நாகை அருகே தந்தையையும் மகளையும் ருசி பார்த்த கதண்டுகள்-இருவரும் மரணம்
நாகை மாவட்டம் மயிலாடுதுறை பகுதிக்கு அருகே கடலங்குடி கிராமத்தை சேர்ந்த ஆனந்தகுமார் என்ற நபரின் மனைவி சங்கரி. இந்த தம்பதிக்கு இன்சிகா மற்றும் பவித்ரா என இரண்டு குழந்தைகள்.
ஆனந்தகுமார் அதே பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் ஆனந்தகுமார் தனது மகள் இன்சிகாவுடன் இருசக்கர வாகனத்தில் வயல்வெளி அருகே உள்ள சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த சாலைக்கு அருகே உள்ள ஒரு பனைமரத்தில் விஷ கதண்டுகள் கூடு கட்டி இருந்துள்ளது. இந்நிலையில் அந்த விஷ கதண்டு வண்டுகள் திடீரென கூட்டில் இருந்து களைந்து அந்த சாலையில் செல்வோரை தாக்கி உள்ளது.
அப்போது அந்த வழியாக சென்ற ஆனந்தகுமார் மற்றும் மகள் இருவரையும் தாக்கி உள்ளது. இதனை அடுத்து இருவரையும் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு 3 வயது சிறுமி இன்சிகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை அடுத்து தந்தை ஆனந்தகுமார் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்ட நிலையில் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனை அடுத்து விஷ வண்டு கடித்த மேலும் 3 பேர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.