மண்ணின் மணம் – சிறுகதை | க.கமலகண்ணன்

 மண்ணின் மணம் – சிறுகதை | க.கமலகண்ணன்

தேனி அருகே நெருங்கி கொண்டிருந்தது கார்.

ஓட்டுநரின் லாவகமான கை வண்ணத்தில் அதிகாலையிலேயே மதுரையை தொட்டதும் மனது துள்ளியது சீக்கிரம் தேனிக்கு சென்றுவிடலாம் என்று. தற்போது மாவட்ட ஆட்சியரின் முதன்மை உதவியாளராக பணியில் இருந்தாலும் கடைநிலை ஊழியனாய் வேலை பார்த்த இடத்திற்கு செல்லும் போது இனம்புரியாத மலர்ச்சி ஏற்படுகிறது. ஏனோ மனது பல வருடங்கள், பின்னோக்கி பயணித்தது.

தேனி ! கேரளா மாநிலத்தின் எல்லைக்கு மிக அருகில் கம்பம் பள்ளத்தாக்கில் அழகுற அமைந்திருக்கும் அழகான நகருக்கு அல்லி நகரம் என்றும் ஒரு பெயர். பசுமை நிறைந்த வயல் வெளிகளும் அழகான ஆறுகளும் மலைகளும் சேர்ந்து கண்களுக்கு மட்டுமல்ல உடம்புக்கும் குளிர்ச்சியாக அமைந்தது இந்நகரம். குன்றுகளின் அடிவாரத்தில் இருப்பதால் ஆரோக்கியமான இயற்கைச் சூழல் இங்கு நிலவுகிறது. பொள்ளாச்சிக்கு அடுத்தப்படியாக தமிழ்நாட்டின் பெரிய சந்தை இங்கு அமைந்திருப்பது தேனியின் சிறப்பு.

வீரப்ப ஐயனார் கோயிலும் ஸ்ரீகாமாட்சி அம்பாள் திருக்கோயிலும் மனதுக்கு இதமாய் தெய்வீகமாய் அமைந்திருப்பது அழகு. அருகாமையில் இருக்கும் சுருளி நீர்வீழ்ச்சி கண்களை கொள்ளை கொள்ளும். வைகை அணை, மஞ்சளாறு அணை, பெரியாறு நீர் மின் நிலையம் ஆகியவை வார விடுமுறையில் சுற்றி வரும் அருமையான சுற்றுலாத் தளங்கள்.

திருமணத்திற்கு முன் நான் தங்கியிருந்த அந்த பகுதியில் சில வருடங்கள் வீட்டு சாப்பாடு இல்லை என்ற குறையே தெரியாமல் வைத்திருந்தது அந்த ஓட்டல். பல முக்கிய நகரங்களில் பல நட்சத்திர ஓட்டலில் சாப்பிட்டிருந்தாலும் இங்கு சாப்பிடும் முட்டை பரோட்டாவின் சுவைக்கு ஈடு இணை கிடையாது. இப்போது நினைத்தாலும் நாவில் அந்த ருசியின் சுவை தெரியும். காலையில் பூரியும் பொங்கலும் மதியம் மீன், சிக்கன் குழம்பு, இரவில் முட்டை பரோட்டா என்று அந்த பகுதியே கலகலவென இருக்கும்.

உள்ளுரில் மட்டுமல்லாமல் வெளியூரில் இருந்து வருபவர்கள் கூட காத்திருந்து சாப்பிட்டுச் செல்வார்கள். அதில் இரவு நேரத்தில் மிகவும் அதிகம் முட்டை பரோட்டா செய்யவே தனியாக பெரிய தோசை கல், ஒரு ஆள் நின்று போட முடியாது என்று 3 பேர் மாற்றி மாற்றி நின்று வெங்காயத்தை நன்றாக வதக்கி, முட்டை பரோட்டாவை கொத்தி இறக்குவார்கள். அதற்கு வெங்காயம் மதியமே வெட்ட ஆரம்பித்து, ஒரு அறையில் துணியை விரித்து வைக்கோல் போர் மாதிரி குவித்து வைத்திருப்பார்கள். அவை அனைத்தும் இரவும் 11 மணிக்குள் தீர்ந்துவிடும் என்பதுதான் சிறப்பு. ஒரு லாரி வெங்காயம் 3 நாட்களுக்குதான் வரும் அதுதான் வியப்பு.

