நிசப்த சங்கீதம் – 4| ஜீ.ஏ.பிரபா

 நிசப்த சங்கீதம் – 4| ஜீ.ஏ.பிரபா

சோலை மலரொளியோ – உனது
சுந்தரப் புன்னகைதான்

“பாத்து,பாத்து”- பதறினார் சாயி நாதன்.

“இந்தா, என்னத்துக்கு இப்படி பதறுதே. எம்புட்டு வருஷமா நான் இதை எல்லாம் இறக்கித் தாரேன். நீ பத்திரமா பிடிச்சு இறக்கு.அது போதும்.”- சுக்கான்.

“பொம்மை எல்லாம் என்னுதுடா”

ஆங், சொல்லுவே. நான் அங்கங்கே போனப்பா, வசுமதியம்மா சொல்லி விட்டு வாங்கிட்டு வந்தது.இந்தா பாரு, இது மரப்பாச்சி, திருப்பதியில வாங்கினது.உன் புள்ளைக்கு ஆன வயசு இதுக்கு.”

“சரிடா. ஆனா காசு என்னுது”

“இது என்ன, உன்னுது, என்னுதுன்னு பிரிச்சுப் பேசற? நான் என்ன உன் வூட்டு வேலக்காரனா? சம்பளம் எவ்வளவு கொடுத்தேன்னு சொல்லு.”

உண்மைதான். இன்று வரை சம்பளம் என்று சுக்கானுக்கு எதுவும் கொடுத்ததில்லை.சாய் நாதனைப் போலவே சகல உரிமையுடன் வாழ்ந்தான் சுக்கான். அப்பா சாய் நாதனுக்கு என்ன செய்தாலும் அதை சுக்கானுக்கும் செய்து விடுவார்.அவனுக்கு என்ன இஷ்டமோ அதைச் செய்யட்டும் என்று விட்டார். மாதம் ஒரு சம்பளம் என்று அவன் பெயரில் வங்கிக் கணக்கில் சேர்ந்து விடும்.சாவதற்கு முன் அவனை வங்கிக்கு அழைத்துச் சென்று அதை டெபாசிட் செய்து வட்டி அவன் கணக்கில் சேரும்படிச் செய்து பாஸ் புக்கை கையில் கொடுத்தார்.

எனக்கு என்ன தெரியும் இதைப் பத்தி என்று சுக்கான் அதைக் கையில் வாங்கவில்லை. என்றாலும் சாய் நாதன் மாதா மாதம் அவன் கணக்கில் பணம் போட்டு விடுவார். அவனிடமும் சொல்லி விடுவார்.

“அப்படின்னா, என் சாப்பாட்டுக்கு, வீட்டுல இடம் கொடுத்திருக்கியே அதுக்கு எடுத்துக்கோ என்றான்.

“அது நீ இங்க செய்யற வேலைக்கு சரியாப் போச்சு” என்றார்.

“அப்ப, நான் இந்த வீட்டு வேலைக்காரனா என்று கேட்டு ஒருநாள் முழுக்க அழுதான்.சமாதானப் படுத்திய பிறகு வருஷம் ஒருமுறை தான் கேட்கும் சம்பளத்தை த்ரணும் என்று கேட்டு வாங்கினான். அதில் வீட்டில் உள்ளவர்களுக்கு தீபாவளிக்கு துணிகள் வாங்கி வந்தான். அதிலிருந்து தீபாவளிக்கு அவன் வாங்கித் தரும் துணிகள்தான். எல்லோரையும் கடைக்கு அழைத்துச் சென்று விரும்பியதை வாங்கித் தருவான். வசு கூட அவன் அன்புக்கு கட்டுப் பட்டாள்.

அவனை என்னவென்று சொல்வது?

“நண்பன், காதலன், ஆசான், சத்குரு,தாய், தந்தை” என்ன பெயரிட்டு அழைத்தால் தகும்.?

“எங்கிருந்தோ வந்தான்,இடைச் சாதி நான் என்றான்

இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்?” என்றுதான் பாடத் தோன்றும்.

சந்தீப்புக்கு சுக்கான் என்றால் உயிர். சுக்கா சுக்கா என்று பின்னோடவே அலைவான்.அவனை யாரும் ஒரு வார்த்தை சொல்லிவிடக் கூடாது. சாய் நாதன் கோபத்தில் எதானும் சொல்லி விட்டால் சுக்கான் உடனே சொல்வான்,

“யாரும் இல்லைன்னு நினைச்சு பேசறியா? ந்தா சந்தீப் வரட்டும், வச்சுக்கறேன் கச்சேரியை என்பான்.

ஒவ்வொரு வருஷமும் நவராத்திரி சமயத்தில் பொம்மைகளை இறக்கி, அடுக்கி, அலங்காரம் செய்து, பூஜை செய்வது அவன் வழக்கம். அப்போது ஹரிணி வந்து விடுவாள்.

