எத்தனை எத்தனை பவுர்ணமிகள்! | ப்ரணா

 எத்தனை எத்தனை பவுர்ணமிகள்! | ப்ரணா

(ஓரு சாமானியனின் புத்தக அலமாரி)

புத்தக பொன்மொழி:
உலக வரைபடத்திலுள்ள மூலை முடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறாயா, ஒரு நூலகத்துக்குச் செல். – டெஸ்கார்டஸ்

என்னைப் போல பாவனை செய்யாதே
அது அலுப்புத் தரும்
பாதி பாதியான பூசணி போல – பாஷோ

மூன்றடி கவிதை தான் ஹைக்கூ. எழுதுவது எளிதல்ல. அதன் இலக்கணத்திற்கு உட்பட்டு எழுதுவது கடினம் தான். கற்பனை கூடாது, உவமை உருவகங்கள் கூடாது, உணர்ச்சியை வெளிப்படையாய் பதிவு செய்யக் கூடாது, இருண்மை கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பினும் அதன் சிறு வடிவம், பெறும் ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளது என்பது தான் உண்மை.

முனைவர் இரா.மோகன் அவர்கள் “கீழ்த்திசைப் பௌத்தச் சிந்தனையில் முகிழ்த்து, சீனத்துப் பண்பாட்டில் திளைத்து, ஜப்பானிய அழகுப் பார்வையில் மலர்ந்து மணம் வீசிய இக்கவிதை 1916 ஆம் ஆண்டு ‘ஹொக்கு’ என்ற பெயரால் தமிழுக்கு முதன் முதலில் அறிமுகம் செய்தவர் மகாகவி பாரதியார்” என்று குறிப்பிடுகிறார்.

“காதல் காதல் காதல்
காதல் போயின் காதல் போயின்
சாதல் சாதல் சாதல்”
– இந்த கவிதையையே கூட ஹைக்கூவின் தாக்கத்தினால் பாரதி எழுதியிருக்கலாம் என்பது சுகமான கற்பனை. பிறகு அப்துல ரகுமான் , சுஜாதா போன்றோர் அறிமுகம் செய்து “ஹைக்கூ” கவிதைகளை பரவலாக்கினர்.

இன்று நமது தொடரில் பல கவிஞர்கள் பங்கு பெற்ற ஹைக்கூ 65 என்ற புத்தகம் குறித்து பார்ப்போம். போட்டியில் வென்ற மற்றும் பங்கு பெற்ற ஹைக்கூக்களை தாங்கி வந்திருக்கும் புத்தகம் இது. “பத்திரிகைகளில் எழுதி புகழ்பெற்ற வாசக எழுத்தாளர்கள் பலரின் மிகச்சிறந்த ஹைக்கூக்களின் தொகுப்பு நூல்” என்ற அறிமுகத்திற்கு ஏற்ப இதில் பங்குபெற்ற கவிஞர்களின் அத்தனை பெயர்களையுமே, வணிக இதழ்களிலும் இலக்கிய இதழ்களிலும் நாம் பார்த்திருப்போம்.

கோவை நா.கி.பிரசாத் அவர்களின் அணிந்துரை தாங்கி வெளிவந்திருக்கும் இந்த நூலினை திரு.பெ.பாண்டியன் மற்றும் திரு. வைகை ஆறுமுகம் அவர்கள் தொகுத்துள்ளனர்

ஒரு சிறந்த ஹைக்கூ அனுபவத்தை நிகழ்த்த பல ஹைக்கூக்கள் முன் வருகின்றன. பரந்து விரிந்த பாடுபொருட்களில் இருப்பதும் சிறப்பு. ஆங்காங்கே சில சென்ரியூக்களும், முரண்நகை கொண்ட மூன்று வரி கவிதைகளும் மிளிர்ந்தாலும் பல நம்மை அசர வைக்கின்றன.

அழுக்கு தீர
குளிப்போம்
மீனுக்கு பசிக்கிறதாம்
– காசாவயல் கண்ணன்

காசாவயல் கண்ணன் அவர்களின் இந்த ஹைக்கூவில் முதல் இரண்டு வரிகளில் உள்ள ஒரு அறிவுரைத் தொனி மூன்றாம் வரியில் ஒரு மனிதநேய மணியாய் ஒளிர்கிறது. அழுக்கை உண்டு வயிறு வளர்க்கும் மீன்களின் மீதான கரிசனப் பார்வையும் அதற்கு மனிதர்களாகிய நம்மாலும் உதவ முடியும் என்ற மாறுபட்ட சிந்தனையும் போற்றுதலுக்கு உரியது.