முட்டை பரோட்டாவிற்கு கொடுக்கப்படும் சிக்கன் குழம்பும் வெங்காய பச்சடியும் அதற்கு மேலும் சுவை கூட்டிவிடும். ஒரு முட்டை பரோட்டா சாப்பிடலாம் என்று எண்ணி வருபவர்கள் அதை கொஞ்சம் சாப்பிட்டதும் இன்னொன்று என்று கேட்பார்கள். அப்படி நாநரம்புகளை சிலிர்க்க வைக்கும் சுவையை தரும் ஓட்டல் அது.

அது மட்டும் இல்லாமல் ஓட்டல் மிகவும் சுத்தமாக பளிச் என்று இருக்கும். வீட்டில் இருப்பது போன்று உணர்வை தரும். அதுவும் அன்பான உபசரிப்பு மற்றும் விரைந்து உணவு சப்ளை செய்வது என அனைத்தும் விரைவாக நடப்பதால் கூட்டம் கூடாமல் வந்து போய் கொண்டே இருக்கும். அதனால் அதிக வியாபாரம் நடக்கும்.

அதை போன்று பல ஓட்டல்கள் வந்தன. ஆனாலும் இந்த ஓட்டலின் முட்டை பரோட்டாவின் சுவையும் பரோட்டா கொத்தும் நளினமும் வரவில்லை. பலரும் புதிய ஓட்டல்களுக்குச் சென்றாலும் இந்த ஓட்டலின் சுவை பக்கத்தில் கூட வரமுடியவில்லை. மீண்டும் இந்த ஓட்டலுக்கு திரும்ப வந்துவிட, அதனாலேயே வந்த வேகத்தில் காணமல் போயின.

பல வருடங்கள் கழித்து அன்று ஒரு நாள் மட்டும்தான் தேனியில் வேலை, அப்புறம் மதுரை செல்ல வேண்டும். எனவே வேலைகளை விரைந்து முடித்து கொண்டு ஓட்டலுக்கு இரவு முட்டை பரோட்டா சாப்பிட்டு விட்டுதான் மதுரை செல்ல வேண்டும் எண்ணிய போது,

“சார், தேனி வந்துட்டோம் சார்.” என்ற ஓட்டுநரின் குரல் என்னை நிகழ்காலத்திற்கு இழுத்து வந்தது.

விருந்தினர் மாளிகைக்குச் சென்று, குளித்து முடித்ததும் கிடைத்த உணவை சாப்பிட்டுவிட்டு கிளம்பினோம்.

அலுவலகத்திற்கு சென்று இறங்கியதுமே வேலை ஆக்கிரமித்துக் கொண்டது. ஒவ்வெரு நிமிடமும் முட்டை பரோட்டாவிற்காக மனசும் நாக்கும் ஏங்கியது. மாலை ஐந்து மணிக்கு வேலைகள் முடிந்து விடும். முன்னதாகவே சென்று சென்று அந்த வெங்காய குவியலையும் பரோட்டா கொத்தும் அழகையும் ரசிக்க வேண்டும் என்று எண்ணி வேலைகளை துரிதபடுத்தினேன்.

மதிய நேரம் நெருங்கியதும் சாப்பிட அழைத்தார்கள். மரியாதை நிமித்தம் தேனி மாவட்ட ஆட்சியருடன் அமர்ந்து சாப்பிட நேர்ந்ததால் ஓட்டுநரும் அங்கே சாப்பிட்டுவிட மதிய உணவு அங்கு சென்று சாப்பிட முடியாமல் போனது.