மஞ்சள்,குங்குமத்துக்கு, பெண்களை வரவழைத்து, கொலுவில் பாடி, வீட்டையே கோவிலாக்கி விடுவாள்.

“இதுக்குத்தான் வீட்டுல ஒரு பொண்ணு வேணும்கறது. ஹரிணி மாதிரி கிடைக்க நீ கொடுத்து வச்சிருக்கணும்” என்பான்.

சாய் நாதனுக்கும் அதுதான் ஆசை. ஆனால் சந்தீப்பிடம் பேச பயமாக இருந்தது. சுக்கான் போய்ப் பேசினான்.

“வீட்டுக்கு பொண்ணு வேணும்னா, நீ கலயாணம் செஞ்சுக்க” என்றான்.

“க்கும், நான் எத்தனை முறை கல்யணம் செஞ்சுக்கறது. நான் விரும்புன பொண்ணு வேற செத்துப் போச்சு” என்றான்.

“யாருடா அது?” சாய் நாதன் ஆச்சர்யப் பட்டார்.

“நம்ம சிலுக்கு சுமிதாதான்”

திருமணம் ஆன புதிதில் தன் மனைவியுடன் போய்ப் பார்த்த முதல் படம் சிலுக்கு நடித்தபடம்தான். அடுத்த இரு வருஷத்தில் மனைவி ஓடிப் போனதும் “என்ற சிலுக்கு என்னை விட்டுப் போயிருச்சி” என்று சினிமா பார்ப்பதை விட்டு விட்டான். எப்போதும் பழைய சினிமாப் பாடல்கள்தான். நேசிக்க மட்டும் தெரிந்தவன்.

வசுமதி, சந்தீப்பை அவரிடம் விட்டுப் போனபோது சுக்கான் தோளில் சாய்ந்துதான் அழுதார். அழுது முடிக்கும் வரை காத்திருந்த சுக்கான். குழந்தையை படுக்க வைத்து விட்டு அவரிடம் வந்தான்.

“ந்த நீ எனக்கு ஒரு சத்தியம் செய்யணும்.”

“என்ன சத்தியம்?”

“உன் அன்பு உண்மைன்னா வசு உங்கிட்டத் திரும்பி வரும். அப்போ அது எப்படி வந்தாலும் ஏத்துக்கனும்”

“அவளை என்னால வெறுக்க முடியுமா சுக்கா?”

“இது சரி. அவ வருவான்னு காத்திரு. வேற பொம்பளையை உன் வாழ்க்கைல நுழைய விட்றாதே.”

“வேறு ஒருத்தியை என் மனசு ஏத்துக்குனு நம்பறியா?” என்றவர் சுக்கானுக்கு சத்தியம் செய்து கொடுத்தார்.அதை இன்று வரை மீறவில்லை.அம்மாவும் உயிருடன் இருக்கும் வரை போராடிப் பார்த்தாள். மறு கல்யாணம் செஞ்சுக்கோடா என்று. மறுத்து விட்டார். அந்த வருத்தத்துடன்தான் செத்தாள்.

வசு வருவாள் என்ற நம்பிக்கையுடனேயே இத்தனை வருஷமும் வாழ்கிறார். அவரின் உறுதி, வைராக்கியம், சுக்கானை அவரையே சரணம் என்று அடி பணிய வைத்தது.அவன் சாய் நாதனை தெய்வமாக நினைத்தான். அவரைத் திட்டுவான். சில சமயங்களில் கடிந்து கொள்வான். ஆனாலும் அதில் ஊடுருவி நிற்கும் அன்பை, பரிவை எல்லோராலும் புரிந்து கொள்ள முடியும்.

நான்கு வருடத்துக்கு முன் சாய் நாதனுக்கு இதயத்தில் அடைப்பு என்று ஸ்டெத் வைத்த பிறகு அவனின் அன்பும், கவனிப்பும் கட்டுக்கு அடங்காமல் போய் விட்டது.ஒரு துரும்பைக் கூடத் தூக்க விட்டதில்லை.

“ந்தா, என்னென்ன பொம்மைங்க வேணும்னு சொல்லிட்டு அக்கட்டால போய் உட்கார். நான் செய்யறேன், பண்றேன்னு வந்து ஆடாதே”

“ஆமாண்டா நீ பாடு, நான் ஆடறேன்.”

“ந்த சித்த நேரம். ஹரிணி வந்துரும். சாப்பாடு கொண்டு வந்துடறேன்னு சொல்லியிருக்கு.வந்துச்சுன்னா, மட,மடன்னு வேலை முடிஞ்சுடும்.

“ஹரிணி வராளா? அப்பாடா ஒரு நாள் ருசியா சாப்பிடலாம்.”

