வரலாற்றில் இன்று – 28.10.2020 சர்வதேச அனிமேஷன் தினம்

 வரலாற்றில் இன்று – 28.10.2020 சர்வதேச அனிமேஷன் தினம்

சர்வதேச அனிமேஷன் தினம் அக்டோபர் 28ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அனிமேஷன் தொழில்நுட்பத்தில் உருவாகும் திரைப்படங்கள் மற்றும் இத்துறையில் பணியாற்றும் ஊழியர்களை ஊக்குவிக்கும் விதமாக ‘சர்வதேச அனிமேஷன் தினம்’ கொண்டாடப்படுகிறது.

1892ஆம் ஆண்டு சார்லெஸ் எமிலி ரெனால்ட் என்பவர் முதன்முதலில் கிரெவின் மியூசியத் திரையரங்கு ஒன்றில் அனிமேஷன் திரைப்படத்தை திரையிட்டதை நினைவுகூறும் விதமாக, சர்வதேச அனிமேஷன் திரைப்பட சங்கம் (International Animated Film Association-ASIFA), 2002ஆம் ஆண்டு இந்நாளை அறிமுகப்படுத்தியது.

பில்கேட்ஸ்

மைக்ரோசாப்ட் நிறுவனர், கணிப்பொறி மென்பொருள் வல்லுநர் பில்கேட்ஸ் 1955ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி அமெரிக்காவில் சியாட்டில் என்ற நகரில் பிறந்தார்.

இவர் உலகின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் தொடர்ந்து இருந்து வருகிறார். 1981ஆம் ஆண்டு IBM கணினிகளுக்காக MS-DOS என்ற Operating System அதாவது இயங்குதளத்தை அறிமுகம் செய்தவர் இவர் தான்.

இதுவரை பில்கேட்ஸ் இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார். 1995ஆம் ஆண்டு வெளியான ‘தி ரோடு அஹெட்’ என்ற புத்தகத்தை இவருடன் சேர்ந்து மைக்ரோசாப்ட்டின் சிறப்பு தொழில்நுட்ப அலுவலரான நாதன் முர்வால்டும், பீட்டர் ரிநீர்சன் என்ற பத்திரிக்கையாளரும் எழுதியுள்ளனர். 1999ஆம் ஆண்டு ‘பிசினஸ் அட் தி ஸ்பீட் ஆப் தாட்’ என்ற நூலை வெளியிட்டார்.

சகோதரி நிவேதிதா

சுவாமி விவேகானந்தரின் முதன்மை சீடரும், சமூக சேவகியுமான சகோதரி நிவேதிதா 1867ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி அயர்லாந்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் மார்கரெட் எலிசபெத் நோபிள்.

ஒருமுறை தோழியின் வீட்டில் சுவாமி விவேகானந்தரின் உரையைக் கேட்டார். அதில் கவரப்பட்டவர், அவரது பேச்சுகளை அடிக்கடி கேட்கத் தொடங்கினார். அவர்தான் தன் குரு என்று தீர்மானித்தார்.

ஒரு சமயம் இந்தியப் பெண்களின் நிலை பற்றி பேசிக் கொண்டிருந்த விவேகானந்தர்,’எங்கள் தேசத்துப் பெண்கள் கல்வி பெற நீ உதவ முடியும் என நம்புகிறேன்’ என்றார். இதை அரிய வாய்ப்பாகக் கருதியவர், உடனே புறப்பட்டு இந்தியா வந்தார்.

வந்தே மாதரம் தேசியப் பாடலாக அங்கீகரிக்கப்படாத காலகட்டத்திலேயே அதை தன் பள்ளியில் காலை வணக்கப் பாடலாகப் பாடச் செய்தார். பெண் உரிமைக்காகப் போராடத் தூண்டுகோலாக இருந்த இவரை தன் குருவாக குறிப்பிட்டுள்ளார் பாரதியார். சகோதரி நிவேதிதா 1911ஆம் ஆண்டு மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

1900ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி இந்தியாவின் வேத உபநிடதங்கள் பற்றி ஆராய்ச்சி செய்த ஜெர்மனி மொழியியலாளர் பிரெட்ரிக் மாக்ஸ் முல்லர் மறைந்தார்.

1997ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி இறுதிவரை இசைத் தொண்டாற்றி வந்த இசைக்கலைஞர் மைசூர் வி.துரைசுவாமி மறைந்தார்.

1972ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி முதலாவது ஏர்பஸ் ஏ300 பறக்க விடப்பட்டது.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...