சற்று சோர்ந்தாலும் கொத்து பரோட்டாவின் வாசனையை நினைத்ததும் புத்துணர்ச்சி வந்து வேலையை விரைவாக தொடர்ந்தேன். நினைவுகள் மட்டும் பரோட்டாவையே சுற்றிக் கொண்டிருக்க, கைகள் மட்டும் தானாக இயந்திரமாய் இயங்கிக் கொண்டிருந்தது. நேரம் செல்லச் செல்ல வேலை முடியாமல் இழுத்துக் கொண்டே போக தவித்துப் போனது மனசு.

இரவு மணி 7.15 தொட்டபோது மாவட்ட ஆட்சியர் கிளம்பினார். எனது வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு நிமிர்ந்த போது மணி 8.30 தொட்டது. அப்பாடா என்று கிளம்பிய நேரத்தில் மாவட்ட ஆட்சியரிடம் இருந்து அலைபேசியில் அழைப்பு வர, அனைத்து வேலைகள் முடித்தது பற்றி விவரித்து விட்டு, விடைபெற்று இணைப்பை துண்டித்த போது இரவு மணி 9 ஐ தொட்டது.

ஆர்வமும் மகிழ்ச்சியும் கலந்து ஓட்டுநரை அழைத்துக் கொண்டு கிளம்பினேன். கார் கிளம்பியதும் அந்த ஓட்டலைப் பற்றி விபரமாக கூறியதும் ஓட்டுநருக்கும் அந்த முட்டை பரோட்டாவில் ஆர்வம் வந்து, காரை வேகப்படுத்தினார்.

அந்த பகுதியை நெருங்கிய போது, இரவு 10 மணியை தொட்டது. ஓட்டலின் பகுதியை நெருங்க நெருங்க, இதயத் துடிப்பு அதிகரித்தது. அப்பாடா ஒரு வழியாக நெருங்கி விட்டோம். அருகே செல்லச் செல்ல வழக்கமாக இருக்கும் கூட்டத்தை காணாமல் ஒன்றும் புரியவில்லை. ஒருவேளை ஓட்டல் இடம் மாறிவிட்டதா என்றும் தெரியவில்லை. காரை ஓரமாக நிறுத்தி அருகில் நின்ற ஒருவரிடம் விசாரித்த போது அங்கேதான் இருக்கு என்பதை சொன்ன போது அப்பாடா என்று இருந்தது.

ஓட்டலின் வாசலுக்கு அருகே வந்த போது, பளபளக்கும் ஃப்ளக்ஸ் போர்டும் ஸ்டெயின்லஸ் ஸ்டீலில் பளிச் என்று இருந்தது. பரோட்டா கொத்தும் பெரிய தோசை கல், முன் பகுதி கிரானைட் பதிக்கப்பட்டு, சுவர்கள் எல்லாம் வண்ணம் பூசி மிளிர அனைத்தும் நவீனமாக்கப்பட்டு இருந்தது.

ஆனால் முன்பை போல கூட்டம் இல்லை. சொற்ப ஆட்களே இருந்தார்கள். அதை பார்த்த போது அதிர்ச்சியாக இருந்தது. உள்ளே சென்று அமர்ந்து பின் நீண்ட நேரம் கழித்தே வந்த சர்வர்,

“என்ன வேணும் ?” என்றார் அவர்.

“முட்டை பரோட்டா இரண்டு” என்று சொன்னதும், தண்ணீர் கூட வைக்காமல் நகர்ந்து சென்றார் சர்வர்.

முன்பெல்லாம் 5 நிமிடத்திற்குள் வந்துவிடும் பரோட்டா 15 நிமிடம் கழித்தும் வரவில்லை. பொறுமையிழந்து சர்வரை கூப்பிட்டு கேட்ட போது,

“ரெடி ஆயிகிட்டு இருக்கு சார். முன்னாடி மாதிரி தயார் செய்து வைப்பதில்லை. வெயிட் பண்ணுங்க சார்.” என்றார் அந்த சர்வர்.