“சர்க்கரை, பிரஷர்னு போய் ஹாஸ்பிடல்ல படுத்தா நாந்தான் கண்ணு வரணும்.” சுக்கான் ஏணியை விட்டு இறங்கினான். அட்டைப் பெட்டிகள் எல்லாம் ஓரமாய் வைத்து படிக் கட்டுகளை அமைத்தான்.கலசம் கழுவி, மாவிலை, தேங்காய் எல்லாம் ரெடியாக இருந்தது.

“பொண்ணு வரணும். அவ்வளவுதான்”

“வந்தாச்சு” ஹரிணி வாசலில் செருப்பைக் கழற்றி விடும் சப்தம்.ஜல், ஜல் என்று கொலுசு சப்தம். சாய் நாதன்தான் கூட்டிப் போய் வாங்கித் தந்தார்.

நிறைய சலங்கை வைத்து அவள் நடந்து வரும்போதே வருவது யாரெனக் காட்டி விடும்.

பட்டுப் புடவையும், தலை நிறையப் பூவுடன் ஒரு பெண் வீடு முழுக்க நடந்தால் அந்தக் கொலுசு சப்தமும்,சிரிப்பும் வீட்டை நிறைவாக்கி விடும்.வசு போன பிறகே வீட்டில் ஒரு பெண் குழந்தை வேண்டும் என்ற ஏக்கம் அவருக்குள்.

சங்கரனுக்கு பெண் பிறந்த உடனே ஹாஸ்பிடலில் வைத்து தாம்பூலம் மாற்றி விட்டார்.அன்றிலிருந்து ஹரிணி இந்த வீட்டுப் பெண்ணாகத்தான் வளர்கிறாள். சுக்கானுக்கு அடுத்தபடி வீட்டின் முழு உரிமையும் அவளுக்குத்தான். இருவரும் சேர்ந்து சாய் நாதனை ஆட்டி வைப்பார்கள்.

ஆனந்தமாக அனுபவித்தார் சாய் நாதன்.

“இன்னைக்கு என்னம்மா கொண்டு வந்தே?”

“பிசிபேளா பாத், அரிசி அப்பளம்,உருளைக் கிழங்கு காரக் கறி”

“ஆஹா, தேவாமிர்தம்.சுக்கா நீ பொம்மையை எடுத்து வை, நான் கொஞ்சம் டேஸ்ட் பாத்துட்டு வரேன்” சாய் எழுந்தார்.

“உட்காரு எஜமான்” சுக்கான் மிரட்டினான்.

“தம்பி வந்துரட்டும்.சூடு போயிரும். கண்ணு நீ அதைக் கொண்டு போய் உள்ள வை.தம்பி சரியா ஒரு மணிக்கு வந்துரும்”

தம்பி இங்கதான் நிக்கிறார் என்று சொல்லவில்லை ஹரிணி. இதே தெருவின் முனையில் உள்ள காஃபி ஷாப்பில் மித்ராவுடன் நின்றிருந்த்தை அவள் கூறவில்லை. பகிரங்கமாக மித்ராவுடன் சுற்றுவதிலிருந்தே சந்தீப் இந்த விஷயத்தை வெளிப்படுத்துவான் என்று நினைத்தாள் ஹரிணி

ஹாஸ்பிடலில் அவளைப் பார்த்த அடுத்த நாளே ஹரிணியை மீண்டும் சந்தித்தான் சந்தீப்.

“ஏன் அப்பாகிட்ட சொல்லலை”

“நான் எதுக்குச் சொல்லணும்?”

திகைத்தான் சந்தீப்

“இது உன் காதல். இதை நீதான் அப்பாவிடம் சொல்ல வேண்டும்”

“உனக்கும், எனக்கும்தானே நிச்சயம் செஞ்சிருக்கு.”

“அது பெரியவங்க செஞ்ச ஏற்பாடு. நீ அதுல இருந்து மாறினா, மாற்றத்தை நீதான் அப்பாவிடம் சொல்லணும்.எனக்கு அதுல அக்கறை இல்லை.” தெளிவாகப் பேசினாள் ஹரிணி.

அழுவாள், கெஞ்சுவாள் என்று எதிர்பார்த்த சந்தீப் ஏமாந்து போனான்.சர்வ சாதாரணமாகப் பேசி விட்டுப் போனாள் ஹரிணி. எப்பவுமே ஒன்று தனக்கு கிடைக்கவில்லை என்றால் கவலைப் பட மாட்டாள் ஹரிணி.சரி அடுத்து என்ன என்று கடந்து போய் விடுவாள். .