முழுதாய் செதுக்கியும்
முகம் தெரியவில்லை
சிற்பி..!
– செ. செந்தில் மோகன்

எத்தனை சிலைகளைப் பார்த்திருப்போம். எத்தனை விதங்களில் பார்த்திருப்போம். ஆனால் அதில் சிற்பியின் திறமை தெரியுமேயன்றி முகம் தெரிவதில்லை. அது குறித்து யாரும் கவலை கொள்வதும் இல்லை. ஒரு தேர்ந்த சிற்பத்தின் பின்னால் ஒரு சிற்பியின் உழைப்பு இருக்கிறது, கலை உணர்வு இருக்கிறது, கற்பனை இருக்கிறது, ஒரு தனித்துவம் இருக்கிறது. இதை மறந்துவிட்டுத்தான் நாம் சிலைகளைப் பார்க்கிறோம். இனி சாமி சிலையோ ஆசாமி சிலையோ எதைப் பார்த்தாலும் இதை செய்த சிற்பி யாராக இருக்கும் என ஒரு நொடியேனும் சிந்திக்க வேண்டும் எனும் போதனையை எனக்குள் விதைத்துள்ள ஹைக்கூ இது.

ஊர் இரண்டு பட்டது
திண்டாடினான் கூத்தாடி
கலவர பயம்..!
– ஜி. சுந்தர்ராஜன்

ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள். இரு புறங்களிலிருந்தும் வருமானம் வரும் எனும் கருத்தில் உருவானது இது. அந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. இப்பொழுது ஊர் ரெண்டுபட்டால் எப்பொழுது கலவரம் வெடிக்குமோ என்ற பயத்தில் தான் நாட்களை கழிக்கின்றனர் கூத்தாடிகள் மட்டுமல்ல நடுநிலையாளர்களும்.

மருந்துகள் தின்று
வளர்ந்தன
நோய்கள்…!
– சி.சாமிநாதன்

மருத்துவ மரத்தை வேரோடு உலுக்கும் விமர்சன இடியாய் விழுகிறது இந்தக் கவிதை. ஆங்கில மருத்துவ முறையின் ஆகப்பெரிய தவறே அதில் தரப்படும் மருந்துகள் நோய்களை அழிப்பது கிடையாது, பெட்டிக்குள் அமுக்கி பூட்டி வைக்கிறது அவ்வளவே. நோயின் வீரியம் பெட்டி உடைத்து வெளியேற ஆகும் காலம் வரை நோய் தீர்ந்ததாய் நான் நம்மையே ஏமாற்றிக்கொள்கிறறோம்.

இருட்டிய பிறகும்
பறவை கூடு திரும்பாததால்
தவித்துப் போனது மரம்..!
– கி.ரவிக்குமார்

பறவைக்கும் மரத்திற்கும் என்ன மாதிரி பேச்சு வார்த்தையிருக்கும்? என்ன மாதிரி கொடுக்கல் வாங்கல் இருக்கும்? என்ன மாதிரி உணர்ச்சி பிணைப்பு இருக்கும்? என்பது போன்ற பல கேள்விகளை தூண்டும் ஒரு ஹைக்கூ இது. திரும்பாத பறவையை தவிக்கும் மரம் எங்கும் சென்று தேடமுடியாது; நின்ற இடத்திலிருந்து தவிக்க மட்டுமே முடியும் என்ற சோகத்தினை மட்டுமின்றி பறவை ஏன் திரும்பவில்லை என்ற பதைபதைப்பையும் வாசிப்பவர்களுக்குள் விதைக்கும் ஹைக்கூ இது.

சிந்திக்கவும் அசைபோடவும் கிட்டத்தட்ட 300 ஹைக்கூகள் இடம்பெற்றுள்ளன. என்னைக் கவர்ந்த மேலும் சில ஹைக்கூகள்:

பார்க்கும் காட்சிகளோடு
பார்த்துப் பேசிபழகியது குழந்தை
தாத்தா, பாட்டி இல்லாத வீடு…!
– கதிர் பாரதி

இரவில் வெங்காய சாம்பார்
கனவில்
எகிப்திய அழகிகள்…!
– சின்னஞ்சிறு கோபு

விழா முடிந்ததும்
குடிசையை போர்த்தியது
பேனர்…!
– திருச்சிற்றம்பலம் சுரேஷ்

  • எழுத்தாளர் டெல்லி ஹரி கோபி அவர்கள் வைத்த ஹைக்கூ போட்டியில் வந்த ஹைக்கூக்களைக் கொண்டு இந்நூல் உருவாக்கப்பட்டது
  • 65 பேர் மட்டுமே இடம்பெற்றதால் ஹைக்கூ – 65. என்று பெயர் வைக்கப்பட்டது
  • அட்டை வடிவமைப்பு க.கமலகண்ணன்

நூல்: ஹைக்கூ 65
தொகுப்பு: திருமயம் பெ.பாண்டியன் மற்றும் வைகை ஆறுமுகம்
பிரிவு: ஹைக்கூ
பக்கங்கள்: 72
விலை: 80

வெளியீடு: பிப்ரவரி 2020
பதிப்பகம்: பாண்டியன்-வைகை பதிப்பகம்,
99428 47919 / 96883 03124

(வாசிப்போம் இன்னும் சுவாசிப்போம்…)

கமலகண்ணன்

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...