கிட்டதட்ட 20 நிமிடங்கள் கழித்து பரோட்டா வந்தது. என்னை விட ஓட்டுநர் ஆவலுடன் பரோட்டாவை எடுத்து ஒரு வாய் வைத்ததும் அவரின் முகம் அஷ்ட கோணலானது. எனக்கு ஏன்னென்று புரியாமல் நானும் ஒரு வாய் எடுத்து வைத்ததும் அதிர்ந்து போனேன். முன்பு இருந்த மணமும் இல்லை, சுவையும் இல்லை. சாதாரண தெருக்கடைகளில் உள்ள சுவைக் கூட இல்லை என்பதுதான் அந்த அதிர்ச்சி. ஓட்டுநர் சற்றே ஏமாற்றத்துடன் என் முகத்தை பார்க்க, நான் அவரை பார்த்து,

“உங்களுக்கு சாப்பிட முடியலைன்னா வேண்டாம். வெளியே போய் சாப்பிட்டுக்கலாம்.” என்று நான் சொன்னேன்.

“பரவால்லை சார், நம்ம தட்டுல நாம சாப்பிடுவதற்கு என்று விழுந்த உணவுப் பொருட்களை வீணாக்கக் கூடாதுன்னு எங்க தாத்தா அடிக்கடி சொல்லுவார் சார். அந்த உணவில் பல நூறு ஏன் பல ஆயிரம் நபர்களின் உழைப்பு அதில் இருக்கு. நாம அப்படி வீணாக்கினா அவர்களுடைய உழைப்பை அவமானப் படுத்தின மாதிரி. உங்களால சாப்பிட முடியலைன்னா கொடுங்க சார். நான் சாப்பிடுகிறேன். இந்த உணவு வகைகள் எல்லாம் எனக்கு சாப்பிட்டு பழக்கம். நீங்க வெளியே சென்று சாப்பிடலாம்.” என்றார் ஓட்டுநர்.

நான் மிகவும் மகிழ்ந்து போனேன். அவரின் தாத்தா சொன்னது எவ்வளவு உண்மை. இனி உணவை வீணாக்கக் கூடாது என்ற வைராக்கியம் பிறந்தது. ஆனாலும் ஓட்டுநர் வம்படியாக பிடுங்காத குறையாக என் பரோட்டா தட்டை எடுத்து தன் தட்டில் கொட்டி சாப்பிட ஆரம்பித்தார். நான் கை அலம்பிவிட்டு, பணம் செலுத்தி விட்டு வெளியே வந்தேன். அங்கு நின்றிருந்த செக்யூரிட்டியிடம் பேச்சுக் கொடுத்தேன். பொதுவாக பேசிவிட்டு, ஓட்டல் இப்படி ஆனது பற்றி கேட்டதற்கு, அவர் சொன்ன விளக்கம் இன்னும் மலைப்பாக இருந்தது.

“முதலாளி இருந்த வரைக்கும் ரொம்ப நல்லா போயிகிட்டு இருந்தது. அவருக்கு உடம்பு சரியில்லாம போனதும் அவருடைய மருமகன் அந்த இடத்திற்கு வந்தார். எல்லாத்தை மார்டனா ஆக்குறேன் என்று எல்லாத்தையும் மாற்றினார். ரொம்ப வருடங்களாக வேலை பார்த்துகிட்டு இருக்கிற சமையற்காரர்கள், பாரம்பரியத்தை மாற்றக் வேண்டாமுன்னு சொன்னா அவர்கள் மீது ஏதாவது குற்றம் சுமத்தி வேலையை விட்டு அனுப்பிடுவார். அதனால நிறைய பேர் தாங்களாகவே வேலைய விட்டுப் போயிட்டாங்க.

