப்பைப் பார்த்து, அனந்தத்தில் கணேசனைக் கட்டிப் பிடித்துப் பாராட்டினார்கள்.
கணேசனின் நாடக வாழ்க்கை திண்டுக்கல்லில் தொடங்கியது போல, கணேசன் முதன்முதலாக திரைப்படம் பார்த்ததும் திண்டுக்கல்லிலேயே அமைந்தது.
வள்ளித் திருமணம் என்ற படத்தைத் தயாரித்த கல்கத்தா பயோனியர் பிலிம் கம்பெனி அடுத்தது தயாரித்து இருந்த படம் கிருஷ்ணலீலா. அறுபது பாடல்களோடு வெளியான இந்தப் படத்தில் சி.எஸ்.ஜெயராமன் கிருஷ்ணணாகவும், பி.எஸ. சிவபாக்கியம் தேவகியாகவும் இடையச்சியாக சி.வி.வி.பந்துலுவும் அய்யர் வாசுதேவராகவும் நடித்திருந்தார்கள்.
இப்படத்தைப் பார்க்க தனது நாடகக் குழுவை அழைத்துப் போயிருந்தார் பொன்னுசாமி.
பெரிய திரையில் ஒளியில் பிறக்கும் மனிதர்கள் ஆடுவதும், பாடுவதும் கணேசனுக்கு வியப்பைத் தந்தது. அறிவியலின் வளர்ச்சியைப் புரியாத வயது கொண்ட அவனுக்கு எல்லாமே மாயாஜாலம் போலத் தோன்றியது.
படம் முடிந்து நாடக முகாமுக்கு வந்த கணேசன் தனது நண்பர்களுடன் படத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தான்.
எதில் நீ புகழ் பெற விரும்புகிறாயோ அத்துறையில் உன்னையும் அறியாது உனக்குள் ஈடபாடு வளரும் என்ற தத்துவ நியதி இங்கே உண்மையாய் நின்றது.
திண்டுக்கல்லில் சீதையாக நடித்த கணேசன் பழனியில் சூர்ப்பனகையாக அரிதாரம் பூசிக்கொண்டான். அழகிய சுந்தர் சூர்ப்பனையாக வந்து, இலட்சுமணனை மயக்க வேண்டும். அதே இலட்சுமணனிடம் அவமானப்பட்டு மூக்கு அறுபட வேண்டும். இதுதான் கணேசனின் வேடம்.
கணேசனுக்கு ஆடல் உண்டு, பாடல் உண்டு, காதல் உண்டு, கோபம் உண்டு. பல அபிநயங்களைக் கொண்ட இந்த வேடம் கணேசனின் நடிப்பைப் பறைசாற்றும் விதமாக அமைந்தது.
சூர்ப்பனகையாக கணேசன் அசைந்து வந்து கையில் நளினத்தோடு முந்தானை பிடித்தபோது எழுந்த கரவொலி அடங்க வெகு நேரம் பிடித்தது.
இதே பழனியில் கிருஷ்ணலீலா நாடகத்தில் யெளவன பூதனையாகவும், பம்பாய் மெயிலில் இரண்டாவது கதாநாயகியாகவும், கதரின் வெற்றிநாடகத்தில் போராட்ட மங்கையாகவும் கணேசன் நடித்திருந்தான்.
பழனியில் இரண்டு ஆண்டுகளாக நாடகம் நடத்திக் கொண்டிருந்த சபா,தன் முகாமை மதுரைக்கு மாற்றியது. மதுரையில் கணேசனுக்கு தேவகி வேடம், கிருஷ்ணனைப் பெற்றெடுக்கும் தாயாக, வாசுதேவனின் மனைவியாக நடித்திருந்தான்.
மங்கள கான சபா தங்களது புதிய நாடகமான தசாவதாரத்தை மதுரையில் அரங்கேற்றியது. தந்திரக் காட்சிகளும், மாயாஜாலக் காட்சிகளும் அதிகம் இடம்பெற்ற இந்நாடகம் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
மதுரையில் தெம்புடன் இருந்த சபாவில் சில துயர நிகழ்வுகள் அரங்கேறின. கணேசனின் நண்பர்களான சுப்பையா, பிறிதொரு கணேசன் ஆகிய இருவரின் திடீர் இறப்புகள் நாடகக் குழுவை துயரத்தில் ஆழ்த்தியது.
மகிழ்ச்சி அதிகம் இருந்துவிட்டால், உடனே அங்கு ஒரு துயரத்தை வைப்பது இறைவனின் குரூர வாடிக்கை, அவனின் இருப்பை உணர்த்த அவன் செய்யும் சிறுபிள்ளைத்தனமான விளையாட்டு, அதன் பெயர்தான் விதியோ…. ?
(தொடரும்)
1 Comment
A very well written article, Sir!