சந்தீப் அப்பாவிடம் பேச கொஞ்சம் பயந்தான்.அவரின் வாழ்க்கைக் கனவையே அழிக்கிறோம் என்று அறிவான்.அம்மா பிரிந்து போன பிறகு தன் உயிராய் நினைத்து வளர்க்கிறவர். தன் சந்தோஷம் மட்டும்தான் அவரின் லட்சியம். ஹரிணியும் தானும் சேர்ந்து வாழும் வாழ்க்கையை ரசிக்கத்தான் உயிரைக் கையில் பிடித்து அலைகிறார் என்று தெரியும். அவரிடம் போய் எப்படி என்று தயங்கினான்.

“. ஸோ வாட்? நான் வரேன் வா.எத்தனை நாள் தயங்குவது”

மித்ரா இன்று அவனுடன் கிளம்பி வந்து விட்டாள். இன்று அம்மாவாசை. நவராத்திரி கொலு அடுக்க ஆரம்பித்து விடுவார் அப்பா. வரட்டும் என்று சம்மதித்து விட்டான். காலையில் வந்து காஃபி ஷாப்பில் இறங்கி போன் செய்தாள். அவளை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தான் சந்தீப்.

மிடி, ஷார்ட்ஸில், தலை விரித்துப் போட்டு செருப்புக் காலுடன் உள்ளே வந்தவளை சுக்கான்தான் முதலில் பார்த்தான்.

“ஏய்.ஏய் நில்லு, வூட்டுக்குள்ளாற் செருப்புக் காலோட வரே. அறிவு இல்லையா உனக்கு?” என்ற அவன் பாய்ச்சலில் மித்ரா அதிர்ந்து விட்டாள்.

சந்தீப் பரபரப்புடன் ஓடி வந்து சுக்கானைத் தடுத்து நிறுத்தினான்.

“அது வெளி நாட்டுல வளர்ந்த பிள்ளை. அங்க அதுதான் பழக்கம்.”

“அங்க பழக்கம்னா அங்கத்தியோட நிறுத்திக்கணும். நம்ம வூட்டுல கொண்டாரக் கூடாது.”

“அதைச் சொல்ல நீ யார் மேன்?” மித்ரா சீறினாள்.” சந்தீப் வாட் ஈஸ் திஸ். ஒரு வேலைக்கரன் என்னைக் கேவலமா பேசறான்.?”

“யாரை வேலைக்காரன்னு சொல்றே?’ சுக்கான் சண்டைக்குத் தயாரானான்.அதற்குள் சாய் நாதன் எழுந்து ஓடி வந்தார்.

“சுக்கான்.பிளீஸ். பீ காம். சந்தீப் யார் இது?”

“சார் நீங்கதான் சந்திப்போட அப்பாவா? வணக்கம். நான் மித்ரா. இவனை கல்யாணம் செஞ்சுக்கப் போறவ.”

“அதை நீ சொல்லக் கூடாது. நாங்க ஒத்துக்கணும்.” சுக்கான் மீண்டும்.

“சுக்கான்.” அழுத்தி குரல் கொடுத்தார் சாய் நாதன். சுக்கான் முகம் முழுதும் பொங்கும் கோபத்துடன் பின் வாங்க ஹரிணி வெளியில் வந்தாள்.

“வாங்க மித்ரா.இங்க கொலு வைக்கிறதனால் செருப்பு போட்டுண்டு உள்ள வரக் கூடாது.கழட்டிட்டு வாங்க. சில இடங்கள்ல சில சம்பிரதாயங்களை ஃபாலோ செஞ்சுதான் ஆகணும்.”

மித்ரா வேண்டா வெறுப்பாக செருப்பைக் கழற்றி விட்டாள். உள்ளே வந்தவள் கண்ணில் இறக்கி வைத்திருந்த அட்டைப்பெட்டிகள் பட்டது.

“எதுக்கு இதெல்லாம் இங்க இறக்கி வச்சிருக்கு?”

“அதுல பொம்மைகள் இருக்கு”

“ஹை எனக்குப் பொம்மைகள்னா ரொம்பப் பிடிக்கும்” ஹரிணி தடுப்பதற்குள் பாய்ந்து ஒரு அட்டைப் பெட்டிக்குள் இருந்த பொம்மையை எடுத்தாள். பேப்பரில் சுற்றி இருந்த அந்த பெண் பொம்மை சிலீரென்று கீழே விழுந்து சுக்கு நூறானது.

அது வசுமதியின் சீர் பொம்மை.

இதயம்நொறுங்கியது போல் உணர்ந்தார் சாய் நாதன்.

“வெளியே போ” என்று கத்தினார்.முகம் இருண்டாள் மித்ரா.

தொடரும்)

பகுதி – 1 | பகுதி – 2 | பகுதி – 3 | பகுதி – 4 | பகுதி – 5 | பகுதி – 6 | பகுதி – 7 | பகுதி – 8 | பகுதி – 9 | பகுதி – 10 |

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...