இப்போ இருக்கவங்க நிறையப் பேர் புதியவர்கள், அவர்களுக்கு இந்த ஓட்டலின் பாரம்பரியமோ, உணவின் சுவை பற்றியோ எதுவும் தெரியவில்லை. முதலாளி மருமகன் எது சொன்னாலும் சரின்னு தலையை ஆட்டிக்கிட்டு வேலை செய்யுறவங்க. அதனால இந்த ஓட்டலின் பழமையான சுத்தமோ சுவையோ வேகமான உணவு சப்ளையோ கொடுக்க முடியவில்லை.

ஒரு காலத்துல ஓஹோன்னு பரபரப்பாக, அதிகமான கூட்டம் இருந்த இந்த ஓட்டல், இப்போ ஒருசில பேர் மட்டும் வர மாதிரி ஆயிடுச்சி. அதை பத்தி சொல்லுறவங்களை வேலையை விட்டு அனுப்புறது வழக்கமாயிடுச்சி. நான் அதை பத்தி ஏதுவும் பேச வாய்ப்பு இல்லததால நான் இன்னும் வேலையில் இருக்கிறேன்.

உங்களை மாதிரி நிறைய பேர் வந்து சாப்பிட்டதும் சில பேர், சாப்பிடாம பலர் இதை பற்றி கேட்டு வருத்தமாய் போனவர்கள் உண்டு. அவர்கள் அத்தனை பேரும் திரும்ப வரவே இல்லை. இனி நீங்களும் வருவீங்களான்னு தெரியாது. என்ன செய்யுறது எல்லாம் காலத்தின் கட்டளை.” என்று நீண்ட விளக்கத்தை கொடுத்த போது ஏனோ அந்த செக்யூரிட்டிக்கு கண்கள் கலங்கின.

ஓட்டுநர் சாப்பிட்டு முடித்து வரவே, அந்த செக்யூரிட்டியிடம் விடை பெற்று கிளம்பினேன்.

மணி இரவு 12 ஐ தொட்டது. வழி எல்லாம் சாப்பிட ஓட்டல் தேடினால் எல்லாம் மூடியிருந்தது. நீண்ட தூரம் சென்ற பின் ஒரு ஓட்டல் திறந்திருக்க, நான் சாப்பிடுவதற்காக ஓட்டுநர் காரை நிறுத்தினார்.

“சாப்பாடு வேண்டாம் முருகா. பசியும் இல்ல… சாப்பிட மனசும் இல்ல… காரை எடுங்க போகலாம்” என்றதும் ஓட்டுநர் முருகன் மனசே வராமல் மெல்ல காரை நகர்த்த கனத்த மனதுடன் நான் காரில் செல்ல தேனி என்கிற அல்லி நகரம் என்னை விட்டு பின்னோக்கி சென்றது…

கமலகண்ணன்

1 Comment

  • நான் காரில் செல்ல தேனி என்கிற அல்லி நகரம் என்னை விட்டு பின்னோக்கி சென்றது…

    ஆம்… தலைமுறைகளின் இடைவெளிகள் தவிர்க்க முடியாததாகி வரும் சூழலில், நம் நம்பிக்கைகளும், எதிர்பார்ப்புகளும் பொய்த்துத்தான் விடுகின்றன.

    அதே சமயம் நாம் பிழைப்புக்காகவும், பொருள் ஈட்டுவதற்காகவும் காரிலும் விமானத்திலும் பறந்துகொண்டிருக்கும் போது, நாம் பிறந்து வளர்ந்த கிராமத்தில் மட்டும் சிறுவயதில் கிளப் பில் ருசித்துச் சாப்பிட்ட, ஆட்டுக் கல்லில் அரைத்து தோசைக்கல்லில் வார்த்த மாவு தோசையையும், அம்மியில் அரைத்த சட்னியும், விறகு அடுப்பு சமையலையும் எதிர்பார்ப்பதும் கூட….????
    நடை அருமை.
    உத்தி அருமை
    எதிர்பார்ப்பும் , ஏமாற்றமும் காட்டப்பட்ட முறை அருமை.
    வாழ்த்துகள்
    ஜூனியர் தேஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...